இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு | தினகரன் வாரமஞ்சரி

இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பின் வரைபு எதிர்வரும் ஜுன் மாதம் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கால வரலாற்றுத் தவறுகளை புதிய அரசியலமைப்பின் ஊடாகத் திருத்த முடியும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

“தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பல விடயங்கள் காலத்துக்குப் பொருத்தமானதாக இல்லையென்பதால் அவற்றை மீண்டும் மீண்டும் திருத்துவதில் முழுமையான பலன் கிடைக்காது. எனவே புதிய அரசியலமைப்பொன்றே காலத்தின் தேவையாகும். இதனை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றும் அவர் கூறியிருந்தார்.

1978ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பானது இதுவரை 20 தடவை  திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோகரா டி சில்வா, சஞ்ஜீவ ஜயவர்தன, பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பேராசிரியர் நசீமா கமுர்தீன், கலாநிதி சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி சமன் ரத்வத்த, பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், குறித்த நிபுணர்கள் குழு பல்வேறு தரப்புக்களிடமிருந்து யோசனைகளைப் பெற்று வருகிறது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டதுடன், வழிநடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டு சில நாட்கள் கூடி ஆராயப்பட்டிருந்தது.

பல்வேறு தரப்பினரின் யோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும், அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டு விட்டன. வெறுமனே ஒரு கண்துடைப்புக்கான முயற்சியாகவே இது இருந்தது. உண்மையில் அரசியலமைப்பொன்றைக் கொண்டு வர வேண்டிய தேவை இருந்திருந்தால் நிச்சயமாக அதனை சரியான முறையில் செயற்படுத்தியிருக்க முடியும்.

இவ்வாறான நிலையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டு வரப்பட்ட 19 வது திருத்தச் சட்டம் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்தது என்றே கூற வேண்டும். பாராளுமன்றத்தில் இதனை நிறைவேற்றும் போது குழு நிலையில் 100 இற்கும் அதிகமான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், இதில் பல தெளிவற்ற நிலைமைகள் காணப்பட்டன.

இதிலிருந்த தெளிவற்ற விடயங்களால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்திரமற்ற அரசியல் சூழல் ஏற்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் எந்தவொரு அரசாங்கமும் இல்லாத நிலைமையும் உருவானது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைப்பது இதன் பிரதான நோக்கமாகவிருந்தது. குறிப்பாக ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டதாக நல்லாட்சி அரசாங்கத்தினால் அவசர அவசரமாக இத்திருத்தம் முன்வைக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து ஒரு சில வாரங்களிலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்குக் காணப்படும் தடைகளை விலக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தார். பொதுத் தேர்தலில் இதற்கான ஆணையைப் பெற்றமையால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எனினும், காலத்தின் தேவைக்கு ஏற்ற மாற்றங்களை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவிருந்த ஜனாதிபதி, இதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார். இந்தக் குழு பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிடமிருந்து யோசனைகளைப் பெற்றுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற நிலைப்பாடு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் விவாகச் சட்டம், கண்டிய திருமணச் சட்டம் மற்றும் தேசவழமை சட்டம் போன்ற தனிப்பட்ட சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவை தொடர்பில் புதிய அரசியலமைப்புத் தயாரிப்பில் கவனம் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அதேநேரம், தமது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான சட்ட ஏற்பாடுகளும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என சிறுபான்மைக் கட்சிகள் பலவும் சுட்டிக் காட்டியுள்ளன.

குறிப்பாக நாட்டில் உள்ள அனைத்து இனங்களும் தாம் இலங்கையர் என்பதை உணரக் கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்றும், எந்தவொரு இனத்தவரும் இரண்டாம் தர நபர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் விடயங்கள் இதில் உள்ளடக்கப்படக் கூடாது  என்றும் சிறுபான்மை கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன.

எனவே, நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களின் கரிசனைகளையும் உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கையின் அரசியலமைப்புத் தயாரிப்புகளின் வரலாற்றை எடுத்து நோக்கும் போது, ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இதற்கு சிறந்த உதாரணம் தற்பொழுது நாம் பயன்படுத்தும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன தான் தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இதனைத் தயாரித்திருந்தார். அதன் பின்னர் அதிகாரத்துக்கு வந்த பலரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கூறி வந்தாலும் அவர்களால் அதனை நடைமுறையில் செயற்படுத்த முடியாது போய் விட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவையும் குழப்பத்திலேயே முடிந்தன. இவ்வாறான அரசியல் பின்னணியிலேயே பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் நிலையில் அனைத்து இனங்களும் திருப்திப்படும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரித்தால் அதனை இலகுவில் நிறைவேற்றி விட முடியும்.

அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு விடும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரப்படும் அரசியலமைப்பானது சகலருக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்பதே பலருடைய அவா.

பி.ஹர்ஷன்

Comments