ஜோ பைடன் ஏன் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தார்? | தினகரன் வாரமஞ்சரி

ஜோ பைடன் ஏன் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தார்?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்க ரஷ்ய முறுகல் உலக அரசியலில் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெளிவுறவுக் கொள்கையிலும் பாதுகாப்புக் கொள்கையிலும் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுவரும் பைடன் நிர்வாகம், ரஷ்யாவுடனான உறவில் தொடர்ச்சியாக சவாலை ஏற்படுத்தி வருகின்றது. பதவிக்கு வந்த ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடினோடு சுமூகத்தன்மையை பேணிக்கொண்டார். எனினும் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ய முயன்றதாகவும், ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னியை விசம் வைத்து கொல்ல முயற்சித்தத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இதனால் புடினை ஒரு கொலைகாரர் என்று ஜோ பைடன் விமர்சனம் செய்திருந்தார். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் ரஷ்யா தனது தூதுவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற பணித்தமை இரு நாட்டுக்குமான இராஜதந்திர உறவை முறித்துக்கொகொள்ளும் நிலை ஏற்பட்டது. இத்தகைய போக்கு மேலும் அதிகரிக்கும் விதத்தில் ரஷ்யாவின் 30க்கும் மேற்பட்ட நிறுனங்கள் மீது பொருளாதார தடையை விதித்ததோடு அமெரிக்காவில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றும் உத்தரவையும் 15.4.2021 இல் ஜோ பைடன் பிரகடனப்படுத்தியுள்ளார். இக்கட்டுரை இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் எற்பட்டுள்ள விரிசலையும் அதற்கு பின்னால் உள்ள அரசியலையும் ஆராய்வதாக அமையவுள்ளது.

ஜோ பைடனின் நிர்வாகம் ரஷ்யா மீது இரு பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது. முதலாவது, அமெரிக்கா மீது சூரிய காற்றின் மூலம் (solar wind) சைபர் தாக்குதலை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது என்பதாகும். இது அமெரிக்காவின் உளவுத் தகவல்களையும், பொருளாதார கட்டமைப்புக்களையும் தகர்க்கும் விடயமாக உள்ளதாம். இதனை ரஷ்ய உளவுத்துறை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் உண்டு என்றும் குறிப்பிடுகின்றது அமெரிக்கா. இரண்டு, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு அத்தகைய சைபர் தாக்குதல் மூலம் செய்துள்ளது என்பதாகும்.

இத்தகைய நடவடிக்கைக்கு எதிராகவே அமெரிக்கா ரஷ்யா மீதான பொருளாதார தடையை முன்வைத்துள்ளதென்றும், இவ்வாறான செயன்முறை இராஜதந்திர ரீதியாக முன்னோக்கி செல்ல உதவும் என்றும், வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கை ரஷ்யா மீது மூலோபாய மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பைடன் நிர்வாகம் கருதுகின்றது. அவ்வாறு கருதுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றே சர்வதேச மட்டத்திலான ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஏனெனில், ரஷ்யா பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. இத்தடையானது ரஷ்யாவின் கடன்படும் நிலையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது என அத்தகைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஏற்கனவே 180 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்படும் நிலையில் உள்ள ரஷ்யா, அதிலிருந்து விடுபடுவதற்கு பதிலாக இப் பொருளாதாரத் தடையால் பாரிய நெருக்கடியை எதிர்க்கொள்ளும் என்றும் பைடனின் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஆனால் இத்தகைய பொருளாதார தடைக்கு பின்னால் வேறும் பல காரணங்கள் உண்டு என்று கணிப்பிட முடியும்.

பொருளாதார தடையினால் கடந்த காலங்களில் அமெரிக்கா 40க்கும் மேற்பட்ட சுற்றுத்தடைகளை அறிவித்த போதும் ரஷ்யாவை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியவில்லை என்ற உண்மையையும் குறிப்பிடுதல் அவசியம். முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கான அரசியல் காரணிகளை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தற்போது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் தீவிரமான இராணுவ அணிவகுப்புகளும், குவிப்புகளும் எல்லைப் புறங்களில் நிகழ்ந்து வருகின்றது . உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது இராணுவத்தையும், போர்க்கப்பல்களையும் நகர்த்தி வருகின்ற சூழல் ஒன்றையும் அவதானிக்க முடிகின்றது. அது மட்டுமன்றி உக்ரைனின் எல்லையோர பிரதேசமான கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா மீளவும் அப்பகுதியை நோக்கி தனது படைகளை குவித்து வருகின்றது. இது இரு நாட்டுக்குமான யுத்தமாக மாறலாம் என்றே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன. இதனால் இதை கையாள்வது அமெரிக்காவின் மிகப்பிராதன நோக்கமாக விளங்குகின்றது.

இரண்டாவது, ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்க துருப்புகளை நோக்கி அண்மைக்காலமாக தலிபான்களில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இத்தகைய தாக்குதலில் பங்கெடுக்கும் தலிபான் போராளிகளுக்கு ரஷ்யா பொருளாதார மற்றும் இராணுவ தளபாட உதவிகளை வழங்கி வருவதாக அமெரிக்காவின் சர்வதேச புலனாய்வு பிரிவு அமெரிக்க நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. அதற்கான முழுமையான ஆதாரங்கள் திரட்டப்படாவிட்டலும் ரஷ்யா அதிலொரு பங்காளர் என்பதை புலனாய்வு தகவல்கள் தெளிவுப்படுத்துகின்றன. பைடனின் நிர்வாகம் செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் அமெரிக்க துருப்புகளை முழுமையாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுதல் என்ற முடிவினை கடந்த 15ம் திகதி அறிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது. இவ்வாறு பல அமெரிக்க ஜனாதிபதிகள் கடந்த காலத்தில் அறிவித்த போதும் ஆப்கான்ஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் முழுமையாக வெளியேறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. இத்தகைய நடவடிக்கை அமெரிக்காவிற்கு ஒரு பாரிய பின்னடையவாக அமையும் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அரசியல் புவியலாகவும், புவிசார் அரசியலாகவும் ஆப்கானிஸ்தான் ஒரு புறம் ரஷ்யாவாலும், மறுபுறம் ஈரானாலும் சூழப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பை தொடர்ந்து குண்டுவெடிப்புகள், தற்கொலை தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அதிகரித்துள்ளன.

மூன்றாவது தென்னாசிய பிராந்தியத்துக்குள் வலுவான இராணுவக் கட்டமைப்பை கொண்ட மியன்மரோடு ரஷ்யா இராணுவ உடன்படிக்கையினை கடந்த வார நடுப்பகுதியில் அத்தகைய உடன்படிக்கையின் பிரகாரம் ஆயுத தளபாடங்கள் வழங்கப்படுவதோடு, ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் இலகு ரக ரொக்கட் தாக்குதலுக்குரிய ஆயுதங்கள் போன்றவற்றுடன் ஆயுதப் பயிற்சியுடன் தொழிநுட்ப ஆயுதங்கள் இயக்குவதற்கான பயிற்சியைவழங்கவும் ரஷ்யா முன்வந்திருப்பதாக உடன்படிக்கை உறுதிப்படுதுகின்றது. எனவே இத்தகைய நகர்வு மியன்மார் இராணுவத்தையும் இராணுவ ஆட்சி முறையையும் அங்கீகரிப்பதோடு தென்னாசிய பிராந்தியத்தில் சீன ரஷ்யா மியன்மார் என்ற அடிப்படையிலான நெருக்கம் அமெரிக்க நகர்வை தகர்ப்பதற்கான சூழலை எற்படுத்தியுள்ளது.

நான்காவது, அமெரிக்க நட்பு அணியான ஸ்கொட் நாடுகள் என்றழைக்கப்படும் அவுஸ்திரேலியா, இந்தியா, யப்பான் என்பவற்றின் இந்தோ - பசுபிக் உபாயம், ரஷ்யாவினது நகர்வுகளினால் சவால் மிக்க சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மியன்மார் உடனான சீன-ரஷ்ய உறவு, ஆப்கான் தலிபானுடனான - ரஷ்ய உறவு அத்தகைய நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதாக உள்ளது. இதனுடன் மேலதிகமாக ஈரான், ரஷ்ய, சீன நட்புறவு பலமான அணியாக விளங்குவது இதன் இருப்பை மேலும் பாதிப்பதாகவும் இத்தகைய உறவு நிலையிலேயே இலங்கையும் உட்பட்டுள்ளது என்பதையும் இந்தோ - பசுபிக் உபாயத்தின் நகர்வுகளை பாரியளவு பாதிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

ஐந்தாவது, ரஷ்யாவினது புலனாய்வு துறையும் நிர்வாகத்துறையும் அமெரிக்காவின் உலகளாவிய வியூகங்களை தடுக்கும் விதத்தில் உள்நாட்டிலும் அமெரிக்காவிற்கு வெளியேயும் அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளினால் அமெரிக்க நிர்வாகம் நேட்டோவுடனான உறவையும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவையும் , பிரித்தானியாவினுடைய உறவையும் பலப்படுத்தினாலும், ரஷ்யாவின் ஐரோப்பா நோக்கிய நகர்வுகளையும், ஆசியா நோக்கிய நகர்வுளையும் அமெரிக்காவினால் எதிர்க்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. அத்தகைய இருப்பை மீளமைக்கும் முயற்சிகளை ஜோ பைடன் மேற்கொண்டதோடு ஆப்கானிஸ்தான், ஈரான் , மியன்மார் என்பன சிரியாவிற்கு ஒப்பான ஓர் அரசியல் களத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் நேட்டோ விஸ்தரிப்பையும் ஆசியா மீதான ஆதிக்கத்தையும் மீள உறுதிப்படுத்தும் விதத்தில் ரஷ்யா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆனால், சமகால உலக அரசியல் போக்கை அவதானிக்கின்றபோது சிரியாவில் இருந்து கொள்கை ரீதியாக வெளியேற்றப்பட்ட அமெரிக்க தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்தும் வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே மேற்காசியா முழுமையாக அமெரிக்காவின் கட்டுபாட்டில் இருந்து விலகுவது மட்டுமன்றி இந்தோ – பசுபிக் உபாயத்திற்கு பாரிய நெருக்கடியையும் ஏற்படுத்தும் விதத்தில் ரஷ்சியா சீனா வடகொரியா ஈரான் வரிசையில் தற்போது மியன்மரும், இணைந்துள்ளது. இது இந்தோ-பசுபிக் அரசியலில் மட்டுமல்ல அமெரிக்க நலன்களில் வலுவான ஒரு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இவற்றை தடுப்பதும் வெற்றிக்கொள்வதும் அமெரிக்க அணிக்கு பாரிய சவாலான ஒன்றாக விளங்கப்போகின்றது

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments