உலக கிண்ண போட்டிக்கு கூடுதல் வீரர்களை தெரிவு செய்ய ஐ.சி.சி. அனுமதி | தினகரன் வாரமஞ்சரி

உலக கிண்ண போட்டிக்கு கூடுதல் வீரர்களை தெரிவு செய்ய ஐ.சி.சி. அனுமதி

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர் 8 பேர் என்று மொத்தம் 23 பேரை வைத்துக் கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் இந்த எண்ணிக்கையை 30 ஆக ஐ.சி.சி. உயர்த்தியுள்ளது. கூடுதலாக உள்ள 7 பேர் வீரர்களாகவோ அல்லது உதவியாளர்களாகவோ இருக்கலாம்.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் தங்களை உட்படுத்தியே வீரர்கள் போட்டியில் பங்கேற்கும் நிலைமை உள்ளது. அதனால் அவசரம் கருதியோ அல்லது காயத்தாலோ ஒரு வீரர் விலகும் போது அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்தாலும் உடனடியாக களம் இறக்க முடியாது. தனிமைப்படுத்துதல் நடைமுறை எல்லாம் முடித்த பிறகே இணைய முடியும்.

இதை கருத்தில் கொண்டு முதலிலேயே கணிசமான வீரர்களை தேர்வு செய்ய ஐ.சி.சி. இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கிண்ண மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் பெண்கள் 50 ஓவர் உலக கிண்ண போட்டிகளின் போது அணிகள் தங்களது வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளலாம்.

Comments