இழுத்தடிப்புகளுக்கு இனிமேல் இடமில்லை! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

இழுத்தடிப்புகளுக்கு இனிமேல் இடமில்லை!

நாடொன்றின் ஜனநாயகத்தை மதிப்பிடும் அளவுகோல்களில் குறித்த காலப் பகுதியில் நடத்தப்படும் தேர்தல்கள் முக்கியமானவையாகும். கொவிட்19 தொற்று போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால்  தேர்தல்கள் பிற்போடப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தாலும், மறைமுக நோக்கங்களுக்காக தேர்தல்களை பிற்போடும் முயற்சி ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவே அமையும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாது இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்த நிலையில் பொதுத் தேர்தலின் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு கொவிட்-19 பெருந்தொற்று சூழல் பாதிப்பாக அமைந்தது. ஒரு வருடத்துக்கு மேலாக கொவிட் தொற்று சூழல் பல்வேறு வகையான சவால்களை நாட்டுக்குக் கொடுத்திருந்தது.  மாகாணசபைத் தேர்தல் தாமதம் அடைவதும் அவற்றில் ஒன்றாகும்.

இவ்வாறான நிலையில் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு படிப்படியாக தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில், மாகாணசபைத் தேர்தலை நோக்கிய நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

மாகாணசபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துமாறு அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து அதிகாரிகளுக்குப் பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் நடத்துவதில் அரசியல்வாதிகள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தாலும், ஆட்சியின் தலைமைத்துவம் இத்தேர்தல்களை நடத்தும் விடயத்தில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அரசியல் பிரதிநிதிகளை  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்திருந்தார். இச்சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டவரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

அதேசமயம், தொகுதி முறை, எல்லை நிர்ணயம், ஐம்பதுக்கு ஐம்பது, பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்டவரைபு அவர்களினாலே தோற்கடிக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகள் இப்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வழங்கிய இந்தப் பணிப்புரையைத் தொடர்ந்து சட்டரீதியாக காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷ  முன்வைத்துள்ள பிரேரணை நாளைய தினம் (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை பிரதமர் சார்பில் சபை முதல்வரும், வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இந்த விசேட குழு 15 உறுப்பினர்களை கொண்டமையவுள்ளதுடன், சபாநாயகரினால் குழு நியமிக்கப்பட்டதை அடுத்து 06 மாதங்களில் அதன் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்பதும் இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதும் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவின் பொறுப்பாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்திருந்த கடந்த அரசாங்கம், மாகாணசபைத் தேர்தல் சட்டத்திலும் திருத்தத்தைக் கொண்டு வந்தது. விகிதாசார முறை மற்றும் வட்டார முறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கலப்பு முறையில் தேர்தலை நடத்தும் வகையில் இத்திருத்தம் தயாரிக்கப்பட்டிருந்தது. பெரிய கட்சிகளுக்கு இத்தேர்தல் முறையில் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத போதும், தமக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அப்போதைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாகவிருந்த சிறுபான்மைக் கட்சிகள் போர்க் கொடி தூக்கத் தொடங்கின.

கலப்பு முறையான மாகாணசபைத் தேர்தல் முறைக்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளப்படும் எல்லை நிர்ணயம் தமக்கு பாதிப்பாக அமையும் என்றும் அக்கட்சிகள் சுட்டிக் காட்டியிருந்தன. குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியதால், சிறுபான்மைக் கட்சிகளின் நிபந்தனைக்கு உட்பட வேண்டிய தேவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. குறித்த சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தினத்தில் இறுதி நேரம் வரை பேரப் பேச்சுக்கள் இடம்பெற்று நிபந்தனைக்கு இணக்கம் காணப்பட்டது.

அதாவது, எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலே குறித்த மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பூர்த்தியடையும் என்ற விடயம் குழுநிலையில் திருத்தமாக முன்வைக்கப்பட்டது.
பங்காளிக் கட்சிகளின் இந்த நிபந்தனையுடன் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு வருடங்கள் உருண்டோடிய போதும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குறித்த சட்டமூலம் இன்னமும் பூர்த்தியாகவில்லை. இதனால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடை தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு தெரிவுகளே தற்போதைய அரசுக்கு உள்ளன. அதாவது எல்லை நிர்ணய சபையின் அறிக்கையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கலப்புமுறையான தேர்தலுக்குச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் புதிய சட்டமூலத்தை வாபஸ் பெற்று மீண்டும் பழைய தேர்தல் முறைக்கு சட்டரீதியாக உயிரளிக்க வேண்டும். இந்த இரண்டு தெரிவுகளில் ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தல் மற்றும் பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள விசேட தெரிவுக்குழு என்பனவும் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முயற்சிகளாகவே காணப்படுகின்றன.

தற்பொழுதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வது மிகவும் சுலபமானது. எனவே பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் தெரிவுக்குழு எவ்வாறான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்குமாயின், உடனடியாக அதற்கான சட்டத்திருத்தங்களை அரசினால் மேற்கொண்டு விட முடியும். எதிர்வரும் ஓரிரு மாதத்துக்குள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வருட இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கத்தினால் நடத்தி விட முடியும்.

அதேநேரம், கொவிட்-19 தொற்று சூழல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லையென்பதால், தேர்தலுக்குச் செல்வது உசிதமானதா இல்லையா என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் இருப்பதாகவே தெரிகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அக்கூட்டத்தில் முடிவுகள் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறான நிலையில் இவ்வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல் பற்றிய தீர்மானங்கள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்19 சூழலால் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், மாகாணசபைத் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு எந்தளவு ஏதுவாக இருக்கும் என்பது நோக்கப்பட வேண்டிய விடயமாகும். குறிப்பாக விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்கொண்டு செல்வதில் அசௌகரியங்களுக்கு வழியேற்படுத்தியுள்ளன. இது அரசாங்கத்தின் மீதான நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

மறுபக்கத்தில் இந்த நிலைமையை எதிர்க்கட்சியினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் தேர்தலைப் பின்புலமாகக் கொண்டு கிராம மக்களைச் சந்திக்கும் வெவ்வேறு வேலைத் திட்டங்களை இரண்டு பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஆரம்பித்து விட்டன என்றே கூற வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒவ்வொரு வாரமும் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கும் வேலைத் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறார்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது சூழ்நிலை எவ்வாறானதாக இருந்தாலும் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் மாகாணசபைத் தேர்தலொன்றை எதிர்கொள்வதற்குத் தம்மைத் தயார்ப்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பி.ஹர்ஷன்

Comments