உல்லாச பயணிகளை கவர்வது அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான விரைவான வழிமுறையாகும் | தினகரன் வாரமஞ்சரி

உல்லாச பயணிகளை கவர்வது அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான விரைவான வழிமுறையாகும்

கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை பலவீனமடைந்ததுள்ளது. சமூக இடைவெளி அத்தியாவசியமான காரணியாக காணப்படும் பின்னணியில் பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. விமான பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்ட தோடு பரவலைத் தடுப்பதற்காக சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. இவ்வாறான பின்னணியில் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்படைந்தது. நிலைமை ஓரளவு சுமுகமானால் சுற்றுலாத்துறையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.  இலங்கை தனக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்தில் இது குறித்து முதலில் கவனம் செலுத்துவது நல்லது.

சுற்றுலாத்துறை தரவுகளின் படி கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து குறிப்பிட்டளவானோர்  இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்  2018ஆம் ஆண்டு   4லட்சத்து 25,000  உல்லாச பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளார்கள். சீனாவில் இருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து  60ஆயிரத்துக்கும் குறைவாகும். பிரித்தானியாவிலிருந்து 2லட்சத்து 54ஆயிரம் பேர் வருகை தந்திருந்தார்கள். அதன் பின்னர் 2019ம்  ஆண்டில்  அதிகளவு உல்லாசப் பிரயாணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தார்கள்.  அவர்களின் எண்ணிக்கையானது 3லட்சத்துஐம்பத்து ஐயாயிரத்தை தாண்டி இருந்தது.  பிரித்தானியாவிலிருந்து ஒரு லட்சத்து 88ஆயிரம் பேர் பேரும் சீனாவிலிருந்து ஒரு லட்சத்து 67ஆயிரம் பேரும் வருகை தந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் பலவீனம் அடைந்த சுற்றுலாத்துறை ஆரம்பத்தில் இருந்த நிலைமைக்கு இன்னும் மீளவில்லை. 2025ஆம் ஆண்டளவில் 25லட்சம் உல்லாச பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அப்போதைய நிலைமையில் அது சிரமமான காரியம் அல்ல வென்பது தெளிவாக தெரிந்த விடயமாகும்.

தற்போது உள்ள கட்டமைப்பின் படி புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலாத்துறை பொருளாதாரத்திற்கு முக்கிய திருப்புமுனையாகும்.  வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வருகையை  திட்டமிடுவது போல  உள் நாட்டவர்களின் பயணத்துக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தல் முக்கியமாகும். அது ஒரு ஆரம்பத்துக்கான அடிப்படையாக அமையும். இந்தியா தங்களது நடைமுறையை மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றது. ஒரு பில்லியன் தடுப்பூசி செலுத்தும் இலக்கை நிறைவு செய்துள்ளது. அதற்கு இணைந்ததாக நாட்டில் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. புதிய ரயில் பாதைகள், அதிவேக பாதைகள், மற்றும் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளது. சுதந்திரம் பெற்ற  பின்னர் இந்தியா 74  விமான நிலையங்களை அமைத்துள்ளது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் 62விமான நிலையங்களை அமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  எதிர்வரும் 7வருடங்களில்  இந்தியா இந்த எண்ணிக்கையை 220ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. சில விமான நிலையங்களை அரசாங்கம் அமைக்கின்றது.  சில  பகுதிகள் தனியார் பிரிவினரால் அமைக்கப்படுகின்றன. அவற்றை செயற்படுத்தி பின்னர் அரசாங்கத்துக்கு ஒப்படைக்கும் யோசனைக்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக 21ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் இந்தியாவை இணைக்கும் யோசனையை பிரதமர் குடியரசு தினத்தன்று அறிவித்தார்.  தற்போது புதுடில்லியிலிருந்து  புறப்படும் ரயில்களில் நூற்றுக்கு 90வீதமானவை மின்சார ரயில்கள் ஆகும். இந்திய புகையிரத சேவை மூலம் நாளொன்றுக்கு 23மில்லியன் மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகளை விரிவு படுத்துவதோடு நாடு பூராவும் மின்சாரத்தால் இயங்கும் பஸ்கள், வாடகை வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேவையையும் விரிவுபடுத்தி வருகின்றார்கள். தனியார் வாகனங்களை  விலைக்கு வாங்கும் போது மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்களுக்கு வரிச் சலுகையும் வழங்கப்படுகின்றது. மின்சாரத் தேவைக்காக நாடு முழுவதும் சூரிய சக்தியை பயன்படுத்தும் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகையில் அதிகமானோருக்கு பயணம் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்கள்  சுற்றுலா செல்லும் சந்தர்ப்பங்களில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுகின்றார்கள். பசுமை கொள்கையை விரும்பும் ஐரோப்பிய உல்லாச பயணிகளுக்கு இது சிறந்த தகவலாகும். சூழலை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கும் நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதை அவர்கள் விரும்புவார்கள்.

இலங்கையும் கொவிட் 19ஐ கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தடுப்பூசியை மிக வெற்றிகரமாக வழங்கிய நாடு. வயதானவர்களுக்கான மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசியையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. கொரோனாவை தாங்கக்கூடிய அளவுக்கு மக்கள் சமூகத்தை வேகமாக  மாற்றியுள்ளதோடு  அதன் பலனையும் வெகுவிரைவில் அடையலாம். அந்நிய செலாவணி  நாட்டில் குறைவாக காணப்படும் இவ்வேளையில்  சுற்றுலா துறை நாட்டுக்கு பல நன்மைகளை கொண்டு வரும்.

தமிழில்: வீ.ஆர். வயலட்

Comments