உலகில் நிரந்தர நோயாக மாறுமா கொவிட் 19? | தினகரன் வாரமஞ்சரி

உலகில் நிரந்தர நோயாக மாறுமா கொவிட் 19?

இது இருப்பதியோராம் நூற்றாண்டு. இந்நூற்றாண்டின் முன்னரைப் பகுதியானது முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்து நவீன டிஜிட்டல் யுகமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வளர்ச்சியும் முன்னேற்றங்களும் மனிதனுக்கு அபரிமித நன்மைகளை அளித்திருக்கின்றன.

அதேநேரம் அவனுக்கு கெடுதல்ளையும் தீங்குகளையும் ஏற்படுத்தாமலும் இல்லை.

குறிப்பாக புவி வெப்பமாதல், வளி மண்டலம் மாசடைதல், உடலில் சேரும் நச்சு இரசாயனப் பதார்த்தங்களின் விளைவாக தோற்றம் பெற்றுள்ள பல்வேறு விதமான நோய்கள் என்பன நவீன அறிவியல் வளர்ச்சியின் விளைவுகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத்தோடு புதிய புதிய நோய்களின் தோற்றமும் இவ்வறிவியல் வளர்ச்சியின்வெ ளிப்பாடு என்பது தான் சூழலிலாளர்களின் கருத்தும் கூட..

நவீன அறிவியல் வளர்ச்சி பெரும்பாலும் திட்டமிடப்படாத ஒன்றாகவே உள்ளது. சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் கெடுதல்கள் ஏற்படாத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் இவ்வளர்ச்சி நடவடிக்கைகள் அமைந்திருக்குமாயின் அதன் விளைவுகள்  ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் மனித இருப்புக்கே சவாலாக அமைந்திருக்காது என்கின்றனர் சுற்றுச்சூழல் அறிஞர்கள்.

அந்த வகையில், 2019 டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் திடீரென ஒரு புது வகை நோய்க்குள்ளானவர்கள் பதிவாகத் தொடக்கினர். அந்நோய் ஆளுக்காள் பரவக்கூடிய உயிராபத்து மிக்க நோயாக  இருந்ததோடு குறுகிய காலப்பகுதியில் அது உலகம் முழுவதும் பரவியது. அதுவே கொவிட் 19 தொற்றாகும்.  இத்தொற்றின் மூலம் வௌவால் எனக் கூறப்படுகின்றது.

ஆனாலும் இத்தொற்றின் விளைவாக கடந்த 18 மாத காலப்பகுதியில் 17 கோடியே 24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துமுள்ளனர். அந்த வகையில் சுமார் 2 கோடி மக்கள் வாழும் இச்சிறிய நாட்டிலும் கூட 2020 மார்ச் முதல் கடந்த 15 மாத காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1500 க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இருந்தும் கூட இத்தொற்றின் தாக்கமும் பரவுதலும் குறைந்ததாக இல்லை. ஆளுக்காள் தொற்றிப் பரவக்கூடிய ஒரு வைரஸாக விளங்கும் இத்தொற்று, இற்றைவரையும் பல திரிபுகளையும் கண்டுவிட்டது.  அவற்றில் 2020 மே யில் தென்னாபிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.351  திரிபும்,  2020 செப்டம்பரில் பிரித்தானியாவில் பதிவாகத் தொடங்கிய பி.1.1.7 என்ற திரிபும், 2020 நவம்பரில் பிரேஸிலில் கண்டறியப்பட்ட திரிபும்  உலகிற்கு பெரும் அச்சுறுத்தல் மிக்கவையாக விளங்கின. ஆனால் இந்தியாவில் திரிபடைந்துள்ள பி.1.617 என்ற திரிபானது, ஏனைய திரிபுகளை விடவும் பயங்கரமானதாகக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இற்றை வரையும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இத்திரிபு தொற்று தடுப்ப்பூசிக்குக் கூட கட்டிப்படாமல்போகலாம்  என்கிறார் டொக்டர் சுவாமிநாதன்.

இந்த நிலையில் தற்போது உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட் 19 தொற்று திரிபுகளை விடவும் ஆபத்துமிக்க திரிபொன்று வியட்நாமில் உருவாகியுள்ளதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு மனித சமூகத்திற்கு பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கின்ற இத்தொற்று காரணமாக உலகளாவிய வறுமை தலைதூக்கக்கூடிய அச்சுறுத்தலை உலகம் எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான பின்புலத்தில் இத்தொற்றின் பரவுதல் வேகம், அதன் தாக்கம், உயிராபத்து அச்சுறுத்தல், சமூக கலாசார தாக்கங்கள் என்பன குறித்து, உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆரம்பம் முதல் மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் உலகை அச்சுறுத்துக் கொண்டிருக்கும் இத்தொற்று உலகில் நிரந்தர நோயாக மாறும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு மைய (C.D.P) ஆராய்ச்சிகள், 'கொவிட் 19 தொற்று உலகம் முழுவதும் பரவி விட்டது. அதனால் அதனை முழுமையாக அழிக்க முடியாது. மாறாக கட்டுப்பாட்டு நிலையில் தான் வைத்திருக்க முடியும். அதனால் இத்தொற்று அவ்வப்போது எங்காவது  தலைதூக்கும் ஒரு நோயாக மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும். அதன் காரணத்தினால் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு இந்நோயை எதிர்கொள்வதற்கு ஏற்ப எப்போதும் தயார் நிலையில் இருப்பது அவசியம். அதாவது அவ்வப்போது தடுப்பூசிகள் வழங்குவதோடு மருந்துகள், வைத்தியசாலைக் கட்டில்கள், ஒட்சிசன் என்பவற்றை எந்த வேளையிலும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்' என்றும் தெரிவித்திருக்கின்றன. 

அந்த அடிப்படையில் இத்தொற்றின் இற்றை வரையான நகர்வுகளை எடுத்து நோக்கும் போது இவ்வாறான முடிவுக்குத் தான் வரவேண்டியுள்ளது. ஏனெனில் மனிதனின் ஆரம்பம் முதல் இற்றை வரையும் பல்வேறு நோய்கள் காலத்திற்கு காலம் தோற்றம் பெற்று அவனது வாழ்வில் அங்கமாக இணைந்திருப்பதை அவதானிக்க முடியும். அந்த நோய்களும் தோற்றம் பெற்று கோரத்தாண்டவம் ஆடிய பின்பே இந்நிலையை அடைந்திருகின்றன. அவற்றில் காச நோய், வெண் குஷ்டம், ஸ்பைனிஷ் புளு, பிளேக், மலேரியா, கொலரா, டெங்கு, அம்மை, எபோலா போன்ற நோய்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.

அந்த வகையில் காச நோயை ( Tuberculosis) பார்த்தால் அது இற்றைக்கு 9000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஆபிரிக்க கண்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த  மக்களைப் பாதித்துள்ள  ஒரு நோய் என்பது ஆராய்ச்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் காசநோய் தொற்றுக்குள்ளாகி இருந்துள்ளமை  நிருபணமாகியுள்ளது. என்றாலும் இந்நோய் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். அத்தோடு இந்நோய்க்கு உள்ளானவர்கள் குடும்பத்திலிரு்நதும் சமூகத்திலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். அந்தளவுககு அச்சமிக்க நோயாகப் பார்க்கப்பட்டது காசம். ஆயினும் 1882 இல் ரொபட் நொக்‌ஷ் என்ற விஞ்ஞானி, இது ஒரு பக்றீரியா நோய் என்பதைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. என்றாலும் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையும் இந்நோய்க்கு உள்ளானவர்கள் குடும்பத்தில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுத்தான் சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஆனால் இன்று வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து கொள்ளக்கூடிய நோயாக விளங்குகின்ற காசம், அவ்வப்போது எங்காவது தலைதூக்கக்கூடிய நோயாகவே அது உள்ளது. 

இதேபோன்று வெண்குஷ்டமும் (Leprosy) மிகவும் பழமையான ஒரு நோயாகும். இதனைக் கடவுளின் தண்டனை என்று கூட குறிப்பிட்டனர். இந்நோய்க்கு உள்ளானவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்நாட்டில் கூட இந்நோய்க்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தவென மட்டக்களப்பு மாந்தீவிலும், ஹெந்தளையிலும் தனியான வைத்தியசாவைகள் அமைக்கப்பட்டன. இந்நோயும் மனித வரலாற்றில் பெருந்தொகையானோரின் உயிரைக் காவு கொண்டுள்ளது. இது ஒரு வகை பக்றீரியா நோய் என்பதை நோர்வே நாட்டைச் சேர்ந்த ஜி.எச். ஏ ஹான்ஸன் என்பவர் தான்  1873 கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்த்து. அதனால் இந்நோய்க்கு உள்ளாகின்றவர்களைத் தனிமைப்படுத்தி ஒதுக்கி வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வீட்டில் இருந்த படி சிகிச்சை பெற்று முழுமையான குணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்நோயும் இன்னும் ஆங்காங்கே தலை தூக்கக்கூடியதாகவே உள்ளது.

மேலும் ஸ்பைனிஷ் புளு என்ற நோயை எடுத்துப் பார்த்தால், அந்நோயும் 1918 - 20 காலப்பகுதியில் 500 மில்லியன் பேரைப் பாதித்துள்ளதோடு 20 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் உயிரையும் காவு கொண்டுள்ளது. அக்காலப்பகுதியில் இத்தொற்று 04 அலைகளாகத் தலைதூக்கியுள்ளதோடு தற்போதைய கொவிட் 19 போன்ற தனிமைப்படுத்தல் வழிகாட்டல்களும் கையாளப்பட்டன. அந்நோயும் தற்போது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. அத்தோடு நுளம்புகளால் காவிப்பரப்படும் மலேரியா நோயைப் பார்த்தால், அந்நோயும் பெருந்தொகையான மனிதர்களைக் காவு கொண்ட  கறைபடிந்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இந்நாட்டில் மாத்திரம் 1934 -1935 காலப்பகுதியில் மலேரியாவினால் 85 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அந்நோய்க்கும் மருந்துகள் புழக்கத்துக்கு வந்து விட்டன. தற்போது அதற்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவும் கூட ஆங்காங்கே தலை தூக்ககூடிய ஒன்றாகவே உள்ளன.

இவ்வாறு தான் மனித வரலாற்றில் தோற்றம் பெற்ற ஒவ்வொரு நோயும் கோரத் தாண்டவமாடியபடி அவ்வப்போது தலைதூக்கும் நிலையை அடைந்து மனித வாழ்வில்  அங்கமாக மாறியுள்ளது.

ஆகவே இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எடுத்து நோக்கும் போது, கொவிட் 19 தொற்றும் ஏற்கனவே மனித வாழ்வில் இணைந்துள்ள நோய்களைப் போன்ற நிலையை அடையும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும். இதன்படி இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் மேலுமொரு நோய் மனித வாழ்வில் இணைவது பெரும் கவயலைக்குரிய விடயமாகும். இருந்த போதிலும் நோய் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கையையும் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்.

மர்லின் மரிக்கார்

Comments