அல்லாஹ்விடம் நோன்பின் பரிந்துரை | தினகரன் வாரமஞ்சரி

அல்லாஹ்விடம் நோன்பின் பரிந்துரை

மனிதனை இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்ப புடம் போட்டு பக்குவப்படுத்தும் பண்பையும், சக்தியையும் நோன்பு தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அதேநேரம் மனிதனுக்கு உடல், உள ரீதியிலான பல்வேறு விதமான நன்மைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

அத்தோடு நின்றுவிடாது நோன்பு மனிதனுக்காக அல்லாஹ்விடம் சிபார்சு செய்யக் கூடியதாகவும் விளங்குகின்றது. இது தொடர்பில் அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு முறை இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

“மறுமை நாளில் நோன்பு மனிதனுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும். இறைவா...! நான் இந்த மனிதனைப் பகல் வேளையில் உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் மற்ற இன்பங்களிலிருந்தும் தடுத்து வைத்திருந்தேன். இறைவா...! இந்த மனிதனுக்காக நான் செய்யும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! (என்று குறிப்படும். அப்போது) அல்லாஹ் அப்பரிந்துரையினை ஏற்றுக் கொள்வான்” எனக் குறிப்பிட்டார்கள். 

(ஆதாரம் - மிஸ்காத்)

இதேபோன்று அல்குர்ஆனும் மனிதனுக்காக மறுமையில் அல்லாஹ்விடம் சிபார்சு செய்யும். அதன் பரிந்துரையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்றும் மற்றொரு நபிமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த நபிமொழிகளின் படி அல்குர்ஆனும், நோன்பும் மறுமையில் மனிதனுக்காக பரிந்துரை செய்யக் கூடியதாக இருப்பது தெளிவாகின்றது.  இதனால் ரமழான் மாத நோன்பை அதற்கேயுரிய ஒழுங்கில் அல்லாஹ்வின் கட்டளைக்கும், அவனது தூதரின் வழிகாட்டலுக்கும் ஏற்ப நிறைவேற்றுவதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல், உள ரீதியாக நோன்பு பெற்றுத் தரும் பிரதிபலன்களை அடைந்து கொள்வதில் மாத்திரம் கவனம் செலுத்தாது மறுமையில் அதன் பரிந்துரைக்குரியவர்களாகவும் நாம் மாறவேண்டும். அது எமது இலக்காகவும் நோக்காகவும் இருக்க வேண்டும். அதேபோன்று அருள்மறையாம் அல்குர்ஆனையும் ஓதவும், படிக்கவும் அணுகவும் வேண்டும். அப்போது மறுமையில் அல்குர்ஆனினதும், நோன்பினதும் பரிந்துரைக்குரியவர்களாக எம்மால் மாற முடியும். இதற்கான திட்டமிடலுடன் செயற்பட முயற்சி செய்வோம்.

மர்லின் மரிக்கார்

Comments