மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து பொசன் நோன்மதி கொண்டாட்டம் | தினகரன் வாரமஞ்சரி

மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து பொசன் நோன்மதி கொண்டாட்டம்

பௌத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தையே பொசன் தினம் குறிக்கிறது. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பொசன் பண்டிகை ஆகும். மகிந்த தேரர் முதன் முதலில் இலங்கைத் தீவில் காலடி பதித்து பௌத்தமத சிந்தனையை சிறப்பாக அறிமுகப்படுத்தினார். இந்தத் தினத்தை நினைவு கூர்ந்து பொசன் நோன்மதி தினம் ஒரு தேசிய விழாவாக வருடாந்தம் இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் பௌத்த மக்களால் கொண்டாடப்படுகிறது.

மகிந்த தேரர் சுமார் 45 வருடங்கள் இலங்கையில் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் பௌத்த மதம் நாட்டில் வேரூன்றத் தொடங்கியது. இம்மாதம் 1ம் திகதி தொடக்கம் 8ம்திகதி வரையான காலப் பகுதி பொசன் நோன்மதி வாரக் காலப் பகுதியாகும்.

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித பகுதிகளில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இம்மாதம் 4ம் திகதியிலிருந்து  6ம் திகதி வரை இந்த வழிபாடுகளும் மதஅனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

இம்மாதம் 4ம் திகதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை  வழிபாட்டு நிகழ்வுகள் மிகிந்தலையில் இடம்பெற்றன. சம்புத்த பூஜை, அனுபுது மிகிந்துமா ஹிமி பூஜை, ஆலோகபூஜை மற்றும் அனைத்து இரா பிரித் பாராயணம் உட்பட பல மத நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் புத்தசாசனஅமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்டார். அதே போன்று லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆலோக பூஜை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷதலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  வெசாக் தேசிய வைபவம் போன்று பொசன் பண்டிகையும் அதே தொனிப்பொருளையே கொண்டுள்ளது.

“ஆரோக்கிய பரமாலாபா–சந்துட்டிபரமங் தனங்: இதன் பொருள் “ஆரோக்கியமே சிறந்த சொத்து- திருப்தி எனும் சந்தோஷமே நீடித்த தனம்” 
இது தம்மபதத்தில் பரமம் சுகம் பிரிவில் 204ம் வாசகமாக அமைந்துள்ளது.

தம்மபதம்:

தம்மபதம் என்பது பௌத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும். கௌதம புத்தர் அருளிய அறிவுரைகள் முதலானவை பௌத்தத்தின் திரிபிடகங்கள் என்றுஅழைக்கப்படுகின்றன. அவை  சுத்த பிடகம்,விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில் குத்தக நிகாயம் என்ற பகுதியில் தம்மபதம் என்ற இந்நூல் அமைந்துள்ளது.

பாளி மொழியில் அமைந்த தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அமைகின்றது.

இதனால்,பௌத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது. தம்மபதம் என்பது அறவழி,அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப் பெறுகின்றது. முதலாம் பௌத்த சங்க மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது எனப் புத்தகோசரால் கூறப்படுகின்றது.

இம்முறை பொசன் தினத்தை வெசாக் போன்று வீட்டில் இருந்த வண்ணமே அர்த்தபூர்வமாக அனுஷ்டிக்கும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மலர்  கொண்டு வழிபடும் ஆமிஸ பூஜை, பிரதிபத்திபூஜை, தியானம், தானம் உட்பட வழிபாடுகளையும் வீட்டில் இருந்த வண்ணமே மேற்கொள்தற்கு ஏதுவாக அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளும் நேரடி அஞ்சல் செய்தன. அதனால் பௌத்த மக்களுக்கு இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பின்பற்றியே பொசன் நோன்மதியைஅனுஷ்டிக்க கூடியதாக இருந்தது.

வரலாற்றுப் பதிவுகளில் சில புத்த பகவானின் காலம்:

பொ.மு 563 முதல் 483 வரைவாழ்ந்த புத்தரின் காலத்தில் பதினாறு மகாஜனபதங்கள் இருந்தன. சித்தார்த்த கௌதமரே பௌத்தத்தைத் தோற்றுவித்தவர்.

இவர் இன்றைய நேபாளத்திலுள்ள கோசல அரசின்  சாக்கியக் (பாலி: சாக்க) குடியரசில் தோன்றினார். மிகப் பழைய  நூல்களில் புத்தரின் வாழ்க்கை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனினும் பொ.மு 200ஆம் ஆண்டுக்குப் பிந்திய நூல்களில் பல்வேறு மீமாந்தச் சித்தரிப்புகளுடன் புத்தரின் வாழ்க்கை பற்றிய தொன்மங்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

புத்தர் தன் வாழ்வின் நாற்பத்தைந்து ஆண்டுகளை மத்திய இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியிலேயே கழித்திருக்கிறார். பல்வேறு குலத்தைச் சேர்ந்தோர் அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சீடர்கள் ஆனார்கள்.  தன் போதனைகளை உள்ளூர் மொழிகளில் அல்லது வட்டார வழக்குகளிலேயே கற்பிக்க வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார்.

சிராவஸ்தி, ராஜகிரகம் மற்றும் வைசாலி நகர்களின் அருகே போதனைகளைத் தொடர்ந்த புத்தர்  80 வயதில் மரிக்கும் போது ஆயிரக்கணக்கான பின்பற்றுநர்கள் அவருக்கு  இருந்தார்கள். புத்தரின் மறைவை அடுத்த 400 ஆண்டுகளில் பல்வேறு உட்பிரிவுகள் பௌத்தத்தில் தோன்றலாயின. அவற்றுள் நிகாய பௌத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று தேராவத எனும் நிகாய பௌத்தம் மாத்திரமே எஞ்சியுள்ளது.

அடுத்து வந்த காலங்களில் மகாயான மற்றும் வஜ்ரயான பிரிவுகள் உருவாகின. புத்தரைப் பின்பற்றுபவர்கள் ஆரம்பத்தில் தம்மை சாக்கியன், சாக்கிய பிக்கு என்ற பெயர்களில் அழைத்துக் கொண்டனர். பிற்காலத்தில் பௌத்தர் என்ற பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர்.

பௌத்த சமயம் தோன்றிய வரலாறு:

அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர்  தவத்தினைஆற்றி ஞானம் பெற்று புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர் மக்களுக்கு அறிவுறுத்திய அறிவுரைகள் பௌத்த நெறியாயிற்று. அந்நெறியைப் பின்பற்றியோர் பௌத்தர் எனப்பட்டனர். அவர் தம் சமயம் பௌத்த சமயம் என வழங்கப்படலாயிற்று. பௌத்த சமயம் வடக்கே தோன்றி வளர்ந்ததாயினும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் பின்பற்றப்பட்டு சிறப்புப்  பெற்றது. இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியிலும் பரவிய பெருமையை உடையது அது.

அசோகரின் பங்களிப்பு:

பௌத்த சமயம் பல்வேறு இடங்களில் வேரூன்ற முக்கிய  காரணமாக அமைந்தவர் அசோக மன்னர். வடக்கே தோன்றிய பௌத்த சமயம் இந்தியாவின் பல இடங்களிலும் பரவத் தொடங்கியது. தென்னிந்தியப் பகுதிகளிலும் அது வேரூன்றத் துவங்கியது. அது மௌரிய மன்னர்களுள் சிறந்தவராகியஅசோகச் சக்கரவர்த்தி காலத்தில் நிகழ்ந்தது என வரலாறு குறிப்பிடுகிறது.  கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இந்தியா முழுமையும் ஒருகுடையின் கீழ் வைத்துஆண்ட சிறப்புக்குரியவர் அசோகர். புத்தரின் அறநெறிகளில் மனத்தைப் பறிகொடுத்த அசோகர் பௌத்த சமயத்தைத் தழுவிய மாமன்னராவர். 'அவர் பௌத்த சமயத்தைச் சார்ந்ததோடு இந்தியாவிலும் அதற்கு அப்பாற்பட்ட இலங்கை போன்ற நாடுகளிலும் பௌத்த சமயத்தைப் பரவச் செய்த பெருமைக்கும் உரியவர்.

அசோகரின் கல்வெட்டுச் சாசனமும் இச்செய்தியை உறுதி செய்கிறது. தமிழகத்தில் பௌத்த சமயம் கால்கொள்ளவும் அசோக மன்னரின் முன்னெடுப்புகளே காரணம் என்பதை அவர்தம் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.

இம்முறை பொசன் தின நிகழ்ச்சிகள்:

5ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷமற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷஆகியோர் கலந்து கொண்டனர். அன்றைய தினம் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்வொன்றும் அந்த வளாகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷதலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளுக்கு இணைவாக ஜயஸ்ரீ மாபோதி மற்றும் ருவவெலிசாய வளாகங்களில் காலை பாராபிஷேக பூஜை, மகாசேயவழிபாடுகள், சங்கைக்குரிய அபயதிஸ்ஸ தேரரின் தர்மபோதனை, சுகாதாரத்துறை-முப்படையினர்-பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையணி, நாட்டு மக்கள் மற்றும் உலக மக்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட கோரி அதிர்ஷ்டானஆசீர்வாத பூஜையும் இடம்பெற்றது.

ஜெ.யோகராஜ் - சிரேஷ்ட ஊடகவியலாளர்
[email protected]

Comments