சூயஸ் கால்வாய் | தினகரன் வாரமஞ்சரி

சூயஸ் கால்வாய்

ஓங்கி வளர்ந்த உலோக மலையைப் போல சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியிருந்த எவர் கிவன் கப்பலையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளை மட்டுமே இந்த உலகம் அறியும். ஆனால் சூயஸ் கால்வாய் கட்டப்பட்ட காலத்தில் இருந்து அது நிகழ்த்திய ஒவ்வொரு சம்பவமும் வரலாற்றை ஸ்தம்பிக்க வைக்க கூடியவையாகவே இருந்திருக்கின்றன.

ஒன்றும் அறியாத சிறு பிள்ளையை போல ஓடிக் கொண்டிருக்கும் இந்த நீரோடை, 20 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை தின்று செரித்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா....? ஆம். உலகின் பிற வரலாறுகளைப் போல சூயஸ் கால்வாயின் கதையும் ரத்தத்தில் தோய்ந்ததுதான்.

தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்கிறார் தத்துவஞானி பிளாட்டோ. சூயஸ் கால்வாய் தோற்றத்துக்கும் ஒரு தேவை இருந்தது. ஐரோப்பியா - ஆசியா கண்டங்களுக்கிடையே வணிகம் செழித்திருந்த காலம் அது. ஒரு தேவதூதனை போல பாரங்களை சுமந்த படி கடலின் வடக்கிற்கும் தெற்கிற்கும் கப்பல்கள் மிதந்து கொண்டே இருந்தன. ஆனால் இந்த பயணம் சுமூகமானதாக இல்லை. ஆசியாவில் இருந்து கிளம்பிய கப்பல்கள் நேரடியான வழித்தடம் இல்லாததால் ஆப்பிரிக்க கண்டம் முழுவதையும் சுற்றி, சோர்வுற்ற பிறகுதான் ஐரோப்பிய எல்லைகளை அடைய முடிந்தது. இந்த சுற்றுப்பாதையின் காரணமாக கப்பல் நிறுவனங்களுக்கு நேரம், எரிபொருள் என எண்ணற்ற இழப்புகள் ஏற்பட்டன.

இப்படி நெடுங்காலமாக கப்பல்கள் தலையை சுற்றி மூக்கை தொட்டுக் கொண்டிருப்பதை கவனித்தது எகிப்தை சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனம். ஐரோப்பா - ஆசியா இடையே உள்ள ஒரு சிறு நிலப்பரப்புதான் கடல்வழி பயணத்திற்கு சுமையாக உள்ளது என்பதை அது உணர்ந்தது. அந்த நிலத்தின் ஊடாக கால்வாய் கட்டுவதன் மூலம் கப்பல்களின் பயண நேரத்தை கணிசமாக குறைக்க முடியும் என்று கணக்கு போட்டது. அதன் படி 163 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தை தோண்டி கால்வாய் அமைப்பது என செயல் திட்டம் வகுத்து 1859 ம் ஆண்டு அதற்கான பணியை தொடங்கியது சூயஸ்.

இத்தனை தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலத்திலேயே எவர் கிவன் கப்பலை மீட்க ஒரு வார காலம் போராட வேண்டியுள்ளது எனில் 160 ஆண்டுகளுக்கு முன்பு என்ன தொழில் நுட்பம் இருந்திருக்கும் என்பது எகிப்திய கடவுளுக்கே வெளிச்சம். வேலை என்ற பெயரில் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க கருப்பின மக்கள், பிரமிடு தேசத்திற்கு அடிமைகளாக இழுத்து வரப்பட்டனர். கட்டுமானத்தை விரைந்து முடிக்க இரவு, பகல் பாரது அடித்து துன்புறுத்தி அவர்களின் உழைப்பும் உயிரும் சுரண்டப்பட்டது.

10 ஆண்டுகள் நடைபெற்ற இப்பணி 15 லட்சம் உயிர்களை காவு வாங்கியதாக நிறுவுகின்றன ஆய்வுகள். மனித உரிமைகள் படுகொலை செய்யப்படுவதாக எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அதிகார மையங்களின் தயவில் 1869 ம் ஆண்டு சூயஸ் கால்வாயை வெற்றிகரமாக திறந்தது சூயஸ். 23 மீட்டர் ஆழமும், 254 அடி அகலத்துடன் 193 கிலோ மீற்றர் நீண்டிருக்கும் இக்கால்வாயை கடக்க 11 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். இது ஆபிரிக்க கண்டத்தை சுற்றிச் செல்ல ஆகும் பயண நேரத்தை விட ஒரு மடங்கு குறைவு. மேலும் 19000 கிலோ மீற்றராக இருந்த ஐரோப்பியா - ஆசியா கடற்பயண தூரம், 11000 கிலோ மீற்றராக குறைந்தது. எரிபொருளாக்காக மட்டுமே ஏராளாமான செலவு செய்து கொண்டிருந்த நாடுகள் இந்த கால்வாயை கடவுளின் கொடையாகவே பார்த்தன.

சூயஸ் கால்வாயைச் சூழ்ந்திருந்த ஒரு அரசியல் நெருக்கடி 1956-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது எகிப்தின் அதிபராக இருந்த கமால் அப்தெல் நாசீர், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி டீரான் நீரிணையை மூடினார்.

இதனால் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எகிப்தின் மீது படையெடுத்தன. ஐ.நா-வின் தலையீட்டுக்குப் பிறகு மூன்று நாட்டு படைகளும் விலகிக்கொண்டன. கால்வாய் வர்த்தகக் கப்பலுக்கான பாதையைக் கொடுத்தது.

இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே நடைபெற்ற ஆறு நாள் போரின்போது எகிப்திய அதிகாரிகளால் சூயஸ் கால்வாய் 1967-ம் ஆண்டு மூடப்பட்டது. இக் கால்வாயின் வழியாக ஓவ்வொரு மணி நேரமும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் 12 சதவிகித வர்த்தகம் இப் பாதை வழியாகவே நடக்கிறது. எண்ணெயைத் தவிர உடைகள், கார் உதிரிப்பாகங்கள் என பல உற்பத்திப் பொருட்களும் இப்பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

Comments