செவ்வாயன்று சபையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

செவ்வாயன்று சபையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் விவாதத்துக்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டன. இரு நாள் விவாதங்களின் பின்னர் 20ஆம் திகதி பிற்பகல் இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

குறித்த விவாதத்தை கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைக்காத காரணத்தினால் விவாதம் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமானது, 'விசேட பொருளாதார வலயமொன்றினை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடு செய்வதற்கும், பதிவு செய்தல்கள், உரிமங்கள், ஆதரவளிப்புக்கள் மற்றும் வேறு அங்கீகாரங்களை அளிப்பதற்கும் அத்தகைய வலயத்திலும் வலயத்திலிருந்தும் வியாபாரங்களையும் வேறு செயற்பாடுகளையும் கொண்டு நடத்துவதற்கும் தத்துவமளிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய வலயத்தினுள் செய்கின்ற வியாபாரத்தின் எளிதாக்கலின் மேம்படுத்துகைக்கான ஒற்றைச் சாளர முதலீட்டு வசதிப்படுத்துநரொருவரின் அடையாளப்படுத்துகைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய வலயத்தினுள் அரசாங்க சந்தைப்படுத்தற்படபாலதான காணி மற்றும் கருத்திட்டக் கம்பெனி சந்தைப்படுத்தற்படபாலதான காணி மற்றும் வளவுகளினதும் மற்றும் அதிலுள்ள கூட்டாட்சியாதனச் சிறுகூறுகளினதும் ஏற்பாடு செய்யப்பட்டவாறான கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதற்கும் போன்ற அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.

அத்தகைய வலயத்தினுள் சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித் தொழில் மற்றும் நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார வழிமுறை, வெளியாட்களை பணிக்கமர்த்தல் முறை, கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் தொழிற்பாடுகள், பிராந்திய விநியோகத் தொழிற்பாடுகள், சுற்றுலாப் பயணத்துறை மற்றும் வேறு துணையாய சேவைகளை மேம்படுத்துவதற்கும் வசதிப்படுத்துவதற்கும், அத்தகைய வலயத்தினுள் சர்வதேச பிணக்குத்தீர்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும், நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் அத்தகைய வலயத்தினுள் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்துதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுசெய்தல்' என்பவற்றையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

எனினும், குறித்த சட்டமூலத்துக்கு எதிராக 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணகள் உயர் நீதிமன்றத்தில் சுமார் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. விசாரணைகள் பூர்த்தியடைந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சட்டமூலமொன்றுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அது குறித்த விசாரணைத் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அதாவது சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதே சட்ட ஏற்படாகும்.

சட்டமூலமொன்றுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவை குறித்த தீர்ப்புகள் வரும் வரை பாராளுமன்றத்தினால் சம்பந்தப்பட்ட சட்டமூலம் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்ற விடயம் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பிலும் அது பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்த தீர்ப்பும் தற்பொழுது சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்திருப்பதாகவும், இது குறித்து எதிர்வரும் 18ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அவருடைய ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இதற்கமைய 18ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் போது முதலாவதாக சபாநாயகரின் அறிவிப்பின் போது உயர் நீதிமன்ற தீர்ப்பு சபைக்கு வாசிக்கப்படும்.

கடந்த வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவாதத்தை அவசர அவசரமாக நடத்துவதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடு கொவிட் சவாலுக்கு முகங் கொடுத்திருக்கும் சூழ்நிலையில் அவசர அவசரமாக குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டாம் எனத் தான் கூறியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

எனினும், தமது எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாமல் விவாதத்தை இரண்டு நாட்களில் நடத்தி சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்படுகிறது என அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது குற்றஞ் சாட்டியிருந்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் எதிர்வரும் புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் முதலீடுகளுக்கு அங்கீகாரமளிக்கும் இரண்டு கட்டளைகள் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளன.

செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டங்கள் சட்டத்தின் கீழ் கொழும்பு சர்வதேச நிதிசார் நிலைய கலப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குறித்த வர்த்தமானியை அரசாங்க நிதி பற்றிய குழு அங்கீகரித்துள்ளது. கலப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமான செயற்பாடுகள், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் பேணப்பட வேண்டிய வீதாசாரம் மற்றும் அளிக்கப்படவிருக்கும் வரி விலக்குகள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, இங்கு ஐந்து உயர்ந்த கட்டடக் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. 2025ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ள இந்த கொழும்பு சர்வதேச நிதிசார் நிலையமானது அதன் முதலாவது கட்டத்தில் ஒரு சர்வதேச ஏ தரம் கொண்ட உயர்நிலை அலுவலகக் கோபுரம், இரண்டு உயர்முனை வதிவிடக் கோபுரங்கள் மற்றும் ஒரு சில்லறை நெடுமேடைப் பீடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இரண்டாவது கட்டம் இரண்டு சர்வதேச ஏ தரம் கொண்ட உயர்நிலை அலுவலகக் கோபுரங்கள், ஒரு சில்லறை நெடுமேடைப் பீடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முதலாவது கட்டம் 48 மாதங்களிலும், இரண்டாவது கட்டம் அடுத்த 48 மாதங்களிலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அத்துடன், பணியாட்களை வேலைக்கு அமர்த்தும் போது உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேலைவாப்பு வீதம் குறித்தும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உயர்நிலை வேலையாட்களின் தேவைப்பாட்டில் உள்நாட்டில் 75 வீதமானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், தேர்ச்சிபெற்ற தொழிலாளர் தேவைப்பாட்டில் உள்நாட்டில் 65 வீதமானவர்கள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் அப்பால், குறிப்பிட்ட காலப் பகுதிக்கு வரிவிலக்குகளை அளிப்பதற்குமான பரிந்துரைகள் அந்தக் கட்டளையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு விரிவாகக் கலந்துரையாடியிருந்தது. வரிச் சலுகைகள் பல வழங்கப்படுவதால் அதன் நன்மைகள் நாட்டில் உள்ளவர்களுக்குச் சென்றடைவதை முதலீட்டுச் சபை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. துறைமுக நகரில் முதலாவது முதலீட்டை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக முதலீட்டுச் சபை நிதி பற்றிய குழுவில் சுட்டிக் காட்டியிருந்தது.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் உரிமை இலங்கைக்குக் கிடைக்காமல் சென்று விடும் என்ற பிரசாரமே எதிர்க் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எனினும், இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இதுபோன்ற பொருளாதார கேந்திர நிலையங்கள் அமைவது நாட்டின் பொருளாதாரத்துக்கும் வேலைவாய்ப்புக்களுக்கும் வலுச் சேர்ப்பவையாகவே இருக்கும் என பொருளாதார விற்பன்னர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் துறைமுக நகரங்கள் இலங்கைக்கு புதியதாக இருக்கக் கூடும். ஆனால் உலகின் பல நாடுகளில் துறைமுக நகரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றின் மூலம் அந்நாடுகளில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் சம்பந்தமாக பாதகமான விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் தரப்பினர், அத்திட்டத்திலுள்ள சாதகமான விடயங்கள் பற்றியும் எடுத்துக் கூற வேண்டுமென பொருளாதார விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments