ரூ. 1000 சம்பள உயர்வினால் பாதிக்கப்பட்டிருக்கும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

ரூ. 1000 சம்பள உயர்வினால் பாதிக்கப்பட்டிருக்கும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள்

பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா தினசரி வேதன கோரிக்கை நிறைவேறினாலும் நிறைவேறாத மாதிரித்தான் இன்னும் இழுபறியில் நீடிப்பதை அறிவீர்கள். ஆயிரம் ரூபா சம்பள உயர்வென்பது ஏற்கெனவே பெருந்தோட்ட மக்கள் நாளொன்றுக்கு பெற்றுவந்த கூட்டுச் சம்பளத் தொகையில் இருந்து 250 ரூபா வரையிலான ஆயிரம் ரூபாவுக்கும் ஒரு சம்பள அதிகரிப்பே.

இன்றைய வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கும் இந்த சிறு அதிகரிப்பு போதுமானதல்ல. ஆனாலும் கம்பனிகள் கொடாக்கண்டனாக நீதிமன்றம் சென்றுள்ளன. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஆயிரம் ரூபாவை வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை வழங்க வேண்டிய நிலைக்கு கம்பனிகள் தள்ளப்பட்டுள்ளன.

எனவே இச் சம்பள வழங்களை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருத வேண்டும். ஆனாலும் கூட கம்பனிகள் தினமொன்றுக்கு ஆயிரம் ரூபா தொழிலாளர்களை முழுமையாக சென்று அடையாதிருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்யத்தான் செய்கின்றன.

தேயிலையை எடுத்துக் கொண்டால் மேலதிக இரண்டு கிலோ எடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறியாகி இருக்கிறது. எனினும் இது விமர்சனத்துக்குரியதன்று. ஒருநாள் வேலை செய்தால் ஆயிரம் ரூபாவாக சம்பளத்தைக் கணக்கிட்டாக வேண்டும். எனவே புதிய வழிகளில் தொழிலாளியின் உழைப்பைச் சுரண்ட கம்பனிகள் முற்படுகின்றன.

இந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் மக்களை மரத்திலிருந்து விழுந்தபோது மாடு மிதித்த நிலைக்குத் தள்ளியுள்ளது. கூட்டு ஒப்பந்தம் இன்று தோன்றியதல்ல. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்காக கூட்டு ஒப்பந்த நடைமுறை இருந்து வந்துள்ளது. பல வரப்பிரசாதங்கள் கூட்டு ஒப்பந்தங்களின் மூலமே அங்கீகாரம் பெற்றன. சம்பள நிர்ணய சபை சம்பளத்தை உறுதிசெய்து வந்தது. தேயிலைத் தொழிலாளர்களுக்காக தேயிலைத் தோட்ட சம்பள நிர்ணய சபையும், இரப்பர் தொழிலாளர்களுக்காக இறப்பர் தோட்ட சம்பள நிர்ணய சபையும், ஏனைய தொழில்துறைகளுக்கும் வெவ்வேறு சம்பள நிர்ணய சபைகள் இருந்து வந்தன.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை விடவும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறு தொகை நாட்கூலி அதிகமாக வழங்கப்பட்டு வந்தது. சம்பள நிர்ணய சபையினால் இந்நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இறப்பர் மரங்கள் செறிந்த இடங்களில் நச்சுத்தன்மையுடைய காற்றைச் சுவாசிக்க நேர்வதாகவும், இறப்பர் வெப்பத்தை வெளிப்படுத்தும் தாவரமெனவும், தொழிற்சாலைகளில் இறப்பர் பதனிடுவதற்காக பாவிக்கப்படும் இரசாயனக் கலவைகள் உடம்புக்கு ஒவ்வாதவையெனவும் ஆங்கிலேயர் காலம் முதல் கருதப்பட்டு ஒரு சிறு சதக்கணக்கிலேனும் இறப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டது.

இதனை மூத்த தொழிற்சங்கவாதிகள் நன்கறிவர். சப்ரகமுவ, மேல், தென் ஆகிய மாகாணங்களிலேயே பெரும்பாலும் இறப்பர் தோட்டங்கள் காணப்படுகின்றன. முன்னர் இறப்பர் சம்பள நிர்ணய சபையில் இதுபற்றி விளக்கம் அளித்துவந்த கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த கே.ஜி.எஸ். நாயர், வி. பழனிச்சாமிப்பிள்ளை, வி.பி. கணேசன், ஏ.எம்.டி.இராஜன், ஜே.ஆர். கருப்பையா போன்ற தொழிற்சங்கத் தலைவர்களின் இழப்பு, இறப்பர் தோட்ட மக்களின் நிலையை உரத்துச்சொல்ல முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. இறப்பர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொல்வதற்கான சங்கப் பிரதிநிதிகள் இன்று இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இறப்பர் தோட்டங்களில் மாதாந்த மற்றும் வருடாந்த உற்பத்தி இலக்கை அடைவதற்கு ஞாயிறு, போயா முதலிய விடுமுறை தினங்களிலும், மாதத்திற்கு ஆறேழு நாட்களும் பால்வெட்ட வேண்டியிருக்கும் என்பதோடு 'அந்திவெட்டு' எனப்படும் மாலைநேர பால்வெட்டுதலும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த விடுமுறை தினங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு ஒன்றரை நாள் வேதனம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறாயின் ஞாயிறு, போயா தின வேதனம் ஒரு இறப்பர் தொழிலுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாவாக வழங்கப்பட வேண்டும்.

மாலைநேர பால் சேகரிப்புக்காக சில தோட்டங்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்குகின்றன. சில தோட்டங்களில் அம்மக்கள் கொண்டுவரும் 'அந்திவெட்டு' இறப்பர் பாலின் அளவுக்கேற்றவாறு வழங்கப்படுகிறது. இன்று நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்ந்துள்ளமையால் விடுமுறை நாட்களில் வழங்கவேண்டிய அரை நாளுக்குரிய மேலதிக சம்பளத்தை தோட்ட நிர்வாகங்கள் வழங்க மறுக்கின்றன. அல்லது அந்நாட்களில் அவர்கள் கொண்டுவரும் இரப்பர் பால் கிலோ ஒன்றுக்கு 125 ரூபா வீதம் கொடுப்பதாக அறிவிக்கின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்து விடுமுறை தினங்களில் வேலைக்குத் திரும்பாதவர்கள் பல்வேறு பழிவாங்கல்களுக்கு ஆளாகின்றனர்.

ஒரு தோட்ட பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலாளியை பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பிரிவில் அதுவும் அடர்ந்த காட்டை அண்டிய பகுதியில் பால்வெட்டுவதற்கு பணிப்பதன் மூலம் பழிவாங்கும் ஒரு புதிய முறையை ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண் தொழிலாளர்களிடமும் திணிக்கின்றன தோட்ட நிர்வாகங்கள். ஆயிரம் ரூபா அங்கீகரிக்கப்பட்ட நாள் முதல் தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் மற்றும் அவர்களின் வற்புறுத்தல் காரணமாக உத்தியோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் சுடுமூஞ்சிகளாகக் காணப்படுகின்றனர். தொழிற்சங்கப் பிரதிநிதியொருவரை தோட்ட முகாமையாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் வைத்து வெளியே போகும்படி கட்டளை பிறப்பித்துள்ளமையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாயடைத்து நின்றமையும் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இத்தகைய புதிய அடக்குமுறை பெருந்தோட்ட இளைஞர்களைச் சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையாகத் தெரிகின்றது.

சுமார் முந்நூறு இறப்பர் மரங்களைச் சுற்றிச்சுற்றி சீவியும் பால் சேகரித்தும் பணிபுரியும் மக்கள் வழமையாகக் கொண்டுவரும் பாலின் அளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. அவர்கள் குறிப்பிடும் அளவு இறப்பர் பால் கொண்டுவராத தொழிலாளர்களுக்கு அரைநாள் (500 ரூபா) சம்பள வீதம் கணக்கிடப்படுகின்றது. இவ்வாறு தினசரி 500 ரூபா சம்பளத்துக்கு பால்வெட்டும் தொழிலாளர்களாக இவர்கள் மாறியுள்ளனர்.

மழை நாட்களில் தாம் சீவிய மரங்களிலிருந்து நீரில் கழுவிச்சென்ற பாலை விட எஞ்சியவற்றை பால் அளக்கும் மையங்களுக்கு கொண்டுவந்து காலை முதல் மழையிலும், அட்டைக்கடியிலும் அவதியுற்றவர்கள் சம்பளமில்லாமலும், அரைச் சம்பளத்துடனும் வீடு செல்கின்றனர். இறப்பர் தோட்டங்களைப் பேணிப் பாதுகாப்பவர்களே அங்கு வேலை செய்யும் சில்லறை தொழிலாளர்கள் மீள் நடுகை முதல் முப்பத்து மூன்று வருடங்களின் பின்னர் மரங்களைப் பிடுங்கி புதிய இறப்பர் தோப்புகளை உருவாக்குபவர்களும் இவர்களே! பசளையிடுதல், மண் அரிப்பைத்தடுக்கும் வகையில் கல்லணை, வடிகால் அமைத்தல், பாதை செப்பனிடுதல், புல் பூண்டுகளை அகற்றி உழஎநச உசழி என்னும் பசளையூட்டும் படர்தாவரங்களை இறப்பர் தோட்டங்களில் விளைவித்தல் முதலிய அனைத்துப் பணிகளும் இவர்களுடையதே!

சில குடும்பங்களில் ஆண் பெண் இருவருமே சில்லறை வேலையாட்களாகவும் சில குடும்பங்களில் ஒருவர் சில்லறை தொழிலாளியாகவும் இருந்து வருகின்றனர். ஏறக்குறைய இறப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களையொத்த வேதனத்தை ஈட்டிவந்த இம்மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாத்திரம் என மாதத்திற்கு பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள்தான் இவர்களுக்கு தொழில் வழங்கும் நடைமுறை பல தோட்டங்களில் அமுலுக்கு வந்துவிட்டது. சில தோட்டங்களில் சில்லறை வேலையாட்களுக்கு தொழில் மறுக்கப்படுகின்றது. இதன் காரணமாக அரைவயிற்றுக் கஞ்சிக்கும் கஷ்டப்படும் நிலையை இறப்பர் தோட்ட சில்லறை வேலைத் தொழிலாளர்கள் அடைந்துள்ளார்கள்.

சி.கே. முருகேசு

Comments