கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் புத்தாண்டு | தினகரன் வாரமஞ்சரி

கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் புத்தாண்டு

இலங்கையில் கொவிட் 19 தொற்றின் இரண்டாவது அலை தற்போது அடங்கி வருகின்றது. கடந்த வருடம் ஒக்டோபரில் தலைதூக்கிய இந்த இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தவென பரந்த அடிப்படையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் கொவிட் 19  தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவும் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட துணையாக அமைந்திருக்கின்றது. இற்றை வரையும் 08 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கொவிட் 19 தொற்று ஆளுக்காள் தொற்றிப் பரவக்கூடிய ஒன்று.  அதன் பரவுகைக்கு வாய்ப்புக் கிடைக்குமாயின் அதனை இத்தொற்று விரைவாகப் பரவும். இதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறந்துவிடலாகாது. அதனால் இத்தொற்று மீண்டும் தலைதூக்காதென உறுதியாகக்கூற முடியாது. ஏனெனில் கொவிட் 19 தடுப்புக்கான ஊசி, இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துமே தவிர அதன் பரவுதலைக் கட்டுப்படுத்தக்கூடியதல்ல. அதனால் தான் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் இத்தொற்றின் பரவுதலைத் தவிர்ப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பேண வேண்டும் என்று மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பிலான அனுபவங்களை பல  நாடுகள் பெற்றுள்ளன.  அதாவது இத்தொற்றின் முதலாம் அலையைக் கடும் உழைப்புடன் பல நாடுகள் கட்டுப்படுத்திய போதிலும் அதனோடு சேர்த்து இத்தொற்றைத் தவிர்த்துக்கொள்வதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவனயீனமும் அசிரத்தையும் இத்தொற்றின் இரண்டாம் அலை தலைதூக்கவும் பெரும்பாதிப்புக்களை ஏற்படுத்தவும் வழிவகுத்திருக்கின்றன. அவ்வாறான அனுபவம் இலங்கைக்கும் உள்ளது.

கொவிட் 19 தொற்றின் முதலாம் அலை 2020 மார்ச் நடுப்பகுதியில் இந்நாட்டில் பதிவாக ஆரம்பித்தது. கடும் முயற்சியின் ஊடாக ஜுன் மாதமளவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதனோடு சேர்த்து ஏனைய நாடுகளைப் போன்று இங்கும் இத்தொற்று பரவுதல் தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பிலான கவனயீனமும் அசிரத்தையும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. அதன் விளைவாக கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பப் பகுதியில் இத்தொற்றின் இரண்டாம் அலை தலைதூக்க வழிவகுத்ததோடு முதலாம் அலையில் பரவாத இடங்களிலும் இத்தொற்று வேகமாகப் பரவியது.

அத்தோடு முழு நாட்டிலும்  90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் குறுகிய காலத்தில் பாதித்த இத்தொற்று, 500 க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது.

என்றாலும் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பூசியும் வழங்கப்படுவதால் கடந்த பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதி முதல் இத்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. 

என்றாலும் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கும் கொவிட் 19 தொற்று பரவுதல் தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் மக்களின் கவனயீனமும் அசிரத்தையுமே காரணமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  இதன் விளைவாக  கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பூசி ஏற்றுமதியைக் கூட தற்காலிகமாக இடைநிறுத்தும் அளவுக்கு இந்தியா சென்றுள்ளது. அத்தோடு மரபணு மாற்றமடைந்த  இரண்டு கொவிட் 19 வைரசு வகைகளும் கூட அந்நாட்டில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

ஆனால் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தவென பல மாதங்கள் ஊரடங்கை அமுல்படுத்தி முடக்க நிலையையும் இந்நியா முன்னெடுத்தது. அதன் பயனாக  கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களாகும் போது அந்நாட்டில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதோடு ஜனவரி 16 முதல் உள்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையும் ஆரம்பித்தது. இற்றை வரையும் 04 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களுக்கு இத்தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பூனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் 'கொவிசீல்ட்' என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்து தயாரித்துள்ள தடுப்பூசி இந்தியர்களுக்கு வழங்கப்படும் முக்கிய தடுப்பூசியாகும். இத்தடுப்பூசியை இலங்கை உட்பட உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகின்றது. அந்த வகையில் 64 நாடுகளுக்கு 60 மில்லியன் தடுப்பு மருந்து சொட்டுகள் இற்றை வரையும் இந்தியாவினால் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. அவற்றில் 12 இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இருந்த போதிலும் கொவிட் 19 தொற்று  இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளதால், இத்தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தடுப்பூசி பாவனையை மேலும் அதிகரிக்க அந்நாடு தீர்மானித்திருக்கின்றது. அதனால் கொவிசீல்ட் தடுப்பூசி ஏற்றுமதியை கடந்த வியாழக்கிழமை முதல் ( 25.03.2021) இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.

இதன் காரணத்தினால் இத்தடுப்பூசியை இந்தியாவிடம் பெற்று தம் பிரஜைகளுக்கு வழங்கும் நாடுகளும், உலக சுகாதர ஸ்தாபனத்தின் 'கொவெக்ஸ்' திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் நாடுகளும் இதனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளன.

இவ்வாறான சூழலில் ரஷ்யாவிடமிருந்து 07 மில்லியன் கொவிட் 19  தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. அத்தோடு சீனாவிலிருந்தும் இத்தடுப்பூசியைக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

என்றாலும் இந்நாட்டில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கொவிட் 19 தொற்று பரவுதல் தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பிலும் மக்களிடம் மீண்டும்அக்கறையீனமும் அசிரத்தையும் ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல. குறிப்பாக பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்திலும் சந்தைகளிலும் சமூக இடை வெளி பேணப்படாமையைப் பரவலாகக் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 1100 பேர் கடந்த மார்ச் 19 ஆம் திகதி எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 354 பேருக்கு இத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறை உள்ளிட்ட உயர்மட்டங்களின் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த ஊழியர்களுக்கு இத்தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயவென விஷேட குழுவென்றும் சக்தி வலு அமைச்சரினால் நியமிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ் குடா நாட்டின் சில பிரதேசங்களிலும்  கொவிட் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையிலும் கடந்த சில தினங்களாக  அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. அதன் விளைவாக  சில பிரதேசங்களில் கொவிட் 19 பரவுதல் தவிர்ப்புக்காக இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கவனயீனமும் அசிரத்தையுமே முக்கிய காரணமாக இருக்க முடியும்.
அதனால் யாழ்ப்பாணத்திலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலும் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையும் இலங்கை மக்கள் தொடர்ந்தும் கொவிட் 19 தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. 

இவ்வாறான சூழலில் இலங்கையரின் முக்கிய விழாவாக விளங்கும் சிங்கள - தமிழ் புத்தாண்டை இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். இப்புத்தாண்டின் நிமித்தம்  மக்கள் தற்போது ஆயத்தமாதலில் ஈடுபட்டுள்ளதோடு தலைநகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தொழிலின் நிமித்தம் தங்கியுள்ளவர்கள் புத்தாண்டை முன்னிட்டு இருப்பிடங்களுக்கு திரும்பவும் தயாராகி வருகின்றனர். இது விடுமுறை காலமாகையால் சுற்றுலா செல்வதிலும் அதிகளவானோர் கவனம் செலுத்தியுள்ளனர். இது சிங்கள, - தமிழ் புத்தாண்டுக் காலத்தின் அண்மைக்கால வழக்கமாக விளங்குகின்றது.

ஆனால் கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தல் நீடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும்  முன்னவதானத்துடனும் செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும். ஏற்கனவே தீபாவளி மற்றும் புது வருடத்தின் நிமித்தம் தலைநகரிலும் அயற்பிரதேசங்களில் இருந்தும் மலையகம் திரும்பியவர்கள் ஊடாக இத்தொற்று அங்கும் பரவியமை தெரிந்ததே. அவ்வாறான ஒரு நிலைமை இப்புத்தாண்டுக் காலத்திலும் ஏற்பட வாய்ப்பு அளிக்கக்கூடாது.

ஆகவே கொவிட் 19 தொற்று பரவுதல் தவிர்ப்புக்கான பிரதான சுகாதார வழிகாட்டல்களாக விளங்கும் சமூக இடை வெளியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களில் ஒவ்வொருவரும் உச்ச கவனம் செலுத்த வேண்டும்.  அது நாட்டுக்கும் மக்களுக்கும் அளிக்கும் பாரிய சேவையாக அமையும். 

மர்லின் மரிக்கார்

Comments