கொவிட் 19 தொற்றும் தோட்ட நிர்வாகங்களின் பழிவாங்கும் படலமும் | தினகரன் வாரமஞ்சரி

கொவிட் 19 தொற்றும் தோட்ட நிர்வாகங்களின் பழிவாங்கும் படலமும்

தொழில் ரீதியிலான பிணக்குகள் நிர்வாக  ரீதியிலான முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படுவதே தொழில்  தர்மம். இது மரபும் கூட. ஆனால் இதனை தோட்ட நிர்வாகங்கள் மீறி செயற்படுவதால்  எற்படும் பின் விளைவுகள் விரும்பத்தகாதவையாகவே அமைகின்றன.

நாட்டின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக உழைத்துவரும் பெருந்தோட்ட  தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில்புரியும் சூழ்நிலை உறுதி செய்யப்பட  வேண்டும்.

மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக என்றொரு பழமொழி இருக்கின்றது. தற்போது பெருந்தோட்ட மக்களின் நிலையும் இதனை ஒத்ததாகவே காணப்படுகின்றது. ஒருபுறம் கொரொனா தொற்றின் கோரத் தாண்டவம். மறுபறம் பெருந்தோட்டக் கம்பனிகளின் பழிவாங்கும் படலம்.  

கொவிட் 19 பெருந்தொற்று நாடு முழுவதையும் அச்சத்தில் அமுக்கிவிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிப்பும் மரணமும் கூடிக்கொண்டு போகிறது. இந்தியாவைப் போன்று அவலம் இங்கும் அரங்கேறி விடலாம் என்னும் ஆதங்கத்தில் சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது. நாடு முழுமையாக முடக்கப்படுவதைத் தவிர்க்க அனைத்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. எனினும் இது அச்சாகி வெளிவரும் வேளையில் நிலைமை என்னவாகியிருக்குமொ தெரியாது.

கொவிட் 19 பரவலுக்கு பொதுமக்களின் அசிரத்தையும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. சுகாதார விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்ட பல சம்பவங்களைப் பாா்க்கலாம். கட்டுப்பாடுகளை கணக்கில் எடுக்காததால் இந்த மூன்றாவது அலை மூர்க்கமாக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

அந்த அலையானது மலையகத்திலும் விளைவுகளை எற்படுத்தி வருகின்றது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டம் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. இப்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கானோர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே பிரதான காரணமென குற்றம் சாட்டப்படுகின்றது.

நுவரெலியா வசந்த விழாவின்போது ஆயிரக் கணக்கானோர் சுகாதார கட்டுப்பாடுகளை துச்சமாக மதித்து நடமாடியிருந்தனர். இந்நிகழ்வின் பின்னரே ஆரம்பித்தது இப்பரவல். இது இன்றைய நிலையில் கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி என்று வியாபித்து செல்கின்றது. நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பகுதி இம்முறையும் பாதிக்கப்பட்டுள்ளது. டிக்கோயா போடைஸ் பகுதியில் இயங்கும் தனியார் தொழிலகம் ஒன்றில் பணிபுரியம் 29 பேருக்கு தொற்று இனம் காணப்பட்டதை அடுத்து இப்பிரதேசம் எச்சரிக்கைக்கு உரியதாக அறிவிக்கப்பட்டது. இப்படி அங்கும் இங்கும் மலையக பகுதிகளில் தொற்று பரவிவருவது பதட்டத்தை ஏற்படுத்தவே செய்கின்றது. ஏனெனில் நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரேயொரு பி.சி.ஆர் இயந்திரம் மட்டுமே இருக்கின்றபடியால் தொற்றாளா்களை உறுதி செய்வதில் காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டவர்கள் கூட அதன் பெறுபேறு வருவதற்கு முன்னரே சமூகத்தில் நடமாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  

கணிசமான நோயாளர்கள் இனம் காணப்பட்டு வரும் வேளையில் ஓரேயொரு பி.சி.ஆர் இயந்திரத்தை வைத்துக் கொண்டு சமாளிப்பது என்பது சாதாரண சங்கதியல்ல. தொற்றாளர்களை இனம் காண்பதில் ஏற்படும் காலதாமாதம் பதிதாக தொற்றாளர்கனை உருவாக்கி விடும் அபாயத்தை எற்படுத்தவே செய்யம் என்கிறார்கள் அவதானிகள். 

இப்பிரதேசத்தில் பி.சி.ஆர் செய்து கொண்ட பலர் பொது இடங்களிலும் திறந்தவெளிகளிலும் சுயாதீனமாக நடமாட அனுமதிப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்தத் தவறாது. இதனாலேயே இங்கு பி.சி.ஆர் இயந்திரம் அதிகரிக்கப்பட்ட வேண்டிய தேவை உள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்கவும் பரிசோதனை முடிவுகளை துரிதமாக பெற்றுக்கொள்ளவும் இதனால் வழிபிறக்கும். எனவே அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு.  

தவிர பெருந்தோட்டப் பிரதேசங்களில் நோய்த் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு குறைவு. நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தும் நிலையங்கள் சனத்தொகை செறிவுக்கேற்ப செயற்படவில்லை. தவிர ஒழுங்கு முறையிலான பி.சி.ஆர். பிசோதனை இடம்பெறுவது கிடையாது. தடுப்புூசி வழங்குவதற்கான நடவடிக்கை எதுவும் காணப்படாமை பெருங்குறை. அரசாங்கம் பாதுகாப்புப் பிரிவு சுகாதாரத்துறை என்பன ஏனையவர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை பெருந்தோட்ட சமுகத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருப்பதை அசட்டை செய்யமுடியாது. 

எனினும் இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிகளின் கவனம் உரிய முறையில் செலுத்தப்படவில்லை என்பதை மறுப்பதற்கு இல்லை. தொற்றுப் பரவலாம் என்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கான விழிப்புணர்வோ வசதியோ பெருந்்ேதாட்டங்களில் கிடையாது. இதனாலேயே பிறர் தற்காப்புக்காக வீடுகளில் முடங்கிக் கிடக்க தோட்டத்தொழிலாளர்கள் மட்டும் தமது வயிற்றுப் பாட்டுக்காக தொழிலில் ஈடுபடும் பரிதாபம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.  

பெருந்தோட்டப் பகுதிகளில் கொவிட் 19 இன் பாதிப்பு வேகமாகப்பரவ அதிகாாிகள், பொதுமக்கள், மலையக அரசியல்வாதிகள் காட்டும் அலட்சிய போக்கே அடிப்படையாக காணப்படுவதே உண்மை. முகக்கவசம் அணியாமை, தவிர்க்கப்பட வேண்டிய பிரதேசங்களில் சுதந்திரமாக உலாவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமை, மது விற்பனை நிலையங்களில் கட்டுப்பாட்டை மீறி கூடல், வைபவங்களில் ஈடுபடுதல் என்பனவே தொற்றப் பரவலை ஊக்குவிக்கும் காரியங்கள் ஆகும். பிற இடங்களில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் 5 ஆயிரம் ரூபாய் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே மலையக சமூகம் ஏதோவொரு வகையில் புறக்கணிப்புக்கு உள்ளாகிவரும் நிலையில தாமே தமக்கான பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இத்தொற்று முமுமையாக மலையகத்தில் வியாபிக்கும் பட்சத்தில் அதன் விளைவுகள் பாரதுரமானவையாகவே அமையும் என்பதை மறந்து விடக் கூடாது. 
இப்படி கொவிட் 19 பதட்டத்தை ஏற்படுத்தி வரும் பின்னணியில் அண்மைக்காலமர்க பெருந்தோட்டப் பிரதேசங்களில் தொழில்புரிந்து வரும் தொழிலாளர்களை வஞ்சம் தீர்ப்பது போன்று தோட்ட நிர்வாகங்கள் நடந்து கொள்வதாக வரும் செய்திகள் கவலை தருகின்றன. நிர்வாக ரீதியிலான முரண்பாடுகளும் அதனை தீர்ப்பதற்கு கம்பனி நிர்வாகம் மேற்கொள்ளும் அடாவடித்தனங்ளும் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதாக தொழிலாளர்கள் ஆதங்கப்படுகின்றனர். தொழில் ரீதியிலான பிணக்குகள் நிர்வாக ரீதியிலான முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படுவதே தொழில் தர்மம்.
இது மரபும் கூட. ஆனால் இதனை தோட்ட நிர்வாகங்கள் மீறி செயற்படுவதால் எற்படும் பின் விளைவுகள் விரும்பத்தகாதவையாகவே அமைகின்றன. 10000 ரூபா  சம்பள அதிகரிப்பின் பின்னரே இந்த அராஜகம் என்கிறார்கள் அப்பாவி தொழிவாளர்கள். சம்பள அதிகரிப்பின் சாதகத்தன்மையை தோட்டத் தொழிலாளர்கள் அடைந்து விடக்கூடாது என்னும் திட்டத்தோடு பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போடுவதாக கம்பனி தரப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. 

நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, கண்டி போன்ற தோட்ட்ப் பகுதிகளில் இவ்வாறான அடக்குமுறை தர்பார் முடுக்கி விடப்பட்டுள்ளதாக செய்திகள் உறுதி செய்கின்றன. குறிப்பாக தொழிலாளர்களோடு முரண்படும் நிர்வாகங்கள் பொலிஸாரின் துணையோடு அவர்களை அடக்கியாள முற்படுகின்றனவாம். இதனால் பரபரப்பான சூழ்நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொழிற்சங்கங்கள் பலவீனமாகி வருகின்றன. அரசியல் பிரதிநிதிகள் தமது வாக்கு வங்கி இருப்பினை மட்டுமே மையப்படுத்தி காய்நகர்த்தி வருகின்றனர். இதனால் பெருந்தோட்ட மக்கள் அநாதரவாகி அவஸ்தைப்படுகின்றனர். இது நல்ல அறிகுறியல்ல. பெருந்தோட்டங்களில் அமைதிக்கு குந்தகம் எற்படு்மாயின் அது அவர்களின் எதிர்கால இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் அபாயம் உள்ளது. 

இனவாத போக்கிலும் அடக்கியாளும் மனோபாவத்திலும் ஊறித் திளைத்திருக்கும் சில அதிகாரிகளே பெருந்தோட்டப் பிரதேசங்களைப் பதட்டத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். இன்றும் நாட்டின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக உழைத்துவரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில்புரியும் சூழ்நிலை உறுதிச் செய்யப்பட வேண்டியது முக்கியம். கொவிட் 19 பெருந்தொற்று பீதியை உண்டாக்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் அச்சத்துடனும் பதட்டத்துடனும் தொழில்புரிய வேண்டிய கள நிலவரம் தொடர்வது சரியானதல்ல. இதனால் உடல் உளரீதியில் அழுத்தங்களுக்கு ஆட்பட வேண்டிய அவஸ்தை நிலையை அகற்ற வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு. அது அவசியமும் அவசரமானதும் கூட என்பதை மறந்துவிடக்கூடாது.   

பன். பாலா

 

Comments