மேற்கிந்திய தீவுகள்-இலங்கை 2ஆவது டெஸ்ட் வீரர்களின் நிதான ஆட்டம்; போட்டி சமநிலையில் | தினகரன் வாரமஞ்சரி

மேற்கிந்திய தீவுகள்-இலங்கை 2ஆவது டெஸ்ட் வீரர்களின் நிதான ஆட்டம்; போட்டி சமநிலையில்

துடுப்பாட்ட வீரர்களின் நிதான ஆட்டத்தினால் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை சமன் செய்தது இலங்கை அணி. மேற்கிந்தியதீவு- இலங்கை அணிகள் மோதிய 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றறது.

முதலில் ஆடிய மேற்கிந்தியதீவு அணி முதல் இன்னிங்சில் 354 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டையும் இழந்தது. அவ்வணியின் தலைவர் பரத்வெயிட் 126 ஓட்டங்களும், ரகீம் கொர்ன்வால் 73 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், சமீர 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 258 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. திரிமான்ன 55 ஓட்டங்கள் எடுத்தார். பெத்தும் நிசங்க அரைச் சதமடித்து 51 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். சந்திமால் 44 ஓட்டங்களும், தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியதீவு அணி சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டும், அல் ஜாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

96 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்தியதீவு அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேம்ப்பெல் 10 ஓட்டங்களும், பிளாக்வுட்18 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழந்தனர்.

தலைவர்  பரத்வெயிட் அரைச் சதம் கடந்தார். அவர் 85 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். கைல் மேயர்ஸ் அரைச் சதமடித்து 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் அரைச் சதம் அடித்தார். மேற்கிந்தியதீவு அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 280 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. ஹோல்டர் 71 ஓட்டங்களும், ஜோஷ்வா டி சில்வா 20 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 377 ஓட்டங்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான தொடக்கத்தைத் தந்தனர்.திரிமான்ன 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க. மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கருணரத்ன 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஒஷத பெர்னாண்டோ அரைச் சதம் கடந்தார்.

இறுதியில், ஐந்தாம் நாள் இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 0-0 என சமனில் முடிந்தது.ஆட்ட நாயகன் விருது கிரெய்க் பரத்வெயிட்டுக்கும், தொடர் நாயகன் விருது சுரங்க லக்மலுக்கும் வழங்கப்பட்டது.

டெஸ்ட் தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரை 0-0 என சமன் செய்தாலும் இருபதுக்கு 20 தொடரை 1-2 ,ஒரு நாள் தொடரில் 0-3 என மேற்கிந்திய தீவு அணியிடம் இழந்தது. எப்படி இருந்த போதும் அவ்வணி டெஸ்ட தரவரிசையில் 8 ம் இடத்தில் உள்ளது  குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பவுள்ள இலங்கை அணி  சொந்த மண்ணில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தகக்து.

இலங்கை அணி எதிர்வரும் 20ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. இரண்டாவது போட்டியும் கண்டியில் இடம்பெறவுள்ளது.

Comments