ஒரு அடியாளின் ஆட்டோபயக்ரபி | தினகரன் வாரமஞ்சரி

ஒரு அடியாளின் ஆட்டோபயக்ரபி

புதிய ஜனாதிபதி அறிவிக்கப்பட்டு சில மாதங்களினால்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அடுத்த பாராளுமன்றத் தேர்தலும் அதற்கு MP  சீட்டை பற்றிக்கொள்ளவும் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்கள் தாங்கள் இந்த  ஐந்து வருடமும் சும்மாவே இருந்து சுகமான ஒரு வாழ்வை மக்களின்  வரிப்பணத்திலிருந்து எடுத்து ஏப்பம் விட்டதை எண்ணி எண்ணி.. எப்படித்தான்  இனி பிரசாரம் செய்து இந்த மூடத்தனமான மக்களை ஏமாற்றுவது என்று  எண்ணிக்கொண்டிருந்தனர்... அது மட்டுமல்லாது சென்ற முறை பாராளுமன்றத்தில்  சேர்த்துக்கொள்ளப்படாமல் வாக்குகளில் வரட்சி கண்ட சில அரசியல்வாதிகள் no  pay லீவு எடுத்தது போல இந்த ஐந்து வருட காலத்தையும் அடுத்த பாராளுமன்றத்  தேர்தலில் எப்படியாவது MPபதவியை எட்டிப்பிடித்தே ஆக வேண்டும் எனும்  நோக்கில், கல்யாண வீடு தொடக்கம் கபூர் ஸ்தானம் வரை தரிசித்து சில உத்திகளை  உபயோகித்து காலம் கழித்தனர்.. எப்படியோ இந்த இரு தரப்பினரும் தமது சுய நல  அரசியல் விருத்திக்கும், வரிப்பண சுரண்டலுக்கும், contract கொள்ளைகளுக்கும்  தத்தமது கொள்கைகளில் குறிக்கோளாய் இருந்தார்கள்... 

பிரதான வீதியின் ஒரு ஓரம்.. நடுச்சாமம் பன்னிரண்டுமணி ஆவதற்கு  இன்னும் அரை மணி நேரம்... இரவு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது..  காலையில் கொளுத்தும் வெயிலுக்கு சமமானதொரு குளிர் காற்று  வீசிக்கொண்டிருந்தது... விட்டில் பூச்சிகள் விளக்கை சுற்றிக்  கொண்டிருக்க.... பிரச்சார மேடைக்கு பலகைகள் மூன்று buddyகளில் வந்து  இறங்கிய வண்ணம் இருந்தன.. ஒரு பலத்த அமைதி.......... 
ஹாஷிம்...நைட் ஹோட்டலில் உண்ட இறைச்சி ரொட்டியை சோடா குடித்து எரித்துக்கொண்டு.. சுவரில் சாய்ந்த வண்ணம் நாமிஸை நோக்கி..  
"டேய் இன்டக்கி ஸ்டேஞ் அடிக்க நீ வாறா?" 
என்று கேட்டவுடன்...  

தொண்டையை சரி செய்து கொண்டே நாமிஸ் பதிலளித்தான்...  
" ஓம் ஓம் வாறன்... வீட்ட அவள் கத்துறாள்... பிள்ளைக்கி புது  உடுப்பும் வேண்டல்லயாம்.. அது மட்டுமில்லாம மாட்டெறச்சி வேண்டி திண்டு  எத்துன நாள் டா... நமக்கு ஒரு தொழில் இருந்தா ஏன் இதுகள்.. சரி சரி நான்  வீட்ட கொஞ்சம் போய்ட்டு வாறன்.. " 
"ஒண்டும் யோசிக்கத் தேவெல்ல தலைவர் வெண்டா தொழில் இரிக்கி.. " 
"இப்டித்தான் அந்தாள நம்புற பொறகு எவனாச்சும் காசெடுத்துக்கு  வந்து கொட்டுவான் அவனுகளுக்கு குடுத்துப்புட்டு நம்மள பொறகு பாப்பமே  எங்குற.. நம்மளுக்கும் என்ன செய்ர எண்டு வெளங்காம இளிச்சிக்கு மனசுக்க  சலிச்சிக்கி போறான்.." 
"சரி சரி நீ போய்ட்டு வாவன்... இப்பதியே பிந்திட்டு" 
" சரி சரி நான் வாறன்.. என்னயாலும் எண்டா கோள் அடி"................  
அடியாளின் ஆரம்ப காலம்......  

ஊரில் இருந்து கொண்டு உம்மாவிடம் பணம் பறித்து வாப்பாவின்  சைக்கிள் திறப்பில் போலித் திறப்பொன்றை அடித்து தன்னிடம் வைத்துக்கொண்டு  அவர் இல்லாத நேரம் அந்த சைக்கிளை எடுத்து மாப்பிள்ளை போல் ரெடியாகி நெஞ்சை  உயர்த்தி உலாவித்திரிந்து... .தனது வாலிபத்தை வீணாக்கிய நாமிஸ், படிப்பதை  நிறுத்தி விட்டு சாப்பாடு முஸ்பாத்தி என்று காலம் கழித்து கல்யாணம் எனும்  ஒரு நிலை வந்ததன் காரணமாய் வேறு வழி இல்லாமல் வெளிநாடு செல்ல முடிவு  செய்தான். அவன் படித்தவரைக்கும் அப்ளை பண்ணக்கூடிய தொழிலாக இருந்தது  ட்ரைவரும் ஹொட்டல் சர்வரும் தான்..... வேறு வழியில்லாதவன் வெளிநாடு சென்று  உழைத்து வெக்கமே இல்லாமல் சீதனமும் வேண்டி கல்யாணம் முடித்து... வெளிநாட்டு  வாழ்க்கை வெறுத்தவன் ஊரில் ஏதாவது செய்து பிழைக்கலாம் என்ற எண்ணத்துடன்  நாடு திரும்பினான். 

அவன் உழைத்த ஊதியத்தில் செலவு கழித்து சேர்த்த  சேமிப்பெல்லாம்.. வாங்காமத்தில் கூட ஒரு வளவு வேண்ட போதுமானதாக  இருக்கவில்லை... கல்யாணம், பிள்ளை குட்டி என்று குடும்பஸ்தன் நாளை எப்படி  குடும்பம் நடாத்துவது என்று எண்ணி யோசனையில் ஆழ்ந்திருக்க அவனை அழைத்துக்  கொண்டு அந்த அரசியல்வாதியிடம் சென்றது ஹாஷிம் தான். நாமிஸ் வெளி  நாட்டிலிருந்து வந்து ஆறு வருடங்கள் இருக்கும்.. ஐந்து வருடத்தின் முன்..  ஹாஷிம் அவனை தலைவரிடம் கொண்டு சென்ற போது அவனை காவல் நாய்க்குப் பக்கத்திலே  வைத்துவிட்டு, உள்ளே சென்று தலைவரிடம் காதுக்குள்ளே முணு முணுக்க மூன்று  நாழிகைக்கும் குறைவில்லாமல் அந்த கதையை கேட்ட அவர் தனது கைகளால் ஹாஷிமை  போகும் படி கை அசைத்தது நாமிஸூக்கு அவமானத்தை தந்தது.. அந்த அசைவில்  மரியாதை என்பது மண்ணளவிலும் இருக்க வில்லை... தலைவரின் முகச்சுளிப்பு  நாமிஸை முகம் குனிய வைத்தது.. தலைவரை சந்தித்து விட்டு வந்த ஹாஷிம்.. 

"இந்த general electionல வின் பண்ண பொறகு பாப்பம்  எண்டிரிக்கார்.. அப்ப அவர் அப்டி எங்க நம்மள எடுபுடி வேலைக்கு கூப்டாலும்  போக யோசிக்கப் படா.. என்ன வெளங்குதா" 

வறுமையின் வாட்டுதலாலும் வேறு வழியே இல்லை என்ற நாமிஸ்.... 
"அதெல்லாம் பிரச்சினெல்ல... அழ்ழாஹ் எண்டு தொழில் கடச்சா சரி" 
" அப்டி இருந்தா சரிதான், நாளைக்கு மீட்டிங் இரிக்கி.. சும்மா  சண்ட சாமான் கொளுகும்.. நம்முட பழைய ராக்கிளி.. கருங்கனிப் பொல் இருந்தா  எடுத்துக்கு வா" 
" சரி சரி" 

ஹாஷிமின் சொல்லிலும் தலைவரின் சைகையிலும் அறவே  நம்பிக்கையில்லாத நாமிஸ் வேறு வழியே இல்லை என்று அழ்ழாவையும் மறந்து  அவர்களை நம்பியிருந்தான்.. அடுத்த நாள் ஹாஷிம் சொன்னது போல் மீட்டிங்கிற்கு  ராக்கிளியும் கருங்கனிப் பொல்லையும் எடுத்து வந்த நாமிஸ்... முகத்தில்  முக்காடும் கையில் ராக்கிளியும் என்று கூட்டத்திற்குள் நின்றான்.. தலைவரின்  முட்டாள் தனமான ஒரு பேச்சின் காரணமாய் சண்டை கூட.. தொழில் எடுக்க வேண்டும்  என்ற ஒரு அவசியத்தின் காரணமாய்.. எடுத்து வந்த உபகரணங்களை உபயோகித்தான்...  சண்டை அதிகமாகி அமளி துமளியாயிற்று.. அடியும் உதையும் முது கெலும்பில் ஒரு  பலத்த காயமுமாய்... பொலிஸில் பிடிபட்ட நாமிஸ்... தலைவரின் பவரை  பயன்படுத்தி ஏழு நாட்களில் வெளியில் வந்தான்... 
அன்றிலிருந்து தலைவர் நாமிஸை கண்டால் சிரிப்பது வழக்கம்..  ஆனால் அவர் சிரிப்பு நீடிக்கவில்லை. அவர் பொதுத் தேர்தலில்  தோல்வியுற்றார்.. அவரையே மலைபோல் நம்பியிருந்த நாமிஸுக்கு ஆப்பு அடித்தது  அந்த தேர்தல். இனி​மேல் ஒரு வருடம்.... எப்படியோ வயரிங் அடிப்பது, பெய்ன்ட்  அடிப்பது என்று அவனுக்கு தெரியாத தொழிலையும் பழகி எடுத்து வருமானம் பிறக்க  வழி சமைத்து வாழ்க்கை நடாத்தினான். இவனது பழக்கத்தை காணும் எல்லா  முதலாளிகளும் மூன்று மாதங்களுக்குமேல் வைத்திருந்ததே இல்லை.. இவனுக்கு  அறிவெனும் ஒரு விடயம் இருப்பதாக அவனே உணர்ந்ததில்லை.....  

கூடுவார் கூட்டமும்... பிரச்சினை, வாழ்க்கை, கஷ்டங்கள் கூடக்  கூட கஞ்சா தண்ணி என்று பழகத்தொடங்கினான்..... தலைவரும் இவனை ஒரு கைப்பொம்மை  போல் வைத்திருந்து அவரது எடுபிடி வேலைக்கு நாமிஸை நன்றாக உபயோகப்  படுத்தினார்.. தலைவருக்கு சோற்றுப் பாசல் கொண்டு வருதல், வாகனம் ஓட்டுதல்,  Facebookல் கீழ்த்தரமான பேச்சுக்களை கூச்சமே இல்லாமல் கதைத்தல், கஞ்சா  கொண்டு வருதல், சாராயம் ஊற்றிக்கொடுத்தல் என்று தனது காலத்தை ஓட்டிக்  கொண்டிருந்தான்... 
இவனது கஞ்சாப் பழக்கம்.. தனது மனைவியின் நகைகள், சொத்துக்களை  விற்கும் படியாக்க.... நாமிஸின் சகலன்மார் எல்லோரும் இவனை, வெறுப்புடன்  தாக்கி அடி உதையென்று உதைத்து வீதியிலேயே அவமானப்பட்டு.. இரண்டு மாதம்  எழுந்திருக்க முடியாமல் வாட்டில் கிடந்தான்..... அழ்ழாஹ் இவனது வாழ்கையில்  இரக்கம் காட்டி கஞ்சா பழக்கத்திலிருந்து விடுவித்தார்..  ஆஸ்பத்திரியிலிருந்து வந்தவன் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல ஆயத்தமாகி,  தலைவரிடம் கூறி... மனைவியின் நகையை வீசா மற்றும் டிக்கட் செலவுகளுக்காய்  விற்றான்.... இந்த முறை அவனுக்கு நல்ல ஒரு கம்பெனியில் ட்ரைவர் தொழில்  கிடைத்தது அது மட்டுமல்லாமல் புட், அகமெடேஷன் அலவ்வென்ஸும் கிடைத்தது..  ஆகாச கோட்டை கட்டிய அவன் ஆனந்தத்தில் அமர்ந்திருக்க.. அவன் கற்பனை கூட  பண்ணாத அளவுக்கு ஒரு முடிச்சு காத்திருந்தது... 
பொலிஸ் கெரக்டர் எடுக்கச் செல்லும் போது இவனது பழைய அடியாள்  தொழிலுக்கான கேஸ் பதியப்பட்டிருந்தது.. இதனால் பொலிஸ் கெரக்டர் சிக்கலாக  மாற..... லஞ்சம் கொடுத்து வேலை முடிக்கப் பார்த்தான்.. ஆனால் விதி இன்னும்  அவனது வாழ்க்கையை வினாக்குறியாக மாற்றியது..... அங்கு OIC யாக இருந்தது  எதிர்க்கட்சியில் இருந்த ஒரு அரசியல் தலைவனின் கையாள்..... அது  மட்டுமல்லாது, நாமிஸின் தலைவனின் காருக்கு பெச் போட்டதற்காகவும்...  வீதியில் செல்லும் போது கல்லால் அடித்து கண்ணாடியை உடைத்ததற்காகவும் OIC  யின் மச்சானை, உப்பள ரோட்டில் வைத்து அடி அடியென அடித்த நாமிஸின் மேல்  எல்லோரும் கண் வைத்துக் கொண்டிருந்தனர்.. இதுவே சரியான சந்தர்ப்பம் என OIC  அவனது விளையாட்டை துவங்கினான்..... உதவி அற்றிருந்த நாமிஸ் தலைவரிடம் போய்  முறையிட்டும்... பவரே இல்லாத அந்த மனிதனால் ஏதுமே செய்ய இயலாமலிருந்தது...  நாமிஸும் இயன்றளவில் குறுக்கு வழி பார்த்து வெளிநாடு செல்ல முயன்றான்..  ஆனால் அவன் போன எல்லா குறுக்கு வழியும் முட்டுச் சந்தாக அமைந்தது... 

இதெல்லாம் நடந்து வருடங்கள் சக்கரமாய் சுழன்று... அவனது  வாழ்க்கை சென்று கொண்டே இருந்தது.............. இன்று இவ்வளவும் நடந்து ஆறு  வருடங்கள் இருக்கும்...  
வீட்டிற்கு சென்ற நாமிஸ் அவன் மனைவியின் ஒப்பாரி ஓலத்தைக்  கேட்டு ஒன்றுமே செய்ய இயலாமல்... வீட்டிலிருந்து மீண்டும் நடந்தே வந்தான்  பிரச்சார மேடை அடிக்க... 
"எனக்கு என்ன செய்ர எண்டும் வெளங்குதில்லடா" 
"என்ன பொண்டாட்டிய பத்தி யோசிக்காயா" 

"அவள் உண்மையா பாவம்.. நான் இன்னா பாக்குர காவாலி வேலைக்கு..  என்ன காளி கோட்டுக்கு இழுத்திரிக்கனும்.. அவளும் விடிவு வரும்... விடிவு  வரும் எண்டு என்ன நம்பி நம்பி.. மடைச்சியாகுறாள்"  

நாமிஸின் கண்களில் கண்ணீர் கசிந்தது... ஹாஷிமினால் ஆறுதல் கூற முடியவில்லை... அவன் மௌனித்திருக்க.... 

நாமிஸ் கீழே கிடந்த தூணை நிமிர்த்தி மேடைக்கு அடித்தளம் இட்டு.. கண்ணைத் துடைத்து.... துடைத்து வேலையை தொடர்ந்தான்.... 

வதாவதன்

Comments