உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் இந்தியாவும் பாகிஸ்தானும் | தினகரன் வாரமஞ்சரி

உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் இந்தியாவும் பாகிஸ்தானும்

- நட்புறவு பிராந்திய வளர்ச்சிக்கு கைகொடுக்கும்

இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை ஏன் தீர்வு காணப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, அதன் வழியாக தேர்தல் சார்ந்த அரசியலை வெற்றிகரமாக கட்சிகளால் முன்னெடுத்து பலன் அடைய முடிகிறது என்பதே காரணம். என எவராவது கூறுவாரானால் அந்த பதில் இந்திய – பாகிஸ்தான் பிரச்சினைக்கும் பொருத்தமானதாகவே இருக்கும். இந்தியாவில் பாகிஸ்தானையும் பாகிஸ்தானில் இந்தியாவையும் பூதாகரமாகக் காட்டுவதன் மூலம் தேர்தல் அரசியல் அறுவடைகள் செய்யப்படுகின்றன.

ஆனால் சமீபகாலமாக பாகிஸ்தானின் மனநிலையில் ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது. கடந்த மார்ச் 17ம் திகதி பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் ஆற்றிய உரையில், பக்கத்து நாடுகளுடன் சமாதானத்தை கடைபிடித்தால்தான் பொருளாதார சுபீட்சம் சாத்தியம் என்பதை கோடிட்டுக் காட்டினார்.

இப் பிராந்தியத்தில் சமாதான சூழல் நிலவாமல், அண்டை நாடுகளுடன் வர்த்தக உறவுகளைப் பேணாமல் நாம் வாழும் புவியியல் வியூகத்தில் இருந்து முழுமையான பலன்களை எம்மால் பெற முடியாது போகும் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையே சமீபத்தில் செய்து கொள்ளப்பட்ட போர்த்தவிர்ப்பு உடன்படிக்கையையடுத்தே, இரு நாடுகளும் தத்தமது பகையுணர்வுகளை புதைத்துவிட்டு சமாதான வழிமுறைகளுக்கு ஒரு வாய்ப்பைத் தருவதற்கு முயற்சிப்பதாகவே பாக். பிரதமரின் உரையை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் இதற்கு முன்னரும் போர்த்தவிர்ப்பு ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையூட்டும் வகையில் நிகழ்ந்ததும் பின்னர் இரு நாடுகளும் பழைய பிணக்கு நிலைக்கே திரும்பிய வரலாற்றை பார்க்கும்போதும் இன்று தோன்றியிருக்கும் புதிய நிலை நீடிக்குமா என்ற சந்தேகம் எழத்தான் செய்யும். எனினும் இரு நாடுகளும் இணைக்கப்பாட்டுடன் செயல்பட முன்வருமானால், அது நீடித்து நிலைக்குமானால், இவ்விரு நாடுகளிலும் வாழும் பல நூறு மில்லியன் மக்கள் மட்டுமல்ல; தெற்காசிய பிராந்தியத்தில் வாழ்வோரும் இதனால் பயனடையப் போகிறார்கள் என்பதே உண்மை.

இப்போது சில இந்திய மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பாகிஸ்தான் பிரச்சினை பிரஸ்தாபிக்கப்படாமல் இந்திய மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் பாகிஸ்தான் தொடர்பான பேச்சுகள் மக்கள் மத்தியில் எடுபடும். இவ்வாறான சிறிய சிறிய சுவடுகள் சமாதானத்தை நோக்கிய பெரியதொரு பாய்ச்சலுக்குவழி வகுக்கும் என இரு நாடுகளும் எதிர்பார்ப்பது போலத் தெரிகிறது.

பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜாவிட் பாஜ்வா தனது உரையொன்றில், நாம் எமது கூடாரத்தை ஒழுங்கமைக்காமல் அதை வெளியில் எதிர்பார்க்கக் கூடாது என்றும் இந்தியாவுடனான அமைதியானதும் கௌரவ மிக்கதுமான பேச்சுவார்த்தைகள் ஊடாக எல்லா நிலைத்து நிற்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டியுள்ளது. இதன் மூலம் நிலைமைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று தொட்டுக் காட்டியிருக்கிறார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு இந்திய – பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டியது அவசியம். தீர்க்கப்படாத இப் பிரச்சினைகளே தெற்காசியாவை வளர விடாமல் வறுமைக்குள்ளும் வளர்ச்சியற்ற நிலைக்குள்ளும் நெட்டித் தள்ளுகின்றன. வர்த்தகம், அடித்தள கட்டமைப்பு வசதிகள், நீர்வளம், எரிசக்தி வளம் என்பவற்றை எடுத்துக் கொள்வோமானால் தெற்காசியாவே உலகிலெயே குறைந்த அளவில் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய பிராந்தியமாக விளங்குகிறது. நாம் இவற்றைச் செய்வதற்கு பதிலாக பாதுகாப்புக்காக பெருமளவில் செலவிடுகிறோம். இந்த நிதிமக்கள் அபிவிருத்தி திட்டங்களின் பேரில் செலவிடப்பட்டிருக்க வேண்டியது என்றும் பஜ்வா தனது உரையில் சுட்டிக் காட்டுகிறார்.

நம் ஒருவரோடு ஒருவர் பொருதிக் கொண்டிருக்காமல் தொடர்பாடல், அமைதியாக இணைந்து வாழ்தல் என்பவற்றில் ஈடுபாடு காட்ட வேண்டும். பசிப்பிணி, பாமரத்தன்மை, நோய்கள் என்பனவற்றுக்கு எதிராக பணிகளில் வளப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி, நாட்டுக்குள்ளும் வெளியிலுமாக நீடித்த சமாதானத்தை ஏற்படுத்தல், அயல்நாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் விவகாரங்களில் எவ்வகையிலும் தலையீடு செய்யாதிருத்தல், பிராந்திய மட்டத்தில் வர்த்தக மற்றும் தொடர்பாடலில் பெரிய அளவில் அபிவிருத்திகாணல், முதலீடு மற்றும் பொருளாதார மையங்களை உருவாக்குவதன் மூலம் நீடித்த அபிவிருத்தியை அடைதல் ஆகிய நான்கு தீர்வுக்கான தூண்களைப் பற்றியும் அவர் பேசுகிறார். இப் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கான தூண்களாக இவை தாங்கிப் பிடிக்கும் என்கிறார்.

கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி பாகிஸ்தான் பிரதமருக்கு பாரதப் பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், பாகிஸ்தான் மக்களுடன் நட்புபூர்வமான உறவுகளை வைத்துக் கொள்ள இந்தியா ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் பொருட்டு நம்பிக்கை, பகைமை மற்றும் பயங்கரவாதச் செயல்களை தவிர்த்தல் என்பனவற்றை கைகொள்வது முக்கியம் என்றும் பாரதப் பிரதமர் குறிப்பிடுகிறார்.

1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான நிரந்தர சிந்து நதி கமிஷன் நிறுவப்பட்டது. வருடத்துக்கு ஒருமுறை இந்த ஆணைக்குழு கூடிப்பேச வேண்டும். கடைசியாக இந்த ஆணைக்குழு 2018ஆம் ஆண்டு லாகூரில் கூடியது. அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 23-24ம் திகதிகளில் இக் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. அரசியல் அவதானிகள் இதை ஒரு நல்ல சமிக்ஞையாகவே பார்க்கின்றனர். திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்களுக்கான இந்திய மத்திய அமைச்சரான ஆஸாத் உமர், மோடியவர்கள் எழுதிய கடிதத்தை நல்லெண்ணச் செய்தி என வர்ணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசு பாகிஸ்தானுடன் எந்தவிதமான இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் தவிர்த்தே வந்துள்ளது. இந்திய மண்ணில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களே இந்தியாவின் தயக்கத்துக்குக் காரணம். ஆனால் நடைபெறவுள்ள ஆசிய மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கரும் பாக். வெளிவிவகார அமைச்சர் ஷா மொஹமட் குரேஷியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது. இப்பேச்சுவார்த்தையின் பின்னர் 2019ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையோடு நின்றுபோன இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இன்னொரு முக்கியமான விஷயமும் குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாண்டின் பிற் பகுதியில் ஷங்காய் கோர்பரேஷன் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் பன்நாட்டு இராணுவ ஒத்திகையில் கலந்து கொள்வது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. இந்த பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையில் இந்தியா கலந்து கொள்ளுமானால் இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே அமையும்.

நோமன் ஹுஸைன்

Comments