தடுப்பூசி மருந்து அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

தடுப்பூசி மருந்து அரசியல்

இன்று உலகில் ஒரு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வுலகில் பல லட்சக்கணக்கான யுத்தங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் உலகெங்கும் ஒரே தடவையில் யுத்தமொன்று, அதுவும் மனுகுலத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கக்கூடிய எதிரிக்கு எதிராக, நடைபெறுகிறது என்றால் அது இப்போதுதான் எம் எதிரே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கொவிட் – 19 என்ற கொடிய நரகாசுரனுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் மனிதர் தரப்பு வெற்றி பெற்றேயாக வேண்டும். ஆங்கில விஞ்ஞான வினோத திரைப்படங்களில் வெளிக்கிரக வாசிகளை அல்லது பூமியை நோக்கிவரும் பாரிய விண்கற்பாறையை எதிர்த்து உலக நாடுகள் ஒன்று கூடி எதிர்த்து தாக்குதல் நடந்த முன் வருவது போல கதை அமைப்பு காணப்படும். அதுபோலவே, இப்போதுதான் உலக நாடுகள் ஒற்றை கருத்துடன் ஒரு பொது எதிரிக்கு எதிராக செயற்பட முன்வந்திருப்பதைக் காணலாம்.

ஒரு குழந்தை பிறந்ததும் நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கப்படுவதை நாம் அறிவோம். அவை நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் இன்று ஒரே காரியத்தை செய்யக்கூடிய தடுப்பூசிகள் உலகெங்கும் ஒரே காரணத்துக்காக முதல் முறையாக ஏற்றப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுக்கு எது மிக அவசியப்படுகிறதோ அதன் தேவை அதிகரிப்பதும் அதை அடைவதற்காக போட்டி போடுவதும், விலை அதிகரிப்பு நிகழ்வதும் சாதாரணம். தேவையும் விநியோகமும் என இது அழைக்கப்படுகிறது. எனவே உலக அரங்கில் தடுப்பூசி அரசியல் பலம் பெறுவதைத் தவிர்ப்பதற்கில்லை. அமெரிக்க அதிபர் ஜோபைடன் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா தடுப்பூசி மருத்தின் களஞ்சியமாகத் திகழ்கிறது என்றும் உலக நாடுகளின் தேவையை அமெரிக்காவினால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் மார்தட்டியிருக்கிறார்.

எனினும் உலகின் சில நாடுகளை தடுப்பு மருந்து இன்னும் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. நிதி நெருக்கடியும் இதற்கான காரணங்களில் ஒன்று. தடுப்பூசி விஷயத்திலும் ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடு ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது. அமெரிக்காவோ அல்லது வேறுசில நாடுகளோ தேவைக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசி மருந்துகளை தம்மிடம் வைத்துக் கொண்டு தேவையான நாடுகளுக்கு இலாப நோக்கு அடிப்படையில் அவற்றை விநியோகிக்கவும் அல்லது ஒரு பிராந்தியத்தை தமது தடுப்பூசி மருந்து விநியோக வலயமாக போஷிக்க முயல்வதையும் நாம் அவதானிக்கிறோம். இந்த மனப்பான்மையை தடுப்பூசி அரசியலாக தோற்றம் பெற்றிருக்கிறது.

உலகை ஒரு பொது எதிரி தாக்க முற்படும் போது உலக நாடுகள் ஒன்றுபட்டு அந்த எதிரியை அழிக்க முனைவதே சரியான அணுகுமுறை. துரதிர்ஷ்டவசமாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கொவிட் – 19க்கு எதிரான போர், ஆதிக்க சக்திகளுக்கு இடையிலான போராக மாறி இருக்கிறது. ஐ.நாவும் உலக சுகாதார ஸ்தாபனமும் தடுப்பு மருந்து பாகுபாடின்றி அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும் எனவும் வறிய நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுவதற்காக ஏற்பாடுகள் கைகொள்ளப்பட வேண்டுமெனவும் பல தடவைகள் தெரிவித்துள்ள போதிலும் தடுப்பு மருந்துகளை தம்வசம் வைத்திருக்கும் நாடுகளோ அவற்றை ஒரு வகையான மென்ஆயுதமாக பிரயோகிப்பதாகவே தெரிகிறது.

கொவிட் – 19 பரவுதலை ஓரளவுக்கு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மிகச் சில நாடுகளில் ஒன்றாக விளங்கிய இலங்கை அதைத் தொடர்ந்தும் நிர்வகிக்கத் தெரியாமல் வெறும் அற்ப காரணங்களுக்காக கதவைத் திறந்து விட்டதில் நாடு இன்று பெரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

முதலாவது அலையில், எதிர்பார்க்கப்பட்டதை விட குறைந்த அளவிலான சேதாரங்களுடனேயே இந்தியா எழுந்து நின்றது. ஆனால் அதைத் தொடர்ந்து நிர்வகிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகமிக அவசியம் என்பது அரசியல்வாதிகளினால் மிகச் சரியாக உணர்ந்து கொள்ளப்படாததன் விளைவாகவே பொருத்தமான காரணங்களுடன் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய கும்பமேளா என்ற சமய விழாவை தொடர்ச்சியாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவே வட இந்தியாவிலும் புது டில்லியிலும் கொவிட் தொற்று தலைவிரித்தாடுவதற்கு காரணமாயிற்று.

இந்தியாவில் பெருந்தொற்றின் தீவிரம் ஓரளவுக்கு குறைந்து வருவதாக இந்தியத் தகவல்கள் வெளிப்படுத்துவதாக இருப்பினும் இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்திருப்பது உண்மை. பிராந்திய வல்லரசு என்ற நிலையில் இருந்தும் இந்தியா சறுக்கியிருக்கிறது. இப் பிராந்தியத்தில் முதலாவதாக தடுப்பூசி மருந்துகளை தயாரித்த நாடு இந்தியாவே. பிராந்திய நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி மருந்தை இலவசமாகவும் வழங்கியது. இலவவசகமாக மருந்தைப் பெற்ற நாடுகள் அடுத்த சுற்றுக்காக தன்னிடமே வரும்; விலைக்கு வாங்கும் என்ற தடுப்பூசி அரசியலை சீனாவுக்கு முன்னரேயே இந்தியா வெற்றிகரமாகவே ஆரம்பித்திருந்தது. எனினும் பிராந்தியத்துக்கான தடுப்பூசி மருந்து களஞ்சியமாக இந்தியா விளங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டது சீனா அல்ல; இந்தியாவே என்பதும் அற்ப சமய காரணத்தின் பேரில் அவ்வாறு நிகழ்ந்தது என்பதும் அரசியல் ரீதியாக ஆழ்ந்த கவனிக்கத் தக்கது. வேறு நாடுகளுக்கு தடுப்பு மருந்தை வழங்க வேண்டிய இந்தியா இன்று சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தடுப்பு மருந்துகளை அவசர அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது, அதன் பிராந்திய அரசியல் முன் நகர்வில் ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்பட வேண்டும். தற்போது பிராந்திய தடுப்பு மருந்து வழங்குநர்களாக சீனாவும் ரஷ்யாவும் விளங்குகின்றன.

எனினும் வளர்ந்த நாடுகள் தடுப்பூசி அரசியலில் நீடித்து நிற்பது நல்லதல்ல. ஏனெனில் உலக மக்கள் ஒரு நோயை எதிர்த்து போராடுகிறார்கள். இவ்வுலகம் வளர்ந்த, பணக்கார நாடுகளுக்கானதல்ல. அனைவருக்குமானது எனவே இந் நாடுகள் தடுப்பூசி அரசியலைக் கைவிட்டு, இம்மருந்து வறிய நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்களையும் சென்றடையச் செய்யும் வகையில் தடுப்பூசி மருந்து விநியோகம் பொதுமைப்படுத்தப்பட வேண்டும். ஐ.நா சபையும், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் நிறுவனமும் அங்கத்துவம் கொள்ளும் ஒரு பொது அமைப்பின் கீழ் தடுப்பூசி மருந்து விநியோகம் நடைபெறச் செய்வதை உறுதிப்படுத்தும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகும். தடுப்பு மருந்துகளை மேலதிகமாக வைத்திருக்கும் நாடுகள் உலக நலன்கருதி இவ்வாறான அமைப்பிடம் மருந்துகளை வழங்க வேண்டும். இப் பெருந்தொற்றிலிருந்து உலகம் விடுபடுவதே முக்கியம். நாடுகளுக்கு மத்தியிலான சண்டை சச்சரவுகளை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

உலக எதிரிக்காக ஒன்றுபடுதல் என்பது இதவேயாகும். அந்த நாளுக்காகத் கhத்திருப்போம். அதுவே உண்மையான ‘நியூ வேர்ளட் ஓர்ட’ராக இருக்கும்!

Comments