கிழக்கு முனைய விவகாரம் தணிவதற்கிடையில் வடக்கில் உருவெடுத்த புதிய பரபரப்பு! | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கு முனைய விவகாரம் தணிவதற்கிடையில் வடக்கில் உருவெடுத்த புதிய பரபரப்பு!

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக ஆசியா கண்டத்தில் பலம் பொருந்திய நாடான சீனா ஒரு புறமும், தெற்காசியப் பிராந்தியத்தின் மிகவும் வல்லமை பொருந்திய அயல் நாடான இந்தியா மறுபக்கத்திலும் ஒன்றுடன் ஒருவர் போட்டி போட்டுக் எமது நாட்டுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. பொருளாதார உதவிகள், அபிவிருத்திக் கடன்கள் எனப் பல வகையான சலுகைகள் அந்நாடுகளால் இலங்கைக்கு வழங்கப்படும். அதேநேரம், பாரிய அபிவிருத்தி ஒப்பந்தங்களை இரு நாடுகளில் யாருக்கு வழங்குவது என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவ்வப்போது அசௌகரியங்களுக்கும் உள்ளாகின்றது.

இலங்கை அரசாங்கம் கொழும்புத் துறைமுகத்தின் ஒரு முனையத்தை சீனாவுக்கு ஏற்கனவே வழங்கியிருந்த நிலையில், கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு உள்நாட்டிலேயே கிளம்பிய எதிர்ப்புக்கள் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தன. எனவே கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கத்தினால் இயலாமல் போனது.

இதுபோன்ற வெளிநாட்டு இராஜதந்திர நகர்வுகளின் பின்னணியில் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை முன்னெடுக்கும் விடயத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பிக்கத்தக்க சக்திவலுவைப் பயன்படுத்தி அதாவது காற்றாலை மற்றும் சூரியப் படலங்களின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 2017ஆம் ஆண்டு கொள்கையளவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியதற்கு அமைய காற்றாலை மற்றும் சூரியப் படல் பூங்காங்களை (சோலார் பூங்காங்கள்) அமைப்பதற்கு பொருத்தமான இடங்களும் தெரிவு செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், வடபகுதியில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் சனத்தொகை குறைந்த மூன்று தீவுகளும் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டன.
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் காற்றாலைகள் மற்றும் சூரியப் படல்களை உள்ளடக்கிய கலப்பு முறையிலான மின் உற்பத்தித் திட்டங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 'மின்சாரம் வழங்கலில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு ஒத்துழைக்கும் கருத்திட்டம்' என்ற தொனிப்பொருளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையுடன் இலங்கை மின்சார சபையால் இதனை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக சர்வதேச விலைமுறைகள் கோரப்பட்டதுடன், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிரந்தப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய குறித்த ஒப்பந்தத்தை சீன நிறுவனமான M/s Sinosoar – Etechwin Joint Venture இற்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த ஜனவரி மாதம் 18ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்திருந்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. குறித்த திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் இந்தியாவுக்கு திருப்தி தரும் விடயமாக அமையவில்லையென்பது ஒரு சில நாட்களிலேயே புலப்பட்டு விட்டது. இந்தியாவின் அதிருப்தி ஒருபுறமிருக்க, குடாநாட்டில் சனநடமாட்டம் குறைந்த தீவுகளில் சீனா காலூன்றுவது அயல் நாடான இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் சீனாவின் காலூன்றலுக்கு எதிராகக் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

கலப்பு முறையிலான மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவிருக்கும் தீவுகள் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவிலேயே அமைந்துள்ளன. இலங்கையின் தென்பகுதிக் கடற்பரப்பில் தனது ஆதிக்கத்தை சீனா ஏற்கனவே கொண்டிருக்கும் நிலையில், வடக்கிலும் காலூன்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இருந்த போதும் இலங்கையிலிருந்து தனது நாட்டுக்கு எதுவித ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் இந்தியா தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதால் இவ்விடயத்திலும் தனது அக்கறையை வெளிப்படுத்தியது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து, குடாநாட்டின் மூன்று தீவுகளில் மின்உற்பத்தி ஆலைகள் அமைப்பது குறித்த தமது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் விடயம் என்பதால் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவில் இந்தியாவின் நன்கொடையாக குறித்த திட்டத்தை மேற்கொண்டு தருவதாக அவர் உறுதிமொழி வழங்கினார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு கடன் வழங்கவிருந்த நிலையில், இந்தியா இலவசமாக அதாவது நன்கொடையாக இத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தயார் என்ற புதுடில்லியின் செய்தி உயர் ஸ்தானிகரூடாக இலங்கைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் பச்சைக் கொடி காட்டி விட்டார்.

யாழ் குடாநாட்டில் உள்ள மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம், யாருடைய உதவியில் அதற்கான திட்டம் அமைந்தாலும் நன்மை என்னவோ மக்களுக்கே என அமைச்சர் தெரிவித்திருப்பதாக அறியக் கிடைக்கிறது.

ஏற்கனவே சீனாவுக்கு வழங்கத் தீர்மானித்த முடிவை மாற்றி இந்தியாவின் நன்கொடையுடன் இதனை முன்னெடுப்பதற்கான யோசனையை வெகுவிரைவில் அமைச்சரவைப் பத்திரமாக சமர்ப்பிப்பதாகவும் டலஸ் அழகப்பெரும, இந்திய உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்திருந்தார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க எடுக்கப்பட்ட கடந்த கால தீர்மானம், தொழிற்சங்க மற்றும் அரசியல் எதிர்ப்புக்களால் மாற்றப்பட்டது. கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இதனை எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் வழங்கப் போவதில்லையென திட்டவட்டமாக அரசு அறிவித்தமையால் இந்தியா கடும் அதிருப்தியடைந்திருந்தது.

புதுடில்லி நேரடியாகவும், இலங்கையிலுள்ள தமது உயர்ஸ்தானிகர் ஊடாகவும் தனது அதிருப்தியை பகிரங்கமாகவே தெரிவித்திருந்தது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் கசப்பான அனுபவத்தைக் கொடுத்திருந்தாலும், இதனை ஆற்றுவதற்கான மற்றுமொரு முயற்சியாக மின்உற்பத்தித் திட்டத்தைப் பார்க்க முடியும்.

இலங்கையின் அயல் நாடான இந்தியா பல்வேறு மட்டங்களில் இலங்கைக்கு உதவி செய்து வருவதை நாம் மறுக்க முடியாது. குறிப்பாக மின்வலு விடயத்தில் இதற்கு முன்னரும் இலங்கைக்கு உதவி செய்வதற்கு இந்தியா முனைப்புக் காட்டியிருந்தது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையமொன்றை அமைப்பதற்கான உதவிகளைச் செய்வதற்கு இந்தியா முன்வந்திருந்தது. எனினும், சூழல் பாதுகாப்பாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரால் எழுப்பப்பட்ட எதிர்ப்புக்களைத் தொடர்ந்து அத்திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டது.

இலங்கையின் முதலாவது அனல் மின்நிலையம் நுரைச்சோலையில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட நிலையிலேயே இரண்டாவது அனல் மின்நிலையத்தை அமைக்க இந்தியா முன்வந்திருந்து. இத்திட்டம் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே கைவிடப்பட்ட நிலையில், தற்பொழுது மின்சக்தித் துறையில் மற்றுமொரு திட்டத்தில் காலடியெடுத்து வைக்க இந்தியா முன்வந்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இலங்கையின் பூகோள அமைவிடம் இங்கு இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்குப் பின்னணிக் காரணியாக அமைந்து விடுகிறது. குறிப்பாக இந்து சமுத்திரத்தில் கப்பல் போக்குவரத்துப் பாதையில் பிரதான இடத்தில் இலங்கைத் தீவு அமைந்திருப்பதால் இங்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு நாடுகள் முயற்சிக்கின்றன.
இதனால் இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு அந்தந்த நாடுகள் முனைப்புக் காட்டி வருவதுடன், உள்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் இவ்விடயங்களை தமது அரசியலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு சிறந்த உதாரணமாக கிழக்கு முனைய விடயத்தைக் குறிப்பிட முடியும். தமக்கு குறித்த திட்டத்தை வழங்க விடாது வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்களின் பின்னணியில் சீனா இருப்பதாக இந்தியா நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருந்ததை நாம் இங்கு நினைவில் கொள்ள முடியும். அது மாத்திரமன்றி இந்த விடயத்தினால் ஆளும் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கிடையில் மாற்றுக் கருத்தும் நிலவி வருகிறது.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கக் கூடாது என்பதில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கட்சி போர்க் கொடி தூக்கியிருந்தது. பங்காளிக் கட்சிகள் சிலரையும் விமல் வீரவன்ச தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இது பிரதான ஆளும் கட்சியினர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலரை அதிருப்தியடையச் செய்திருப்பதாகவும், இதனாலேயே விமல் வீரவன்சவுக்கும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளருக்கும் இடையில் நேரடியான வாக்குவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த வரிசையில், குடாநாட்டின் மூன்று தீவுகளில் கலப்பு முறையிலான மின் உற்பத்தித் திட்டங்களை அமைக்கும் திட்டம் சீனாவுக்கே வழங்கப்படும் என ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துர ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். கடந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்திருந்ததுடன், திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் குதங்களை மீளப் பெறுவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் வெற்றியளித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

எரிசக்தி விடயத்தில் இரு நாட்டுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் பேச்சுக்கள் நடைபெற்றதை இந்திய உயர்ஸ்தானிகராலயமும் உறுதிப்படுத்தியிருந்தது.  கிழக்கு முனையம் போன்று யாழ் தீவகப் பகுதி மின்உற்பத்தி ஆலைகளுக்கும் ஆளும் தரப்பிலிருந்தே எதிர்ப்புக்கள் வருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இருந்த போதும், இந்திய எதிர்ப்பு என்பது இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயம் அல்ல. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்தியாவின் உதவியுடன் சுவசெரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த முயற்சித்த போது, தற்பொழுது ஆளும் கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் அப்போது எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு எதிர்ப்புக்களை வெளியிட்டனர். இந்த அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக இந்திய புலனாய்வாளர்கள் நாட்டுக்குள் நுழையப் போகின்றார்கள் எனப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், இந்தியா வழங்கிய அம்பியூலன்ஸ்களை அரசாங்க வைத்தியசாலைகளில் நிறுத்துவதற்கும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனாலேயே சுவசெரிய அம்பியூலன்ஸ்கள் இன்னமும் பொலிஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் நாடு முகங்கொடுத்த பல இக்கட்டான சூழ்நிலைகளில் இதன் சேவை அளப்பரியதாக இருந்தது.

பூகோள அரசியலில் இலங்கை தொடர்பில் அக்கறை காண்பிக்க பல நாடுகள் இருந்தாலும் இலங்கைக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் கரங்கொடுக்கும் நாடாக இந்தியா காணப்படுவதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணமாக தற்பொழுது ஏற்றப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசிகளைக் குறிப்பிட முடியும்.

கொவிட் சவாலை எதிர்கொள்ள இலங்கைக்கு உடனடியாக 5 இலட்சம் தடுப்பு மருந்துகளை இந்தியாவே முதன் முதலில் வழங்கியிருந்தது. இது மாத்திரமன்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கும் இந்தியா முன்வந்திருந்தது. இதுபோன்று பல மனிதாபிமான விடயங்களில் இந்தியா இலங்கைக்குக் கைகொடுத்து வரும் நிலையில் மின்சக்தித் துறையிலும் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. ஆனாலும் தீவுப் பகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மின்திட்டம் எந்த நாட்டுக்கு வழங்கப்படுமென்பதில் இன்னமும் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படவில்லை.

Comments