வீதி விபத்துகள்: மக்கள் சிந்தனையில் மாற்றம் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

வீதி விபத்துகள்: மக்கள் சிந்தனையில் மாற்றம் அவசியம்

கடந்த சனிக்கிழமை பசறை 13ம் கட்டைப் பகுதியில் பயணித்த ஒரு தனியார் பேருந்து இருநூறு அடிப் பள்ளத்தில் உருண்டதில் 14பேர் மரணமடைந்ததோடு 33பேர் காயமடைந்த செய்தி நிச்சயம் காற்றோடு கலந்து விடுகின்ற மற்றொரு செய்தி அல்ல.
ஏனெனில் இரண்டு கோடிக்கும் சற்று அதிகமான சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் வருடா வருடம் வீதி விபத்துகளால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் உடல் அவயங்களை இழப்போரின் தொகை மென்மேலும் அதிகரிப்பதும் நாம் சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வீதி விபத்துகள் தண்ணீரில் மிதக்கும் ஒரு பாரிய பனிப்பாறையின் மேல் பகுதியைப் போன்றது என்றுதான் கொள்ள வேண்டும்.

ஏனெனில் கெட்டுப்போன ஒரு சமூகத்தைத்தான் இவ் விபத்துகள் எமக்கு உணர்த்துகின்றன. நாட்டில் திட்டமிடலின்றி நிறைவேற்றப்படும் திட்டங்கள், தகுதியற்றவர்களுக்கு பொருத்தமற்ற பதவிகளை வழங்குதல், ஊழல் லஞ்சலாவணியம் மலிந்து போதல், எல்லாத் துறைகளிலும் அரசியல் புகுந்து விளையாடுவது பணமும் செல்வாக்கும் இருந்தால் எவர் வேண்டுமானாலும் எந்தப் பதவியை வேண்டுமானாலும் அடைந்துவிடலாம் என்ற தைரியம், முகஸ்துதிக்கு சலாம் என்று சமூகச் சீர்கேடுகளை பட்டியலிட்டுச் செல்ல முடியும்.

ஒருவருக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் வேண்டுமானால் அதை சட்ட திட்டங்களின் படியும் பெறலாம்; அவற்றைப் பின்பற்றாமலும் பெறலாம் என்பது பகிரங்க இரகசியம். சாலை விதிகளை மீறினால், விபத்தொன்றில் மாட்டிக் கொண்டால் எப்படி அவற்றில் இருந்து சேதமில்லாமல் மீண்டுவரலாம் என்ற சூத்திரம் அறியாத வாகன சாரதிகளே இல்லை எனலாம்.

சட்ட திட்டங்களை அமுல் செய்வோர் யாரானாலும் அவர்களை எப்படிச் சமாளித்து நமது வழியில் தாண்டிச் செல்லலாம் என்பதில் நாம் வல்லவர்களாக உள்ளோம். வீதிச் சட்ட திட்டங்கள் என்றில்லை; எல்லா சட்ட திட்டங்களையும் தாண்டிச் செல்லும் வித்தைகளை மக்கள் கற்று வைத்திருக்கிறார்கள். ஒரு விஷயம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதில் கண்டிப்பு காட்டப்படுவது போய், ஒரு விஷயம் எப்படி வேண்டுமானாலும் நடத்தப்படலாம்; காரியம் ஆனால் போதும் என்று நினைக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த உக்கிப்போன, இற்றுப்போன சமூகத்தின் வெளிப்பாடுதான் இந்த வீதி விபத்துகள் என்றால் அது மிகையல்ல.

முன்னர் இ.பொ.ச பஸ்களில் பின்புறமாக ஏறி முன்புறத்தால் இறங்க வேண்டும். இது கட்டாயம். மக்கள் அதைப் பின்பற்றினர். மிதிபலகை சவாரி முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. அதை மீறுகிறார்கள் என்பதால் முன் வாசலருகே ஒரு கதவு பொருத்தப்பட்டிருந்தது. சாரதி அதைத் திறந்து விட்டால் தான் இறங்க முடியும். இந் நாட்டில் எல்லா சட்டங்களும், ஒழுக்கங்களும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டவை தான். லஞ்சமும் வாங்கப்பட்டதுதான். ஆனால் மிகமிக ரகசியமாக லஞ்சம், மோசடி என்பனவற்றில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டவர்களை சமூகம் இழிவாகப் பார்த்தது.

இன்று ஒருவர் லஞ்ச லாவண்யம், மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்றால் அது இரகசிய செய்தி அல்ல. அப்படியும் அவருக்கு மிகுந்த மரியாதை தருகிறோம். இத்தகையோரும் அரசியல் பலம் படைத்தோரும் முதன் முதலாக தமது தேவைகளுக்காக குறுக்கில் பாய்ந்து முன்னேற தலைப்பட்ட பின்னர் படிப்படியாக இந்த குறுக்கு வழியை சமூகத்தின் ஏனையோரும் பின்பற்றத் தொடங்கினர். 77 இன் பின்னர், திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் இப்போக்கு அதிகரித்துச் சென்றது எனலாம். குறுக்கு வழியில், கொஞ்சம் கூட தகுதி இல்லாமல் என்ன வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. போலித் தனங்கள் மிகுந்து விட்டன. தகுதி உடையவன் ஒதுக்கி வைக்கப்படுகிறான், செல்வமும் அதிகார பலமும் இருந்தால் மட்டுமல்ல, அத்தகையோர் நிழலில் இருந்தாலே சாதிக்கலாம் என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஏன் பொருளாதாரத்துறையில் இலங்கை எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை எட்டவில்லை என்பதற்கான காரணம், அரசியல்வாதிகளும் வசதி படைத்தவர்களும் சட்டங்களை மதிக்கத் தவறியதுதான். இந்த ஒட்டுமொத்த சீர்கேடுகளின் வெளிப்பாடாகத்தான் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்துகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
வாகன ஓட்டுதலில் போதிய அனுபவமற்றவரும் அவர் விரும்பினால் சாரதி அனுமதியைப் பெறலாம். சாலைவிதிகளை மீறி போக்குவரத்து பொலீசாரிடம் சிக்கிக் கொண்டால் ‘பேசி’ சமாளித்துக் கொள்ளலாம். அவர் ஒரு அரசியல் செல்வாக்கு கொண்டவராக இருந்து பொலிஸ்காரரும் விட்டுக் கொடுப்பு செய்யாவிட்டால் அப்பொலிஸ்காரர் தண்ணீரில்லா காட்டுக்கு இடமாற்றம் பெறக்கூடும்.
அந்த இடத்திலேயே தாக்கப்படவும் கூடும். இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தும் உள்ளன.

உலக நாடுகளில் சாலை விதிகள் கடுமையானவை. மீறினால் கடுமையான தண்டனை உண்டு. சாரதி பத்திரமே இரத்துச் செய்யப்படலாம். மதுவருந்தி விட்டு வாகனம் செலுத்தினால் கடுந்தண்டனை உண்டு. எனவே சாலை விதிகள், போக்குவரத்து சட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இருக்கும் சட்டங்களை கடுமையாக அமுல் செய்வதற்கான அனுமதியை, சுதந்திரத்தை அதிகாரிகளும் அரசியல்வாதிகள் பொலிசாருக்கு தருவார்களா? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். கடந்த ஞாயிறு நாடளாவிய ரீதியாக பொலிஸார் வாகனங்கள் மீது நடத்திய சோதனையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் சுற்றி வளைக்கப்பட்டனர். மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரையிலான காலப்பகுதியிலேயே இவ்வளவுபேர் கைதாகினர். இவர்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர் எண்ணிக்கை 454 சட்டவிரோத மது உற்பத்தி தொடர்பில் 523 பேர் கைதாகினர்.

இலங்கையில் வருடமொன்றுக்கு இரண்டாயிரம் பேர்வரை வீதி விபத்துகளில் பலியாகின்றனர். 2018இல் 3,151 பேரும் 2019இல், 2, 839 பேரும் உயிரிழந்ததாக அறிய முடிகிறது. கடந்த இரண்டரை மாதங்களில் பலர் மரணித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 16 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். அதாவது நாட்டுக்கு அவசியமான இளைஞர்கள்.

பசறை விபத்தை எடுத்துக் கொண்டாலும் ஆறுமாதத்துக்கு முன்னர் உருண்டு வந்த ஒரு கற்பாறை அகற்றப்படாமல் அப்படியே பாதையின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டு கிடந்திருக்கிறது. அதை அப்போதே அகற்றியிருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் விபத்து நடைபெற்ற பின்னரே அதிகாரிகளின் கண் திறந்து அப்பாறை அகற்றப்பட்டிருக்கிறது. நமது மனப்பான்மை எப்படியோ அப்படித்தான் வாழ்க்கை. வீதி விபத்து அதிகரிப்புக்கு எத்தனையோ காரணங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் நாம் தேட வேண்டியது அடிப்படைக் காரணங்களை. நமது பொது மனப்பான்மையில் பாரிய மாற்றம் அவசியமாகத் தேவைப்படுகிறது.

Comments