நெருக்கடியைத் தணிப்பதற்கு இலங்கை வகுக்கும் திட்டம்! | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடியைத் தணிப்பதற்கு இலங்கை வகுக்கும் திட்டம்!

இலங்கையில் சுமார் முப்பது வருட காலமாக நீடித்த கொடிய யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகும் நிலையில், இலங்கை தொடர்பான விவகாரம் சர்வதேச அரங்கில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வருடா வருடம் பேசப்பட்டு வருகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வு அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் தற்போது இலங்கையின் பக்கம் தமது பார்வையைத் திரும்பியுள்ளன.

இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறி கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மாறி மாறி பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு இணங்குவதாகக் கூறி கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் இறுதியாக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இந்தப் பிரேரணையிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது.

இவ்வாறான அரசியல் பின்னணியிலேயே மீண்டும் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றைக் கொண்டு வந்து அழுத்தம் கொடுப்பதற்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா தலைமையிலான நாடுகள் முயற்சிக்கின்றன.

மறுபக்கத்தில், மேற்படி பிரேரணை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கும் உலக நாடுகளை சமரசம் செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் முயற்சிக்கப்படுகிறது. அதேசமயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் போதியளவு அவகாசம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளுக்கு வழங்கப்பட்ட போதும், எந்தவொரு அரசும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ் அரசியல் தரப்புக்களினால் முன்வைக்கப்படுகின்றன.

ஜெனீவாவில் கொண்டு வரப்படவிருக்கும் புதிய பிரேரணை தொடர்பில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்த போதும், தற்பொழுது இணக்கப்பாடு எட்டப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடிதமொன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளன. தமிழர் அரசியலில் இந்த மாற்றம் புதுமையாகவே நோக்கப்படுகின்றது.

இதற்கிடையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பச்லெட் மிச்செல் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியாகியுள்ளது. மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பேரவை அதிருப்தி கொண்டிருப்பது இந்த அறிக்ைகயில் தெளிவாகத் தெரிகிறது. அது மாத்திரமன்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயணத் தடை மற்றும் பொருளாதார முடக்கம் போன்றவற்றைக் கொண்டு வருவது தொடர்பிலும் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த முடியும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு, இதற்கான பதிலையும் அரசு அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சிவில் நிர்வாக செயற்பாடுகளில் பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களும் மிச்செலின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அரங்கில் ஏற்படுகின்ற இதுபோன்ற முன்னேற்றங்கள் இலங்கையை ஒரு இறுக்கமான நிலைக்குக் கொண்டு செல்கின்றனவா என்ற கேள்வியையும் இந்த அறிக்ைக எழுப்புகின்றது. இவ்வாறான பின்னணியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்திருந்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (பரணகம ஆணைக்குழு) மற்றும் தருஸ்மான் அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ஏதும் இடம்பெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் பொறுப்பு இக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2020 மார்ச் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற 43வது அமர்வில் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வுக்கு அமைய இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லையென்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி பல தடவைகள் கூறியிருந்த நிலையில், சர்வதேசத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இவ்வாறானதொரு குழு நியமிக்கப்பட்டிருக்கலாமென அவதானிகள் கருதுகின்றனர்.

மறுபக்கத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கைக்குப் பதிலளிப்பது மாத்திரமன்றி, ஏனைய உறுப்பு நாடுகளை சமரசப்படுத்துவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது பற்றி பல்வேறு நாடுகளில் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தமக்கு சார்பான நாடுகளுடன் இணைந்து அரசாங்கத்துக்குக் கால அவகாசம் கோருவதற்கான மற்றுமொரு பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இது விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அரசாங்கம் தனது தரப்பிலிருந்து பிறிதொரு பிரேரணையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மிகவும் அமைதியான நாடு. பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கை குறித்து இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. மேலைத்தேய நாடுகளின் பாசாங்குத்தனத்தை இது வெளிக்காட்டுகிறது. எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டைக் கொண்டிருக்க நாம் விரும்புகின்றோம். ஜெனீவாவில் சில உறுதிமொழிகளை நாம் வழங்கியுள்ளோம்.
இவற்றை நிறைவேற்றுவோம். கடந்த முறை ஜெனீவாவில் வழங்கிய உறுதிமொழிக்கமைய கடந்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். காணமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் குறித்த அலுவலகம் ஆகியவற்றை நாம் தொடர்ந்து இயக்கி வருகின்றோம். சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன. இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது இலங்கை விவகாரத்தில் உலகில் உள்ள சில சக்திகளின் உத்தரவு காணப்படுகிறது'என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அது மாத்திரமன்றி, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கணிசமான வாக்கு வங்கிகளில் தங்கியிருக்கும் சில வெளிநாடுகளும் அவற்றின் அரசியல்வாதிகளுமே இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழும் குழுக்களால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எடுபடுகின்றன. வாக்கு வங்கி மாத்திரமன்றி அதிகப்படியான பணமும் இதற்காக செலவு செய்யப்படுகிறது என்பது அவருடைய குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள கொவிட்19 தொற்று நோய் சூழ்நிலையில் ஜெனீவாவில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாத கள யதார்த்தம் பற்றியும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எதுவாக இருந்தாலும் அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

மறுபக்கத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது எனக் கூறி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியிருந்தார். அவருடைய நிர்வாக காலப் பகுதியில் பேரவையின் உறுப்புரிமையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டிருந்தது. எனினும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அந்நாட்டின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன் என ஜோ பைடன் தனது தேர்தல் பரப்புரைகளின் போது கூறியிருந்தார்.

அது மாத்திரமன்றி ஐ.நாவுக்கான தூதுவராகச் செயற்பட்ட சமந்தா பவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிக்கும் அவர் நியமித்துள்ளார்.
இது போன்ற முன்னேற்றங்களால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இம்முறை உறுப்புரிமையைக் கொண்டிருக்கா விட்டாலும் வெளியிலிருந்து தன்னால் முடிந்தளவு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு முயற்சிக்கலாம்.

அமெரிக்காவின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் இலங்கை விடயத்தில் அதிக அக்கறை கொண்டுள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் காய்நகர்த்தல்கள் எவ்வாறு இருக்கப் போகின்றன என்பதையும் நோக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் போட்டி நிலவும் சூழ்நிலையில் மனித உரிமைகள் பேரவையில் அவை எவ்வாறான முடிவுகளை எடுக்கப் போகின்றன என்பது எதிர்வரும் சில நாட்களிலில் தெரிய வரும். இருந்த போதும் இலங்கையைப் பகைத்துக் கொள்ளும் முடிவுகளுக்கு அவர்கள் செல்வார்களா என்பதும் சந்தேகமே.

இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்ட நாடாகவும், இறுதி யுத்ததத்தின் போது அரசாங்கத்துக்கு உதவிய நட்பு நாடாகவும் பாகிஸ்தான் காணப்படுகிறது. இவ்வாறானதொரு நாட்டின் ஜனாதிபதி நெருக்கடி சூழலில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுவதும் சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதேநேரம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அவ்வப்போது மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுப்பதானது உண்மையிலேயே அவர்கள் தமிழர்களின் நலன்களின் அக்கறை கொண்டுள்ளார்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஏனெனில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மெத்தனப் போக்கை அவர்கள் கடைப்பிடித்தது மாத்திரமன்றி, தமக்கு வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற உரிய அழுத்தங்களைக் கொடுக்கத் தவறியிருந்தனர். இவ்வாறான நிலையில் தமக்கு வேண்டாதவர்களாகக் கருதப்படக் கூடியவர்கள் ஆட்சிக்கு வரும் போது மாத்திரம் கயிற்றை இறுக்குவது அவர்களின் நடுநிலைத் தன்மையை சற்றே கேள்விக்கு உள்ளாக்குவதாகவே அமைகிறது. எதுவாக இருந்தாலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் உள்நாட்டில் சரியான நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் சர்வதேசத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பதே தமிழர் அரசியல் தரப்பின் கருத்தாக இருக்கின்றது. 

Comments