பயண முடக்கம் தந்த படிப்பினை | தினகரன் வாரமஞ்சரி

பயண முடக்கம் தந்த படிப்பினை

உலகை முடக்கிப்போட்ட கொரோனாவால நாம் கற்றுக்கொண்டதுதான் அதிகம்', என வேலாயுதம் கூற, மனைவியும் 'எல்லாம் படிப்பனவுதான்....., நாங்கள் தான் நம்மட பிள்ளைகளின்ர பாதுகாப்பைத் தேட வேணும்,... எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்,... எல்லாம் இறைவன் செயல், எனக்கூறி கதிரையில் அமர்ந்து கண்மூடினாள். நினைவலைகள் பாடம் புகட்டின  

உள்ளம் உவகை கொள்ள வாசலை பார்த்தபடி கோகிலா நின்றாள்.

'அம்மா எனக்கு மெடிசின் கிடைச்சுட்டு' எனக் கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவள், தாயைக் கட்டிப்பிடித்தாள் அவளுக்கு தலைகால் தெரியாத சந்தோசம். 'மெடிசின்'கிடைக்குமா இல்லையா எனத் தள்ளாடியவளுக்கு, கிடைச்சதும் சந்தோசத்தில குதித்தாள். தாய்க்கு ஒருபடி மேல. தகப்பன் 'எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், திரும்பச்சோதினை எடுக்கிற கதை இருக்கப்படாது, வாறது எதுவோ அதுக்குப் போயிட வேணும், கிடைச்சதோடு திருப்தியாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்,' எனக் கண்டிப்புடன் கூறியதாலதான் றாகினிக்கு இந்தச் சந்தோசம். அப்போ ரெலிபோன் அடிக்க கோகிலா எடுத்து 'அப்பா அவளுக்கு மெடிசின் கிடைச்சிருக்கு,'எனக்கூறினாள்  

இண்டைக்கு உனக்கு விருப்பமான சாப்பாடுதான், அண்ணனும் அறிந்தால் சந்தோசப்படுவான், அவனுக்கும் சொன் னனியா' எனக் கேட்கும் போது ரமேஸ் வாசல்படி ஏறினான். அவனைக்கண்டதும் 'அவள் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சுவிட்டுது' என்றாள். ரமேஸின் கண்கள் றாகினியைத் தேட, அறைக்குள் இருந்து அவள் வந்தாள். மிகுந்த சந்தோசத்தோடு றாகினியைப்பார்த்து 'கங்கிராஜூலேசன்' என்றவாறு தங்கையின் கையைகுலுக்கி வாழ்த்துச் சொன்னதோடு, அவளது முதுகில தட்டி தனது சந்தோசத்தையும் வெளிப்படுத்தினான். கையில இருந்த ஐஸ்கிரீம் பெட்டியையும் கொடுத்தான்.

'என்னடா இப்ப நீ வந்திருக்கிறாய், என்ன 'லீவா?' எனத்தாய் கேட்கவும் 'இல்லையம்மா, ஒருமணித்தியாலம் 'ஷோட்லீவு'எடுத்துக் கொண்டு வந்தனனான்.

அவளுக்கு மெடிசின் கிடைச்சது எண்டதும் என்னால இருக்க முடியேலை, மனேச்சரிட்ட விசயத்தைச் சொல்ல, அவரும் வாழ்த்துச் சொல்லி லீவு தந்துட்டார்', எனச் சொல்லவும். 'என்ன இருந்தாலும் பைக்க நிதானமாய் ஓடவேணும், அவசரம் ஆபத்தை விளைவிக்கும், நிதானம் முக்கியம்' எனக் கூறினாள். ஐஸ்கிரீமை கப்பிலபோட்டு தாய் தமையனுக்கு கொடுத்துத் தானும் குடிக்கத் தொடங்கினாள் றாகினி. தனது சைக்கிலை உருட்டிக் கொண்டு தகப்பன் வர காற்றாய் பறந்து 'அப்பா எனக் கட்டிப்பிடிக்க, தகப்பனும் சைக்கிலை மரத்தோட சாய்த்து, மகளின் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்.  

ரமேஸைக் கண்டவுடன் 'என்னடா நீயும் வந்துவிட்டாயா?, மனேச்சர் விட்டுவிடாரா?, எனக்கேட்க 'நான் போகப்போறன்.

அப்பா! இவளை வந்து பாக்கவேணும் போல இருந்துது, அதுதான் வந்தனான்', எனக்கூறியபடி தனது கப்பை தகப்பனுக்கு நீட்ட 'என்ன அதுக்கிடையில இதுவும் வாங்கியந்தனியா?'என ஒரு சிரிப்புடன்கதிரையில் அமர்ந்தார். 'நான் நம்பவே இல்லை, எனக்கு மெடிசின் கிடைக்குமெண்டு', என றாகினி கூறவும், தகப்பன் 'இங்க பாரம்மா, எல்லாம் இறைவன்ர செயல், அவன் மனம் விரும்பினால் தான் எதுவும் நடக்கும்,----- நீ என்னதான் கிடைக்கப் போகுதோ எண்டு பயந்து பயந்து இருந்தாய், அந்தப்பயத்தால உன்னிடத்தில ஒருவிதமான பணிவு இருந்தது.

உன்ர செயலிலையும் ஒரு அமைதி இருந்தது, அதாலதான் உனக்கு இந்தப் பெறுமதிமிக்க பரிசு கிடைச்சிருக்குது. இனித்தான் உனக்கு பணிவும் அடக்கமும் அதிகம் வேணும். சந்தோசத்தில துள்ளக்கூடாது, அதிக சந்தோசம் நமது வாழ்க்கையை திசை திருப்பிப் போடும், நான் இப்ப சொல்லிறத உன்ர வாழ்க்கையில வேதவாக்காக கடைப்பிடிக்க வேணும்' எனக் கூறிக்கொண்டு, தனது கையிலுள்ள கப்பில கவனம் செலுத்தினார்.  

 நாட்கள் உருண்டோடின, செல்வி டொக்டர் றாகனி வேலாயுதம் ஒரு புதிய சேவைக்கு புறப்பட ஆயத்தமானாள். 'அம்மா நீங்களும் வாறீங்களா?, உங்கட ஊர்தானே, வாங்கோ, எனத்தாயை அழைத்தவள், தகப்பனின் முகத்தையும் ஆவலோடு பார்த்தாள்,'அப்பா' என அன்போடு அழைத்தபடி தகப்பனின் கைகளைப்பிடிக்க 'நானும் வாறன் பிள்ளை, நீ,என்ன செய்யிறாய் எண்டு பாக்கத் தானே வேணும்', என்றவாறு புறப்படத் தயாரானார், அப்போது வாகனம் ஒலி எழுப்ப தனது பொருட்களை தமையனிடம் ஒப்படைத்துவிட்டு, தாய் தந்தையுடன் தானும் வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.  

 எல்லோரும் தாயின் சொந்த ஊரான வல்லைபுர வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பாடசாலையில் இறங்கினர். ஊரவர்கள் வரவேற்றனர்.

அந்த ஊர் வைத்தியர், தாதியர்களும் நின்றனர். எல்லோரையும் அன்புடன் அழைத்துக் கொண்டு பாடசாலைக்குள் நுழைந்தாள். எல்லாருடனும் அன்பாகப் பேசி அவர்களுடன் உறவாடினாள்.. வைத்தியப் பரிசோதனைகளை மேற்கொண்டு மாத்திரைகளையும் வழங்கினாள். ஊர் வைத்தியரின் உதவியுடன் சிலருக்கு கிளினிக் வசதியையும் செய்து கொடுத்தாள்.

பகல் உணவை உறவினர் வீட்டில் முடித்துக்கொண்டு திரும்புவதற்கு முயன்ற போது, ஒரு முதியவர் தாயின் கைகளை கண்ணில் ஒற்றி 'நீ பெரிய பாக்கியசாலி; பிள்ளை, கடவுள் உனக்கு தங்கமான பிள்ளைகளைத் தந்திருக்கிறார்.... நீங்களும் பிள்ளையளை நல்லபடியாய் வளத்திருக்கிறீங்கள். முக்கியமாய் மனிசரை மதிக்கச் சொல்லிக் கொடுத்து இருக்கிறீங்கள், இந்தச் சேவை மனப்பாங்கு எல்லாருக்கும் வராது, நல்லாய் இருப்பாயம்மா!' எனக் கண்ணீர் தழும்ப நிறைஞ்ச மனசோடு வாழ்த்தினார்.

அவரது வாழ்த்தை செவிமடுத்த தந்தையின் உள்ளம் குளிர்ந்தது . அவர்களிடம் இருந்து விடைபெற்று வீடு திரும்பினர்.  

வேலாயுதம் மகளைப்பார்த்து 'றாகினி! பாத்தியா அந்தப் பெரியவரின்ர சந்தோசத்தை, இது தானம்மா உண்மை யான மகிழ்ச்சி, நாங்கள் வரேக்க எதையும் கொண்டு வரேலை, அதேபோல போகேக்கையும் எதையும் கொண்டு போகப்போவதுமில்லை, நீ கஷ்டப்பட்டு படிச்சதுக்கு கடவுள் இந்தத் தொழிலை தந்திருக்கிறான்.

அவன் மனம் விரும்பி உனக்கு தந்ததை நீ மற்றவருக்கு கொடுக்கவேணும். இந்த உலக வாழ்க்கையே அப்படித்தான். இறைவன் எங்களுக்குத் தந்ததை நாம் மட்டும் பயன்படுத்தக்கூடாது.

மற்றவர்களும் அதனால் ஓரளவு பயன்பெற்றால்தான் அதின்ர பலன் நமக்கு பூரணமாகக் கிடைக்கும். அந்த சந்தோசத்தைப்போல வேறொன்றும் கிடையாது, இண்டைக்கு என்ர மனம் நிறைஞ்சு இருக்குது, என்று கூறவும், தாய் றாகினியின் முகத்தை தடவி கைகளால் நெட்டி முறித்தாள்.  

நாட்கள் நகர்ந்தன. நாடு கொரோனா வைரஸினால் முடங்கியது. அத்தியாவசிய சேவையில் உள்ளவர்கள் மட்டும் வேலைக்குச் சென்றனர். ஏனையோர் தமது பணிகளைவீட்டில் இருந்தவாறு மேற்கொண்டனர்.

வேலாயுதம் வீட்டிலையும் எல்லோரும் இருந்தனர்.  

அந்த நேரம் பக்கத்து வீட்டில் இருந்து திடீரென அழுகுரலும், அகல்யாவின் சத்தமும் கேட்க, ரமேஸ் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அங்கு அவர்களது ஒரே மகள் கைகால் நடுங்கியவண்ணம் எழும்ப முடியாமல்த் தள்ளாடினாள்.

அவள் தள்ளாடித் தடுமாறி விழுகின்ற நிலையைப் பார்த்த அந்தத் தாய், தந்தை மனம் தாங்க முடியாது தவித்தனர்.

அவர்களது தவிப்பை பார்த்த ரமேஸ் றாகினிக்கு கூற, அவளும் அவரகளது வீட்டிற்குச் சென்று சில மருந்துகளை கொடுத்து, தூங்க வைத்தாள். ரமேஸ் 'என்னதான் ஒரு பிள்ளையாக செல்லமாக இருந்தாலும் அவாவையும் இந்த உலகத்தோடு ஒத்து வாழ வழிப்படுத்தியிருக்க வேணும்., வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாமல் போயிட்டு, நினைச்சது எல்லாம் கிடைக்க,எது சரி, எது தவறு எண்டு ஒண்டும் புரியேலை... அகல்யாவைச் சுகப்படுத்துகிறது உங்கட கையிலைதான் இருக்குதன்ரி.... நீங்கள் தான் இனி நல்லாய்க்கவனிக்கவேணும் எனக்கூறி, றாகினியுடன் வீட்டுக்குத் திரும்பினான்.  

 அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பிய தகப்பன், மிகுந்த மன வேதனையுடன் தலையில கைவைத்து அழத்தொடங்கினார். அவருடன் மனைவியும் சேர்ந்து கொண்டாள்.

அப்போது கதிரவேலர் மனைவியைப் பார்த்து 'பார் அந்தப் பிள்ளையளை, தகப்பன் சாதாரண லேபர், தாயும் ஏதோ ஒரு ஆபிஸில கிளார்க், ஆனால் பிள்ளையள், ம்... எல்லாம் நாங்கள் விட்ட தவறுகள் தான் காரணம்,... உனக்கு நினைவிருக்கா? இப்ப வந்து போறானே ரமேஸ், அந்தப்பிள்ளை அப்ப ஆறாம்,ஏழாம் ஆண்டு படித்திருப்பான். நான் கார் வாங்கி கோயிலுக்கு கொண்டு போவதற்காக றோட்டில விட்டப்போ, இந்தப் பிள்ளை அதை ஆசையோடு தொட்டுப்பார்த்தது.

அதுக்கு நீயும் அகல்யாவும் வாயில வந்தபடிஎல்லாம் பேசினனீங்கள், அந்தச் சம்பவத்திற்கு பிறகு இந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கிறேலை அவன், ஆனால் இண்டைக்கு அந்தப் பிள்ளை எங்கட வீட்டுச்சத்தம் கேட்டதும் ஏதோ ஆபத்து எனடு ஓடி வந்திருக்கிறான்... இப்பத்தே நிலையில மருந்து மாத்திரைக்கெண்டு இவளை எங்க கூட்டிக்கொண்டு போகமுடியும், இவள் போடிற சத்தத்திற்கு வேற ஆக்கள் என்ன நினைப்பார்கள்.

இந்தப் பிள்ளைகள் எதையும் யோசிக்காமல்... வந்து உதவி செய்து போட்டுதுகள்.... இதே நிலை மாறி நடந்திருந்தால் அகல்யா போய் உதவி செய்திருப்பாளா?... இல்லை அவள் போக விரும்பினாலும் நாங்கள் விட்டுவிடுவோமா?.. யோசிச்சுப்பார்... 'சீ... வெட்கமாய் இருக்கு.... அந்தத் தாய் தகப்பனும் விட்டுவிட்டினம்.... இப்ப எங்களுக்கு அதுகளின்ர உதவி தேவைப்படுகுது... றாகினி சொன்னதைப் பார்த்தியா? எந்த உதவி எப்ப தேவைப்பட்டாலும் தயங்காமல் போன் பண்ணச் சொல்லி நம்பரும் தந்திருக்கிறா... பெரிய பதவியில இருந்தாலும் இந்தப்பணிவும் உதவிசெய்யிற மனப்பக்குவமும் எங்களிட்ட எள்ளவும் இதுவரைகாலமும் இருக்கேலை... இந்தச் சிறுசுகளிட்ட இருந்து தான் படிக்க வேணும் எண்டு இறைவன் பாடம் புகட்டியிருக்கிறான்.

சுருங்கச் சொல்லப்போனால் மகாபாரதத்தில திருதராஷ்டிரர் போல நாங்கள் இருந்திருக்கிறம்... என அவர் கூறியதை மறுத்து 'என்ன நாங்களும் அடுத்தவன்ர சொத்தை பறிச்சோமா?' என மனைவி கேட்க... 'சொத்தைப் பறிச்சதுதான் உனக்குத் தெரிஞ்சிருக்கு.... மகாபாரதம் ஒரு கடல், அதில எவ்வளவோ கருத்துக்கள் இருக்குது, அதில ஒரு துளியாவது உணர்ந்து கொண்டு நடந்தாலே போதும் நம்மட வாழ்க்கை சிறப்பாய் அமைஞ்சு விடும்.... பாரதம் தெரிந்தால், மனத்தில பயம் வரும், பயம் வர பணிவு வரும், பணிவு வந்தால், எல்லாப் பண்புகளும் தன்னாலே வரும்...... அமைதி நிலவியது .  

மேலும் 'துரியோதனனும் அவனது சகோதரர்களினதும் அழிவுக்கு யார் காரணமம் எண்டு நீங்கள் நினைக்கிறீங்க? அவர்களின் அழிவுக்கு வேற ஒருத்தரும் காரணமில்லை... அவர்களது தாய் தந்தையர் தான் காரணம். துரியோதனன் துச்சோதனன் போன்றவர்கள் தப்பு செய்யும்போது, தவறான பாதையில செல்லும் போது அவர்களைத் தடுக்காமல்... பெரியவர்கள் கூறிய விடயங்களை காது குடுத்துக் கேட்காமல், குருவினது, பெரியப்பா சித்தப்பாவினது கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்காமல்... பிள்ளைகளின்ர போக்கில போகவிட்டதால தான் அவர்கள் அனைவரும் அழிந்தார்கள்.

அதே வேலையைத்தான் நாங்களும் செய்திருக்கிறம்.... அவளைப்பற்றி யாராவது ஏதாவது தப்பாச் சொன்னால் அவர்கள் திரும்பகிட்ட வராதபடி முகத்தில அடிச்சாப் போல பேசி அனுப்பிப்போடுவம். ரீச்சமார் கூட தண்டித்தால், என்னதப்பு நீ செய்தாய்? ஏன் அடிச்சவா? எண்டு எப்பவாவது அவளிட்ட கேட்டிருப்போமா?... ஆனால் அவையளோட போய் எத்தனைநாள் சண்டை போட்டிருக்கிறோம், --- அதனால தான் பிள்ளையை பற்றி எதுவும் எங்களுக்குச் சொல்லாமலே அவர்களும் விட்டுவிட்டினம்... சொந்த பந்தமும் எங்களிட்ட அவளைப்பற்றி கதைக்க பயப்பிட்டினம்... ஏன் நாங்கள் அவர்களுக்கு குடுத்த மரியாதை அவ்வளவு... அதுதான், எல்லாத்துக்கும் சேர்த்து கிடைச்ச பரிசுதான் இது... இனியாதல் நாங்கள் மாறவேணும்... என அவர் கூறும்போது மகள் மெதுவாக அசைந்து 'அம்மா!' எனக் குரல் கொடுத்தாள்.  

இருவரும் அவளுக்கருகில் சென்றனர். 'அம்மா எனக்கு யூஸ் வேணும்... என்று சொல்லவும், யூஸ் எடுப்பதற்காகச் சென்றவள், றாகினி கொடுத்த மாத்திரையையும் கலந்துகொடுத்தாள்.

அகல்யாவும் விருப்பத்தோடு வாங்கிப் பருகி எழும்புவதற்கும் முயற்சி செய்தாள். அப்போ தாயும் உதவி செய்ய 'அம்மா எனக்கு என்ன ஆயிற்று? கை கால் எல்லாம் சோருது, பெலம் இல்லாத மாதிரி இருக்குது, ஏனம்மா? என ஒன்றும் அறியாத மாதிரிக்கேட்க, மகளின் நிலையைக் கண்ணுற்ற தாய்மனம் வேதனைப்பட 'ஒண்டு மில்லையம்மா, நீ... உனக்கு ஆரோ... என்னவோ சாப்பிடத் தந்துவிட்டினம் போல... அதின்ர தாக்கந் தான் இது, எனக் கண்ணீருடன் கூறினாள்.

அகல்யா தாய் கூறியதன் காரணத்தை புரிந்து கொண்டாள். எதுவும் பேசாது அமைதியாக தாயின் தோளில் சாய்ந்தபடி பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

அவள் வெளிய வரும்வரை காத்திருந்து அவளைத் திரும்பவும் அழைத்து வந்து சாப்பாட்டைக் கொடுக்க, வேண்டாவெறுப்போடு வாங்கிச் சாப்பிட்டாள்.

அவளது நடவடிக்கை தாய்க்கு வேதனையைக் கொடுக்க சாப்பாட்டை வாங்கி ஊட்டி விட்டாள். 'அம்மா! எனக்கு ஊட்டிவிட்டது ஞாபகம் இருக்கா?' எனவினாவ தலைகுனிந்தாள் தாய்.. 'கமலா அன்ரி தானே எனக்கு ஊட்டி விடுவா, எங்க?... அவா வரேலையா?' எனக் கேட்கவும,; 'இல்லையம்மா இனி அவா வரமாட்டா... நானும் வேலைக்கு... இனிப் போகமாட்டன்' எனக் கூறவும்,'என்னம்மா சொல்லுறீங்கள், நான் ஏதாவது தப்பா நடந்திட்டானா?... சொறியம்மா,' எனக் கூறி மௌனமானாள். 'இல்லையம்மா, எனக்கு இப்பதான் நான் விட்ட தவறுகள் புரியுது, அது தான் இப்ப நான் பென்சனுக்கு போடப் போறன்', என்று தாய் கூறவும் அகல்யா தாயின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிந்தாள். இதை அவதானித்த தாய்,தகப்பனின் முகம் மலர்ந்தது   நாட்கள் உருண்டோடின. இரு வீட்டாரும் நட்புறவோடு பழகினர். றாகினியோடு அகல்யா நெருக்கமாகி விட்டாள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் ஒன்றாகச்சேர்ந்து அரட்டை அடித்து மகிழ்ந்தனர். இதனால் அகல்யாவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின .கதிரவேலரும் மனைவியும் தமது தற்பெருமைகளை மறந்து அவர்களுடன் நெருக்கமாகினர்.  

அன்றும் வழமைபோல வேலாயுதம் மதியச்சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையில் படுத்துக் கண்மூடினார்.

அப்போ கதிரவேலர் வந்து முன்னுக்கு இருந்த மரக் குற்றியில் அமைதியாக அமர்ந்தார்.

அங்கு ஏற்பட்ட சிறு சலசலப்பினால் வேலாயுதம் கண்விழித்தார், அருகில் கதிரவேலரைக் கண்டதும் பதட்டத்தோடு 'என்ன சார்;? இங்க வந்து...' என இழுக்க,'பயண முடக்கம்தானே, வீட்டிலை இருக்க போர் அடிக்குது, அதுதான் உங்களோட கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகலாம் என நினைச்சு வந்தனான்,' எனக்கூறவும்,'வாங்க உள்ளுக்க போவோம்.' எனக்கூறிய வண்ணம்,'அம்மா..! யார் வந்திருக்கிறாங்க என்று பாரன்', என்று படி ஏற,'வாங்க... -எப்படி நல்லாய் இருக்கிறீங்களா?... மகள் எப்படிச் சுகமாய் இருக்கிறாளா? எனக் கேள்விகளை அடுக்க,'என்னம்மா வந்தவரை வாசல்லவைச்சு கேள்வி கேட்கிறாய்', எனக்கூறவும், மூவரும் சிரித்துக் கொண்டு கதிரைகளில் அமர்ந்தனர்.  

ஓடியோடி வேலை செய்து என்னத்தை கண்டது,---இந்தக் கொரோனா வைரஸ் வந்ததும் வந்துது, எல்லாத்தையும் புரியவைச்சுவிட்டுது தம்பி. அதுமட்டுமில்லை... என்னை பெரிய ஆபத்திலையிருந்தும் காப்பாற்றியிருக்குது.

இந்தப் பயணமுடக்கம் இல்லையெண்டால் மகளைப்பற்றிய விஷயங்கள் எதுவுமே தெரியாமல் போயிருக்கும். உங்கட அன்பும் கிடைக்காமல் போயிருக்கும், எல்லாத்துக்கும் மேல என்ர மகளை நான் திரும்பப் பெறமுடிஞ்சுது. அதுக்கு நீங்களும் ஒருகாரணம், எனக்கூறி அமைதியானார்,' ஒண்டுமில்லை சேர், ஏதோ நீங்கள் கும்பிட்ட கடவுள் கைவிடேலை, என ஆறுதல் கூறினார் கதிரவேலர்; தலையாட்டி அதைப் புரிந்து கொண்டார்.  

அதென்ன தம்பி! யானைக்குட்டி பொம்மைகளிலை இரண்டு பேருடைய போட்டோவையும் ஒட்டி இருக்கிறீங்கள், என ஒரு சிரிப்போடு வினாவ, கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தனர். பின் வேலாயுதம் ஒருசிரிப்போடு 'அதுவா அந்த உண்டியலுக்கு வயசு இருபத்தேழு, பின் பக்கத்தில திறந்து மூடக் கூடிய வசதியும் இருக்குது', எனக்கூற,'அப்படியா என்னத்துக்காக?' என ஆவலோடு கதிரவேலர் வினவினார்.

'எனக்கு முதல் முதலாக இவர் வேண்டித்தந்தது, இந்த உண்டியல் தான், மற்றது அவரோட அம்மா கொடுத்தது', என மனைவி கூறினாள்...'ஒண்டுமில்லை சேர், நான் தனிப்பிள்ளை, அம்மா எனக்கு சின்ன வயசிலையிருந்தே உண்டியல்ல காசு போடுகிற பழக்கத்தையும், சேர்த்த பணத்தை யாருக்காவது, தாய் தகப்பன் இல்லாத படிக்கிற பிள்ளையளுக்கு குடுக்கச் சொல்லியும் சொன்னவா.

அந்தப் பழக்கம் இப்ப எங்கள் எல்லாருக்கும் தொத்திக் கொண்டு விட்டது, என்ன இரண்டு பேரும் சம்பளம் கிடைச்சதும் ஒவ்வொரு மாதமும் ஐந்நூறு, அறுநூறு ரூபாய் போடுவம், வரிஷத்தில ஒருநாளைக்கு எல்லாரும் முதியோர் இல்லத்திற்கோ, அல்லது சிறுவர் இல்லத்திற்கோ போய், அந்தப்பணத்தில பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவம்.

சின்னாக்களாய் இவர்கள் இருக்கும்போது அவர்களுடன் விளையாடுவார்கள், அங்க போய் வந்ததால இந்தப் பிள்ளையளுக்கு தங்களைப் பற்றிய தெளிவு, உதவி செய்யிற மனப்பாங்கு.. செலவில சிக்கனம், பணிவு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேணும் எண்ட பண்புகள் என நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது... அதொரு சந்தோசம், பிள்ளைகள் தங்களைப் பற்றி உணர்ந்தால் தவறுகள் செய்ய மாட்டினம், அதுக்கான ஒரு வழிதான் இந்த உண்டியல்ல பணம் சேர்க்கிறது,-- இது இப்பவும் தொடருது, பிள்ளையளின்ர உண்டியல்கள் அவையளின்ர றூமுக்க இருக்குது', எனப் பெருமையோடு கூறினார்.

கதிரவேலர் எதுவும் பேசாது அமர்ந்திருந்தார்,'அம்மா சொல்லுவா,'தருமம், தரும்' தருமத்திலையே ஒளிந்திருக்கிற 'தரும்' எண்ட சொல்லை நினைவில வைச்சிரு, அது உனக்கு எல்லாந் தரும்,--- படிக்காத மனிசிதான், ஆனால் தர்மத்தின் பலனை முழுக்க அறிஞ்சு எனக்கு வற்புறுத்தியதால, அதை நான் தொடர, என்னைப் பார்த்து பிள்ளையளும் தொடருகிறார்கள்' எனப் பெருமையோடு கூறினார். இப்போது தான் கதிரவேலருக்கு தான் விட்ட தவறுகள் புரிந்தன. வெட்கப்பட்டார், வேதனைப்பட்டார்,'  

தம்பி! நான் இந்தப்பக்கத்தை  பார்த்ததே இல்லை வெளிக்கிட்டால் தியேட்டர்... அல்லாட்டால் மலைப் பிரதேசப் பக்கம்போய், ஜாலியாய் இரண்டு மூன்று நாளைக் கழிச்சுப் போட்டு வருவம்... இதுதான் சந்தோசம் நிம்மதி என்று நினைச்சுப்போட்டன், இதெல்லாம் தப்பு என்டு எனக்கு இப்ப புரியுது,'தருமம்... தரும்' எவ்வளவு பொருத்தமான வாக்கு, நிம்மதியை சந்தோசத்தை அழியாச் செல்வத்தை தரும்.

ஆடம்பரமும் பகட்டும் அழிவைத்தான் ஆபத்தைத்தான் தரும் என்பதை உணரவைத்து விட்டீங்கள்', கலங்கிய கண்களுடன் எழுந்த கதிரவேலர், வேலாயுதத்தாரின் கைகளைப் பற்றி தனது கண்களில் ஒற்றிக் கொண்டு,'என்ர கண்ணைத் திறந்துட்டீங்கள்... 'உங்களோட கதைச்சதில எனக்கு இப்பஓரு தொம்பு வந்திருக்குது தம்பி... வாறன்' எனக் கூறிக்கொண்டு எழும்ப. வேலாயுதமும் மனைவியும் இன்முகத்துடன் அவரை வழியனுப்பினர்.  

தேன்மொழி சபா

  

Comments