மாகாணசபை தேர்தல் மீது அரசியல் கட்சிகள் இலக்கு! | தினகரன் வாரமஞ்சரி

மாகாணசபை தேர்தல் மீது அரசியல் கட்சிகள் இலக்கு!

ஒரு வருடத்துக்கு மேலாக இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளைப் பல்வேறு அச்சுறுத்தலுக்கும், சவால்களுக்கும் உட்படுத்திய கொவிட்-19 உலகத் தொற்று நோயின் தாக்கம் ஓரளவு குறையத் தொடங்கியிருக்கும் இன்றைய நிலையில், நாட்டின் இயல்புநிலை படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருகிறது.

பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை இதற்கான ஒரு அறிகுறியாக அமைகிறது. கொவிட்19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை ஏற்றத் தொடங்கியதிலிருந்து தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சி கண்டிருப்பதால், மக்கள் மத்தியில் ஒரு விதமான நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது.

நாடு இயல்பு நிலைமைக்குத் திரும்புவது அரசியலிலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும். சுகாதார ரீதியில் சாதகமான சூழ்நிலை தோன்றியிருப்பதால், மாகாண சபைத் தேர்தலை நோக்கி அரசாங்கம் செல்வதாகத் தெரிகிறது. இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதுடன், அத்தேர்தல்களை நடத்துவது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டும் உள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட தரப்பினர் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பின்னர் எட்டு மாகாண சபைகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டிருந்தன. வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்து காணப்பட்டிருந்த போதும், பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய இரு வேறு மாகாண சபைகளாக அது பிரிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் முடிவடைந்து ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. பல மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முடிவடைந்திருந்த போதும், அவற்றுக்கான தேர்தல்களை நடத்த அன்றைய ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் மாகாணசபைத் தேர்தல்கள் பற்றிய பேச்சுக்கள் எழத் தொடங்கின. புதிய அரசாங்கம் உடனடியாக மாகாணசபைத் தேர்தலுக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் தோன்றியிருந்தன. எனினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் மாகாண சபை முறைமைக்கான தேவை குறித்த சந்தேகங்கள் தென்னிலங்கை அரசியல் தரப்பிலும், பெரும்பான்மை கடும்போக்காளர்கள் தரப்பிலும் இருந்து எழுப்பப்பட்டிருந்தன.

குறிப்பாக மாகாணசபைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர், இம்முறைமை வீணான செலவு என்றும், மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கான யோசனையொன்றை முன்வைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். அப்போதைய இராஜாங்க அமைச்சரும், இன்றைய அமைச்சருமான அவரது கருத்துத் தொடர்பில் இந்தியா தனது அக்கறையை வெளிக்காட்டியிருந்த நிலையில், குறித்த இராஜாங்க அமைச்சரின் விடயதானம் மாற்றப்பட்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறான பின்புலத்தில் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் திட்டத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கியிருந்தது. கொவிட் தொற்றினால் நாட்டை முடக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் இன்றைய நிலையில், மீண்டும் மாகாணசபைத் தேர்தலுக்கான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். பௌதிக ரீதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டாலும், சட்டரீதியான சிக்கலொன்று அத்தேர்தல் விடயத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. பாராளுமன்றத்தின் ஊடாக இச்சிக்கல் தீர்க்கப்பட்டாலே மாகாணசபைத் தேர்தலை திட்டமிட்டவாறு முன்னெடுக்க முடியும்.

இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தாடல்கள் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில், கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்தது. தற்பொழுது காணப்படும் விகிதாசார பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக வட்டாரம் மற்றும் விகிதாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலப்பு முறையான தேர்தல் முறையொன்றை கடந்த அரசாங்கம் கொண்டு வந்திருந்தது.

இது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அப்போதிருந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வைத்த நிபந்தனையொன்றுக்கு இணங்க குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றியிருந்தது.

அதாவது வட்டாரங்கள் தொடர்பான எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய சபையின் அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலேயே மாகாணசபைத் தேர்தல் குறித்த சட்டமூலம் பூர்த்தியடையும் என்ற நிபந்தனை இதனில் சேர்க்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய முறையின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின், எல்லை நிர்ணய சபையின் அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள மாகாணசபைகள் தேர்தல் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டு, பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான அங்கீகாரத்தைப் பாராளுமன்றம் வழங்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு  எதிர்நோக்கப்படுகின்ற சட்டரீதியான சிக்கல் இதுவாகும்.

எனினும், தற்பொழுது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது என்பது சிக்கலானதொரு காரியமாக அமையப் போவதில்லை. எனவே, எந்த முறையில் தேர்தலை அணுகுவது என்பதை அரசாங்கத்தின் மேலிடம் தீர்மானிக்குமாயின் அதன் கீழ் தேர்தல் நடத்தப்படலாம்.
எந்த முறையில் தேர்தலை எதிர்கொண்டாலும் ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்கு பாரிய சவால் இருக்கப் போவதில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இருந்த போதும், தற்பொழுது காணப்படும் சுகாதாரச் சூழல் உள்ளிட்ட பின்னணியில் மாகாணசபைத் தேர்தல் குறித்த புதிய சட்டத்தை வாபஸ் பெற்று, மீண்டும் பழைய முறைக்குச் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் தெரிகின்றன. எதுவாக இருந்தாலும், இதுபோன்ற சட்டச் சிக்கல்களை சரி செய்து தேர்தலுக்குச் செல்வதற்கு இன்னமும் ஒரு சில மாதங்கள் நிச்சயமாகத் தேவை.

மறுபக்கத்தில், மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் பொதுஜன பெரமுன போன்றன ஏற்கனவே மாகாணசபைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டன. இரு பிரதான கட்சிகளும் வாக்குகளை இலக்கு வைத்து கிராமங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விட்டன. கூட்டணி பற்றிய பேச்சுக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத போதும், தேர்தலை இலக்காகக் கொண்ட சில பேச்சுகளுக்கான முயற்சிகளில் சிறுபான்மைக் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

தமிழ் அரசியல் தரப்பைப் பொறுத்த வரையில், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பேச்சுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன. இதற்கிடையில் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற கவனயீர்ப்புப் பேரணியை அடிப்படையாகக் கொண்டு தமிழ்க் கட்சிகள் பலவற்றை ஒன்றிணைத்து புதிய கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறான புதியதொரு கூட்டணி இம்முறை மாகாணசபைத் தேர்தலில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாதிருந்தாலும், கணிசமான செல்வாக்குச் செலுத்தும் என எதிர்பார்க்க முடியும். இது தவிரவும் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை உள்ளிட்ட விடயங்களை முன்னிலையாக வைத்து தமிழ் அரசியல் தரப்புக்கள் வாக்குச் சேகரிப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

எதுவாக இருந்தாலும் கொவிட்-19 என்ற பாரியதொரு சவாலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நோக்கிய நகர்வுகள் இடம்பெறுவதால் மக்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பி.ஹர்ஷன்

Comments