மாகாணசபைத் தேர்தல் நடத்துவதில் எதிர்நோக்கப்படும் முட்டுக்கட்டைகள்! | தினகரன் வாரமஞ்சரி

மாகாணசபைத் தேர்தல் நடத்துவதில் எதிர்நோக்கப்படும் முட்டுக்கட்டைகள்!

ஒரு நாட்டின் ஜனநாயகம் என்பது குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தப்படும் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுவதுண்டு. இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு வருகின்ற போதும், சுமார் நான்கு வருடங்களாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாமலிருப்பது பெரும் குறையாகக் கருதப்படுகிறது.

பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டிருந்த போதும் கொவிட் 19 தொற்று சூழல் காரணமாக தேர்தல்களை நடத்தும் செயற்பாடுகள் இழுபறி நிலைக்குச் சென்றன. கொவிட் தொற்று பரவுதல் நிலைமை தற்பொழுது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதால் மீண்டும் மாகாணசபைத் தேர்தல்கள் குறித்த பேச்சுக்கள் அரசியல் அரங்கில் அடிபடத் தொடங்கியுள்ளன.

இவ்வருட இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேலிடத்திலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பணிப்புரையொன்று வழங்கப்பட்டுள்ள போதும், மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படுமா என்ற விடயத்தில் ஆளும் கட்சியில் உள்ளவர்களே மாற்றுக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள போதும், இறுதியான தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லையென்றே அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் நிச்சயமாக பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை நிறைவேற்றி அல்லது மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டது. இதற்கமைய 50 சதவீத தொகுதி முறையும், 50 சதவீத விகிதாசார முறையும் என்ற கலப்பு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும், தொகுதிகளை வரையறுக்கும் எல்லை நிர்ணய அறிக்கை நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாலேயே தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் கட்டாயம் சட்டத் திருத்தமொன்றுக்குச் செல்ல வேண்டும்.

இல்லாது போனால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து பழைய முறைக்குச் செல்வதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையில், கடந்த மாத இறுதியில் கூடிய அமைச்சரவையில் இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன், புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதாவது 70 சதவீத தொகுதி வாரிமுறை, 30 சதவீத விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூல வரைபொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போனஸ் ஆசனங்களை வழங்குவது, ஒரு தொகுதியில் ஒரே கட்சியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவது போன்ற பல்வேறு யோசனைகள் இந்த வரைபில் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இருந்த போதும், அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு சில முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருப்பது அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் தெளிவாகிறது. குறிப்பாக பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாகவுள்ள விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இந்த உத்தேச வரைபை விமர்சித்துள்ளன.

இந்த உத்தேச வரைபை அவர்கள் தமக்கு சாதகமாகப் பார்க்கவில்லையென்பது இந்த விமர்சனங்களின் மூலம் புலப்படுகிறது. மறுபக்கத்தில் ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் இதனை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டில் இல்லை. இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் தயாராகி வருகின்றன.

குறிப்பாக எதிர்க் கட்சியில் உள்ள சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் தங்களுக்கிடையில் சந்திப்பை நடத்தி இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடவிருப்பதுடன், தமக்கிடையிலான பேச்சுக்களைத் தொடர்ந்து, ஆளும் கட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளைச் சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளன.

அதன் பின்னர் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுக்கள் நடத்தப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகளே அதிகம் காணப்படுகின்றன.

இருந்த போதும், இவ்வருட இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மாகாணசபைத் தேர்தல்களின் முயற்சியாக தமது கட்சி சார்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை ஜனாதிபதியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இச்சந்திப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மறுபக்கத்தில், மாகாணசபைத் தேர்தல் குறித்த சட்ட ஏற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பான பிரேரணை கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த விசேட குழு 15 உறுப்பினர்களைக் கொண்டு அமையவுள்ளதுடன், சபாநாயகரினால் குழு நியமிக்கப்பட்டதை அடுத்து 06 மாதங்களில் அதன் பரிந்துரை வழங்கப்படும்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதும், தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவின் பொறுப்பாக அமையும். குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலும் இவ்வாரம் இக்குழு பற்றிய அறிவிப்புக்கள் வெளியாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளின் அடிப்படையில் எடுத்துப் பார்க்கும் போது அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

அரசாங்கத்தின் ஏற்பாடுகள் இவ்வாறானதாக இருக்கும் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் தமக்கிடையிலான சந்திப்புக்களை நடத்தியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் குறித்து அவர்கள் அதிருப்தியடைந்த நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில் மாகாணசபைத் தேர்தல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருப்பதுடன், எல்லை நிர்ணயத்தில் தீர்வு காணாமல் மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது என்ற நிலைப்பாடு இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் தம்மை ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்கள் புறக்கணிக்கும் விதத்தில் நடந்து கொள்வதாகவும், அரசாங்கத்தில் காணப்படும் தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும் பங்காளிக் கட்சிகள் தமக்கிடையில் கலந்துரையாடியுள்ளன. எனினும், அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பது தமது நோக்கம் இல்லையென இச்சந்திப்பில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

இந்த அரசியல் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, மாகாண சபைத் தேர்தலொன்றுக்குச் செல்லும் போது ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அதேநேரம், மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாகத் தெரிய வருகிறது.

எனினும், தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்து போட்டியிடுவதா என்பதில் அக்கட்சி இறுதி முடிவொன்றுக்கு வரவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் ரீதியான சவால்களுக்கு மத்தியில் விலைவாசி அதிகரிப்பு, கொவிட் 19 பாதிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட சவால்களும் இம்முறை மாகாணசபைத் தேர்தல்களில் தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. கொவிட் 19 சூழலால் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் மாகாணசபைத் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு எந்தளவு ஆதரவாக இருக்கும் என்பது நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

குறிப்பாக விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்கொண்டு செல்வதில் அசௌகரியங்களுக்கு வழியேற்படுத்தியுள்ளன. இது அரசாங்கத்தின் மீதான நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என ஆரசியல் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது இவ்விதமிருக்க, சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாமையால் உள்ளூர் மட்டத்தில் செயற்படும் அரசியல் தலைவர்கள் பலர் அதிருப்தியடைந்திருப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தம்மை மதிக்காமல் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அடிமட்டத்தில் தமக்கான ஆதரவை தக்க வைத்துக் கொள்வதற்கு சகல கட்சிகளுக்கும் தேர்தலொன்றுக்கான அவசியம் காணப்படுகின்றது என்ற கள யதார்த்தமும் காணப்படுகின்றது.

Comments