அஷ்ரஃப் காலத்து யாப்பை மீண்டும் கொண்டு வந்தால்தான் முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்தலாம் | தினகரன் வாரமஞ்சரி

அஷ்ரஃப் காலத்து யாப்பை மீண்டும் கொண்டு வந்தால்தான் முஸ்லிம் காங்கிரஸைப் பலப்படுத்தலாம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைவதானால் அஷ்ரஃப் காலத்து யாப்பைக் கொண்டு வரல் அவசியமென்றும் சிறுபான்மைச் சமூகங்கள் பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் இன்றைய காலகட்டத்தில், நடைபெறச் சாத்தியம் என எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலிலாவது பொதுவான கூட்டணியில் போட்டியிடுவது சிறந்ததெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹஸனலி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களில் நீங்களும் பிரதானமானவர். அவ்வாறிருந்தும் கட்சியை விட்டு விலக்கப்பட்டுள்ளீர். இதிலுருந்த பின்புலங்கள் என்ன?

பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களில் அதிகமானோர் தற்போது அந்தக் கட்சியில் இல்லை. ஸ்தாபகத் தவிஸாளர் ஷேகு இஸ்ஸதீன் இல்லை.

நானும் இக்கட்சியில் இல்லை. ஷேகு இஸ்ஸதீன் வெளியேற் றப்பட்டதற்கும் எனது வெளியேற்றத்திற்கும் வெவ்வேறு பின்புலங்கள் உள்ளன. தலைவர் அஷ்ரஃபுடன் முரண்பட நேரிட்டபோது ஷேகு இஸ்ஸதீன் கட்சியின் யாப்பை மாற்றுமாறு கோரவில்லை.வேறு சில முரண்பாடுகளே அவரது வெளியேற்றத்துக்கு காரணமாகியது. ஆனால், கட்சி யாப்பை மாற்றுமாறு கோரித்தான் ஹக்கீமுடன் நான் முரண்பட்டேன். தலைவர் அஷ்ரஃபின் காலத்திலிருந்த யாப்புத்தான் முஸ்லிம் காங்கிரஸுக்குத் தேவை. துரதிஷ்டவசமாக 2016 இல் இந்த யாப்பு மாற்றப்பட்டது. 27 பேராக இருந்த உயர்பீடத்தில் 102 பேர் உள்வாங்கப்பட்டனர். கட்சிக்குள் தனிநபரின் பிடியை இறுக்கி, ஒருவர் தனிவிருப்பில் இயங்குவதற்கு அல்லது தலைவருக்கு விருப்பமான பலரை உயர்பீடத்தில் உள்வாங்கும் நோக்கிலே, இதில் திருத்தம் கொண்டு வந்தனர். வடக்கு, கிழக்கு மாகாணத் தளத்தை இயங்கு எல்லையாகக் கொண்டுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் தளத்தின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ளாத வகையிலே, யாப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் கவலை, இதற்காகத்தான் முரண்பட்டேன். ஏற்கனவே இருந்த தலைவர் காலத்து யாப்பை மீண்டும் கொண்டு வந்தால், எவ்வித நிபந்தனையும் இன்றி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவேன்.

கே: முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்தால், முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டணிக்கான முயற்சிகள் கைவிடப்படுமா?

பதில்:நான், ஏற்கனவே சொன்னதைப் போல அஷ்ரஃப் காலத்து யாப்பு வந்தால் எனது தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து விடுவேன். இந்த யாப்பில் இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் எந்தத் தேவையும் எனக்கு எழாது. தனி நபருக்கு துதிபாடும் கட்சி யாப்பு முஸ்லிம் சமூகத்துக்கு நன்மையளிக்காது. மட்டுமல்ல வடக்கு. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேவை, தனித்துவம் அடையாளங்களுக்கு முன்னுரிமை வழங்குவதையே கட்சி சிந்திக்க வேண்டும். அதற்காக,தென்னிலங்கை முஸ்லிம்களை கைவிடுமாறு நான் கோருவதாக நினைக்கத் தேவையில்லை. அடையாள அரசியலுக்கு வடக்கு, கிழக்கு மாகாணம்தான் சாத்தியமானது. இதற்கான தேவையும் இங்குதான் உள்ளது. ஏனைய பிரதேச முஸ்லிம்களை அரசியல் ரீதியாக வழி நடத்துவதற்கான அரசியல் பலம் முஸ்லிம் காங்கிரஸுக்கு இருப்பது அவசியம்தான். இந்தப் பலம் ஒன்றுபடலில்தான் மீண்டும் கிடைக்கும்.

கே: நீங்கள் எதிர்பார்ப்பது போன்று தனி நபர் பிடி, கட்டுப்பாடு கட்சிக்குள் நீக்கப்படாது,புதிய யாப்பே தொடர்ந்தும் பேணப்பட்டால்?

பதில்: இதன்பின்னர்தான் வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கான அரசியல் முன்னெடுப்புக்கள் மும்முரப்படுத்தப்படும்.இதற்குத் தலைமை தாங்கும் பொறுப்பு தேசிய காங்கிரஸிடம்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்து, கட்சியால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ள அதிருப்தி எம்பிக்களைச் சேர்த்தாவது பொதுவான கூட்டணி அமைப்பது காலத்தின் தேவை. இவை எல்லாவற்றையும் விட,சகோதர தமிழ் கட்சிகளுடன் இணைந்து வடக்கு, கிழக்கில் இயங்கும் முஸ்லிம் கட்சிகள் கூட்டணியமைப்பது இன்னும் பொருத்தமுடையதாக இருக்கும். அரசாங்கத்தின் போக்கில், அதிருப்தியுற்றதான ஒரு பார்வையை வௌியுலகுக்கு காட்டுவதற்கு இது உதவும்தானே.

மட்டுமல்ல,தமக்குச் சார்பான ஒரு முதலமைச்சரை கிழக்கில் கொண்டு வரும் அரசாங்கத்தின் யோசனையை அடியோடு தோற்கடிக்கவும் இந்த, தமிழ் முஸ்லிம் கூட்டணி உதவும்.

சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யுமாறுதானே,ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் முடிவுகளும் தெரிவிக்கின்றன.

ஏ.ஜீ.எம்.தௌபீக்

Comments