மகத்துவம் மிக்க ரமழான் நோன்பு | தினகரன் வாரமஞ்சரி

மகத்துவம் மிக்க ரமழான் நோன்பு

இலங்கை உட்பட உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய இஸ்லாமியக் கடமையான ரமழான் மாத நோன்பு அடுத்துவரும் சில தினங்களில் ஆரம்பமாகின்றது. இது வருடத்திற்கு ஒரு தடவை நிறைவேற்றப்படும் ஒரு கடமையாகும்.  இற்றைக்கு 1440 வருடங்களுக்கு முன்னர் அதவாது ஹிஜ்ரி 02 ஆம் ஆண்டில் கடமையாக்கப்பட்டது தான் ரமழான் மாத நோன்பு. அல் குர்ஆன் அருளப்பட ஆரம்பமாகி 15 வருடங்களாகும்போது, அதாவது முஹம்மத் (ஸல்) அவர்கள்
மக்காவிலிருந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) புலம்பெயர்ந்து சென்ற இரண்டாம் வருடத்தில் தான் இது  கடமையாகப்பட்டது. அது வரைக்கும் நுஹ் (அலை) அவர்களது காலம் முதல் நடைமுறையிலிருந்த மாதத்திற்கு மூன்று நாட்கள் நோன்பு நோற்கும் வழக்கமே காணப்பட்டது.

இஸ்லாமிய வருடக் கணிப்பில் ஒன்பதாவது மாதமாக விளங்கும் ரமழான் மாதத்தை அல்லாஹ்த ஆலா  கண்ணியப்படுத்தி மகத்துவப்படுத்தியுள்ளான்.  அல்லாஹ்வின் நண்பரான இப்ராஹீம் (அலை) அவர்கள் நோன்பு நோற்ற சமயத்தில் தான் அவர்களுக்கு இறைதூது அருளப்பட்டது. அது ரமழான் மாதத்தின் முதல் இரவிலாகும். அதேபோன்று  மூஸா(அலை) அவர்களுக்கு ரமழான் பிறை 06 ஆம் நாளில் தௌராத் வேதம் அருளப்பட்டது. அதற்கு முன்னரான 40 நாட்கள் நோன்பு நோற்குமாறு அன்னாருக்கு அல்லாஹ் கட்டளை இட்டிருந்தான். அத்தோடு ஈஸா (அலை) அவர்களுக்கும்  ரமழான் மாதம் பிறை 13 ஆம் நாளில் இன்ஜில் வேதம் அருளப்பட்டது. அதற்கு முன்னரான 40 நாட்கள் அன்னாரும் நோன்பு நோற்கப் பணிக்கப்பட்டிருந்தார். தாவூத் (அலை) அவர்களுக்கும் ரமழான் மாதம் பிறை 24 இல் தான் சபூர் வேதம் அருளப்பட்டது. அல் குர்ஆனும் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்திலுள்ள ஒற்றைப்படையான ஒரு இரவில் முதல் வானத்திற்கு இறக்கியருளப்பட்டதோடு இறுதி இறைத்தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றபடி ஹிரா குகையில் தியானத்தில் இருந்த சமயமே அல் குர்ஆனும் அருளப்பட ஆரம்பமானது.

இந்த தகவல்களின் படி இறைவேதங்கள் ரமழான் மாதத்தில் அருளப்பட்டிருப்பதையும் இறைவேதங்கள் அருளப்பட முன்னர் இறைத்தூதர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் நோன்பு நோற்று பக்குவப்படுத்தப்பட்டு புடம் போடப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது. அல்லாஹ் மனிதனைப் புடம் போட்டு பக்குவப்படுத்துவதற்காக நோன்பைப் பயன்படுத்தியுள்ளான். 

அதேநேரம் ரமழான் மாத நோன்பு முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் மாத்திரம்  அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அன்னாருக்கு முற்பட்ட கால சமுதாயங்களுக்கும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டிருந்தது.  இதனை அல் குர்ஆன் 'நம்பிக்கையாளர்களே... உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர் ஆகலாம். (அல் குர்ஆன் 02 - 183)

அதனால் ரமழான் நோன்பையும் ரமழான் காலத்தையும் அல்லாஹ்வின் கட்டளைக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களது வழிகாட்டல்களுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இந்த ரமழான் மாதம் தொடர்பில் அல்லாஹுத் தஆலா, 'ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு  நேர்வழிகாட்டும் அல் குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கியருளப்பட்டது. அது (நன்மை தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கின்றது' (அல் குர்ஆன் 02-185) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.

அதாவது 'லவ்ஹுல் மஹ்பூல்' என்ற பாதுகாக்கப்பட்ட பதிவேட்டிருந்து முதல் வானத்திலிருக்கும் பைத்துல் இஸ்ஸாவுக்கு இம்மாதத்தின் இறுதிப்பத்தில் உள்ள ஒற்றைப்படையான ஒரு இரவில் தான் அல் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அதனால் அந்த இரவு எவ்வாறு சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும்  அவன் குறிப்பிட்டு வைக்கத் தவறவில்லை.

'கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் மேலானதாகும். அதில் மலக்குகளும் ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்' (அல் குர்ஆன் 97-3,4).

இதன்படி அந்த ஒரு இரவே ஆயிரம் மாதங்களை விடவும் மேலானதாக விளங்கிக் கொண்டிருப்பதோடு முழு மாதமும் கண்ணியப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அதனால் 'உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்' (அல் குர்ஆன் 02--185) என்றும் அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான்.

அதன் காரணத்தினால் ரமழான் மாதம் நோன்பு நோற்பதும் இறைவணக்கங்களில் ஈடுபடுவதும் கட்டாயமானது. அது ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை விடவும் அதிக சிறப்புக்கும் மகத்துவத்துக்குமுரியதாகும். இம்மாதத்தில் ஆற்றப்படும் ஒவ்வொரு நற்காரியமும் ஒன்றுக்கு பத்து முதல் 700 மடங்கு நன்மைகள் அளிக்கக்கூடியனவாக உள்ளன.  இம்மாதத்தில் நோன்பு நோற்பது தொடர்பில் அல்லாஹ் குறிப்பிடுவதாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 'ஆதமின் மகனின் அனைத்து செயற்பாடுகளும் அவனுக்குரிய நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்'. அத்தோடு அல் குர்ஆனும் ரமழான் நோன்பும் மனிதனுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யக்கூடிய அந்தஸ்தையும் கூட பெற்றுள்ளன.

இவ்வாறு மகத்துவம் மிக்கதாக விளங்கும் அல் குர்ஆன் அருளப்பட்ட இம்மாதம் உலகம் இருக்கும் வரையும் சிறப்புக்குரியதாக விளங்குவதோடு, மனிதனின் இம்மை மறுமை வாழ்வின் சுபீட்சம் விமோசனத்தையே அல் குர்ஆன் இலக்காகவும் கொண்டிருக்கின்றது.

இம்மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையான போதிலும் புத்திசுவாதீனமற்றவர்கள், சிறுகுழந்தைகள், குணப்படுத்த முடியாத நாட்பட்ட நோயாளர்கள் ஆகிய தரப்பினருக்கு அதில் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாலூட்டும் தாய் மார், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள், பயணத்தில் இருப்பவர்கள் போன்றோர் இக்கடமையை இம்மாதத்தில் நிறைவேற்றாது கணக்கிட்டு வேறு நாட்களில நிறைவேற்றிக் கொள்ளவும் சலுகை அளிக்கப்பட்டுள்ளன.

மனிதனைப் புடம்போட்டு பக்குவப்படுத்துவதையே இலக்காகக் கொண்டுள்ள ரமழான் நோன்பு, மனிதன் வருடத்தில் பதினொரு மாதங்கள் கடைபிடிக்கின்ற  பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியதாகும். குறிப்பாக நோன்பு நோற்பதற்காக அதிகாலையில் பஜ்ர் தொழுகைக்கு முன்னர் எழுந்து ஸஹர் செய்ய  வேண்டும். அதன் பின்னர் மாலை மஃரிப் அதான் கூறப்படும் வரையும் உணவையும் பானங்களையும் உடல், உள இச்சைககளையும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு பொய் பேசுதல், கோள் சொல்லுதல், பொறாமை, பெருமை, ஆணவம், அகங்காரம் கொள்ளுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட தீய பழக்கவழக்கங்களையும் தவிர்த்துக் கொள்ளவும் தவறக்கூடாது. ஏனைய காலங்களைப் போலல்லாமல் இம்மாதத்தில் அதிகமதிகம் இறை வணக்கங்களில் ஈடுபட வேண்டும்.

இவை அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள். எம்மைப் படைத்த ஒருவனுக்காகவே இவ்வாறு செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் பயனாக இறையச்சம் அதிகரிக்கும்.  உடலும், உள்ளமும் பக்குவம் அடையும். அடுத்தவரின் பசி உணர்வைப் புரிந்து கொள்ளவும், பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மாத்திரமல்லாமல் கருணை, இரக்க மனப்பான்மை போன்ற பண்புகளும் மேலோங்கும். அத்தோடு ஆன்மீக மேம்பாட்டுக்கான சிறந்த பயிற்சிகளமாகவும் அமையும்  ரமழான்.  இவற்றின் ஊடாக மனிதனில் பாரிய மாற்றங்களும் சீர்திருத்தங்களும் ஏற்படும். ரமழான் மாதத்தில் ஏற்படும் சீர்திருத்தங்களை வருடம் முழுவதும் கடைபிடித்தொழுக வேண்டும். அது தனிபரினதும், குடும்பத்தினதும் சமூகத்தினதும் அமைதி, சுபீட்சம், மேம்பாட்டுக்கும் பக்க துணையாக அமையும்.  மனித வாழ்வு ஒழுங்கு முறையாகவும் சீராகவும் அமையவும் வழிவகுக்கும்.

ஆகவே எண்ணிறைந்த சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கும் ஏற்ப நோன்பு நோற்று உரிய ஒழுங்கில் இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொருவரதும் பொறுப்பும் கடமையும் மாத்திரமல்லாமல் ஈருலக வாழ்வின் சுபீட்சத்திற்கான அடித்தளமுமாகும்.

மர்லின் மரிக்கார்

Comments