மத அரசியலை கடந்து சென்றாலே சுபீட்சம் | தினகரன் வாரமஞ்சரி

மத அரசியலை கடந்து சென்றாலே சுபீட்சம்

மதம் அபினுக்கு ஒப்பானது என்று அறிஞர் கார்ல் மாக்ஸ் கூறியது குறித்து பல்வேறு வியாக்கியானங்கள் இருப்பினும் அக் கூற்றின் அடிப்படையான அம்சத்தில் மாற்றம் இல்லை. போதையைப் போலவே அளவுக்கு அதிகமானால் அது பேதலிப்பைத் தரும்; சிந்தனைத் தடுமாற்றத்தையும் ஆத்திரத்தையும் உருவாக்கும் என்ற கருத்து அவரது கூற்றுக்குப் பின்னர் பல தடவைகள் மெய்பிக்கப்பட்டிருப்பதால்தான் இன்றளவும் மாக்ஸின் மேற்கோள் சாகாவரம் பெற்றதாக விளங்குகிறது. மதத்தை முன்னிலைப்படுத்திய நாடுகள் பின்னர் பாரிய பிரச்சினைகளையும், பொருளாதார சீர்கேடுகளையும் சந்தித்திருப்பதையும் நாம் காணலாம். எனினும் அரசியலில் மதம் பயன்படுத்தப்படும் போது அதைப் பயன்படுத்தும் நபர், கட்சி, குழுவினர் அல்லது அரசுக்கு உடனடியாக எதிர்பார்க்கப்பட்ட பலன்களைத் தருகிறது. நீண்டகால பாவனை எதிர்மறையான பலன்களையும் விபரீதங்களையும் விளைவிக்கும் என்பது தெரிந்து தெரிந்தே உலகின் சில நாடுகளில் மத அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்கும் ஒரு வழிமுறையாகவும், சிலசமயம் வெறித்தனமாகவும், பெரும்பாலான மக்களைத் தமது செல்வாக்கின் கீழ் வைத்துக் கொள்ளவும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கை தற்போது பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கொவிட-19 இப் பின்னடைவுக்கு ஒரு சமீபத்திய காரணமாக இருந்தாலும் கூட, கடந்த எழுபது ஆண்டுகளாக இந்நாடு பின் நோக்கி நகர்த்தப்பட்டு வந்திருப்பதே இன்றைய பொருளாதார பிரச்சினைகளுக்கான மூலகாரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எம்மை ஆண்ட அரசுகள் நீண்ட கால திட்டமிடல்கள் ஊடாக இந்நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக, பொருளாதார வளர்ச்சிக்கு எவை எவை குந்தகமாக அமையக் கூடுமோ அவற்றை எல்லாம் தூக்கிப் பிடித்து முன்னுரிமை அளித்து வந்திருப்பதால் தொடர்ச்சியாக எமது வளர்ச்சிபாதிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஒரு மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து இந்நாட்டை சிங்கப்பூராக்குவதாக கூறிய முன்னாள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தன, துரித மகாவலி திட்டத்தை கொண்டு வந்ததோடு, தீர்வையற்ற பொருளாதார வலையம், திறந்தபொருளாதாரக் கொள்கை என்பனவற்றையும் ஏற்படுத்தியதோடு புதிய அரசியலமைப்பு சட்டத்தையும் உருவாக்கினார். பொருளாதார விடுதலைக்கான வழி கிடைத்து விட்டதாக மக்கள் நம்பவும் செய்தனர். இவற்றுக்கு மத்தியில் அவர் வழமையான மூன்றாந்தர அரசியலையும் பயன்படுத்தினார். அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே இனக்கலவரம் அடுத்தடுத்து மூண்டது. தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வட்டமேசை மாநாட்டை நடத்துவேன் என அவர் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதி காற்றில் விடப்பட்டது.

அவர் ஆட்சி காலத்தில் சிறு பொறியாக மட்டுமே விளங்கிய வடக்கு – கிழக்கு ஆயுத தீவிரவாதம், 83 கலவரத்தின் பின்னர், அசுர வளர்ச்சி பெற்றமை வாசகர்கள் அறிந்ததே. அரசியல் சாணக்கியம் மிக்கவராக இன்றளவும் கருதப்படும் ஜே.ஆர். ஜயவர்தன, தனது அரசியல் வெற்றிகளுக்காகவும் பௌத்த சிங்கள மக்களை தனது பிடியில் வைத்துக் கொள்ளவும் இனவாத அரசியலில் தஞ்சமடைந்தார். இதன் காரணமாக அவரது சிங்கப்பூர் கனவு சிதைந்தது. முன்நோக்கிய பொருளாதாரப் பயணம் நிச்சயம் எனக் கருதப்பட்ட சமயத்தில் அவரது இனவாத மற்றும் மதவாத அரசியலால் நாடு பின்நோக்கி நகரத் தொடங்கியது. இந்தியா எமது மறைமுக பகை நாடானது. ஆயுத குழுக்களின் படிமுறை வளர்ச்சி இறுதியில் உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்தது. ஜே.ஆரின் மற்றொரு தவறான காய் நகர்த்தல், ஜனநாயக வழிமுறைக்கு வந்திருந்த ஜே.வி.யினரை ஆயுத கலாசாரத்துக்கு இட்டுச் சென்றது.

ஜே.ஆர். ஜயவர்தன உண்மையாகவே சிங்கப்பூரின் லீ க்வாள் யூவை பின்பற்றுபவராக இருந்திருப்பின், இலங்கையின் முக்கிய பிரச்சினைகளாக விளங்கிய நாடற்றோர் பிரச்சினைக்கு சுமுக தீர்வொன்றை கண்டிருக்கவேண்டும். இந்திய அரசு இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு நாடற்றோர் விவகாரம் காரணமாக இருந்தது.

எனினும் இந்திய வம்சாவளித் தமிழர் பிரச்சினையானது ஜே.ஆர். ஆட்சியின் இறுதிப் பருவத்திலேயே முடிவுக்கு வந்தது. 77, 81, 83 இனக் கலவரங்கள் நடைபெறாமல் செய்து முளையிலேயே கிள்ளப்பட்டிருக்குமானால், உள்நாட்டு யுத்தமொன்று மூண்டிருக்காது.

ஜே.ஆர். ஜயவர்தனவை மட்டும் இங்கே குறை சொல்லமுடியாது. 1948 முதல் இந்நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வந்திருக்கக் கூடிய சகல அரசுகளும் தமது அரசியல் இலாபங்களுக்காக மக்களை தவறாக வழி நடத்தியே வந்திருக்கின்றன. இன வாதத்தோடு மதவாதம் இணக்கமாகப் பயணிக்கக்கூடிய கூட்டாளி என்ற வகையில் இரண்டுமே சிங்கள – தமிழ்த் தலைவர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதால் அவை உருவாக்கிய நீண்ட கால பின்விளைவுகளை நாமும் எமது இளைய சந்ததியினரும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

யுத்தம் முடியும் வரை தமிழர்மீதிருந்த வெறுப்புணர்வும், வெறுப்பூட்டும் பேச்சுகளும் சமீப காலமாக முஸ்லிம் சமூகத்தின்பால் திருப்பப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஏப்ரல் 21 கத்தோலிக்க, கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல்கள் முஸ்லிம் சமூகம் தொடுத்த தாக்குதல் அல்ல. இதை அறிந்த தமிழ் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் மீது வெறுப்பை உமிழவில்லை. கிறிஸ்தவர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டதை நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். இந்த சகிப்புத்தன்மையை அரசுகள் முன்னர் இருந்தே இலங்கை சமூகத்தின் மத்தியில் பாடசாலைக் கல்வியூடாக வளர்த்திருக்க வேண்டும்.

தற்போது இஸ்லாமியருக்கு எதிரான மனப்பான்மை மேலும் வளர விடாது முறையிலேயே கிள்ளி எறியப்படாது விட்டால் அது மற்றொரு வெறுப்புணர்வையும் இனக் குரோதத்தையும் வளர்க்க மட்டுமே உதவும், சிங்கள சமூகத்தை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தமிழர்களுக்கு எதிரான மனப்பான்மைகளை வளர்த்ததால் நாட்டுக்கோ அல்லது சிங்கள சமூகத்துக்கோ எந்த நன்மையும் கிட்டியதாக இல்லை. நாடு பின்னடைந்ததும் பொருளாதாரம் வளர்ச்சி குன்றியதும் மட்டுமின்றி சர்வதேச ரீதியான சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க தள்ளப்பட்டிருப்பதுமே கிட்டிய பலன்கள். தற்போது முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்புணர்வை விதைத்து, ஒரு மூலையை நோக்கி அவர் கண் தள்ளப்படுவதும் நிச்சயம் நாட்டின் எதிர்கால நன்மைகளுக்கும் வளர்ச்சிக்கும் உதவப்போவதில்லை.

வளர்ச்சி கண்டுவரும் நாடான இலங்கை இனவாத மற்றும் மதவாத அரசியலில் இருந்து மீண்டுவருவது மிகவும் முக்கியம். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் காணப்படும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடாகட்டும் அல்லது பொருளாதார பின்னடைவாகட்டும், நாம் ஒரு நாடாக இணைந்து நிற்காவிட்டால் சவால்களை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியாது. சிங்கள சமூகத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது சந்தேகமும் ஐயப்பாடும் இருக்குமானால் அவற்றை நான்கு சுவர்களுக்குள் பொத்தி வைக்காமல் பகிரங்கமாக பேசப்படும் விஷயமாக முன் நிறுத்துவதே முக்கியமானது. சிங்கள, தமிழ் முஸ்லிம் எனவும் இந்து, பௌத்தம், இஸ்லாம், கத்தோலிக்க – கிறிஸ்தவம் எனவும் இந்த நாடு இன மத வாதங்களாக பிளந்து கிடந்தால் எந்தவொரு கொம்பனாலும் இந் நாட்டை கட்டியெழுப்புவது சாத்தியமாகாது. எந்தவொரு நாட்டிலும் இவ்வாறு சாத்தியப்பட்டதும் இல்லை.

இது, இந்துவாகவோ பௌத்தனாகவோ அல்லது தமிழனாகவோ, சிங்களவராகவோ உயர்ந்து நிற்பதற்கான காலம் அல்ல. மனிதனாக மட்டும் உயர்ந்து நிற்க வேண்டிய காலம். அது நிகழ்ந்தால் மட்டுமே நாடும் நிமிர்ந்து நிற்கும். இன, மத வாதத்தை கடந்து நின்றால் மட்டுமே சுபீட்சம் வசப்படும்.

Comments