சபையில் சலசலப்பு ஏற்படுத்திய ஏப்ரல்-21! | தினகரன் வாரமஞ்சரி

சபையில் சலசலப்பு ஏற்படுத்திய ஏப்ரல்-21!

பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் கூடிய விசேட குழு இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறிய முடிகிறது.

ஏப்ரல் 21ஆம் திகதி சம்பவம் என்பது என்ன? ஆம், இந்நாட்டுக்கான சட்டங்களை இயற்றும் அதியுயர் பீடமான பாராளுமன்றத்துக்கு மக்களின் பிரதிநிதிகளாகச் செல்பவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைலப்பே அதுவாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் இரண்டாவது வருட நிறைவு நாளன்று ஆளும் தரப்பு உறுப்பினர்களும், எதிர்த்தரப்பு உறுப்பினர்களும் இவ்வாறான தள்ளுமுள்ளு நிலைக்குச் சென்றிருந்தனர்.

இவ்விவகாரம் குறித்து சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், இதனை விசாரிப்பதற்கு விசேட குழுவொன்றை அவர் நியமித்திருந்தார். இக்குழுவினர் கடந்த புதன்கிழமை கூடியிருந்தனர். சபா மண்டபம் மற்றும் அதற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கமராக்களின் உதவியுடன் அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவங்கள் அக்குழுவினால் பார்வையிடப்பட்டதுடன், சம்பவம் குறித்த இடைக்கால அறிக்கையொன்றை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கவும் அவர்கள் தீர்மானித்தனர். 

சபா மண்டபத்தில் சச்சரவுகள், பாராளுமன்றத்துக்கு ஒவ்வாத மொழிகளைப் பயன்படுத்துவது, ஒருவரை ஒருவர் வசைபாடுவது போன்றன பாராளுமன்றத்தில் அசாதாரண காட்சிகள் அல்ல. அண்மைக் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், இவை தொடர்ந்தும் இடம்பெறுவது துரதிர்ஷ்டமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாடுகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்க முயற்சிக்காது முஷ்டியை முறுக்கிக் கொண்டு நிற்பது ஜனநாயக நாட்டுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமையாது என அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னர் நீண்ட காலமாக பாராளுமன்றத்தை அலங்கரித்த மக்கள் பிரதிநிதிகள் பலர் தமது வாதப் பிரதிவாதங்களை உரிய முறையில், பாராளுமன்றத்திற்குள் பயன்படுத்தக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக முன்வைத்தனர். இவ்வாறான வாதப்பிரதிவாதங்களைப் பார்வையிடுவதற்கு மக்கள் பெரும் ஆவலாக இருந்தனர்.

எனினும், தற்போதைய நிலைமை மாறுபட்டதாகவே காணப்படுகிறது. ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவது, ஒருவரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது போன்ற செயற்பாடுகளை அடிக்கடி காணக் கூடியதாகவுள்ளது. இது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியாது.

பாராளுமன்றத்தைப் பொறுத்த வரையில் பிரதிநிதித்துவத்துக்கு அப்பால், சட்டவாக்கம், நிதி முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகிய முக்கிய பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அனைத்து பணிகளும் பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் மாத்திரம் இடம்பெறுவதில்லை. சகல பணிகளையும் சபா மண்டபத்திலேயே முன்னெடுக்க முடியாது என்பதால் குழு முறைகள் காணப்படுகின்றன.

விசேட தேவைக்கான குழுக்கள், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் என பல்வேறு குழு முறைகள் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட நான்கு பணிகளையும் ஆற்றுவதற்கு இந்தக் குழுக்கள் கணிசமான பங்களிப்புச் செலுத்துகின்றன.

இருந்த போதும், சபா மண்டபத்தில் இடம்பெறுகின்ற ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களால் பாராளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு தவறான பிம்பம் ஒன்றே ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலரின் நடத்தைகளால் பாராளுமன்றம் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து மறுநாள் சபையில் கருத்துத் தெரிவித்த பல உறுப்பினர்கள், இவ்விடயத்தை வலியுறுத்தியிருந்தார்கள். சபா மண்டபத்துக்குள் நடைபெறும் விடயங்கள் ஒரு சில உறுப்பினர்களின் கையடக்கத் தொலைபேசிகளால் நேரடியாக வீடியோ செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்ற சம்பவங்கள் குறித்தும் அன்றைய தினம் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சபா மண்டபத்திலிருந்து அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

சபா மண்டபத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறான அரசியல் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.

'1980 களின் இறுதி வரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டி அரசியல் முகாம்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை வழங்கினர்.  எனவே, பாராளுமன்ற உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்த்தனர். அது பாராளுமன்ற மரபு.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் உள்ளவர்கள் ஹன்சார்ட்டை பற்றி உயர்ந்த கருத்தைக் கொண்டிருந்தனர். இன்று, நிலைமை முற்றிலும் மாறி விட்டது. இந்த சம்பவங்கள் சபையின் நற்பெயரை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மோசமாக பாதிக்கின்றன. இது மிகவும் தாமதமாகி விட முன்னர் திருத்தப்பட வேண்டும்' என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்தை ஆமோதிக்கும் வகையிலேயே பல ரும் குறிப்பிட்டிருந்தனர்.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாது காக்கும் வகையில் நடந்து கொள்வதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு தடவையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அதற்காக விசாரித்து அறிக்கையிடுவதற்கு குழுக்கள் அமைக்கப்படுகின்ற போதும், தொடர்ந்தும் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன.

மக்கள் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போதும் இது பற்றி கவனம் செலுத்துவது கட்டாயமாகும். தம்மைப் பிரதிநிதித்துவம் செய்பவர் எவ்வாறானவராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்களாக மக்கள் இருக்க வேண்டும். இதற்காக அவர்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் உறுப்பினர்கள் தமக்காக என்ன செய்கின்றனர் என்பதை வாக்காளர்களும் கண்காணிக்க வேண்டும்.

பாராளுமன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் தற்பொழுது அதிகரித்துள்ளன. மக்கள் தமது மனுக்களை ஒன்லைன் முறையின் மூலம் அனுப்பி வைக்க முடிவதுடன், பாராளுமன்றத்தில் இடம்பெறும் அமர்வுகள் மற்றும் குழு அமர்வுகள் ஊடகங்களின் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இவற்றின் ஊடாக தம்மைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை மக்களும் அறிய முடியும்.

பி.ஹர்ஷன்

Comments