சீனப் பிரதிநிதியின் யாழ்ப்பாண விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

சீனப் பிரதிநிதியின் யாழ்ப்பாண விஜயம்

இலங்கையில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு இலங்கை வெளிநாட்டு இராஜதந்திர மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துபவரான இலங்கைக்கான சீனத்தூதுவர் சீ செங்ஹொங், கடந்த வாரம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டதோடு இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் அமைந்திருக்கும் இராமர் பாலத்தையும் படகில் சென்று பார்வையிட்டிருக்கிறார். இது இராமாயன கதையின்படி இராமர் கட்டிய பாலமா, கடலில் மூழ்கிய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்திருக்கக் கூடிய நிலப்பரப்பா அல்லது ஆழமற்ற கடற்பரப்பில் இயற்கையாகவே ஏற்பட்ட மணல் திட்டுகளா என்ற வாதவிவாதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு பார்த்தோமானால், நிச்சயமாக இந்த இயற்கை அதிசயம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஒரு இடம்தான்.

ஆனால் 2004ம் ஆண்டின் பின்னர் இலங்கை மீதான தன் செல்வாக்கை சீன அரசு படிப்படியாக விஸ்தரித்து வந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசுக்கு உதவிகள் வழங்கிய சீன அரசு, போருக்குப் பின் பல பொருளாதார முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள ஆரம்பித்தது. ஹம்பாந்தோட்டை விமான நிலையம் மற்றும் துறைமுகம் இரண்டுமே அவற்றில் குறிப்பிடத்தக்கவை. சீனா இன்று நேற்றல்ல; நீண்டகால நண்பன், உலகில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவியபோது அரிசி – இறப்பர் பண்டமாற்று ஒப்பந்தத்தை செய்து இலங்கைக்கான அரிசியை சீனா தொடர்ந்து வழங்கியது. எழுபதுகளில் கொழும்பில் சர்வதேச தரத்துக்கமைய ஒரு பிரமாண்டமான சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சீன அரசின் பரிசாக வழங்கியதை மறந்து விடுவதற்கில்லை.

சீனா இலங்கையின் நண்பனாக விளங்குவதால்தான் சீன உரக்கப்பல் விவகாரத்தில் உரத்துக்கான பணத்தை செலுத்த முன்வராத மக்கள் வங்கியை இலங்கைக்கான சீனத்தூதுவர் கறுப்புப் பட்டியலில் சேர்த்தபோது மக்கள் அதை பாரதூரமான விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதோடு அரசும் அது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு சீனா இலங்கையில் செல்வாக்கு செலுத்தும் நட்பு நாடாக விளங்குகிறது. ஆனால் இந்தியாவோ அல்லது மேற்குலக நாடுகளோ வடக்கு விவகாரங்களில் காட்டும் கரிசனையை  சீனா காட்டியதில்லை. இலங்கைத் தமிழ் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு கருத்தும் அது வெளியிட்டதும் இல்லை. ஏனைய நாடுகளின் தூதுவர்கள் அவ்வவ்போது யாழ்ப்பாணம் சென்று வருவதுபோல சீனத்தூதுவரோ அல்லது சீனாவின் ராஜதந்திரிகளோ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வதில்லை. இலங்கைத் தமிழர்கள் பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாத ஒருநாடு என சீனாபற்றிய பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் ஒரு அபிப்பிராயத்தை கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்தான், சீனத் தூதுவர் தனது தூதரக அதிகாரிகளை அழைத்துக் கொண்டு வட பகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

சீனாவின் தமிழர்கள் மீதான இந்த திடீர் அக்கறை இந்தியாவுக்கும் ஏனைய நாட்டு இராஜதந்திரிகளுக்கும் நிச்சயம் வியப்பைத் தந்திருக்கும். சீனத் தூதுவரும் அவரது ஆண் அதிகாரிகளும் வேட்டியும் வெற்றுடம்புமாக கைகளில் தட்டுகளை ஏந்தியபடி நல்லூர் கோவிலுக்குள் ஆசாரங்களைப் பின்பற்றியவர்களாக நுழைந்தது இராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பான செய்தியாகி இருக்கும். அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, தலைமன்னார் சென்று அங்கிருந்து கடற்படைப் படகொன்றின் மூலம் இராமர் பாலத்தை அவதானித்து திரும்பிய அவர் தலைமன்னாரில் இருந்து புறப்படும்போது ஊடகவியலாளர்களைப் பார்த்து, இது முடிவல்ல; ஆரம்பம்தான் என்று பூடகமாகச் சொல்லிவிட்டுச் சென்றதும் பேசுபொருளாகி இருக்கிறது.

2009யுத்தத்துக்கு முன்னர் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கு வெகுவாகக் காணப்பட்டது. இந்தியா இலங்கை மீது நேரு காலம் முதல் செல்வாக்கு செலுத்தி வந்திருக்கிறது. இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீது உணவுப் பொதிகளை வீசி எறிந்தது, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது என்பதெல்லாம் தலையீடுகளாகவே கருதப்பட்டன. இலங்கை பொறுமை காப்பதைத்தவிர அச் சமயத்தில் செய்வதற்கு வேறு எதுவும் இருக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் 2009யுத்தத்தின் பின்னர் சீன முதலீடுகள் இலங்கைக்குள் வந்தன. சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்தது. இது இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவே செய்தது. தற்போது இரு நாடுகளும் இலங்கையில் தமது செல்வாக்கை செலுத்தி வருகின்றன. அதே சமயம் வடக்கில் மூன்று தீவுகளில் காற்றலை மின்சாரத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் சீனா முன்வந்தது. இதை தன்நாட்டு எல்லையோரமாக நடத்தப்படும் அத்துமீறலாகக் கருதிய இந்தியா கடும் ஆட்சேபணை தெரிவித்தது.

சில தினங்களுக்கு முன், யாழ். தீவுகளில் மேற்கொள்ளவிருந்த மின் உற்பத்தித் திட்டத்தை மூன்றாம் சக்தியொன்றின் தலையீடு காரணமாக தாம் விலக்கிக் கொள்வதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களில் சீனத்தூதுவர் தன் யாழ். விஜயத்தை மேற்கொண்டதோடு இராமர் பாலத்தையும் பார்வையிட்டுள்ளார். இராஜதந்திர ரீதியாக சீனா இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு செய்தியை விடுத்திருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் இலங்கை வந்திருந்த சுப்பிரமணியம் சுவாமி, இந்திய அரசு இராமர் பாலத்தை பாரம்பரிய இயற்கைச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். சேதுசமுத்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இராமர் பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்காக ஆழப்படுத்த வேண்டும் என்ற நிலையில் சுப்பிரமணியம் சுவாமியும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் தடைஉத்தரவு வாங்கிய நிலையில் சேது சமுத்திரத்திட்டம் கைவிடப்பட்டது. இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்கள் ராமர் அமைத்த பாலமாகவே இம் மணல் திட்டுகளைக் கருதுகின்றனர். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என பாரதியாரும் பாடிச் சென்றுள்ளார்.

இந்தியாவுக்கு இவ்வளவு நெருக்கமான சேது பாலத்தை சீனத் தூதுவர் சென்று பார்த்ததை இந்தியா எவ்வாறு புரிந்து கொள்ளும் என்பது பொறுத்திருந்தே பார்க்கப்பட வேண்டும் ‘உங்களுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் இலங்கையில் செல்வாக்கு செலுத்த முடியும்; அதுவும் நீங்கள் பெருமளவு செல்வாக்கு கொண்டிருக்கும் வடக்கிலும் நாம் செல்வாக்கு செலுத்துவோம்’ என்பதே இந்தியாவுக்கு சீனா விடுத்திருக்கும் சமிக்​ஞையாக இதை புரிந்து கொள்ளலாம் என்ற அவதானிகளின் கூற்றை நிராகரிப்பதற்கில்லை. இது ஒரு ஆரம்பம் மட்டுமே என சீனத்தூதுவர் வட பகுதி விஜயத்தை வர்ணித்துச் சென்றதை இந்தப் பொருளிலும் பார்க்கலாம்.

சீனாவும் இந்தியாவும் பகை நாடுகள் என்பதோடு இந்தோ – பசுபிக் பிராந்திய பலப் பரீட்சை அரசியலிலும் ஈடுபட்டிருக்கும் நாடுகள், சீனா தனது கடல் பட்டுப்பாதை திட்டத்தில் இலங்கையை பயன்படுத்திக்கொள்ள விழையும் நாடு, சீனா பொருளாதார ரீதியாகவும் இந்தியா அரசியல் ரீதியாகவும் இலங்கையில் செல்வாக்கு செலுத்த முனைகின்றன. இலங்கை இவ்விரு நாடுகளுடன் நெருங்கிப் நட்புறவைக் கொண்டிருப்பதால், இலங்கை அரசு இவ்விரு நாடுகளையும் லாவகமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் கையாள வேண்டியிருக்கும் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகிறோம்.

Comments