ஆயிரம் ரூபா வேதனம் வழங்குவது சாத்தியமே! | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் ரூபா வேதனம் வழங்குவது சாத்தியமே!

“இங்கே பாருங்கள், ஆயிரம் ரூபா தினசரி வேதனம் வழங்குவது சாத்தியமில்லை என்று பெருந்தோட்டக்கம்பனிகள் சாதிக்கின்றன. நீதிமன்றமும் சென்றுள்ளன. ஆனால் கம்பனிகளால் ஆயிரம் ரூபா வேதம் வழங்க முடியும். அதை பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் அறியும்....” என்று எம்முடன் தன் உரையாடலை ஆரம்பித்தார், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர் சத்துர சமரசிங்க. ஒரு தொழிற்சங்கம் வலிமையுடன் நூறு வருடங்கள் தாக்குப்பிடித்து நீடித்து நிலைப்பது என்பது மிகவும் சிரமமானது. தொழிற்சங்கம் என்பது நிறுவன உரிமையாளர்களுடன் போராடி உரிமைகளைப் பெறும் ஒரு தரப்பு. எனவே தன் போராட்ட வாழ்வில் நிறைய பிரச்சினைகளையும் சதி வலைகளையும் முரண்பாடுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறான போராட்டங்களை எதிர்த்து நின்று நூறு ஆண்டுகளை எட்டியிருக்கிறது தோட்ட சேவையாளர் சங்கம். இது தொழிற்சங்க வரலாற்றில் ஒரு சாதனை என்பது ஒரு புறமிருக்க, அச் சங்கம் தொடர்ச்சியாக பின் பற்றி வந்திருக்கும் சீரிய வழிமுறைகளும் சிறந்த பண்புகளுமே அவ்வியக்கத்தைக் கட்டிக் காத்து வருந்திருக்க வேண்டும். இச் சங்கத்தின் இன்றைய தலைவர் சத்துர சமரசிங்கவுக்கு அதிகம் வயதில்லை. இளைஞர் போன்ற தோற்றமும் துடிப்பும் கொண்ட அவர் எமது கேள்விகளுக்கு எந்தக் குறிப்பும் இல்லாமல் மனக்குறிப்புடன் மட்டுமே எம்முடன் சரளமாக உரையாடினார். சங்கத்துக்கு அவர் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார் என்பதை அதில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பற்றி அவர் அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது தான். ஏனெனில் தோட்ட சேவையாளர்களுக்கான சங்கம் என்றவகையில் கம்பனிகளுடன் சேவையாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்த்களை அச்சங்கம் செய்திருக்கிறது. ஆனால் தொழிலாளர் உரிமைகள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் என்று வரும் போது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விடாமல் அப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் பண்பு இச்சங்கத்தின் விசேடமான அம்சம்.

“தோட்டத் தொழிலாளரின் சம்பளம் கொஞ்சமும் போதுமானதில்லை என்பதை பல முறை நாம் தெரிவித்து வந்துள்ளோம். ஆயிரம் ரூபா வேதனம் எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது வழங்கப்படவுள்ள ஆயிரம் ரூபா போதுமானதல்ல என்பதே எம் கருத்து. ஆனால் அதையும் வழங்காமல் இருக்கவே முதலாளிமார் சம்மேளனம் முயற்சிப்பதால் சொல்கிறேன். தோட்டக் கம்பனிகளால் ஆயிரம் ரூபா சம்பளத்தைத் தாரளமாக வழங்க முடியும் என்று. அது எப்படி என்று சொல்கிறேன்...”

“ஒரு கிலோ தேயிலைத் தயாரிக்க 475ரூபா செலவாகிறது என்கின்றன கம்பனிகள். அந்த ஒரு கிலோவை கொழும்பு ஏலத்தில் 553ரூபாவுக்கு விற்கின்றன என வைத்துக் கொள்வோம். அப்போது கிடைக்கும் இலாபம் 78ரூபா. 475ரூபா செலவு செய்து 78 ரூபா தான் இலாபமாகக் கிடைக்கிறது. இந்த சொற்ப இலாபத்தில் தோட்டங்களையும் கம்பனி செலவுகளையும் நிர்வகிப்பது எப்படி? இதில் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா வேதனமும் வழங்கினால் தோட்டங்களை மூடத்தான் வேண்டியிருக்கும். எனவே இந்த சம்பள உயர்வு சாத்தியமற்றது என்பதே கம்பனிகள் முன்வைக்கும் வாதம். ஆனால் ஏலத்தில் விற்பதோடு தேயிலையின் கதை முடிந்து விடுவதில்லை.

ஏலத்தில் போகும் தேயிலையை ஏற்றுமதி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு டொலர், பவுண்களில் விலைபேசி ஏற்றுமதி செய்கின்றன. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் விலை 820 முதல் ஆயிரம் ரூபாய்வரை உயரலாம். ஏற்றுமதி விலைக்கும் எங்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை என்று தோட்டக் கம்பனிகள் சொல்லிவிட முடியாது. ஏனெனில் தோட்டங்களை நிர்வகிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனியின் தேயிலையை ஏலத்தில் எடுக்கும் நிறுவனம், மிகப் பெரும்பாலும் அக் கம்பனியின் தாய் நிறுவனமாகவே இருக்கும். அத் தாய் நிறுவனம் நேரடியாக தேயிலையை ஏற்றுமதி செய்யலாம் அல்லது தன் கீழ் இயங்கும் வேறொரு கம்பனியின் பெயரில் ஏற்றுமதி செய்யலாம். எப்படிப் பார்த்தாலும் ஒரு கிலோ தேயிலையின் வழியாக ஏலத்தின் மூலமும் ஏற்றுமதியின் மூலமும் கிடைக்கும் மொத்த இலாபமும் அக்கம்பனிக்கே போய்ச் சேர்கிறது. ஏலத்தில் கிடைக்கும் 78 ரூபாவையும் ஏற்றுமதியின் போது கிடைக்கும் 267ரூபாவையும் சேர்த்தால் 345 ரூபா இலாபமாகக் கிட்டுகிறது. 475 ரூபாவை உற்பத்தி செலவாக செலவிட்டு 345 ரூபாவை இலாபமாகப் பெறுகின்றன இக் கம்பனிகள் என்பதே உண்மை. அதனால்தான் சொல்கிறேன் ஆயிரம் ரூபா சம்பளம் நிச்சயமாக வழங்கப்பட முடியும் என்று” ஆணித்தரமாக தன் கருத்தை முன் வைத்தார் தோட்டச் சேவையாளர் சங்கத்தலைவர்.

“இந்த உண்மையை கம்பனிகளுடன் கலந்து பேசும் தொழிற்சங்கங்களும் அறியும். ஆனால் ஏதேதோ காரணங்களுக்காக அவை’ ஏற்றுமதி வருவாய் குறித்து வாய் திறப்பதில்லை. கம்பனிகளின் உயர் அதிகாரிகளுடன் உரையாடும் சந்தர்ப்பங்களில் நான் இதைக்குறிப்பிட்டிருக்கிறேன். அவர்கள் இது பற்றி விவாதிக்க விரும்பவதில்லை. ஒரு கிலோ தேயிலையின் உண்மையான உற்பத்தி செலவு எவ்வளவு; ஏற்றுமதி செய்யும் போது அதன் விலை; ஒரே நிறுவனத்துக்குள் தான் பணம் புரள்கிறதா என்பது குறித்தெல்லாம் அரசாங்கம் தான் விரிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் குட்டு வெளிவரும்” என்கிறார் இவர்.

“83ம் ஆண்டின் பின்னர் தமிழர்களை தலைமைப் பொறுப்புகளில் அமர்த்துவதில்லை என்ற ஒரு சிந்தனை உருவானது. ஆனால் தோட்ட சேவையாளர் சங்கம் அதைப் பின்பற்றவில்லை. இந்த சங்கம் நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது என்றால் இன, மத, மொழி பேதங்களையும் இன, மத, வாதங்களையும் முற்றிலுமாகக் கடந்து செயற்பட்டு வருவதே காரணம் எனக் கருதுகிறேன். எமது சங்கத்தின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் தமிழர்கள் பதவி வகித்து வருகிறார்கள். யாழ்வாசியான ஆறுமுகம் கதிர்காமர் வேலுப்பிள்ளையை நாம் எமது சங்கத்தின் பிதாவாகக் கருதுகிறோம். 1920ம் ஆண்டு The estate staffs association of Ceylon என்ற தொழிற்சங்கத்தை நிறுவுவதற்கு அவர் பின்புலமாக இருந்து செயற்பட்டவர்” என்று தன் சங்கத்தின் சிறப்பை எம்மிடம் பகிர்ந்து கொண்டார் சத்துர சமரசிங்க.

தோட்ட சேவையாளர் சங்கத்தில் நாடெங்கும் 850 உறுப்பினர்கள் உள்ளனர். தொழிற்சாலை அதிகாரி (இறப்பர் / டீ மேக்கர்) முதல் வாகன சாரதிவரை அனைவருமே இந்த சங்கத்தின் உறுப்பினர்கள். இது தவிர, வேறு சேவையாளர் சங்கங்கள் நலிவுடன் இயங்கி வந்தாலும் உறுதியான, பெரிய சேவையாளர் சங்கமாக விளங்கும் இத் தொழிற்சங்கம், ஏழு மகாணங்களில் 12 கிளைக்காரியாலயங்களுடன் இயங்கி வருகிறது. கிளை அலுவலகங்களிலும் கொள்ளுபிட்டி அலோய் மாவத்தையில் அமைந்திருக்கும் தலைமையகத்திலும் 30 பேர் முழு நேர ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இச் சங்கம் 1920இல் தொடங்கப்பட்ட பின்னர் கண்டி கந்தே வீதியில் உள்ளகட்டடத்திலேயே தலைமையகம் இயங்கி வந்தது. 1978ம் ஆண்டு தலைமையகம் கொழும்புக்கு மாற்றப்பட்டது.

பெருந்தோட்டங்கள் தோற்றம் பெற்றபோது வெள்ளையர் நிர்வாகத்தின் கீழ் தொழிலாளர் அடிமைகள் போல நடத்தப்பட்டமை தெரிந்த விஷயம் அதேபோல தோட்ட உத்தியோகத்தரையும் நடத்த முற்பட்ட போது தான் தமக்கென ஒரு அமைப்பு அவசியம் என்பது தெரியவந்திருக்கிறது. அப்படித் தோற்றம் பெற்றதே தோட்ட சேவையாளர் சங்கம். 1935ம் ஆண்டு தொழிற்சங்க கட்டளைச் சட்டம் அமுலுக்கு வந்ததும் சங்கம் சட்ட பூர்வமானது.

அக் காலத்தில் சேவையாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் தொழிலை இழக்கும் அபாயம் இருந்தது. சமூக பாதுகாப்பு இல்லை. இவற்றை அடைவதே அப்போது சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இது பற்றி பேசும் போது,

“அக் காலத்தில் தோட்டங்கள் தீவுகள் போல தனிமைப்படுத்தப்பட்டு, வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தோட்டங்களில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். பெருந்தோட்ட சேவையாளர்களாக பணியாற்றியவர்களில் பலர் ஆங்கிலம் தெரிந்த யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தனர். தோட்டத்துரைமார் ரதல்ல போன்ற துரைமார் கிளப்புகளுக்கு செல்லும் போது இவர்களையும் அழைத்துச் செய்வது வழக்கம். அக் கிளப்புகளில் இந்தியாவில் இருந்தும் இங்கிலாந்தில் இருந்தும் வெளியாகும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த உத்தியோகத்தர்கள் அப் பிரசுரங்களை வாசித்த போது உலகில் என்ன நடக்கிறது என்பதையும் இந்திய பெருந்தோட்டத்தின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அறிந்து கொண்டார்கள். அவைபற்றி அவர்கள் தமக்கிடையே கலந்து பேசும்போதுதான் தமக்கென ஒரு அமைப்பு அவசியம். என்பதை உணர்ந்து கொண்டார்கள். சங்கம் தோற்றம் பெறுவதற்கு இவர்களும் காரணமாக இருந்தார்கள்” என்கிறார் இவர்.

இலங்கையிலேயே முதலாவது தனியார் சேமலாப நிதியத்தை உருவாக்கியது தோட்ட சேவையாளர் சங்கமே என்பது உண்மை. 1931ம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியத்தை அமைப்பதற்கான அனுமதி இச்சங்கத்துக்கு அரசு வழங்கியது. அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கிய ஊழியர் சேமலாப நிதியத்துக்கான சட்டத்தை எஸ்.டபிள்யு. ஆர். டீ. பண்டாரநாயக்க 1957ஆம் ஆண்டே கொண்டுவந்தார். 26 வருடங்களுக்கு முன்னரேயே இச் சங்கம் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது என்பதில் இச் சங்கம் பெருமைப்படுகிறது. அதுபோலவே இந் நாட்டின் முதலாவது கூட்டு ஒப்பந்தம் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் 1952ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி செய்து கொள்ளப்பட்டது. அன்றைய சங்கத்தலைவர் ஈ.ஜீ.மல்ஹாமி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

“தோட்ட சேவையாளர் சங்கம் பல முன்னோடி யோசனைகளை முன் வைத்திருக்கிறது. இலங்கையில் சகலருக்கும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இச் சங்கமே முன்வைத்தது. இந் நாட்டில் மருத்துவ மற்றும் சுகாதார சேவை சகலருக்கும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என தலைவர்களை கேட்டுக் கொண்டதும் இச் சங்கம்தான். இது மாத்திரமல்ல, டொமினியன் அந்தஸ்துடன் கூடிய சுதந்திரம் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும் என்று தேசியத்தலைவர்கள் கோரிவந்தபோது எமது சங்கமே இலங்கைக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லி வந்தது. தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக் குரல்களுக்கு எமது சங்கம் எப்போதும் ஆதரவாகவே இருந்திருக்கிறது. தோட்ட உத்தியோகத்தர்மாரின் பிரச்சினைகள் என்றில்லாமல் தேசிய பிரச்சினைகளிலும் எமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது” என்று கூறிய இவர், தமது சங்கம் நூறு ஆண்டுகளாக உறுதி குலையமல் செயல்பட்டு வருவதற்கு சில காரணங்களை முன்வைத்தார்.

“இது மூடப்பட்ட சிலரின் பிடிக்குள் இருக்கும் ஒரு சங்கமல்ல. இது சுதந்திரமாக இயங்குகிறது. கட்சி அரசியலை சங்கத்தினுள் அனுமதிப்பதேயில்லை. சங்க உத்தியோகத்தர்கள் ஜனநாயக முறைப்படி மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர். சங்கத்தில் ஒற்றுமையும் சமத்துவமும் கெடாதபடி பார்த்துக் கொள்கிறோம்.” என்றவரிடம்,

இச் சங்கம் எதிர் கொண்டிருக்கும் சவால்கள் பற்றி பேசுவோமா? என்று கேட்டோம்.

“தோட்ட சேவையாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் வாடகை வீடுகளில் தஞ்சமடைய நேரிடுகிறது. அவர்களின் சேமிப்பை அது விழுங்கி விடுகிறது. தோட்டங்களில் அவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என்பது எமது கோரிக்கை. கண்டி, மாத்தளை பிரதேச அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மற்றும் ஜனவசம தோட்ட சேவையாளர்களுக்கு பத்துபேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த 10 பேர்ச் காணி வழங்கும் திட்டம் தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேசி வருகிறோம். பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன எமது நூற்றாண்டு விழாவுக்கு வந்திருந்தபோது வீடமைப்பு திட்டம் குறித்து பேசினார். பெருந்தோட்டங்களில் சுமார் எண்பது எக்டேயர் காணி தரிசாகக் கிடக்கிறது. இக் காணியைப் பயன்படுத்தி வீடமைப்பு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று அவர் தெரிவித்ததோடு இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஒரு நல்ல செய்தியை சொன்னார்” என்கிறார் சங்கத் தலைவர் சத்துர சமரசிங்க.

செழிப்பான தேயிலைச் செடி என்பது இச்சங்கத்தின் மந்திரச் சொல்.

“தோட்டச் சேவையாளர்கள் எப்போதும் முயற்சிப்பது செழிப்பான தேயிலைச் செடிகளை உருவாக்குவதும் காப்பாற்றுவதுமாகும். செழிப்பான தேயிலைச் செடி என்பது இலாபகரமான தோட்டம் என்பதைக் குறிக்கும். தோட்டம் இலாபகரமக இயங்கினால் அங்கே பணியாற்றும் அனைவருக்கும் சுபீட்சம் என்று பொருள். தேயிலை கைத்தொழில் இந்நாட்டு அபிவிருத்திக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. அத்துறையில் முக்கிய பங்காற்றுபவர்கள் என்ற வகையில் பெருமைப்படுகிறோம்” என்று கூறி முடித்தார் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர் சத்துர சமரசிங்க.

உரையாடியவர்:
அருள் சத்தியநாதன் 

 

Comments