பாலில் தன்னிறைவடைய போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

பாலில் தன்னிறைவடைய போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் அவசியம்

கடந்த புதன் கிழமை கொழும்பில் விவசாயத்துறை அமைச்சில்  நடைபெற்ற ஒரு சந்திப்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ சாதாரண  இலங்கை வாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்களை பேசியிருக்கிறார்.  பொதுவாகவே அரசியல்வாதிகள் கடினமான விஷயங்களை சூசகமாகவோ அல்லது  சுற்றிவளைத்தோ தான் பேசுவது வழக்கம். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களான  தாம் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழிகளுக்கு மாற்றாக எவ்வாறு பேசுவது என்ற  குழப்பம் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பாரம்பரிய  அரசியல்வாதியாக அல்லாத, நியமன பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான நிதியமைச்சர்  இச் சம்பிரதாயங்களை பொருட்படுத்தாதவராக தாம் எதைச் செய்யப் போகிறோமோ  அவற்றை வெளிப்படையாகவே பேசியிருப்பது பாராட்டுக்குரிய தானாலும், பொதுவாகவே  குதூகலமும்  சுபீட்சமும் பொங்கும் என ஒவ்வொரு புத்தாண்டையும் எதிர்கொள்ளும்  எமக்கு, 2022உவப்பானதாக நிச்சயமாகவே இருக்கப் போவதில்லை என்பதை  அமைச்சரின் பேச்சின் உள்ளடக்கம் புலப்படுத்தியிருக்கிறது. 

அடுத்த ஆண்டு இலங்கையின் நிதிநிலையில் குறிப்பிடத்தக்க  அபிவிருத்தியைக் காண்பது கடினமாக இருக்கும் எனவும், அத்தியாவசிய உணவுப்  பொருட்கள், எண்ணெய், மருந்து எரிவாயு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டியிருக்கும் அதேசமயம் குறித்த காலப்பகுதியில் மீளச் செலுத்த வேண்டிய  வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதற்காக பெருமளவு வெளிநாட்டு பணத்தை செலவிட  வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கும் நிதி அமைச்சர், இதன்  பொருட்டு கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று  கூறியுள்ளார். 

பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் இந்த அரசின்  குறைபாடுகளைத் தூக்கிப் பிடித்து பேசுவதும் பதிலளிக்கும் அரசு தரப்பினர்,  ஏன் நீங்கள் மட்டும் இம் மாதிரித் தவறுகளைச் செய்ய வில்லையா என  சுட்டிக்காட்டுவதுமாக தவறுகளுக்கு ஒரு சமன்பாட்டை வைத்திருக்கிறார்கள்.  குற்றங்களையும் குறைகளையும் இப்படி சமன்படுத்திப் பேசிப் பேசியே  இந்நாட்டில் காலம் கழிந்திருக்கிறதே தவிர தவறுகள் திருத்தப்பட்டு அவை  மீண்டும் நிகழாதிருப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதாகத்  தெரியவில்லை. இன்றைய டொலர் பற்றாக்குறைக்கு இன்றைய அரசு முன்னைய அரசை  குற்றம் சாட்டுவதும் அவர்கள் இவர்களை குறை சொல்வதையும் குடிமக்கள் காது  புளித்துப்போகும்வரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவெனில், மாறி  மாறி ஆட்சி செய்தகட்சிகள் தொலைநோக்கு பொருளாதாரத் திட்டங்களைத்  தொடர்ச்சியாக நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே, கொவிட் தொற்று ஏற்படுத்திய  பொருளாதார பின்னடைவுகளில் இருந்து ஏனைய நாடுகளால் முடிந்ததைப் போல  இலங்கையால் மீண்டு வர முடியவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எமது  அரசியல்வாதிகள் என்ன பங்களிப்பு வழங்கப் போகிறார்கள் என்பதில் அக்கறை  செலுத்தாத முன்னைய வாக்காளர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் முன் நிறுத்தி  கட்சிகளை பாராளுமன்றத்துக்கும், அரசை அமைக்கவும் அனுப்பி வைத்ததன்  விளைவையே இன்றைய வாக்காளர்கள் அனுபவிக்கிறார்கள். 

1973 – 74காலப்பகுதியில் இலங்கை மக்கள் கடுமையான, நிதி  நெருக்கடி மிகுந்த ஒரு காலக்கட்டத்தைக் கடந்து சென்றார்கள். அக் காலத்தில்  சாதாரண மனிதரிடம் பணப் புழக்கமுமில்லை கடைகளில் வாங்குவதற்கு பொருட்களும்  இல்லை. இன்றோ மனிதர் கையில் பணப் புழக்கம் உள்ளது. கடைகளில் பொருட்களும்  உள்ளன. விலைகள் வானளாவி நிற்பதால் கொள்வனவு செய்வதை யோசிக்க  வேண்டியிருக்கிறது. கடந்த புதன் கிழமை உரையாற்றிய பசில் ராஜபக்‌ஷ, கடினமான  காலத்தைப் பற்றி பேசியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் பிரதமரும்  கடினமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியதும்  கவனிக்கத்தக்கது. 

இந்த வருடம் அமுலில் உள்ள வாகன இறக்குமதிக்கான தடை அடுத்த  வருடத்துக்கும் நீடிக்கப்படும் என்றும் சோளம் இறக்குமதியில் கட்டுப்பாடு  கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அடுத்த  வருடம் பால்மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று ஒரு குண்டைத்  தூக்கிப் போட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு பலரின் புருவங்களையும்  உயர்த்தியுள்ளது. 

இலங்கையில் 40சதவீதமான பால் மட்டுமே உள்ளூரில்  உற்பத்தியாகிறது. அறுபது சதவீத பால்மா இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த  ஐம்பது ஆண்டுகளாக பால் உற்பத்தி அதிகரிப்புக்காக பல திட்ட வடிவில்  இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். வெளிநாட்டு பசுக்கள் நிறையவே  கொண்டுவரப்பட்டன. அவற்றில் சில வயதானவை என்றும் மேலும் சில  எதிர்பார்க்கப்பட்ட அளவு பாலை சுரக்கவில்லை என்னும் பின்னர் தெரியவந்தது.  இலங்கையில் இயங்கும் பால் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் திரவப்பால், பால்மா,  யோகர்ட், தயிர் ஐஸ்கிறீம், சுவையூட்டப்பட்ட பால்வகைகள், சீஸ், பட்டர் எனப்  பல பால் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இவை அனைத்துமே உள்ளூர்  உற்பத்தியான 40சதவீத பாலின் உதவியால் மட்டுமே செய்யப்படுவதாக  சொல்லப்படுமானால் அது நம்புவதற்குக் கஷ்டமாகவே இருக்கும். 

இந்நிலையில், அறுபது சதவீதமான இறக்குமதி பாலுக்கு அடுத்த  ஆண்டு முதல் தடை இறக்குமதி செய்யப்பட மாட்டாது. அதற்கு பணம் வழங்க முடியாது  என அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அவ்வாறானால்  உள்நாட்டில் பால்விலை அதிகரிக்கும் என்பதோடு பசும் பாலுக்கு பெரும்  தட்டுப்பாடும் ஏற்படும். அரிசி, மா ஆகிய பிரதான இரண்டு திட உணவுகளுக்கு  அடுத்ததாக இலங்கையில் பசும் பாலையே போஷாக்கான திரவ உணவாகக் கொள்கிறோம்.  பால் குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியருக்கும் இன்றியமையாதது. கல்சியம்  நிறைந்தது. டீக்கு சுவை சேர்க்கவல்லது. குழந்தைகளுக்கு பாடசாலைகளில் பால்  வழங்கும் நடைமுறை முன்னர் பரவலாக இருந்தது. வயதானவர்களுக்கும்,  நோயாளர்களுக்கும் அவசியமான பானமாகக் கருதப்படுகின்றது. மேலும் ஐஸ்கிறீம்  உட்பட்ட ஏராளமான சுவையான பண்டங்கள், சொக்கிலட், பிஸ்கட்   வகைகள் பாலைப்  பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. தாய்ப்பால் சுரப்பு குறைவடையும் போது  ஆபத்பாந்தவராக வந்து நிற்பது பசும்பால் மட்டுமே! 

இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட பசும்பால் இறக்குமதி  தடைசெய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருப்பது பேரிடியாகவே உள்ளது.  உள்ளூர் பசும்பால் உற்பத்தியை எண்பது சதவீதமாக உயர்த்தப்படும் என்றும்  கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த பால்  உற்பத்தி அதிகரிப்பு 40சதவீதத்தையே எட்டியிருக்கும் நிலையில் அடுத்த ஒரு  வருட காலத்தில் இதை இரட்டிப்பாக்க முடியும் என்பது சாத்தியமான இலக்காகத்  தென்படவில்லை. மஞ்சள், உளுந்து இறக்குமதியை நிறுத்தியதோடு பால்மா இறக்குமதி  நிறுத்தத்தை ஒப்பிட முடியாது.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களான அரிசி, மா,  சீனி, காய்கறிகள், மாமசி உணவுகள் என்பனவற்றின் விலை அதிகரிப்பால்  மக்களுக்குக் கிடைத்துவந்த போஷாக்கில் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில்  நாட்டில் பசும்பாலுக்கும் தட்டுப்பாடும் விலையதிகரிப்பும் ஏற்படுமானால் அது  பாரதூரமான சிக்கல்களை ஏற்படுத்தவே செய்யும். 

அரிசி, பருப்பு, எண்ணெய் எவ்வளவு அத்தியாவசியமோ அவ்வளவுக்கு  பசும்பாலும் அத்தியாவசியம் என்பதால் பால்மா இறக்குமதி மட்டுப்படுத்தப்படக்  கூடாது. அதேசமயம் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய அரசு எல்லா  முயற்சிகளையும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 

Comments