நீதிமன்றத்தை நாடியுள்ள தோட்டக் கம்பனிகள் | தினகரன் வாரமஞ்சரி

நீதிமன்றத்தை நாடியுள்ள தோட்டக் கம்பனிகள்

1000 ரூபா சம்பள மீண்டும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சம்பள நிர்ணயசபை தொழில் அமைச்சுக்கூடாக 1000 ரூபா சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்து வர்த்தமானி அறிவித்தலொன்றை அண்மையில் அரசு விடுத்திருந்தது.

இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறாகவே இது சாத்தியமானது. இதனை மாபெரும் சாதனை என்று மார்தட்டிக் கொண்டது இ.தொ.கா. ஒருவகையில் அது சரிதான் என அனைவராலும் பார்க்கப்பட்டது. இ.தொ.கா காவைப் பொறுத்தவரை இது அரசியலில் அதற்குக் கிடைத்த வெற்றி; அரசாங்கத்திடம் அதற்கிருக்கும் செல்வாக்கை உறுதிசெய்து கொள்ள கிடைத்த வாய்ப்பு.

அரசாங்க மட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் திருப்தி. எல்லாமே நல்லபடியாகத்தான் நடப்பதாக பட்டது. ஆனால் சம்பள நிர்ணய சபையின் தீர்மான அறிவிப்பினால் இப்பொழுது திடீர் திருப்பமொன்று தோன்றியுள்ளது.

ஆம்! திடுதிப்பென 20 பெருந்தோட்டக் கம்பனிகள் கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தை நாடியுள்ளது. 1000 ரூபா வர்த்தமானி அறிவித்தலை தடைசெய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இவ்வாரம் இ.தொ.கா. எதிர் மனுவொன்றை தாக்கல் செய்யப் போகின்றது. கம்பனி தரப்பின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானிக்கும் பட்சத்தில் 1000 ரூபா விவகாரத்தில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படவும் இடமண்டு. தவிர வழக்கு உடனடியாக தீர்ப்புக்குள்ளாகும் என்று எதிர்பார்க்க முடியாது.

எப்படி பார்த்தாலும் ஒரு பக்கம் சிக்கல், இன்னொரு பக்கம் சவால். மறுபக்கம் இழுபறி. இடையே சட்டப்பிரச்சினை தடங்கல். தடங்கலேதான். 1000 ரூபா வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததும் பட்டாசு வெடித்து பரவசப்பட்ட தோட்ட மக்கள் இப்போது என்னய்யா நடக்குது என்று ஏமாற்றத்துடன் பார்க்கின்றார்கள். உண்மையில் 1000 ரூபா விடயத்தில் என்னதான் நடக்குது?

1992 இல் பெருந்தோட்டங்கள் தனியார் வசம் கையளிக்கப்பட்டது. இதனை 22 பிராந்திய கம்பனிகள் பொறுப்பேற்றன. சிலவற்றை மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பிளான்டேஷன் ஆகிய அரசு துறைசார் நிறுவனங்கள் தம்வசம் வைத்துக் கொண்டன. அந்தநேரம் பெருந்தோட்டத் தொழிலாளருக்கான சம்பள விவகாரத்தை சம்பள நிர்ணயசபைதான் கையாண்டது. தவிர தோட்டத்துறை சம்பந்தப்பட்ட சகல நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் அனைத்தும் பொதுவான தொழிற்சட்டங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கான சிறப்புச் சட்ட ஏற்பாடுகள் மூலமே தீர்க்கப்பட்டன. ஆனால் கம்பனிகள் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்ற பிறகு முன்னைய முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. சம்பள நிர்ணயம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தமே முதலில் கையெழுத்தானது. நாளடைவில் தொழிலாளர்களது நலன் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தமும் நடைமுறைக்கு வந்தது. கூட்டு ஒப்பந்தத்தின் சூத்திரதாரியாக அமரர் செளமியமுர்த்தி தொண்டமானே இருந்தார். சம்பள நிர்ணய சபைக்கூடாக தொழிலாளர்களுக்கான சம்பளம் தீர்மானிக்கப்படும்போது தொழிலாளர்களுக்குச் சாதகமான தன்மை நிலவுவதில்லையென அவர் உணர்ந்திருந்தார். தவிர சம்பள விடயத்தைச் சுமுகமான தீர்த்துக்கொள்ள வழி பிறக்கும் என்று அவர் நம்பினார்.

கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் துரைமார் சம்மேளனமும் மலையகத்தின் மூன்று தொழிற்சங்க அமைப்புகளும் கைச்சாத்திட்டுள்ளன. இ.தொ.கா., இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு (10 தொழிற்சங்கங்களை உள்ளடக்கியது) ஆகியன இத் தொழிற்சங்கங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தெழிலாளர்களது சம்பளத்தைத் தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இடம்பெற வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்து. எனினும் விதிகளுக்கமைய உரிய கால இடைவெளிக்குள் ஒப்பந்தங்கள் மெற்கொள்ளப்படாமை ஒப்பந்தம் பற்றிய நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கி வந்துள்ளமையை மறுக்க முடியாது. தவிர பல சந்தர்ப்பங்களில் ஒப்பந்தத்துக்குள் அடக்கப்படும் விடயங்கள் கம்பனி தரப்பு கணக்கில் எடுக்காமையால் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறலாயின.

சுமார் 29 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் ஒப்பந்த ஷரத்துக்கள் பற்றி தொழிலாளர்களுக்கு எதுவுமே தெரிய வாய்ப்பில்லை. தவிர ஒப்பந்தம் வெறும் ஏட்டளவு சமாச்சாரமாக இருந்து வருவதால் எமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று ஆறு வருடங்களுக்கு முன்பு இதொ.கா கோரியிருந்தது. ஆனால் கம்பனி தரப்பு கோரிக்கையை எதிர்த்தே செயலாற்றி வந்துள்ளது. எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் இரண்டிலும் தொழிலாளருக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் உறுதி வழங்கி இருந்தார்கள். அதற்கமைய முயற்சிகளிலும் அவர்கள் இறங்கினார்கள். பல தடவைகள் பெந்தோட்டத் துரைமார் சங்கத்தை தொழில் அமைச்சுக்கு அழைப்பித்து பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன.

அரசாங்கமே மத்தியஸ்தம் வகித்தமையினால் இ.தொ.காவுக்கு நம்பிக்கை அதிகரித்து அது மேலும் சுறுசுறுப்பாக இயங்கியது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆளுமையை வெளிப்படுத்திக்காட்ட இதுவொரு நல்ல வாய்ப்பாக இ.தொ.கா கருதி இருக்கலாம்.

எனினும் கம்பனி தரப்பு இறங்கு முகத்தைக் காட்டவே இல்லை. இதனால் அரசாங்கத்துக்கு தர்மசங்கட நிலை. அரசாங்கம் பெருந்தொட்டங்களைச் சுவீகரித்து இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அதானி நிறுவனத்துக்குக் கையளிக்கப் போகின்றது என்று தகவல் கசிந்தது. அப்போதும் கம்பனிகள் மசியவில்லை. வேறு வழியின்றி பழையபடி (1992) இற்கு மன்பு வரை) சம்பள நிர்ணய சபையிடம் தோட்டத் தொழிலாளர்களின சம்பள பிரச்சினையை கையளிக்க அரசாங்கம் தீர்மானித்தது. அதன்படியே நடந்தது.

சம்பள நிர்ணயசபை, தொழில் தருநர், தொழிற்சங்க உறுப்பினர்கள், அரசு பிரதிநிதிகள் என அங்கம் வகிக்கும் சபையாகும். தொழில் அமைச்சின் கீழ்வரும் சம்பள நிர்ணயசபைக்கு தொழில் ஆணையாளரே தலைமை வகிப்பார். தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டே அங்கீகரிக்கப்படும். அப்படி பிரேரிக்கப்பட்டு வாகெடுப்புக்கு விடப்பட்டு பெருவாரியான சபை உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்று நிறைவேற்றப்பட்டதுதான் 1000 ரூபா சம்பளம்.

தீர்மானத்தை ஆட்சேபிக்க 14 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. கால அவகாசம் முடிந்தது.

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் தொழில் ஆணையாளரால் அழைக்கப்பட்டனர். தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும் கம்பனி சார்பில் ஒருவரும். (இறப்பர் தொழில் சம்பந்தமாக எவருமே பங்கு கொள்ளவில்லை) கலந்து கொண்டிருந்தனர். உரிய எண்ணிக்கையானவர்கள் கலந்து கொள்ளாத காரணத்தாலேயே இம்மாதம் முதலாம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியே 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென சம்பள நிர்ணய சபை கேட்டுக்கொண்டது. இதன்படி 900 ரூபா அடிப்படைச் சம்பளமாகவும் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாகவும் கம்பனிகளால் வழங்கப்பட வேண்டும்.

இதனை பின்னர் சம்பள நிர்ணய சபை தொழில் அமைச்சுக்கூடாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டது. இப்பொழுது 1000 ரூபா சம்பள சட்டரீதியாக அரச அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஆனால் அதற்கு எதிராகத்தான் 20 கம்பனிகள் நீதிமன்றம் போயிருக்கின்றன. சம்பள நிர்ணயம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருக்கின்றது. ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தரப்பினரைத்தவிர வேறு எந்தத் தரப்பும் அதற்குள் தலையை நுழைக்க அனுமதி இல்லையென்று உயர்நீதிமன்றமே உத்தரவாதம் தந்துள்ளது. இந்நிலையில் சம்பள நிர்ணய சபையின் கட்டளையை கேள்விக்குறியாக்கி சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறது கம்பனித் தரப்பு.

1000 ரூபா சம்பளத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட கம்பனி தரப்புக்குச் சாதகமான சில விடயங்களும் வழங்கப்பட்டே உள்ளது. குறிப்பாக மாதத்தில் எத்தனை நாள் வேலை தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை கம்பனி தரப்புக்கே இருக்கிறது. இதன்மூலம் மாதாந்தம் கிடைக்க வேண்டிய சம்பளத் தொகையைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு தோட்ட நிர்வாகங்களுக்கே உரித்தாவதால் தொழிலாளர்களது வேலைநாட்கள் குறைக்கப்படலாம் எனும் அச்சம் ஏற்படவே செய்கின்றது.

இவ்வாறான பின்புலத்தில் கம்பனித்தரப்பு நீதி மன்றத்தை நாடியிருப்பது வியப்பையும் தருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு வரப்போகின்றதா என்னும் கேள்வி எழவே செய்கின்றது.

அப்படி நடக்குமானால் அதனை மலையகத் தொழிற்சங்கங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? கூட்டு ஒப்பந்தம் இ.தொ.கா.வைப் பொறுத்தவரை தொழிலாளரைப் பிடிக்குள் வைத்திருக்கும் ஒரு பொறி. இதேசமயம் கூட்டு ஒப்பந்த ஷரத்துக்கள் முறைப்படி கடைப்பிக்கப்பட்டால் தொழிலாளர்கள் நன்மையடையக் கூடிய விடயங்களும் இருக்கவே செய்கின்றன.

கம்பனிகள் நீதிமன்றம் சென்றிருப்பதால் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு மீண்டும் இழுபறி நிலைக்குத் தள்ளப்பட இடமுண்டு. இதே சமயம் கம்பனிகள் முயற்சியை தாம் முறியடிக்கப் போவதாக அமைச்சர்கள் குரலெழுப்பி இருக்கின்றார்கள். எவ்வித சவாலையும் சந்திக்க தமது சட்டத்தரணிகள் தயாராகவே இருப்பதாக இ.தொ.கா. அறிவித்திருக்கிறது.

பன். பாலா

Comments