எஞ்சியிருந்த எம்.பி ஆசனத்தையும் பறிகொடுத்த ரஞ்சன் ராமநாயக்க! | தினகரன் வாரமஞ்சரி

எஞ்சியிருந்த எம்.பி ஆசனத்தையும் பறிகொடுத்த ரஞ்சன் ராமநாயக்க!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக உயர்நீதிமன்றத்தினால் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அத்தண்டனையை தற்போது அனுபவித்து வருகின்ற ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அரசியலமைப்பின் ஊடாகத் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் உள்ளது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி ரஞ்சன் ராமநாயக்க நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கியிருந்த போதும், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீடு செய்திருந்தார். இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகிறது என்ற அறிவிப்பை விடுப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வார ஆரம்பத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகிறது என்ற அறிவிப்பும் வெளியாகியது.

இந்த விவகாரம் இவ்வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் பெரிதும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விவகாரமாகவும் இது அமைந்திருந்தது. ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கான கடும் முயற்சியில் அவருடைய அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டிருந்தது. தொடர்ச்சியாக இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் அவர்கள் முன்வைத்தபடி வந்தனர். அந்த விவகாரம் தொடர்பாக அரசு மீது எதிர்க்கட்சியினர் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.

ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றச்சாட்டு மூன்றரை வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பானதாகும். அன்று அவர் தெரிவித்திருந்து கருத்தானது நாட்டின் நீதித்துறையை காரசாரமாக விமர்ச்சிக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், அவர் தெரிவித்த கருத்தை பலர் கண்டனமும் செய்திருந்தனர்.

நீதித்துறையை இவ்வாறு அவமதிப்பது குற்றமென்பதை பலர் கண்டித்தனர்.

2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, 'இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுள் அநேகமானோர் மோசடி மிக்கவர்கள்' எனக் கூறியியிருந்தார்.

அவருடைய இந்தக் கருத்தும், அதனைத் தொடர்ந்து பல தடவைகள் நீதிபதிகளை விமர்சித்து முன்வைத்த கருத்துக்களுமே ரஞ்சன் சிறை செல்லக் காரணமாகியிருந்தன. நாட்டின் சட்டதிட்டங்களைப் பொறுத்த வரை அவர் அவ்வாறு கூறியிருந்தது கடுமையான குற்றமாகும்.

இராஜாங்க அமைச்சராகவிருந்த அவர் கூறிய இந்தக் கருத்து, ஒட்டுமொத்த நீதிமன்ற கட்டமைப்பு மீதும் பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், இதன் மூலம்  நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றம் சுமத்தி மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழு, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்ட போதும், பாராளுமன்றத்துக்கு வருவதற்கான முயற்சிகளை அவருடைய சட்டத்தரணிகள் மூலம் மேற்கொண்டிருந்தார். இதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இருந்த போதும் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே அவருடைய பாராளுமன்ற ஆசனம் வறிதாவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தார். இது தொடர்பில் எதிர்க் கட்சியினர் பாராளுமன்றத்தில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். கடுமையான கண்டனங்களை எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

எனினும், அரசியலமைப்புக்கு உட்பட்டே அவருடைய பாராளுமன்ற ஆசனம் வறிதாகியுள்ளது என்பதை செயலாளர் நாயகம் அறிவித்திருப்பதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

அரசியலமைப்பின் 66 (ஈ) சரத்துக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; 89ஆம் அல்லது 91ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் தகைமையீனத்துக்கு அவர் இலக்காகினால் வறிதாதல் வேண்டும் என்பதே சரியாகும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறுப்புரிமை வறிதாவதற்கான காரணம் பற்றி அரசியலமைப்பின் 89வது சரத்து தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதில் குறிப்பிடப்படுவதாவது,

'இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான மறியல் தண்டனையால் தண்டிக்கப்படக் கூடிய தவறொன்றுக்காக ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்திற்காக மறியல் தண்டனையை (அது எப்பெயரினால் அழைக்கப்பட்டிருப்பினும் சரி) இப்போது அனுபவித்து வருபவராயிருத்தால், அல்லது நேர்முற்போந்த ஏழு ஆண்டு காலப் பகுதியின் போது அத்தகைய தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவராயிருந்தால், அல்லது அத்தகைய மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அளிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாதவொரு காலத்துக்கான மறியல் தண்டனையை அனுபவிப்பவராயிருந்தால் அல்லது நேர்முற்போந்த ஏழு ஆண்டு காலப் பகுதியின் போது அத்தகைய தண்டனையை அனுபவித்து முடித்தவராயிருந்தால் ஆயின் இப்பந்தியின் கீழ் தகைமையற்றவராக்கப்பட்ட எவரேனும் ஆளுக்கு கட்டற்ற மன்னிப்பு அளிக்கப்பட்டால் அத்தகைய தகைமையீனம் , அம்மன்னிப்பு அளிக்கப்பட்ட திகதியிலிருந்து இல்லாதொழிதல் வேண்டும்,' எனத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறுப்புரிமை வறிதாகியிருந்தால், அது பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடையதாகும்.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்புக் கிடைத்ததும் குறித்த மாவட்டத்தில் அடுத்த இடத்தில் இருக்கும் நபரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதே நடைமுறையாகும்.
இந்த நடைமுறைகளுக்கு அமைய செயற்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் காணப்பட்ட வேட்பாளரான அஜித் மான்னப்பெருமவின் பெயரை வர்த்தமானியில் வெளியிட்டது. இதன்படி அஜித் மான்னப்பெரும புதிய பாராளுமன்ற உறுப்பினராக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட காரணத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த பல சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன.

இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவும் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழுந்திருந்தார். இராணுவ நீதிமன்றத்தினால் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்திருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தற்போது தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளமை அரசியல் அரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக சிறைக்குச் சென்ற இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சன் ராமநாயக்க காணப்படுகின்றார். இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நீதிமன்றத் தீர்ப்பொன்றை விமர்சித்ததன் காரணமாக அவருக்கு இரண்டு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

எனினும், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு செய்திருந்ததுடன், 2004ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றிருந்த அவர் 2006ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுலை செய்யப்பட்டிருந்தார்.

சினிமா நடிகராகவிருந்து, அரசியல்வாதியாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க ஊழலுக்கு எதிராகவும், வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருந்தார். இருந்த போதும் பாராளுமன்றத்தில் அவர் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையாகக் காணப்பட்டதுடன், வாய்க்கு கடிவாளம் இல்லாது அவர் அடுக்கிச் சென்ற குற்றச்சாட்டுக்கள் அரசியல்வாதிகளை சீற்றத்துக்கும் சங்கடத்துக்கும் உள்ளாக்கியிருந்ததை கடந்த காலத்தில் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல்வாதிக்கு அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் பொருத்தமானவை அல்ல. அது மாத்திரமன்றி, அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் அவர் நடத்திய தொலைபேசி கலந்துரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அவை பகிரங்கப்படுத்தப்பட்டதால் பலர் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.

அவையெல்லாம் மக்கள் மத்தியில் அருவருப்பை ஏற்படுத்தி இருந்தன. இதுபோன்று பரபரப்புக்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு நபராகவே ரஞ்சன் ராமநாயக்க காணப்பட்டார்.

எனினும், அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கிலேயே அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டிருப்பதாக எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இருந்தாலும் இதனை அரசாங்கத் தரப்பு முற்றுமுழுதாக மறுத்திருப்பதுடன், ‘இதில் எந்த விதமான அரசியல் நோக்கங்களும் இல்லை. நாட்டின் நீதிமன்ற சட்டங்களுக்கும், அரசியலமைப்புக்கும் உட்பட்டதாகவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாக அவரைப் பழிவாங்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது’ என அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

அதேநேரம், ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதால் அவருடைய கட்சி உறுப்பினர்கள் சிலர் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும், அவருடைய கம்பஹா மாவட்ட ஆதரவாளர்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர் முயற்சிப்பதாகவும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

எது எவ்வாறாக இருந்த போதிலும், மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர்கள் ஆதாரமற்ற வகையில் வார்த்தைகளை அள்ளி வீசுவது நாகரிகமல்ல என்பதையும், அவர்களது செயற்பாடுகள் பக்குவம் மிக்கதாகவும் மக்களுக்கு முன்மாதிரியாகவும் அமைய வேண்டும் என்பதையும் ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் எமக்கெல்லாம் சுட்டிக் காட்டுகின்றதென்பது மட்டும் உண்மை.

அவர் இப்போது நடிகனும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. உயர்நீதிமன்றத்தினால் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதனால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்துள்ள ஒருவராவார்.

Comments