கர்த்தரின் கருணை | தினகரன் வாரமஞ்சரி

கர்த்தரின் கருணை

முன்பனியா.. முதல்மழையா..  அவளது அழகை வர்ணிக்க அகராதியில் பெயர் இருக்காது. அரைத்த செவ்வரத்தங் குருத்தில் தலைகுளித்து, ஓடிகொலோனிட்டுலர்ந்த,  குழந்தையின், காற்றில் மெல்ல அசையும் தலைமுடியின் பட்டிழைகள் போல், அவளது பின்னலிலிருந்து சுதந்திரம் பெற்ற சிறு மயிரிழைகள் காதுகளின் காவல்களைத் தாண்டி அவள் கன்னங்களில் கொஞ்சும், அவளுக்கு அசௌகரிமாய் இருக்கலாம்,

ஆனால் அவனுக்கு அந்த  மெல்லசைவுகள் சில்லென்று சாயும் சிறுபனி தான்.

தான் அவளை அவதானிப்பது அவளுக்கு புரிந்துள்ளதா? அவனது தொடர்ந்த அவதானிப்பு தொலைவை என்றுமே குறைத்ததில்லையே. எப்படிப் புரியும் அவளுக்கு? நிச்சயமாக கவனித்திருக்க மாட்டாள். அது ஒரு விதத்தில் அவனுக்கு சௌகரியம் தான். அசௌகரியமின்றி அவளை ரசிக்க.

 உயர்தரம்  கற்கும் போது அவளைக் காண்டான் முதன் முதலாக. குனிந்த தலை நிமிரமாட்டாள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எங்கெங்கே எந்த அளவுகளில் நிமிர வேண்டுமென்ற நிர்ணயிக்கப்பட்ட நகர்வுகள் அவளுடையவை. அவனை அவள்பால் ஈர்த்தவைகளில் அதுவும் ஒன்று.

இப்போது அவள் ஒரு ஆசிரியை. அவன் பொறியியலாளன். கைநிறையச்  சம்பளம். கவலையற்ற வாழ்வு. ஆனாலும், அவளை முதன்முதலில் பார்த்த அந்த அதிசய ஆர்வம் மாறாத உணர்வில் தான் அவன் இப்போதும்.

ஓரே ஊர். உயர்தரக்கல்வி கற்கும்  காலங்களில் பாடசாலை, பிரத்தியேக வகுப்புகள் என அடிக்கடி கிடைக்கும் தரிசனங்கள். அதை விட கிருஷ்ணன் கோவிலுக்கு அடிக்கடி செல்வாள். அவள் பெயர் என்னவாக இருக்கும் என யோசிப்பான். விசாரிக்கலாமா. இல்லை எதற்கு? எதுவாயினும் இருந்திட்டுப் போகட்டுமே. அவனுக்கு அவள் தேவ காரிகை. அவள் பற்றி எதுவுமே இதுவரை விசாரிக்க நினைத்ததில்லை அவன். ஆனால் அவன் மனதில் அன்றாடம் அவளுக்கு ஒரு நேரப் பூசையாயினும் நேரம் தவறாது நடக்கும்.

ஆறேழு வருடங்கள் கடந்தது அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை அவனுக்கு. இன்னும் பச்சைக் குழந்தை தான் அவள் அவன் மனதில். ஆனால் அவளுக்காக அவன் உருகுவது  அவளுக்குத் தெரியாது. தெரிந்தால் என்ன ஆகும்?  தனது ஆர்வம் தெரிய வந்தால் அடியோடு வெறுத்தே விடுவாள் அறிமுகமாகாமலே! "வேண்டாம். நாட்கள் நகரட்டும். கால தேவனே! உன் கைகளில் தந்து விடுகிறேன். உன்னைப்பூஜித்து மனக்கோயில் மாளிகையில் வாழ வைக்கும் வரம் கொடு. அது ஒன்றே போதுமானது".

சில மணி நேரங்களில் அவதரிக்கப்போகும் தேவ பாலனை வரவேற்க மாதா கோயில் கச்சிதமாக தாயார் நிலையில். ஆங்காங்கே சிலர் சர்ச்சிற்கு வரத்தொடங்கும் வேளை. உள்ளே ஒரு சிலர் இருந்தனர். வழமைக்கு மாறாய் அவன் அன்று சிறிது நேரத்தோடு சர்ச் சென்றான். தாயும் தந்தையும் தாமதித்து வருவதாய் சொல்லி இருந்தார்கள். பெற்றாருக்கு அவன் ஒரே பிள்ளை. ஆனாலும் அந்த சலுகையை என்றுமே அவன் துஷ்பிரயோகம் செய்ய நினைத்ததில்லை. பெற்றார் அப்படி அவனை வளர்க்கவுமில்லை. கண்ணியமான தமிழ் மகன் அவன். சர்ச்சின் பிரதான வாயிலில் கால் வைத்தவனது பாதங்களில்  ஏதோ ஒரு அதிர்வு. புரியவில்லை அவனுக்கு. சிறிதாய் சிந்தனையுடன் நிமிர்ந்தான். அலங்கார மங்கல் நிற மின்விளக்குகள். ஓரிரு அடிகள் எடுத்து வைத்து முன்னோக்கினான். அதிகாலை நிலவை  அள்ளித்தெளித்த அழகில் ஒரு பெண் அங்கே நின்றாள்.

ஆனால் அவள்... அவள்... எப்படி இங்கே...? சாத்தியமே இல்லையே...! கிருஷ்ணரின் கடைசித் தங்கையாச்சே அவள்.  உறுதியாக அவளே தான்! அவனால் மேலும் ஒரு அடி கூட நகர முடியவில்லை. அதிக குழப்பம், வழமை போல் அவளை ரசிக்க முடியாமல், அவனை அசையவிடாது அதே புள்ளியில் அதிர்ச்சியில் நிறுத்தியது.

சில வினாடிகள் ஆசுவாசப்படுத்தி, நின்ற நிலையிலேயே பின்னோக்கி நகர்ந்து மெல்ல வெளியேறி சர்ச்சின் வெளிமுற்றத்தில் மெல்லிருளில் பரந்து கிளை விரித்த வேம்பின் கீழ் நிலைகொண்டான். அவளை அண்மையிலமர்ந்து ரசிக்கவும், பேசவும், விபரமறியவும் அமைந்ததொரு வாய்ப்பு அது அவனுக்கு. ஆனால் அவனால் உள்ளே செல்லவே முடியவில்லை. தவிர்க்க முடியாத சிறிய நடுக்கம் உடலெங்கும் வியாபிப்பதையுணர்ந்தான். சில நிமிடங்கள் கடந்தன. சர்ச்சின் வலதுபக்க வெளியேறும் வாயிலினூடாக  அந்த தேவதை மெதுவாய் வெளியே வருகிறாள். புருவங்கள் எழுந்து சுருங்க அவன் அவளது நகர்வை அவதானித்தபடி.. மென்தென்றல் மெல்லசைந்து மெல்லசைந்து.. ஆம், அவனையே தான் அண்மிக்கிறதா? இதயம் ஏன் இப்படி உயிரை எடுக்கிறது படபடவென்று பன்மடங்காய்த் துடித்து.. சொல்லப்போனால் அவளையும் விட மென்மையானவன் அவன்.

"எல்லாருக்கும் சந்தோஷமாம் நற்செய்தி கூறுவேன்..." உள்ளே பாடகர் குழுவின் முதலாவது பாடல்...

"எங்கே நற்செய்தி இன்று எனக்கு..? செத்தேன்.."

ஆறு வருடங்களாய் அடைத்து வைத்து ரசித்த அவனது ஆழ்ந்த காதல்.. ஆனால், இன்று தான், முதன் முதலில் அவளை அண்மையில் உணர்கிறது. நடுநிசியின் நனைபனியில் நயன தாரகையாய்.. ஆனாலும் ஆழ்ந்து ரசிக்க முடியாது ஆழ்மனதில் அச்சம்.. என்ன செய்யப்போகிறாள்..? என நடுக்கம் ஒருபுறம்..

"பெண் என்றால் போதையா உனக்கு? பொறுக்கி.." என்றெல்லாம் உடைத்தெறியப்போகிறாளா வார்த்தைகளால்? ஆனால்.. ஆனால்.. அவளுக்கு என் காதல் அணுவளவும் தெரியாதே?! சாத்தியங்களே இல்லையே.. பின்.. பின்.. என்னவாயிருக்கும்?! ஊகிக்கவே முடியவில்லை அவனால்!

முதன் முதலில் அவளின் அண்மை எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று எத்தனை கற்பனைகள் கலைவடித்தன அவன் மனவுலகில்.. ஆனால்.. இது என்ன..? ஏன் இப்படி..?

குழப்பங்கள் குடலை நெரித்தன.. இப்போது அவள் அந்த மெல்லிய இருளில் வேம்பின் கீழ் அவனருகே.. மார்கழிப்பனியின் நடுநிசித்துளிகள் ஒருவனின் வியர்வையை மறைக்க உதவியது அன்றாகத்தானிருக்கும் வரலாற்றில்!​ே

"மன்னியுங்கள் இந்த நடுநிசியில் உங்களுக்கு சிரமம் செய்கிறேன்.." அவளது முதல் வார்த்தைகள் அவனிடம்.

"சிரமமா..? சுகித்திடும் புவனமெனக்கு உன் சிரமம்." இப்போது மனம் மெல்ல முகிழ்க்கிறது அவனுக்கு. ஆனால் வார்த்தைகள் ஒலி பெறவில்லை. அவளா இவள்..? என்ன..? எதற்கு..? பீதியின் அளவுகோல் அடிப்பக்கமாய் மெல்ல நகர்ந்தாலும்.. பதற்றம் இன்னும் பத்திரமாக இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்பது சற்றும் தயக்கமின்றி, தாவிப்பாய்கிறது. "என்ன சொல்லப்போகிறாய் பெண்ணே?" மனதின் படபடப்பு பொறுமை இழக்கிறது இப்போது.

ஆனாலும் அதே வேகத்திலொரு அறிவித்தல். "ஆர்வங்கள் அந்தரிக்கும் போதெல்லாம், அதை முதலில் அலசிப்பார்க்கத் தவறாதே; அதுவே உன் வாழ்வை நெறிப்படுத்தும் அற்புத ஆளுமை தரும்".

 'சுஜாதா'வின் 'தலைமைச்செயலகம்' அவனுக்குக் கொடுத்த அவசர அறிவித்தல்.

ஆனாலும், ஆறேழு வருடமாய் ஆராதித்து வளர்த்த அவனது காதலி, சாதாரணமாய் வார்த்தைகள் உதிர்க்கிறாள் அவனருகில்  பவ்யமாய் நின்று. அந்த அரிய கணங்களை இழக்க நினைக்கலாமா அவன்? ஆனாலும் நினைத்தான்.

"எதுக்கு இந்த ராத்திரியில்? தாமதிக்காமல் வீட்டுக்கு செல்லுங்கள். இன்னொரு நாள் நேரத்தோடு பேசலாமே".

அவனது கண்ணியம் பேசியது. மனம் பதைபதைத்தாலும், இதை சொன்னதில் பாரியதொரு திருப்தி அவனுக்கு.

"இல்லை, எனது அண்ணி இருக்கிறார் உள்ளே.

அவருக்கு தெரியும் நான் உங்களோடு பேசுவது. இன்று உங்களிடம் கொஞ்சம் பேசுவதாய் முடிவெடுத்தே வந்தேன்".

"சொல்லுங்கள்".. என்றான்.

அண்ணியுடன் தான், அவள் அதிகமாக வெளியே போவதுண்டு. அண்ணியும் இவளுக்கேற்ப தரம் குறையாத் தங்கம் தான். கண்ணியமானவர் என்பதால், அவளது சம்பாஷைணைகளைத்  தொடர்வதற்கு அவனுக்கு தயக்கமற்ற அனுமதியைக் கொடுத்தது அவளது வார்த்தைகளின் வாண்மை.

"எனக்கு திருமணம் பேசி முடிவு செய்தார்கள்"."என்ன..?"

இதை சொல்லவா... அவசர அதிர்ச்சியில் துவண்ட மனதை மிக சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினான்.

"சரி..."

"திகதியும் குறித்தாயிற்று.. ".

"முடிந்ததென்று நினைத்த நான் உயிர்வாழ்கின்றேன்.." சர்ச் உள்ளே குழுவினரின் பாடல்.

"ம்ம்.. சொல்லுங்கள்.. "

"ஆனால்..." மெல்லிய தயக்கம் மென்முகத்தைத் தாழ்த்தியது.

"சொல்லுங்கள்.. எதுவானாலும்.. தப்பாய் நினைக்க மாட்டேன்".

அவள் சற்றே ஆறுதலாய் உணர்ந்து, தொடர்ந்தாள்.

"எனது அண்ணியின் தங்கை ஒரு டாக்டர். தன்னுடன் படித்த வேற்று சாதி பையன் ஒருவனை திருமணம் செய்துள்ளார்.. ஆனால் இருவரும் நன் மதிப்பு பெற்றவர்கள்.."

"ம்ம்.. சரி.."

"இருந்தாலும் நமது குடும்பம் சாதியில் குறைந்து விட்டதாம், நாம் அதை மறைத்து தமக்கு துரோகம் செய்து விட்டோமாம் என்று வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் எங்கள் வீடு தேடி வந்து கொட்டித் தீர்த்து, கொல்லாமல் கொன்று விட்டார்கள் எங்களை அவரது தந்தையும், தாயுமாக. நாம் தரம் குறைந்த குடும்பமாம்.

அவனது தாத்தா இறந்தபோது அழுதபின் இன்று தான் அவன் கண்ணில் நீர். "என்ன பாவம் செய்தாள் என் தேவதை".

அவனுள்ளே தீயின் பொறிகளை உணர்ந்தான். தாயைத் தவற விட்ட குஞ்சு போல் அவளது பார்வையில் அழுத்தமான தவிப்பு. அந்த இருளிலும் அச்சொட்டாகப் புலப்பட்டது அவனுக்கு. தலையை இரு கரங்களால் வாரி அணைத்து அந்தக் குழந்தையை உச்சியில் முத்தமிடத் துடித்தது அவள் மீது அவன் கொண்ட ஆதரவு, அன்பு, அக்கறை, காதல் எல்லாம் ஒன்றாய் ஒருமித்து!

"நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன்.." என்றான்.

"இது ஆண்டவரின் அருள்வாக்கு..."

உள்ளே பங்குத் தந்தை பூசை ஆரம்பிக்கின்றார்.

"நமது பாடசாலைக் காலம் முதல் நீங்கள் என்னை அவ்வப்போது அவதானிப்பது எனக்கு நன்கு தெரியும்.."

"My god....!" மனதுக்குள் அவமானம் தலைக்கேறியது அவனுக்கு.

"எனினும், எத்தனை வருடங்களானாலும் எள்ளளவும் எனக்கு எந்த விதத்திலும் அசௌகரியங்களை ஏற்படுத்தியதில்லை நீங்கள்  என்பது உங்கள் மேல் அளவற்ற நன்மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியது எனக்கு..

ஆனால், அதை நான் காதலாக என்னுள் ஆழப்படுத்த நினைத்ததில்லை.. ஏனெனில், பெற்றோர் பேசும் திருமணத்தையே செய்ய வேண்டும் என்று விரும்பினேன்..

உங்களின் உன்னதங்கள், இன்று, இங்கு, கர்த்தரின் சந்நிதியில் உங்களிடம் பேசத்தூண்டியது என்னை. மனப்பூர்வமாய் மன்னிப்புக் கோருகிறேன் இதனை உங்களிடம் கேட்பதற்கு.. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா? நாம் சாதியில் தாழ்ந்தவர்கள் என்ற ஆட்சேபணைகள் உங்களிடம் உள்ளதா? பெண் பார்த்து ஒதுக்கப்பட்டவள் நான், அவமதிக்கின்றேனா உங்களை?"

என்றவளின் கண்களில் தெரிந்த அந்த.. அந்த.. ஏதோ ஒன்று.. ஏதோ ஒன்று.. பெயரிட முடியாத உணர்வின் ஆழம்வரை உலுப்பியது அவனை!!

கலங்கிய நீர்த்துத்துளிகள் கட்டுப்பாட்டையிழந்து அவனது ஷேர்ட்டில் தெறித்தன.

"உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி".

உள்ளே பூசை களைகட்டுகிறது.

அவன் பேசினான். "எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை மனிதகுலத்துக்கு இருக்க வேண்டியவை எல்லாமே அன்பு, நேசம், கருணை, விட்டுக்கொடுப்பு, மனிதபிமானம் என்பவை மட்டுமே. ஏனெனில் கர்த்தர் அவற்றையே எங்களுக்கு கூறியுள்ளார். அவர் நம் பாவங்களையெல்லாம் தமதாக்கி நம்மைப் பரிசுத்தராக் கியவர்.

அவரின் பிள்ளைகள் நாம். ஏற்றத்தாழ்வு எங்கள் அகராதியிலேயே கிடையாது. அதற்கும் மேல், நீ என்ன பாவம் செய்தாய்.. ".

அவனையுமாறியாது "நீ "என்ற நெருக்கம் எங்கிருந்து வந்தது அவனுக்கு?

"Sorry.." என்றான் அவசரமாக.

"இல்லை.. இரண்டு நாட்களாய்க் குற்றுயிராய்த்துடித்த என் குற்றவுணர்ச்சியும், குழப்பமான வேதனையும்  உங்கள் வார்த்தைகளின் பின் தான் உயிரிழந்தன. என் ஆத்மாவுக்கு உயிர் கொடுத்தன. என் பெற்றோரும் மிகவும் துவண்டு போனார்கள் பாவம்.

என்னால் அவர்கள் முகத்தையே பார்க்க முடியவில்லை.

"இனி பார்க்கலாம் நீ தாராளமாக.. அவர்கள் குற்றமற்றவர்கள்.. எதற்காக இந்த கொடிய தண்டனை?!"

நிறைய நிறைய பேசினான் அவன். அவ்வளவும் அவளுக்கு அமுத உலகைக் காட்டியது. அவளுக்கு மட்டுமா? அவன் சற்றும் நினைத்துப் பார்த்திராத கர்த்தரின் ஏற்பாடு இன்று இது!!

சடாரென ஆரவாரமாக வெடிச்சத்தங்கள்.. தேவபாலன் தோன்றிவிட்டார். பூரிப்பும், புன்னகையும், பொங்கிய பேரின்பமுமாய் கர்த்தரின் குழந்தைகள் குதூகலிக்கின்றனர்!

பின்னிரவு ஆனதால் கிருஷ்ணன் கோவில் திருப்பாவை ஆயத்தங்களுக்காக ஒலிபெருக்கியில் அனுசரணையளித்துக்கொண்டிருந்த 'சின்னக்குயில்',  நிலவின் ஒளியில் வழியறிந்து, வேப்பமிலைகளின் அசைவுகளினூடே அவசரமாய் அவளுக்காக...

"வீண் மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம்.. கண்ணா உன் மார்பில் விழி மூட  வேண்டும்.. அந்தக் கலைக்கு அந்திச்சிலைக்கு விளக்கமளிக்க அழைத்த பொழுதினில்.. காற்றோடு குழலின் நாதமே.."

அவனது ஆனந்தமான அழுத்தம் அவளுக்காக...

"முப்புரங்கள் எரிப்போம்! அச்சுதனை ரசிப்போம்!!"

அவளது அழுத்தமான ஆனந்தம் அவர்களுக்காக...

"எத்திசையும் தேவதைகள்.. மெய்ச் சிசுவைத் துதிப்போம்..!!!"                                               

பானு சுதாகரன்

Comments