பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம்; காலதாமதமும் கலக்கமும் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம்; காலதாமதமும் கலக்கமும்

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் இன்னும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கப்படாமலே இருப்பது மலையக மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசின் நிதியொதுக்கீடு, இந்திய அரசின் பங்களிப்புடன் தொடர வேண்டிய இருமுனை வீடமைப்புத் திட்டம் புதிய ஆட்சியின் கீழ் இன்னும் செயல்வடிவம் பெறாதுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்ததான வெளிப்படைத்தன்மை என்னவென்று புரியவில்லை.  

மொத்தமாக 9000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் கட்டிமுடிக்கப்பட்டவை இந்திய அரசு வழங்கிய நிதியிலேதான் நடந்திருக்கின்றன என்று அப்போது இ.தொ.கா. குற்றஞ்சாட்டியது.  

முன்னைய ஆட்சியின்போது பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் தாமதமாவதற்கு இங்கு வாழும் மக்களுக்கு காணி  உரிமை இல்லாததே காரணமென தமிழ் முற்போக்குக் கூட்டணி கூறியிருந்தது. 100 நாள் வேலைத் திட்டத்தின்போது சில குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. இவ்விடயத்தில் அமரர்  வேலாயுதத்தின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. எனினும் இது சட்டபூர்வமான உறுதிப்பத்திரம் தானா என்ற குழப்பமும் எழுந்தது. இதனை அமரர் வேலாயுதமும் ஏற்றுக் கொண்டிருந்தார்.  

காலக்கிரமத்தில் காணி உறுதியில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுமென அவர் உறுதி வழங்கியிருந்தார். அவரின் மரணத்தின் பின் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட த.மு. கூட்டணியால் முழுமையாக எதனையுமே செய்ய முடியவில்லை. ஆனால் காணி உரிமைக் கொள்கையை விடுத்து வீட்டுரிமை விவகாரத்தை அக்கட்சி கையாண்டது. இதுவும் மந்தகதியிலேயே நிகழ்ந்தது.  

இலங்கை அரசின் நிதியொதுக்கீட்டின் கீழ் இடம்பெறும் வீடமைப்புத் திட்டத்தில் மட்டுமன்றி இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுவந்த வீடமைப்புத் திட்டத்திலும் ஊழல், மோசடி, முறைகேடுகள் இருப்பதாகக்கூறி அமரர்  ஆறுமுகன் தொண்டமான் ஊழல், மோசடி விசாரணை ஆணைக் குழுவையும் அணுகினார். 
ஆனால் இதைப்பற்றி த.மு. கூட்டணி கவனத்தில் கொள்ளவில்லை. எனிலும் வீடமைப்பில் காணப்படும் குறைபாடுகளை ஆதாரங்களுடன் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. இதனாலேயே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமலே அந்த ஆட்சிக் காலமும் கரைந்துபோனது. 

இ.தொ.கா. இந்திய அரசின் அணுசரனையுடன் இடம்பெறும் வீடமைப்புத் திட்டத்திலும் குறைபாடுகள் இருப்பதாக சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் மறுத்து அறிக்கை விட்டது. இதனால் இ.தொ.காவின் நிலை தர்மசங்கடமானது. சுதாரித்துக் கொண்ட அக்கட்சி இந்திய அரசின் நிதியுதவியிலான வீடமைப்புத் திட்டத்தில் குறையேதும் இல்லை என்று கூறவேண்டி நேர்ந்தது.  

இதனால் த.மு. கூட்டணியே அதிகம் குதூகலம் அடைந்தது. ஏனெனில் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பழனி திகாம்பரமே இரண்டு வீடமைப்புத் திட்டங்களையும் கையாண்டார்.  இதனால் கட்டப்பட்டு கொண்டிருப்பது யாருடைய நிதியொதுக்கீட்டிலான வீடுகள் என்பது குளறுபடியாகவே காணப்பட்டது. உண்மையில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன போன்ற விபரங்களின் நம்பகத் தன்மை பற்றி சந்தேகங்கள் கிளம்பின. 
இந்திய வீடமைப்புத் திட்டம் 2012களிலேயே முதன் முதலாக இலங்கையில் ஆரம்பமானது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்காக இந்திய அரசாங்கம் 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்தது. ஆரம்பத்தில் இப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு 6000 வீடுகள் போக எஞ்சியவை தமிழ் மக்களுக்கு வழங்குவது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. 

இந்நிலையிலேயே இதில் மலையகத்துக்கும் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சிவில் அமைப்புகள் இதில் தீவிரம் காட்டின. இதனையடுத்து இ.தொ.கா. செயலில் இறங்கியது. அமரர் ஆறுமுன் தொண்டமான் தலைமையிலான குழு இந்தியா சென்று அப்போதைய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் பின்னரே இந்திய அரசாங்கம் வடகிழக்கு மக்களுக்கு வழங்க முன்வந்த 50,000 வீடுகளில் 4000 வீடுகளை மலையக மக்களுக்கு ஒதுக்க இணங்கியது. இந்த வீடுகளை நிர்மாணிப்பதில் சில நிபந்தனைகள் இருந்தன. இதன் முக்கியமான அம்சம் பயனாளிகளே வீடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதற்கான நிதியை இந்திய அரசு பயனாளிகளிடமே வழங்கும். பயனாளிகள் தமக்கான காணிகளில் வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் இங்குதான் சிக்கலே இருந்தது. தோட்ட மக்கள் வீடுகளைக் கட்டிக்கொள்ள காணியுரிமை கொண்டிராதவர்களாகவே இருந்தனர். இ.தொ.காவின் அழுத்தமும் எத்தனமும் இவ்விடயத்தில் போதுமானதாக அமையவில்லை என்பதே இன்றும் கூறப்படும் குறைபாடாகும்.

கிடைத்த வாய்ப்பை இ.தொ.கா. கோட்டை விட்டது. 2012களிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டிய இந்திய வீடமைப்புத் திட்டம் 2015 வரை பின்தள்ளப்படலானது. நல்லாட்சி அரசாங்கம் வீடமைப்புக்கென காணி ஒதுக்கித்தர நடவடிக்கை எடுத்தது. இலங்கை அரசாங்கம் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்த 300 மில்லியன் ரூபா நிதியுடன் தனித்தனி வீடுகள் அமைப்பதற்கான திட்டம் ஆரம்பமானது. இதனுடன் 2016இல் இந்திய அரசு வழங்கிய 4000 வீடுகளை அமைப்பதற்கான திட்டமும் முன்னெடுக்கப்படலானது.

எனினும் எதிர்பார்த்த இலக்குகள் எதனையும் இத்திட்டங்கள் எட்டியிருக்கவில்லை. தவிர இந்திய அரசு வீடொன்றுக்கு தலா 950000 ரூபா வரையிலேயே ஒதுக்கியிருந்தது. இத்தொகை கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே. எனவே நிலத்தை தயார்செய்ய பகீரதப் பிரயத்தனங்களின் பின் ரூபா 30000 வழங்க தோட்டக் கம்பனிகள் இணங்கின.

எனினும் முழுமையாக வீடொன்றை கட்டிமுடிக்க இந்தப் பணம் போதாது என்பதால் தமது அமைச்சுக்கூடாக 1,20000 ரூபாவை வழங்குவதாக பழனி திகாம்பரம் அப்போது கூறியிருந்தார். இதன்படி ஒரு வீட்டின் பெறுமதி பதினொரு இலட்சமென்று நிறுவப்பட்டது. எப்படி இருந்தபோதும் பயனாளி ஒருவர் நிலம், வீடு என்பவற்றினை இலவசமாகவே பெறக்கூடியவர் ஆகிறார் என்பதுதான் தனிச்சிறப்பு.

மலையக வீடமைப்புத்திட்டம் மகத்தான ஒரு மாறுதலுக்கான ஆரம்பம். குறைபாடுகள் இருக்கலாம். இருப்பினும் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் சமூக மாற்றத்துக்கான ஒரு நகர்வாகவே அவதானிகள் கருதுகிறார்கள். இதுதான் யதார்த்தம். குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். பலவீனங்கள் சரிசெய்யப்பட வேண்டும். கட்டப்பட்ட, கட்டப்படப்போகும் வீடுகள் அனைத்துக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானே முழு பொறுப்பினையும் ஏற்கவேண்டிய நிலைமையே காணப்படுகிறது.

இதனால் குறைகூறும் அரசியல் கலாசாரம் கைவிடப்பட வேண்டும். ஏனெனில் சகல மலையகத் தலைமைகளுக்கும் இம்மக்களின் வாழ்வியல் மாற்றத்துக்கான வழிகளை ஏற்படுத்த வேண்டிய தார்மீக கடப்பாடு உள்ளது. இப்போது ஜீவன் தொண்டமான் பொறுப்புக்கூறலை ஏற்கவேண்டிய காலம். அவரின் ஆளுமையை வெளிக்காட்ட அரியவாய்ப்பு. இதனை அவர் கோட்டை விட்டுவிடக்கூடாது. இதுவே மக்களின் எதிா்பார்ப்பு.

பன். பாலா  

Comments