நெஞ்சம் மறப்பதில்லை | தினகரன் வாரமஞ்சரி

நெஞ்சம் மறப்பதில்லை

மலேசியாவிலிருந்து அந்த விமானம் புறப்பட்டபோது இரவு சரியாக ஆறுமணி இருக்கும். சீரற்ற கால நிலையால் குறிப்பிட்ட நேரத்தை விட சற்று காலதாமதமாகவே புறப்பட்டது.

செந்தூரன்- விமானத்தின் யன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு நாற்பது வயதிருக்கும். கடந்த பத்து வருடங்களாக மலேசியாவிலேயே வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு பிறந்த நாட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டவுடனேயே உடனடியாக புறப்பட்டு விட்டான். விமானம் சீராக பறக்க அவன் மெதுவாக கண்களை மூடினான்.

நுவரெலியாவிலிருந்து கண்டிக்குப் போகும் வழியில் அந்த தோட்டம் இருந்தது. செந்தூரன் அந்த தோட்டத்தில்தான் பிறந்து வளர்ந்து நுவரெலியாவிலுள்ள தனியார் வங்கிக்கிளையில் வேலையும் செய்யத் தொடங்கினான். அங்கே ஏற்கனவே வேலை செய்துக் கொண்டிருந்த இளமாறன் செந்தூரனுக்கு பழக்கமானான். சாதாரண பழக்கம் நட்பாக மாறியது. இளமாறனின் வீடு நுவரெலியா நகரத்துக்கு அண்மையில் இருந்தது.

எனவே இடையிடையே செந்தூரனை இளமாறன் தன்வீட்டுக்கு அழைத்துச் செல்வான். இளமாறனுக்கு தந்தை இல்லை. தாய் கனகவள்ளி, தங்கை அறிவழகி. அறிவழகி ஆசிரியையாக தொழில் செய்தாள். பெயருக்கேற்றதைப் போல அழகிதான். அவளுக்கு எப்போது செந்தூரனை பார்த்தாளோ அப்போதே அவனை நிரம்ப பிடித்துவிட்டது.

ஆனால் செந்தூரன் அறிவழகி தன் நண்பனின் சகோதரி என்ற ரீதியில் தான் பழகினான்.

இந்த நிலையில்தான் – தலவாக்கலையிலிருந்து மாற்றலாகி ஓவியா’ அந்த வங்கிக்கு வந்தாள். பெயருக்கேற்றாற் போல ஓவியம் போலத்தான் அவள் இருந்தாள். சிவந்த நிறம் வட்டமுகம். அழகான படபடக்கும் கண்கள். உதட்டோரம் ஒரு புன்னகை. எல்லோரையும் மதிக்கும் பண்பு என்று அவள் எல்லோருக்கும் பிடித்தவளாக இருந்தாள்.

ஓவியா வேலையில் கெட்டிக்காரி – சுறுசுறுப்பானவள். செந்தூரன் தன்னுடன் வேலை செய்யும் சக பணியாளர் என்ற ரீதியில்தான் அவளுடன் பழகினான். ஆனால் மற்றவர்களை விட அவள் அவனிடம் அதிகம் நெருக்கம் காட்டுவது போலிருந்து. அவன் எட்டிப்போனான். அவள் ஒட்டிவந்தாள். கடைசியில் – அவன் மனதில் சலனம் ஏற்பட்டது.

அவளுடன் பேசாமல் பழகாமல் அவனால் இருக்கமுடியவில்லை. கண்களில் தொடங்கிய அவர்களின் காதல் இதயத்தில் சங்கமமானது. அதே சமயம் செந்தூரனை உளமார நேசித்த அறிவழகி சில காலமாக அவன் போக்கில் மாற்றம் ஏற்பட்டத்தை அவதானித்தாள். முன்னரைப்போல அவன் இளமாறனுடன் வீட்டுக்கு வருவதில்லை.

அவள் – குழப்பிப் போனாள். சரியாக சாப்பிடுவதில்லை. யாரிடமும் பேசுவதில்லை. அறைக்குள்ளேயே அடைப்பட்டுக்கிடந்தாள். கடைசியாக செந்தூரன் ஓவியாவை நேசிக்கும் விஷயம் தெரிந்தவுடன் துடித்துப் போனாள். அவன் அவளுக்கு உரிமையானவன். வேறு யாருக்கும் எந்த நிலையிலும் அவனை விட்டுக் கொடுக்க முடியாது!

அனறு ஒரு சனிக்கிழமை இளமாறனின் வற்புறுத்தலினால் செந்தூரன் அவனுடைய வீட்டுக்குச் சென்றான். அவனைக் கண்டவுடனேயே ஆதவனைக்கண்ட தாமரையைப் போல அவள் முகம் மலர்ந்தது. தன்கையால் சமையல் செய்து பரிமாறினாள். உணவு முடிந்த நிலையில் இளமாறன் செந்தூரனை தன் அறைக்கு கூட்டிச் சென்றான்.

“செந்தூரா... உன் கிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு பேசணும். நான் சுத்தி வளைச்சி பேசவிரும்பலை. என் தங்கச்சி எனக்கு உயிர். அவ ஆண்கள் கிட்ட பழகவேமாட்டா... பிடிக்கவும் பிடிக்காது. எத்தனையோ பேரு இவளை பெண் கேட்டு வந்தாங்க. ஆனா... தனக்கு கல்யாணமே வேணாம்னுட்டா. இந்த நிலையிலதான் நீ வீட்டுக்கு வந்தே. முதல் பார்வையிலேயே உன்னைப் பிடிச்சிருச்சி.... வெட்கத்தைவிட்டு என் கிட்ட சொல்லிட்டா...

எனக்கும் இதுல முழுசம்மதம்... நீ... என்னசொல்லுற...?

செந்தூரன்  அதிர்ச்சியில் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பின்பு மெதுவாக அவனை ஏறிட்டான்.

“மாறா... எனக்கு என்ன சொல்லுற துன்னு தெரியலை- நான் இதை எதிர்பார்க்கலை. அந்த நோக்கத்தோட நான் அறிவழகிக்கிட்ட பழகவும் இல்லை. இதையெல்லாம் விட ஏற்கனவே நான் ஒருத்தியை நேசிச்சிக்கிட்டிருக்கேன். அவளையே மணம் முடிக்க முடிவு நெஞ்சிருக்கேன்...”

“யாரு அந்த ஓவியாவைத்தானே?”

“என்ன உனக்கும் அது தெரியுமா?”

“ஆமா.... மகுடபதி சொன்னான்...”

“ஓவியாவை நான் நேசிக்கிற விஷயம் நம்மலோட, வேலை செய்யிற மகுடபதிக்கும் நெரிஞ்சிடுச்சா...”

“ஆமா... மகுடபதியை யார்ன்னு நினைச்சே. ஓவியாவை கட்டிக்கிற முறைமாப்பிள்ளை. ஏற்கனவே ரெண்டு வீட்லயும் பேசிட்டாங்களாம். ஆனா ஓவியாவுக்கு மகுடபதியை பிடிக்கல்லையாம். மகுடபதியோ ஓவியாவை அடையிறதுக்காக எதையும் செய்ய தயாரா இருக்கானாம்... உனக்கும் சில கடமைகள் இருக்கு... உன் தம்பி தங்கச்சியை நீதான் கரையேத்தணும். ஓவியாவோட பிரச்சினையிலமாட்டி உன்னோட எதிர்காலத்தை வீணாக்கிக்காதே... நல்லா யோசிக்க ஒருமுடிவுக்குவா...”

இளமாறனிடம் விடைபெற்று வீட்டை நோக்கி பயணமானவன் மிகவும் குழம்பிப் போனான். மகுடபதி ஓவியாவிடம் வலிய சென்று பேச்சு கொடுப்பதை செந்தூரன் அவதானித்திருக்கிறான். சற்று முரட்டு சுபாவமுள்ள மகுடபதியிடம் அவன் அதிகம் பேசுவதில்லை. செந்தூரனுக்கு இன்னொரு பிரச்சினையுமிருந்தது. அவன் மலேசியாவிலிருக்கும் நண்பன் சந்தானம் மூலமாக அங்கே நல்ல வேலை வாய்ப்பு இருந்தால் அறிவிக்க சொல்லியிருந்தான். கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கு மேல சம்பளத்தில் நல்ல வேலையொன்று தயார் நிலையிலிருந்தது. அதன்மூலம் தம்பி தங்கையை கரையோற்றி விடமுடியும்.

அவன் – தீவிரமாக சிந்தனை செய்தான். ஓவியாவின் காதலால் அவனுக்கு பிரச்சினை வந்தால் அது அவனையும் அவனின் உடன் பிறப்புகளையும் பாதிக்கலாம். அறிவழகியை மணமுடித்தால் அது அவன் மனதுக்கு சந்தோஷத்தை தராது.  எனவே – யாரிடமும் சொல்லாமல் தன் உடன்பிறப்புகளை மாமா மதிமாறனின் பொறுப்பில் விட்டுவிட்டு மலேசியா சென்று விடுவது என்றுமுடிவு செய்தான். மூன்று வருட ஒப்பந்தத்தில் சென்றவன் பத்து வருடம் மலேசியாவிலேயே இருந்துவிட்டான். அவன் தங்கைக்கு மணம் முடித்து வைத்துவிட்டான். தம்பி கை நிறைய சம்பளத்துடன் வங்கியொன்றில் முகாமையாளனாக இருக்கிறான். பத்துவருடத்துக்குப் பின் இதோ தன் சொந்த ஊரை நோக்கி புறப்பட்டு விட்டான்.

செந்தூரன் – சட்டென கண் திறந்தவன் நேரத்தைப் பார்த்தான். மணி எட்டு. இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களின் பின் அவன் சொந்த நாட்டில் காலடிவைத்து விடுவான். இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கி சொந்த வேலைகளைப் பார்த்து விட்டு பிறந்த இடத்தை நோக்கி பயணமாவதுதான் அவன் திட்டமாக இருந்தது.

பண்டாரவளை- இரவு மணி பத்து... ஓவியா தன் ஐந்து வயது மகன் இனியனை தூங்க வைத்துவிட்டு வீட்டின் முன்னறைக்கு வந்தாள். அவசரமாக செய்ய வேண்டிய சில வேலைகள் இருந்தமையினால் அதை செய்யத் தொடங்கினாள். அவள் பண்டாரவளைக்கு மாற்றலாகி வந்து கிட்டத்தட்ட ஆறுவருடங்களாகி விட்டன. தான் பணிபுரியும் வங்கியிலேயே வீட்டுக்கடன் வாங்கி இந்த வீட்டை வாங்கினாள். அவள் அலுவலக வேலைகளை முடித்து விட்டு எழுந்த போது ஒரு மணியாகியிருந்தது. வெளியே குளிர் காலமானதால் பனி பொழிந்து கொண்டிருந்தது. அவள் முன்னறை விளக்குகளை அணைக்கப்போனாள். அப்போது யாரோ கதவை தட்டுவதைப் போல இருந்தது.

இந்த நேரத்தில் யாராக இருக்கும்? அவள் கதவை நோக்கி நடந்தாள். அதை திறந்தவள் அப்படியே அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனாள். அவள் கண்களையே அவளால் நம்பமுடியவில்லை.

“செ... செந்தூரன் நீங்களா...வாங்க... வாங்க.... உள்ளே வாங்க.... எதுக்காக சொல்லாம மலேஷியா போனீங்க... உங்க தம்பியை சந்திச்சப்பதான் அவர் இந்த விஷயத்தைச் சொன்னாரு. நான் உங்களை உயிரா நினைச்சேன். ஆனா என்னை உயிரற்ற பயிரா ஆக்கிட்டு யார் கிட்டயும் சொல்லாம நாட்டை விட்டே பறந்துட்டிங்களே இது நியாயமா... கடைசியில இளமாறன்தான் என்னை சமாதானப் படுத்தி என் மனசை மாத்தி கடைசியில அவரே என்னை திருமணமும் முடிச்சிட்டாரு... ஆனா போன வருஷம் பஸ்விபத்துல அவர் இறந்துட்டாரு... உடம்பு துண்டுத்துண்டா சிதறிப் போயிடுச்சி... அவரோட சாவுக்கு அப்புறம் என்கைக்கு கிடைச்ச அவர் டயரியை வாசிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைச்சப்பத்தான் எனக்கு பல விஷயங்கள் தெரிய வந்திச்சு... என்ன வாசலிலேயே நின்னுக்கிட்டிருக்கீங்க... உள்ளே வாங்க...”

அவன் அப்படியே அமைதியாக நின்றிருந்தான்... அவள் கதவில் சாய்ந்தவாறு கண்களை மூடினாள்.

இளமாறன்- எப்போது ஓவியாவை பார்த்தானோ அப்போதே அவளை பிடித்து விட்டது. எந்த காரணத்துக்காகவும் அவளை இழப்பதற்கு அவன் தயாரில்லை ஆனால் செந்தூரன் அவளை நேசிப்பதை அறிந்ததும் அவன் எரிமலையானான். செந்தூரன் மேல் கோபம் ஆத்திரம் பொறாமை எல்லாமே வந்து அவனை நிலை குலையவைத்தது. எப்படியாவது ஓவியாவை அவனிடமிருந்து பிரித்துவிட திட்டம் தீட்டினான். மகுடபதி – ஏற்கனவே இளமாறனின் நண்பன். மகுடபதியை அறிவழகி விரும்பினாள் தங்கையின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவேண்டுமானால் அதற்கு ஓவியா இளமாறனுக்கு கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

மகுடபதியும் அதற்கு பூரண சம்மத்தை தெரிவித்து விட்டான். தன் தங்கை செந்தூரனை மணம் முடிக்க விரும்புவதாகவும் அவளையே திருமணம் முடிக்கவேண்டுமென்றும் இளமாறன் கூற சொத்தூரன் திக்கு முக்காடி போனான். தன் உடன்பிறப்புகளின் எதிர்காலம் முரடனான மகுடபதியுடனா அல்லது அறிவழகியுடனா என்று யோசித்தவன் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான். மிக இளகிய மனதையுடைய செந்தூரனுக்கு ஒரேயொரு முடிவுக்குத் தான் வரமுடிந்தது. கண்காணாத இடத்துக்கு போய் விடுவது. எல்லா விடயங்களும் ஓரளவு சரியானதுடன் மறுபடியும் வந்து விடலாம் என்று தான் மலேசியா போனான். அவன் மலேஷியா பயணம் பற்றி ஏற்கனவே இளமாறனிடம் சொல்லியிருந்தான். எனவே இளமாறனின் திட்டம் வெற்றியடைந்தது.

நட்புக்காக உயிரையே கொடுப்பவர்கள் மத்தியில் தன்னுடைய காதல் நிறைவேறுவதற்காக நண்பனின் காதலுக்கே வேட்டு வைத்தவன்  தான் இளமாறன்...

ஓவியா – கண்கள் மூடியிருக்க தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

“என்னை மன்னிச்சிடுங்க செந்தூரன். உங்களை காணாமல் துடிச்சிப் போன நான் உங்களுக்காக காலமெல்லாம் காத்திருந்திருக்கலாம். மகுடபதியோட பயமுறுத்தல் வீட்டுல கொடுத்த கரைச்சல் எல்லாம் சேர்ந்து என்னை தடுமாற வச்சிடுச்சி... இளமாறனோட வஞ்சகம் புரியாம கழுத்தை நீட்டினேன். ஆனா அவனொரு ‘துரோகி’ என்பதை அவனோட டயரியை படிச்சி நெரிஞ்சிக்கிட்டேன்...”

ஓவியா –சட்டென கண்களை துடைத்தவாறு வாசலைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அவனைக் காணவில்லை. அவள் அவசரப்பட்டு உண்மைகளை போட்டு உடைத்து விட்டாளோ... அதிர்ச்சியில் அந்த இடத்தை விட்டு போய் விட்டானோ...
அவள் – மெதுவாக நடந்து படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.

ஓவியா திடுக்கிட்டு எழுந்தாள். கைபேசி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. அயர்ந்து தூங்கி விட்டாள். நன்றாக விடிந்து விட்டிருந்தது. அவள் கைபேசியை எடுத்து உயிர்ப்பித்தாள்.

“ஹலோ... ஓவியா அக்காவா... நான் செந்தூரன் அண்ணாவோட தம்பி மாறன் பேசுறென். ரொம்ப நேரம் உங்களுக்கு கைபேசிக்கு கோல் எடுத்துக்கிட்டிருக்கேன்... நீங்க எடுக்கவேயில்லை... அண்ணா மலேஷியாவிலிருந்து வந்துட்டாரு...”

“தெரியும்... ராத்திரி ஒருமணி போல வீட்டுக்கு வந்தாரு... ஆனா எதுவும் பேசலை...”

“நீங்க என்ன சொல்லுறீங்க... விமான நிலையத்துல இருந்து வாடகைக்கு கார் பேசி வந்திருக்காரு... ரதல்ல ஷோர்ட்கட்ல வேகமா வந்தப்ப எதிரே சத்தமில்லாம வந்த லொரியில கார் பயங்கரமா மோதிடுச்சி. கார் கிடுகிடு பள்ளத்துல விழுந்து அந்த இடத்திலேயே அண்ணா தலையிலபலமா அடிப்பட்டு இறந்துட்டாரு... டிரைவருக்கும் அடிதான். அவன் தான் பொலிசுக்கு தகவல் குடுத்தான். விடியற்காலை ஆறுமணி போலத்தான் எனக்கு தகவல் வந்திச்சி என்னால துக்கத்தை தாங்க முடியலை. தங்கச்சி எப்படி தாங்குவாளோ தெரியலை... பாவம் அண்ணா...”

ஓவியா – கைபேசியை அப்படியே கீழே போட்டவள் கட்டிலில் விழுந்து ‘ஓ’ வென சத்தம் போட்டு அழத்தொடங்கினாள். வெகுநேரம் அவள் அழுதுகொண்டேயிருந்தாள். இருந்தாலும் இறந்தாலும் காதல் கொண்ட நெஞ்சம் உண்மைக் காதலை என்றும் மறப்பதேயில்லை (யாவும் கற்பனை)

பாலா சங்குப்பிள்ளை

Comments