குட்டையை குழப்புகின்றாரா எரிக் சொல்ஹெய்ம்? | தினகரன் வாரமஞ்சரி

குட்டையை குழப்புகின்றாரா எரிக் சொல்ஹெய்ம்?

இலங்கை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பல தசாப்தங்களை கொண்ட நீண்ட நெடிய போராட்டமாக இருக்கின்றது. அரசியல் போராட்டம், ஆயதப்போராட்டம் என எழுபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த போராட்டமானது பல பேச்சுவார்த்தைகள், இராஜதந்திர நகர்வுகள், ஆயுத கையளிப்பு, யுத்தநிறுத்தம், சர்வதேச கண்காணிப்பு, சர்வதேச அனுசரணை என்ற பல நகர்வுகளுடன் ஈழத்தமிழருக்கு அகதி வாழ்க்கையையும், அவலத்தையும் பரிசளித்து முடித்து வைக்கப்பட்டது.

இருந்தும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை மெதுவாக கட்டியெழுப்பிவரும் இக்கால கட்டத்தில் அம் மக்களின் அரசியல் அபிலாசையை வைத்து மீண்டும் தமிழர்களை அரசியல் வன்முறைக்குள் தள்ளிவிட சர்வதேச நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றது என்று சந்தேகம் கொள்ள வைத்துள்ளது இலங்கைக்கான சமாதான தூதுவராக பணியாற்றிய நோர்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சொல்கெய்மின் பேச்சு இலங்கையில் அரசபடைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரை நிறுத்தி 2002 ஆம் ஆண்டு சமாதான தூதுவராக இலங்கையில் நியமிக்கப்பட்டவரே எரிக் சொல்கெய்ம். 2009 ஆம் அண்டு விடுதலைப்புலிகள் அரச படையினரால் முற்றாக அழிக்கப்பட்டு நிரந்தர சமாதானம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் அமைதியாக இருந்த எரிக்சொல்கெய்ம் இப்போது அதே சர்வதேசத்திற்காக அரசியல் நகர்வுகளை செய்ய ஆரம்பித்துள்ளார். அதன் ஒரு கட்டமாகவே ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள போராட வேண்டும். அது ஆயதப் போராட்டமல்ல, அகிம்சைவழியில் இந்தியாவின் வழிகாட்டலில் போராட வேண்டும் அப்போது சர்வதேசம் தமிழர்களுக்கான தீர்வை பெற்று தரும் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேசம் தங்கள் அரசியல் நகர்வுகளை ஈழத்தமிழர்கள் நோக்கி நகர்த்தி வரும் ஒரு திட்டத்தின் ஆரம்பமே எரிக் சொல்கெய்மின் கூற்றாக, தமிழர்கள் தங்கள் தீர்வுக்கு போராட வேண்டும் என்ற அறிவுரை இருக்கின்றது.

அதாவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையின் 46 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழர் தகவல் நிலையத்தின் ஒருங்கிணைப்பில் (சூம்) ஒன்றுகூடல் ஒன்றினூடாக நோர்வே நாட்டின் இலங்கைக்கான சமாதான தூதுவராக 2002 இல் பணியாற்றிய எரிக்சொல்கெய்ம் பேசும் போதே இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் ஈழத்தமிழர்களை வைத்து அனைத்து மேற்கத்திய நாடுகளுக்கும் தங்கள் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள தேவைப்படுபவர்களாக தமிழர்கள் இருக்கின்றார்கள். இலங்கையின் அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க பசுபிக் பிராந்திய நாடுகளுக்கும், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கும் முக்கியம் மிக்க ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது.

ஏரிக்சொல்கெய்ம் என்ன சொல்கிறார் என்றால் ஈழத்தமிழர்கள் போராட வேண்டும் அதாவது வன்முறையாக நீங்கள் போராடுவதை நிறுத்திவிட்டு அகிம்சை வழியில் உங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள போராட்டங்களை நடாத்துங்கள். குறிப்பாக இந்தியா உங்கள் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்றால் காந்தி போராடிய அகிம்சை ரீதியிலான போராட்டங்களை முன்னெடுங்கள் அப்படி போராடினால் தீர்வு கிடைக்கும்.

எவ்வாறெனில் ஆயுதரீதியாக தமிழர்கள் போராடிய காரணத்தால்தான் உரிமைகளை பெற்றுத்தர முடியவில்லை. அகிம்சை ரீதியாக போராடினால் தங்கத்தாம்பாழத்தில் வைத்து உங்கள் உரிமைகளை வழங்க முடியும் என்ற ரீதியில் எரிக் சொல்ஹெய்ம் தமிழர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அத்துடன் தமிழர்கள் தனிநாடு கேட்பதை சர்வதேசம் விரும்பவில்லை, அரசும் விரும்பவில்லை நீங்கள் சமஸ்டி முறையை கோரலாம் அதற்காக அகிம்சை ரீதியில் போராடுங்கள் என தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் தங்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் போராட வேண்டும், போராட்டம் அகிம்சை ரீதியில் இருக்கும் போது தீர்வு கிடைக்கும். அந்த தீர்வை யார் தருவர்கள் என்றால் இந்தியா தருமாம், தீர்வை இந்தியாவிடம் எதிர்பாருங்கள். அதாவது இந்தியாவிடம் போய் ஆலோசனை பெற்று வந்து தமிழர்கள் தீர்வை பெற்றுக்கொள்ள அகிம்சை ரீதியில் போராட வேண்டும் வன்முறையில் இறங்கிவிடக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார்.

இப்போது எரிக்சொல்கெய்மின் சிந்தனை எவ்வாறு இருக்கின்றது என்றால் தமிழர்கள் இலங்கையில் தங்கள் உரிமைக்காக போராடினால் இலங்கை அரசு என்ன செய்யும் வன்முறை ரீதியாக அதை ஒடுக்கும். அப்போது இலங்கையில் இரண்டு இனங்களுக்கிடையில் கலவரங்கள் உருவாகி அழிவுகள் ஏற்படும். இலங்கையில் ஒரு கலவரம் ஏற்படும் பட்சத்தில் வன்முறையால் ஒடுக்கப்படும் மக்கள் இரத்தம் சிந்த வேண்டிய நிலைமை ஏற்படும், இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்படும் அப்போது பஞ்சாயத்து தலைவர்களாக இலங்கை விவகாரத்தில் தீர்ப்பு சொல்லும் பாணியில் மூக்கை நுழைக்கலாம் இதுதான் சர்வதேச நாடுகளின் திட்டம். இதை மறைமுகமாகவும் நாசுக்காகவும் சொல்கின்றார் சர்வதேச நாடுகளின் அரசியல் புறோக்கர் எரிக் சொல்கெய்ம்.

இந்தியாவிடம் அனுமதி பெற்று போராடுங்கள் அப்போது அமெரிக்காவும், பிரித்தானியாவும் உங்களை ஆதரிக்கும் என சுட்டிக்காட்டுகிறார் எரிக். குறிப்பாக தமிழர்கள் போராட்டம் என்று ஆரம்பித்தால் இலங்கை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் அப்போது இலங்கையில் இரத்த ஆறு ஒடும் தமிழர்கள் அகதியாக அலைவார்கள் என்பதுடன் இலங்கையில் ஆயுதப்போராட்டம் தேவையில்லை ஆனால் வன்முறை வேண்டும் என்பதனைத்தான் மறைமுகமாக எரிக் சொல்கெய்ம் சொல்கிறார் காந்தி வழியில் போராடுங்கள் ஆனால் ஆயுதப்போராட்டம் தேவையில்லை தமிழர்கள் அகிம்சை ரீதியில் உங்கள் உரிமைக்காக போராடுங்கள். இலங்கையில் தமிழர் போராட்டத்தின் மூலம் வன்முறை உருவாகும் போதுதான் இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட முடியும். ஆகவே சர்வதேசத்தின் அரசியல் செயற்பாடுகளுக்காக, ஈழத்தமிழர்களை இலங்கை அரசிற்கு எதிராக இவ்வாறு திருப்பிவிட முயற்சிக்கின்றார் எரிக்.

சர்வதேச நாடுகள் எவ்வகையான அரசியல் இலாபங்களை ஈட்டப் போகின்றன என்பதனை அறிந்து, அதற்கு எதிரான அரசியல் வியூகங்களை ஈழத்தமிழர்கள் வகுக்காமல் போனால் இலகுவில் பலிகொள்ளப்பட்டு விடுவார்கள்.

இல ங்கை மீது சர்வதேசம் தனது பிடியை கடிவாளம் இட்டு இறுக்கி வைத்திருக்க வேண்டும். அச்செயற்பாடு வெற்றி பெறுவதற்கு ஈழத்தமிழர்களை உரிமைப் போராட்டம் என்ற பெயரில் பகடைக்காயாக வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவான ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு வருகின்றது சர்வதேசம். அத்துடன் தமிழர்கள் மாத்திரமல்ல, அப்பாவி சிங்கள மக்கள் கூட அரசியல் விழிப்பு பெற்று உசாராகி விடக்கூடாது என்பதில், சர்வதேச நாடுகளும், உள்ளூர் அரசியல்வாதிகளும் மிகக் கவனமாக உள்ளனர்.

அரசியல் விழிப்புணர்வை இலங்கை மக்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே உள்ளுர் அரசியல்வாதிகளை வைத்து இனவாதம் மற்றும் மதவாத அரசியல் செய்வதற்கு ஊக்குவித்து வருகின்றது சர்வதேசம். ஏரிக் சொல்கெய்மின் ஈழத்தமிழருக்கான ஆலோசனையாக உரிமைகளை பெற்றுக்கொள்ள அகிம்சை ரீதியாக போராடுங்கள், ஆனால் இந்தியாவிடம் உங்கள் போராட்டத்தை கையளியுங்கள் என்று கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல அது மனித குலத்திற்கு எதிரான ஒரு குற்றமே இனப்படுகொலை என்றால் தமிழ் இனமே அழிந்திருக்க வேண்டும் அவ்வாறான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் சொல்லுங்கள் என்று தமிழர்களுக்கு எரிக் சொல்கெய்ம் அறிவுரை சொல்லும் நோக்கம் என்ன? சீனாவை முடக்குவதுதான்.

உலக நாடுகளின் மைய அரசியலாக இருக்கின்ற நிலையில். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் இந்த வேளையில் சர்வதேச நாடுகளுக்கு சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கம் உவப்பானதாக இல்லை, சர்வதேச நாடுகள் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கா தலைமையிலான பிரதான பங்காளி நாடுதான் இந்தியா! சீனாவை முடக்க வேண்டுமென்றால் பிராந்திய வல்லரசாக சொல்லப்படும் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் அதை செய்ய முடியாது.

இலங்கையில் தமிழர்களை அவர்களின் அரசியல் அறியாமையை பயன்படுத்தி சர்வதேச நாடுகள் தங்களுக்கு சார்பான நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முன்வைக்கும் கருத்துதான் இந்தியா உங்களுக்கு பக்கத்திலிருக்கும் நாடு. கலாசார ரீதியாக பல ஒற்றுமைகளை தமிழர்களுடன் கொண்டுள்ளது, அதனால் ஈழத்தமிழர்களுக்கு இலகுவில் தீர்வை பெற்றுத்தரும் என்று ஆசை வார்த்தைகளை கூறி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி இலங்கையில் ஒரு வன்முறையை உருவாக்க முயற்சிக்கின்றது.

இலங்கையில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போருக்கு முக்கிய பங்காற்றிய நாடுகள் இந்த இணைத்தலைமை என்று சொல்லப்பட்ட சர்வதேச நாடுகளே இலங்கையின் இன ரீதியிலான வன்முறைக்கு காரணமாக இருந்துள்ளது. இலங்கையில் மூன்றாம் தரப்பு என்று சொல்லப்படும் இலங்கைக்கு அண்மையில் இல்லாத நாடுகள் எப்பொதெல்லாம் உள்நுழைந்து அரசியல் செய்தனவோ அப்போதெல்லாம் இலங்கை  வன்முறையில் பற்றி எரிந்துள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் மேற்கத்தை நாடுகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. மொழியால், பண்பாட்டால், கலாசாரத்தால் தமிழர்களுடன் பின்னிப்பிணைந்த நாடுகளாக இவை உள்ளனவா? அப்படியானால் ஏன் இவை இலங்கை தமிழர்களை போராட தூண்டுவதற்காக அவர்களின் சிந்தனையில் விசத்தை விதைக்கின்றன? என்பதனை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் முதலில் உலக அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களை சர்வதேச அரசியல் நலன்களுக்காக பலி கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. முக்கியமாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்ற சொல்லாடல்கள் கைவிடப்பட வேண்டும்.

இந்து சமுத்திரத்தின் முக்கியமான பிராந்திய நாடுகள் இலங்கை விவகாரங்களில் தங்கள் பாதுகாப்பு கருதி சில முக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதிலும் இலங்கைக்கு சம்பந்தமே இல்லாத மேற்கத்தைய நாடுகள் தங்கள் அரசியலை உட்புகுத்த முனைந்ததன் விளைவு இலங்கையை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றது மாத்திரமல்ல, உள்ளுர் அரசியல்வாதிகள் மூலம் மக்களிடம் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து இலங்கையை வன்முறையின் பிறப்பிடமாக மாற்றியிருந்தது.

இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிர்நிலையை எடுக்க காணமாக இருந்த இந்த மேற்கத்தைய வல்லாதிக்க சக்திகள் இப்போது இந்தியாவிடம் போராட்டத்தை கையளித்துவிட்டு போராடுங்கள் என்ற புது விதமான அரசியல் பொதியுடன் கிளம்பி வந்துள்ளன. மேற்கத்தைய நாடுகள் எவ்வாறு இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிர்நிலையை எடுக்க வைத்தன?, தமிழர்களை முட்டாள்களாக்கி ஏமாற்றியது என்பதை சுருக்கமாக சொல்ல முடியும். 2009 இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் அமெரிக்க கப்பல் ஈழத்தமிழர்களை காப்பாற்ற வரும் என்ற சொல்லாடல் அல்லது தமிழ் மக்களுக்கு இறுதிவரை கொடுக்கப்பட்ட பொய்யான நம்பிக்கை ஏமாற்றமாகி இறுதியில் இலங்கை இராணுவத்திடமே அனைத்து தமிழரும் சரணடைந்தனர்.

ஆகவே தமிழ் மக்கள் உண்மையான அரசியலை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். வெற்று உணர்ச்சி அரசியலை அள்ளிக் கொட்டும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் பின்னால் பயணிக்கும் போது வெறும் அவலங்களே மிச்சமாக இருக்கும். சர்வதேசம் எவ்வாறாக சிரித்த முகத்துடன் தமிழர்களை அணைத்து முதுகில் கத்தியால் குத்தும் அரசியலை செய்கின்றது என்பதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் இனமத பேதமின்றி அனைத்து இலங்கை குடிமக்களையும் காவு வாங்கியிருந்தது. நடைபெற்ற போரில் சர்வதேச நாடுகள் ஆயுத விற்பனை, அரசியல் பேரம் பேசுதல், நாட்டின் வளங்களை சுரண்டி செல்லுதல் என்று தங்கள் நலன்களை சிறப்பாக வளர்த்துக் கொண்டார்கள் தவிர அவலங்களையும், அகதி வாழ்க்கையையும் இலங்கையர்களுக்கு பரிசளித்திருந்தார்கள்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரை இந்த இணைத்தலைமை என்று சொல்லப்படும் நாடுகள் நிறுத்த முயற்சிக்கவில்லை என்பதும் இலங்கை நாடு ஒரு வன்முறைகள் நிறைந்த நாடாக தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களாக சர்வதேச நாடுகள் இருக்கின்றன என்பதும் இலங்கையில் யுத்தகாலத்தில் சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்கெய்மின் இன்றைய பேச்சு தெளிவாக்கியுள்ளது.

கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் அமையத்தின் கூட்டத்தொடரில் இணைத்தலைமை நாடுகளால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அறிக்கையில் தமிழர்கள், ஈழம், இன அழிப்பு போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு, தமிழர்களை ஏமாற்றவும் இலங்கை அரசை மறைமுகமாக எச்சரித்து அடிபணியச் செய்யவும் சூசகமான கடுமையான சாரமற்ற ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டு மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதான காலத்தில் சர்வதேச கண்காணிப்பக்குழு என்றும் அனுசரணை நாடுகள் என்றும் செயற்பட்டவர்களின் செயற்பாடுகளின் தொடர்ச்சிதான் இலங்கையில் உச்சபட்ச வன்முறையும் யுத்தமும் வெடித்து இலங்கை அழிவுப்பாதை நோக்கி பயணித்தது என்பதை தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்கள மக்களும் மறந்தவிடக் கூடாது.

இலங்கையில் போர் உச்சம் பெற்ற போது அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகளோ அல்லது சமாதான வேடமிட்ட நோர்வேயோ, அல்லது சர்வதேச சமூகமோ அல்லது ஐநா கட்டமைப்போ, இந்தியாவோ யுத்தத்தை நிறுத்தி மக்களை காப்பாற்ற முன்வரவில்லை என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது. எனவே மீண்டும் வெள்ளைக் கொடியுடன் சமாதான வேடமிட்டு தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள ஆலோசனை கூறுகிறோம் என்ற பெயரில் உள்நுழையும் கபடதாரிகளை தமிழர்கள் மாத்திரமல்ல இலங்கை மக்கள் அனைவரும் இனங்கண்டு உசாராக வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் 70 வருட அரசியல் உரிமைப் போராட்டத்தை சமாதானத் தூதுவராக செயற்பட்டு அழித்த எரிக் சொல்கெய்ம் தமிழ் மக்கள் காந்திஜி வழியில் அகிம்சை ரீதியில் போராடி வெல்ல வேண்டும் என்ற ஆலோசனையுடன் வந்துள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளது. அவைகள் தீர்க்கப்பட வேண்டும். அது சிங்கள மக்களுடன் பேசிதான் தீர்க்கப்பட வேண்டும். மதவாத, இனவாத அரசியல் நீக்கப்பட வேண்டும்.

தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைய வேண்டும் அதற்கான அரசியலை உள்ளுர் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகள் இலங்கையை நாசம் செய்யும் திட்டத்துடன் கால்பதிக்கும் போது அவற்றை வேறுபிரித்து அறியும் அரசியல் அறிவு இலங்கை அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும்.

சர்வதேசத்தை எவ்வாறு கையாள்வது, இந்தியாவை எவ்வாறு அணுகுவது போன்ற விடயங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரு வெளிப்படையான இராசதந்திர பொறிமுறை வகுக்கப்பட்டு அதனூடாக உலக அரசியலை கையாள முன்வர வேண்டும்.

அதே போல் இலங்கையில் மூவின அரசியல்வாதிகளும் இனவாத மதவாத அரசியலை கைவிட்டு மக்களுக்கான அரசியலை முன்கொண்டு செல்ல தயாராக வேண்டும் அவ்வாறு செயற்படும் பட்சத்தில் இலங்கைக்குள் உள்நுழையும் சர்வதேச வஞ்சக அரசிலை இனங்கண்டு எமது இலங்கை நாட்டையும் நாட்டு மக்களையும் தற்காத்து கொள்வதோடு எதிர்கால சந்ததியினருக்கு இன முரண்பாடுகளற்ற எமது அழகான இலங்கை தீவை கையளிக்க முடியும்.

எம்.ஜி.ரெட்னகாந்தன்

Comments