நீண்டகால சட்டவிரோத தங்கக் கடத்தல் முறியடிப்பு; கட்டுநாயக்காவில் சிக்கிய 17 கிலோ தங்கக்கட்டிகள் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

நீண்டகால சட்டவிரோத தங்கக் கடத்தல் முறியடிப்பு; கட்டுநாயக்காவில் சிக்கிய 17 கிலோ தங்கக்கட்டிகள்

- டுபாயிலிருந்து எடுத்து வரப்பட்டு விமான நிலைய சுத்திகரிப்பு தொழிலாளியின் உதவியுடன் நாட்டுக்குள் கடத்த திட்டம்

20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த 17 கிலோ எடையுள்ள 161 தங்க கட்டிகள் நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார். 

சுங்கத் திணைக்களம் நடத்திய விரிவான விசாரணைகளின் இறுதியில் நீண்டகாலமாக நடத்திவந்த சட்டவிரோத தங்கக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவரின் உதவியுடன் தங்கக் கடத்தல் நடத்தப்பட்டுள்ளது.  டுபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகளை கறுப்புநிற டேப்களினால் சுற்றி விமான நிலையத்தின் மலசலகூடத்தில் மறைத்து வைக்கின்றனர்.

மலசலகூட சுத்திகரிப்பு தொழிலாளி இவற்றை எடுத்து புலோர் பொலிஷ் இயந்திரத்துக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து நிலத்தை சுத்திகரிப்பதாக காண்பித்து சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியாமல் வெளியில் எடுத்து வருகின்றனர். மலசல கூடத்துக்குள் மறைத்து வைத்தவர் வெளியில் இவற்றை பெற்றுக் கொள்கின்றார்.

இவ்வாறு நேற்று தங்கக்கட்டிகளை மறைத்து வெளியில் கொண்டுவர முயற்சித்த போதே சுங்கத்திணைக்களத்தின் போதை ஒழிப்பு பிரிவினர் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

நேற்று கைப்பற்றப்பட்ட பொதிகளில் 161 தங்க பிஸ்கட்டுகள் இருந்ததாகவும் சுமார் 20 கிலோ எடை கொண்டதாகவும் தற்போதைய சந்தைப் பெறுமதின் படி 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை என்றும் சுங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீ.வி. ரவிப்பிரியவின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேலதிக சுங்கப் பணிப்பாளர் ஆனந்த ஈஸ்வரன்மற்றும் பணிப்பாளர் ( சமூக பாதுகாப்பு பிரிவு) ராஜரத்ன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பிரதி சுங்க பணிப்பாளர் ( போதை வஸ்து கட்டுப்பாட்டுப் பிரிவு) ரி. வெலிகலவின் உத்தரவின் பேரில் இந்த நபர் கைது செய்யப்பட்டதுடன் தங்க பிஸ்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்க அதிகாரிகளான காமினி, ஹசந்த குருகே,பிரதி சுங்க அதிகாரிகளான அபேநாயக்க,ஸ்ரீலால் விஜேவர்த்தன, ரசிக்க சமன்ஜித் மற்றும் உதவி சுங்க அதிகாரிகளான டில்ஷான், வெலிகம்பிட்டிய,பினோஜ் குரே ஆகியோர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

கே.அசோக்குமார்   

Comments