சமாதானத்துக்கான பாகிஸ்தானின் அழைப்பை இந்தியா எப்படி எடுத்துக்கொள்ளும்? | தினகரன் வாரமஞ்சரி

சமாதானத்துக்கான பாகிஸ்தானின் அழைப்பை இந்தியா எப்படி எடுத்துக்கொள்ளும்?

சமீபத்தில் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பாகிஸ்தான் இராணுவத் தலைவர் கமார் ஜாவிட் பஜ்வா, இந்தியாவுடனான நீண்டகால பிரச்சினைகளுக்கு சமாதானத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். பழையதை மறந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது அவரது அழைப்பாக இருந்தது. தெற்காசியாவில் உள்ள அமைதி விரும்பிகளுக்கு இந்த அழைப்பு அமிர்தமாக இருந்திருக்க வேண்டும்.

இதில் முக்கியம் என்னவென்றால், இந்த அழைப்புக்கு இந்தியா எவ்வாறான சமிக்ஞைகளை வெளியிடப்போகிறது என்பதுதான். ஏனெனில் இதுபோன்ற சமாதான அழைப்புகள் முன்னரும் விடுக்கப்பட்டாலும் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை என்பதால் இந்த அழைப்பையும் புதுடில்லி சந்தேகக் கண் கொண்டு பார்க்கலாம். நல்லெண்ண சமிக்ஞைகளை விடுப்பதும் பின்னர் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்வதும் முன்னரும் நடந்திருப்பதாக இந்தியா கருதுகிறது. ஒரு யுத்தமே நிகழ்ந்தது என்று இந்தியா சுட்டிக் காட்டுகிறது. எனவே பாகிஸ்தான் இராணுவத் தலைவரின் நல்லெண்ண சமிக்ஞையை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.

தனது இஸ்லாமாபாத் உரையில், தெற்கு மற்றும் ஆசிய பிராந்தியத்தின் இன்னும் பயன்படுத்தப்படாத வளங்களை பயன்படுத்துவதற்கும் இந்த இந்தோ-பாகிஸ்தான் நல்லுறவு உறுதுணையாக இருக்கும் என்றும் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான மோதல் நிலையானது இப்பிராந்தியத்தை ஒரு பணயக் கைதியாக வைத்திருப்பதாகவும் ஜாவிட் பஜ்வா சுட்டிக் காட்டியிருந்தார்.

அதேசமயம் இந்தியா வசமுள்ள காஷ்மிர் பகுதியில் நடைமுறைக்கு ஏதுவான சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருப்பது இந்தியாவை துணுக்குறச் செய்திருக்கலாம். ஏனெனில் இப்பிராந்தியத்தில் தீவிரவாதமும் வன்முறையும் மேலெழுவதற்கு பாகிஸ்தான் காரணமாக இருந்ததாக அந்நாட்டின் மீது ஒரு குற்றச்சாட்டை இந்தியா முன்வைக்கிறது.

எனவே, பாகிஸ்தான் விடுத்திருக்கும் இந்த அழைப்பு எவ்வளவு உண்மையானதாக இருப்பினும் நடைமுறை அனுபவங்கள் காரணமாக இந்த அழைப்பை இந்தியா சுலபத்தில் நம்பப் போவதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் பாகிஸ்தான் முதுகில் குத்தும் என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.

உதாரணமாக வாஜ்பேயின் பாகிஸ்தான் விஜயத்தை இந்தியா சுட்டிக் காட்டுகிறது. 1999ம் ஆண்டு அன்றைய பிரதமரான அடல்பிஹாரி வாஜ்பேயி முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தான் விஜயத்தை மேற்கொண்டார். அன்றைய பாக். அதிபர் நவாஸ் ஷெரீப்புடன் லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். ‘சமாதானமும் உறுதிப்பாடும் கொண்ட திட்டமொன்றை பகிர்ந்து கொள்ளல்’ ‘நிலைத்து நிற்கும் சமாதானம்’, அமைதிபூர்வமான உறவு, நட்பு பூர்வமான ஒத்துழைப்பு என்பனவற்றை வளர்த்தல்’ ‘பாதுகாப்பு சூழலை அபிவிருத்தி செய்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கான இருதரப்பு இணக்கம்’ ஆகிய வாசகங்களும் அடங்கியதாக இப்பிரகடனம் அமைந்திருந்தது.

இது நடைபெற்ற ஆறுமாதங்களில் என்ன நடந்தது என்றால், பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து கடும்பனிப் பொழிவு காரணமாக இந்திய இராணுவம் கைவிட்டுச்சென்றிருந்த பாதுகாப்பு நிலைகளை கைப்பற்றிக் கொண்டது. கைப்பற்றியது இந்தியத் தீவிரவாதிகளாகத் தான் இருக்க வேண்டும் என்றே இந்தியா முதலில் எண்ணினாலும் பின்னர் கிடைத்த தகவல்கள் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பதை உறுதிப்படுத்தின. அதன் பின்னர் அப்பகுதிகளை மீளவும் கைப்பற்ற இந்தியாவுக்கு ஒரு மாதகாலம் பிடித்தது. இச் சண்டையில் 500 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த கார்கில் அனுபவத்தின் பின்னரும் அரசியல் நாகரிகத்துடன் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப்பை இந்தியாவுக்கு வருமாறு இந்தியா அழைத்தது. 2001இல் இந்தியா வந்தவருடன் ஆக்ரா உச்சிமாநாடு நடைபெற்றது. ஆனால் இது சாதகமான பலன்களைத் தரவில்லை. இதன் பின்னரே பாகிஸ்தானில் இயங்கும் லக்ஷர் - ஈ - தொய்பா இயக்கத் தீவிரவாதிகள் டில்லிக்குள் புகுந்து பாராளுமன்றக் கட்டடத்தைத் தாக்கினர். ஜாயிஷ்-ஈ-மொஹமட் இயக்கமும் இத் தாக்குதலில் ஈடுபட்டிருந்தது.

இருந்தும் கூட, 2015ல் இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பாகிஸ்தான் பிரதமரின் பிறந்தநாள் வைபவத்தில் கலந்து கொண்டு அவரை வாழ்த்துவதற்காக எதிர்பாரா பாகிஸ்தான் விஜயத்தை மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் இருந்தபோதும் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது நல்லெண்ணத்தையும், சாதகமான சமிக்ஞைகளையும் பிராந்தியத்தில் அமைதி சூழலை ஏற்படுத்தும் வகையிலும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஒரே வாரத்தில் நிலைமை மாறியது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் பஞ்சாப் பதன்கோட்டில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படை விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் தரப்பு இவ்வாறு சமாதான முயற்சிகளின் பின்னரெல்லாம் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருப்பதால் அந் நாட்டின் நல்லெண்ண சமிக்ஞைகளை எவ்வாறு சாதகத் தன்மையோடு எடுத்துக் கொள்வது இந்தியாவின் பிரச்சினையாக உள்ளது. மேலும் 2008 மும்பை தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதுல் போன்ற தாக்குதல்கள் என்பன இந்தியாவில் பாகிஸ்தான் வெறுப்புணர்வு அதிகரிப்பதற்கு காரணமாகியுள்ளன. பாக். மண்ணில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் தொடர்பான போதுமான தகவல்களை இந்தியா பாகிஸ்தான் அரசுக்கு வழங்கிய போதிலும் அவற்றின் மீது பாக். அரசு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இந்திய தரப்பு வாதமாக உள்ளது.

நட்புக் கரம் நீட்டப்பட்ட போதெல்லாம் இந்தியா காட்டிக் கொடுக்கப்பட்டதாக பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தனது 2019 உரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். “2014ம் ஆண்டு பிரதமராக சத்தியபிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். பாகிஸ்தானை நோக்கி நட்புக்கரம் நீட்டினோம். லாகூருக்கு விஜயம் செய்தேன். ஆனால் இறுதியில் காட்டிக் கொடுக்கப்பட்டோம்” என்றார் இந்திய பிரதமர் மோடி.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் கட்டத் தொடர்பை இந்தியாவே ஏற்படுத்தவேண்டும் என்று இன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காண் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையில் கடைப்பிடிக்கப்படும் வன்முறை தவிர்ப்பு ஏற்பாட்டில் மீறல்கள் ஏற்படுவதை குறைக்க வேண்டும் என்றும் பாக். பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுமே 2003ம் ஆண்டில் போர் தவிர்ப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. என்ன நடந்தது என்றால், கையெழுத்தான புதிதில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. பின்னர் உடன்படிக்கை மீறப்படுவதாக இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டிக் கொள்ளத் தொடங்கின. உடன்படிக்கையை இரு தரப்பும் சட்டை செய்யவில்லை.

2020ம் ஆண்டை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் தரப்பில் மட்டும் 5,100 தடவைகள் போர் தவிர்ப்பு உடன்படிக்கை மீறப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டில் இருந்து பார்த்தோமானால் இது அதிகமாகும். இந்திய இராணுவம் 36 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 139 பேர் காயமுற்றதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் இருந்தே பாகிஸ்தானிய இராணுவத் தலைவர் விடுத்திருக்கும் அழைப்பை அவதானிக்க வேண்டும் என்பது இந்திய நிலைப்பாடாக உள்ளது.

நோமன் ஹுஸைன்

Comments