உரத்துக்கு மானியம் வழங்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

உரத்துக்கு மானியம் வழங்க வேண்டும்

கடந்த ஏழு மாதங்களாக நீடித்த விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மனிதனுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும் இரசாயன பசளை மற்றும் கிருமி நாசினிகளின் பாவனைக்குத் தடை விதித்து இயற்கை பசளையை மீளவும் அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு அறிவித்ததையடுத்தே கோட்பாடு வேறு நடைமுறை வேறு என்று தெரிவித்த விவசாய பெருங்குடியினர் தமது அடுத்த நெல் விவசாயத்துக்கும் மரக்கறி செய்கைக்கும் இரசாயன பசளையின் அவசியத்தை வலியுறுத்தி ஆவேசமான போராட்டங்களை நாடெங்கும் மேற்கொண்டனர். இப்போராட்டங்கள் வரவரத் தீவிரமடைந்தன. ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி தரப்பினரின் ஆசியோடும் இவை உக்கிரமடைந்தன.

இலங்கை ஒரு விவசாய நாடு. நெல்லரிசி சோறு உண்பது இலங்கையரின் பாரம்பரியம். எமக்கான அரிசியையும், காய்கறிகளையும் நாம் அப்போதிருந்தே உள் நாட்டிலேயே உற்பத்தி செய்து வந்துள்ளோம். அந்நியராட்சிக்குள் நாடு சென்ற பின்னர்தான் உள்ளூர் விவசாயம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. காலனித்துவ நிர்வாகிகளுக்கு இலங்கை மக்களின் உணவு தன்னிறைவில் எந்த அக்கறையும் இருக்கவில்லை. அவர்கள் வந்தது அவர்களுக்கான ஏற்றுமதிப் பயிர்களை வளர்க்கவும் ஏற்றுமதி செய்யவுமே என்பதால் அரிசியையும் ஏனைய உப உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்வது அவர்களுக்கு எளிதானதாக இருந்தது. அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டமைக்கு, இளைஞர்களுக்கு அதாவது இளந்தலைமுறையினருக்கு வேறு தொழில் வாய்ப்புகள் கிடைத்தமையும் ஒரு காரணமாகக் குறிப்பிட முடியும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரேயே புதிய விவசாய திட்டங்களும் நீர்பாசன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு விவசாய புரட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஐம்பது அறுபதுகளில் வெளிநாடுகளில் அரிசி உற்பத்தி பாதிக்கப்படவே அரிசியை இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. அச்சமயம் இலங்கை தேசிய அரசியலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக அரிசி திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இனவாதத்தைப் பயன்படுத்துவதைப் போலஅன்று அரிசி பயன்படுத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் அதிக விலைக்கு அரிசி வாங்கி குறைந்த விலைக்கு அல்லது இலவசமாக மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. அரிசி பங்கீட்டுக்கு கூப்பன் கார்ட் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. இவை அனைத்தும் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம் என்றாலும் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் புதிய வயல் காணிகளை ஏற்படுத்தவும் அதற்கான நீர்ப்பாசன வசதிகளைச் செய்யவும் காலம் தேவைப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்றைய நிலைமைகளோடு ஒப்பிடும்போது அரிசி உற்பத்தியில் இன்று இந்நாடு பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளதோடு காய்கறி மற்றும் பழ உற்பத்தியிலும் தன்னிறவை அடைந்துள்ளது. சில விவசாய உற்பத்திகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

நாம் முன்னர் பாரம்பரிய நெல்லினங்களை பாரம்பரிய விவசாய நடைமுறைகளில் இயற்கை உரப்பாவனையுடன் நட்டு வளர்த்து அறுவடையும் செய்து வந்தோம். எனினும் சனத்தொகை அதிகரிப்பு, தன்னிறைவு இலட்சியம் என்பனவற்றை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததால் புதிய வெளிநாட்டு நெல்லினங்களையும் அவற்றுக்கான இரசாயன பசளைகளையும் புதிய புதிய பயிர்ப்பீடைகளை அழிக்கக்கூடிய கிருமி நாசினிகளையும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்தது. காய்கறிகளுக்கான விதைகள் முன்னர் உள்ளூரில் உற்பத்தி மூலம் பெறப்பட்டது. பின்னர் வெளிநாட்டு விதைகள், அதிக விளைச்சல் காரணமாக, பெறப்பட்டு அவற்றுக்கு இசைவான பசளைகளையும் கிருமி நாசினிகளையும் உபயோசிக்க வேண்டியதாயிற்று.

இலங்கைக்குள் ஏன் இரசாயன பசளைகளும், கிருமி நாசினிகளும் கொண்டுவரப்பட்டன என்பதற்கு இவையே காரணங்கள். இது தவிர்க்க முடியாதது. அதேசமயம் அதிகப்படியான இரசாயன உரங்களும் கிருமிநாசினிகளும் உபயோகிக்கப்படுவது மண்ணுக்கும் மனிதருக்கும் தீங்குகள் விளைவிக்கும் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இரண்டு கோடி மக்களின் பசியாற்ற வேண்டும். வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். விவசாய பெருங்குடியினரின் குறைகள் போக்கி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இவ்வகையில் அரசு பசளை விடயத்தில் கொண்டிருந்த இறுக்கமான நிலையில் இருந்த தளர்வு நிலைக்கு வந்திருப்பது சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது. அரசு எதிர்கொண்டிருக்கும் சில தலைவலிகளை இம் முடிவு தீர்க்கக்கூடும்.

எனினும் இன்று காய்கறிகள், அரிசி போன்ற அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் குறைய வேண்டுமானால் உற்பத்திச் செலவு குறைய வேண்டும். விளை பொருட்களின் உற்பத்திச் செலவில் பெரும் பங்கு வகிப்பது பசளை மற்றும் கிருமிநாசினிகளே. ஆனால் தற்போது தனியார்த்துறையினருக்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாலும் அவற்றின் மீதான மானியம் விலக்கப்பட்டிருப்பதாலும் விளை பொருட்களின் உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. உரமானியம் இலங்கையில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தமைக்கான காரணம் விளை பொருட்களின் சில்லறை விலைகளை மக்களின் கைக்கு எட்டும் வகையில் பேணுவதற்காகவே.

எனவே, வாக்காளர்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள இந்த மக்கள் அரசு, உரம் மற்றும் கிருமிநாசினிகள் பேரிலான அரசு மானியத்தைத் தொடர்ந்து வழங்க முன்வர வேண்டியது அவசியம். அதே சமயம் இயற்கை உரப் பாவனையை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும். போஷனையான இயற்கை உரங்களைத் தயாரிப்பது. இவ்விடயத்தில் பின்பற்றப்படக்கூடிய குறுக்கு வழிகளைத் தவிர்ப்பது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் வேண்டும்.

Comments