மூலோபாய ஒத்துழைப்பாக ஈரான்- சீன உடன்படிக்கை | தினகரன் வாரமஞ்சரி

மூலோபாய ஒத்துழைப்பாக ஈரான்- சீன உடன்படிக்கை

உலக அரசியலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதன் ஒரே சுற்று ஒரே பாதை எனும் திட்டம் 70 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இயங்க தொடங்குகிறது. பிராந்தியங்களில் பலமான நட்பு சக்திகளை உருவாக்கிக் கொண்டு வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் இராணுவ விடயங்களிலும் ஈடுபாடு காட்ட முனைகிறது. வெளிப்படையாக இராணுவ நகர்வு எதனையும் காட்டிக் கொள்ளாத சீனா இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகளை தனது நட்பு நாடுகளுடன் மேற்கொண்டு வருகிறது. மியான்மாரின் இராணுவ ஆட்சியை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை வரை செயல்படும் சீனா வீட்டோவைப் பயன்படுத்தும் முனைப்பிலும் செயல்படுகிறது. சீனாவின் மிகப்பிந்திய நகர்வாக ஈரானுடனான கால் நூற்றாண்டு மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றினை 27.03.2021 அன்று மேற்கொண்டுள்ளது. இக்கட்டுரையும் ஈரான்-, சீன உறவின் முக்கியத்துவத்தை தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் உடன்படிக்கையின் உள்ளடக்கத்தினை அவதானிப்போம். குறிப்பாக 25 ஆண்டுகளுக்குரிய ஈரான் -சீன மூலோபாய உடன்படிக்கையின் பிரகாரம் எண்ணெய் ஏற்றுமதி சுரங்கத் தொழிற்றுறை விருத்தி போக்குவரத்து விவசாய ஒத்துழைப்பு சுற்றுலா, கலாசார பரிமாற்றங்கள் அதிகரிப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சீனாவின் முதலீடு 400 மில்லியன் அ.டொலராக அதிகரிக்கும் ஆவணத்திலும் உடன்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இரு நாட்டு உடன்படிக்கையும் இரு நாட்டுக்கும் இடையில் இராஜதந்திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டினை நிறைவு செய்யும் நிகழ்வாக அமைந்துள்ளது. சீன நாட்டின் சார்பில் பிரதிநிதியான வாங் ஜி மற்றும் ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஷரிப் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். சீனத் தூதுக்குழுவினர் மேற்காசியா நாடுகளான சவூதியரேபியா, பஹ்ரைன், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஈரான் ஆகிய ஆறு நாடுகளுக்குமான விஜயத்தின் போதே இத்தகைய உடன்பாட்டினை எட்டியுள்ளனர். ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உடன்பாடு தொடர்பில் மேற்கு ஊடகங்களின் செய்திகளின் படி இரு நாட்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் முழுமையான விபரம் இதுவரை வெளியாக வில்லை என்றே குறிப்பிடுகின்றன. எது எவ்வாறானதாக அமைந்தாலும் இரு நாட்டுக்குமான உடன்பாடு அதிக பிரதி பலிப்புக்களை பிராந்திய சர்வதேச அரசியலில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

முதலாவது ஈரான் முதல் தடவையாக நீண்ட கால உடன்பாடு ஒன்றினை வல்லரசு நாட்டுடன் மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு 10 ஆண்டுகால உடன்பாடு ஒன்றினை ரஷ்யாவுடன் மேற்கொண்டிருந்தது. அது இரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு உடன்படாகவும் அணுசக்தி ஒத்துழைப்பாகவுமே அமைந்திருந்தது. ஆனால் வெளிவந்த தகவலின் படி ஈரான் சீனாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தெரிகிறது.இதில் அதிக முக்கியத்துவம் பெற்ற விடயம் ஈரானில் சீனாவின் முதலீட்டை அதிகரிப்பதாகும். 2010 முதல் 2020 வரை சீனாவின் முதலீடு 18.2 பில்லியனாகவே இருந்துள்ளது. இது ஏனைய மேற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவானதே. சவூதி அரேபியாவில் 30.6 பில்லியனும் ஐக்கிய அரபு எமிரேட்றில் 29.5 பில்லியனாகவும் காணப்பட்டது.

இரண்டாவது அமெரிக்காவின் பொருளதாதாரத் தடையை வெற்றி கொள்வதென்பது ஈரானின் உடனடித் தேவையாகவுள்ளது. அதனடிப்படையிலேயே சீனாவுடனான பொருளாதார உடன்பாட்டினை ஈரான் மேற்கொண்டுள்ளது. காரணம், இத்தகைய உடன்படிக்கை பற்றி 2016 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜின் பிங் ஈரானுக்கு விஜயம் செய்த போது ஈரானிய உயர்தலைவர் அலி கமேனியுடனான சந்திப்பின் போது உரையாடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அமெரிக்கா ஈரானுடனான அணுகுமுறையில் ஏதும் மாற்றம் மேற்கொள்ளும் என ஈரான் எதிர்பார்த்திருந்துள்ளது. ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்பும் அதிக மாறுதல் ஏற்படவில்லை என்ற அடிப்படையிலும் பொருளாதாரத் தடையை அணுவாயுதத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா செயல்படுவதும் ஈரானின் நடவடிக்கை சீனா நோக்கி முழுமையாக மாறுவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

மூன்றாவது இது பொருளாதார கலாசார விடயத்தைக் கடந்து இராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளது. காரணம் ஈரானின் அணுவாயுதம் நீண்ட சர்ச்சையாக அமைந்திருப்பதுடன் அதனை கைவிடும் நிலையில் ஈரான் இல்லாததும் முக்கியமானதாகும். அது மட்டுமன்றி கடந்த ட்ரம்ப் காலத்தில் ஈரான் இராணுவ ரீதியில் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு இராணுவ ரீதியில் செயல்பட வேண்டிய நிலைக்குள் ஈரான் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அனுபவம் ஒன்றினையும் ஈரான் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. அதாவது சீனாவின் ஒத்துழைப்புடனேயே பாகிஸ்தான் அணுவாயுதத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்திருந்தது. தற்போது கூட பாகிஸ்தான் சீன உறவு பிராந்திய அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதனால் ஈரான் பலதடவை முயன்றும் அணுவாயுதத்தை அடைய முடியாதுள்ளமை கவனத்திற்குரியதாகும். ஏற்கனவே ரஷ்யாவுடன் வலுவான நட்பினைக் ​ெகாண்டுள்ள ஈரான் அதிலும் அணுவாயுத விடயத்திலேயே அத்தகைய ஒத்துழைப்பினை கொண்டிருந்த ஈரான், சீனாவுடனும் அத்தகைய விடயத்தினை கருத்தில் கொண்டிருக்க வாய்ப்பு அதிகமுண்டு. உடன்பாட்டின் முழுமையான விபரம் வெளியாகாததற்கு இராணுவ விடயங்கள் ஏதும் காரணமாக அமையலாம் என மேற்குலக ஊடகங்கள் கருதுகின்றன. அதற்கான வாய்ப்பு அதிகமுண்டு.

நான்காவது மேற்காசியாவில் ஈரான் மீதான நெருக்கடி அதிகரித்துக் கொண்டு செல்கிறது. குறிப்பாக அமெரிக்கா மட்டுமல்ல இஸ்ரேல் சவூதியரேபியா துருக்கி போன்ற நாடுகளது நெருக்கடி அதிகரித்துக் கொண்டு செல்வதனால் ஈரான் பாதுகாக்கப்பட வேண்டிய நிலைக்குள் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் மேற்குலகமும் ஈராக் நாட்டை எவ்வாறு கடந்த காலத்தில் கையாண்டு அழிவையும் சிதைவையும் மட்டுமே ஏற்படுத்தினார்களோ அதே மாதிரி ஈரானை அணுக ஆரம்பித்துவிட்டார்கள். இஸ்லாமிய நாகரீகத்தின் மையம் எனக்கருதப்பட்ட ஈராக் துடைத்தொழிக்கப்பட்டு விட்டது. அதற்கான உத்திகளை மேற்கு மிகச் சிறப்பாக மேற்கொண்டு வெற்றி கண்டது. அவ்வாறே இஸ்லாமிய நாகரீகத்தில் எஞ்சியிருக்கும் ஈரானையும் அழிக்க மேற்குலக நாடுகள் திட்டமிடுகின்றன. குறிப்பாக சியா சுன்னி பிரிவினையை தூண்டிவிட்டு இஸ்லாமிய ஐக்கியத்தினை உடைத்து ஆயுதக்குழுக்களை உருவாக்கி அந்த நாகரீகத்தின் பண்புகளையும் அடிப்படைகளையும் தகர்த்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்தவும் தற்பாதுகாத்துக் கொள்ளவும் ஈரானுக்கு வல்லரசுகளின் ஒத்துழைப்பு அவசியமானதாக தெரிகிறது. அதனடிப்படையிலேயே சீனாவுடனான உடன்பாடு நிகழ்ந்துள்ளது.

ஐந்தாவது, ஈரானியரின் இராஜதந்திரம் மிக முக்கியமான அமெரிக்க எதிரி நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளமை அமைந்துள்ளது. ரஷ்யா கூட இடைநடுவில் நடுநிலமை என்று தனது நிலையை கட்டுப்படுத்திக் கொள்ளும். ஆனால் சீனாவுக்கு பிராந்தியங்களை இணைப்பதும் தனது புதிய பட்டுப்பாதையை நிலை நிறுத்துவதும் பொருளாதார வாய்ப்புக்களை விஸ்தரிப்பதுவும் நோக்கமாக அமைந்திருப்பதுடன் அமெரிக்காவை விழ்த்தி முதல்தர வல்லரசாக உலகத்தில் எழுச்சியடைய வேண்டும் என்ற திட்டமிடலுடன் செயல்படுகிறது. அதனால் இலகுவில் பின்வாங்காத நிலையை கருத்தில் கொண்டுள்ளது ஈரான். இது ஈரானின் வெற்றிகரமான தந்திரோபாயமாகவே தெரிகிறது. கூட்டு தந்திரோபாயத்தின் மூலமே கூட்டு தந்திரோபாயத்தை தோற்கடிக்க முடியும் என்ற சர்வதேச அரசியலின் விதியை ஈரான் கைக்கொண்டுள்ளது.

ஆறாவது, இது சீனாவுக்கு வாய்ப்பான பொறியாகவே தெரிகிறது. அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளதும் தென் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் அதிகரித்துவரும் நெருக்கடியை கையாள ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதனுடன் அதற்கு பொருளாதார ரீதியில் சந்தையும் வர்த்தகமும் மேற்காசியா நோக்கி செயல்பட உதவக் கூடியதாக உள்ளது. இது மேற்காசிய நாடுகளுடன் சீனா ஏற்கனவே கொண்டிருந்த நட்பினை விஸ்தரிக்கவும் பரஸ்பரம் ஒத்துழைப்பினை அதிகரிக்கவும் அடிகோலியுள்ளது.மேற்காசியாவில் மட்டுமல்ல அடுத்துவரும் உலக அரசியலில் ஈரான் பிரதான மையமாக விளங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். ஏறக்குறைய மேற்குலகத்திற்கும் இஸ்ரேலுக்கும் அதிக நெருக்கடியை தரக்கூடிய நாடாக ஈரான் விளங்கும் என்பதனால் சீனா மிக முக்கிய பங்கெடுக்கும் நாடாக விளங்கும்.

எனவே உலகளாவிய அரசியல் பரப்பில் ஈரான் சார்ந்து சீனாவின் நகர்வு பரஸ்பரம் இரு நாட்டினது அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ விடயங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறவுள்ளது. இதில் இரு நாடுகளும் உடன்பாட்டினால் சமநன்மையை எட்டியுள்ளன. ஈரானைப் பொறுத்தவரை பரந்த மூலோபாயத்தினை எட்டியுள்ளது. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மட்டுமல்ல பிராந்திய நாடுகளையும் அணுவாயுத திட்டத்திற்கான தீர்வையும் எட்டுவதற்கான பொறிமுறையை இத்தகைய உடன்பாட்டின் மூலம் எட்டியுள்ளது. அத்துடன் பொருளாதார தடைகளையும் தகர்க்கும் உத்தியையும் இவ்வுடன்படிக்கை ஈரானுக்கு தந்துள்ளது. எனவே தான் இது ஒரு பரந்த மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழம்

Comments