கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

கடந்த மாதத்தில், பல வருட இடைவெளிக்குப் பிறகு நானும் நடிப்பாற்றல் மிக்கக் கலைஞர் ஒருவரும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் விஜயம். புதிதாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் சேவை உதவிப் பணிப்பாளரையும் நாடகத் தயாரிப்பாளரையும் சந்திக்கப் போனோம். சென்றது சொந்த வேலைகளுக்கன்று.  

அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒப்பற்ற நாடகக் கலைஞராக முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒருவர் பிரகாசித்தார். சீ.பி.எம். காஸிம் என்றால் பெரிய பிரபலம். வெண்கலக் குரலார். 1994லில் முஸ்லிம் திணைக்களம் வழி, ‘லியாவுல் ஃபன்னான்’ (கலைச்சுடர்) அரச உயர் விருது பெற்றவர்.  

இந்தக் கலைஞரின் இப்போதைய நிலை:  

மிக உடல் நலிவுற்று, பல மாதங்கள் படுக்கையிலேயே வெண்கலக்குரல் கரைந்து சன்னமான பேச்சு. விரல்கள் நடுக்கம். நினைவாற்றலும் குறைவு. வயதோ எண்பது தாண்டி விட்டது.  

இந்தத் துர்ப்பாக்கியவான் ஓஹோ என்று கலைத்துறையில் பிரகாசித்த காலத்தில், முஸ்லிம் சேவையில் போதிய நாடகப்பிரதிகள் இல்லாத குறையையும் தீர்த்து வைத்தவர். அவரே நாடகப்பிரதிகள் எழுதியுள்ளார். ஆனால் நடிக்காமல் பிற கலைஞர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுமுள்ளார்.  

இத்தகைய பின்னணியில் நானும், என்னுடன் இணைந்து வந்த முப்பது ஆண்டுகளுக்கு மேல் வானொலி நாடக அனுபவம் உள்ள கலைஞரும் ஒரு திட்டம் தீட்டினோம்.  

* ஒரு மனிதரை, அவர் வாழும் பொழுதே வாழ்த்தாமலும் போற்றாமலும் அவர் உடல் நலிந்து நோயுற்றிருக்கும் காலத்தில் நலம் வேண்டி பிரார்த்தனைகள் புரியாமலும் இருக்கும் இந்தக் காலத்தில் ஒரு மூத்த கலைஞரை, முஸ்லிம் நிகழ்ச்சி நாடங்களை அறுபது ஆண்டுகளுக்கு முன் புகழ் பூக்க வைத்தவரை நினைத்து, அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளதற்கு, இறைகிருபை வேண்டி, அன்னார் 59 ஆண்டுகளுக்கு முன், 1962 ஜன. 12 முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான “அவன் சிரித்தான், அவள் அழுதாள்” நாடகத்தைப் புதுப் பொலிவுடன் இன்றையக் கலைஞர்களைக் கொண்டு ஒலிக்கச் செய்தால் என்ன, அதனால் இளைய தலைமுறை நேயர்களுக்கும் ஒரு பழையவர் அறிமுகம் கிடைக்குமே! இப்படியான எங்கள் திட்டத்தை சந்திக்கச் சென்ற உதவிப் பணிப்பாளரிடமும் தயாரிப்பாளரிடமும் விவரித்தோம். சாதகமான பதிலே! ஆனால், நாங்கள் அவசரம் காட்டியது போல் அவர்கள் காட்டவில்லை, “இந்த மாதம் (பெப்ரவரி) இயலாது. அடுத்த மாதம் மூன்றாம் நாலாம் கிழமை பார்ப்போம் என்றார்கள். பெரிய ஏமாற்றம். எங்கள் அவசரம் ஏன் என்றால் இன்றோ நாளையோ என்று படைத்தவனிடமே மீளக் காத்திருக்கும் ஒரு கலைஞர் எம் மத்தியில் இருக்கும் சமயத்திலேயே அவர் நாடகத்தை ஒலிபரப்புச் செய்து விட வேண்டும் என்பது!எந்த விதமான விவாதங்களும் புரியாமல் தலையாட்டிவிட்டுத் திரும்பினோம்.அப்புறம் மூன்று கிழமைகள் காற்றாய்ப் பறந்தன. இம்மாதத் (மார்ச்) தொடக்கத்தில் உதவிப்பணிப்பாளர் எனக்குத் தொ.பே.யில் தெரிவித்த தகவல் அதிர்ச்சி அடையச் செய்தது.“மிஸ்டர் காஸீமின் பிரதி முஸ்லிம் நிகழ்ச்சி ஒலிபரப்புக்குப் பொருத்தமற்றது. ஏழைப் பெண்ணை பணக்கார வாலிபன் மணம் புரிய மறுப்பது என்று ஒரு கதை. பணக்காரப் பெண் ஒருத்தி ஏழை மணமகனைத் தேர்ந்தெடுக்க தகப்பன் தடை என்று இன்னொரு கதை.

நாடகம் முழுதும் ஒரே காதல்! வருந்துகிறேன். ஒலிபரப்புக்குத் தகுதியில்லை!”நான், எருமை மட்டுக்கு ஒப்பாக, “அப்படியா சரி, எனத் தொடர்பைத் துண்டித்தேன். நம்புங்கள் நான் விவாதம் புரியவேயில்லை. இதற்குப் பிறகு கடந்த 11ஆம் திகதி முஸ்லிம் நிகழ்ச்சி நாடகத் தயாரிப்பாளரது தொ.பே.! இது எதிர்பாராதது.“மானா நாநா, நாடகத்தை 16ஆம் திகதி ஒலிபரப்பத் தீர்மானித்து விட்டேன். ஒலிப்பதிவு 13ல். தயவு செய்து பிரதியை டைப் செய்து, எட்டுப்பிரதிகள் வழங்குங்கள்!”இது நிலையமே செய்ய வேண்டிய பொறுப்பு. இருந்தும் மறுபேச்சின்றி சம்மதித்தேன்.காரணம் – உதவிப் பணிப்பாளர் முடிவும், தயாரிப்பாளர் முடிவும் எதிரெதிர். இந்த நிலையில், எப்படியோ ‘வேளாண்மை விளைந்து வீடு தோறும் வானொலி மூலம் போனால் சரி, கேட்பவர்கள் கலைஞரின் நல வாழ்வுக்குக் கையேந்துவார்களே!  

“எங்களுக்குத் தட்டெழுத்துச் செய்ததிலும் பிரதிகள் எட்டு எடுத்ததிலும் மூவாயிரம் செலவு! ‘நம்ம நண்பர் சீ.பீ, எம். காசிம் கலைஞருக்குத் தானே’ என நாங்கள் பொருட்படுத்தவில்லை!  

13.03.2021 சனி அன்று ஒலிப்பதிவு சிறப்பாக நடந்தது. அனுபவ கலைஞர்களும் சிகரம் தொட்டார்கள் நடிப்பில். தயாரிப்பும் மிகவும் நேர்த்தி,  இதில் முக்கியம், இரு மூத்த பெண் கலைஞர்களும், ஓர் ஆண் மூத்த கலைஞரும் மிகவும் சிரமத்தில் நிலையம் வந்ததும் நடித்ததும், யாரும் எந்தச் சன்மானமும் பெற்றுக் கொள்ளவில்லை. நாடகத்தில் பங்கெடுத்தவர்கள், கலைஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் வழங்கிய நண்பகல் விருந்துண்டு விடைபெற்றார்கள்.  

அந்த 16ஆம் திகதி (செவ்வாய்) நாடகம் ஒலிபரப்பாகும் நாளை-, நான் உட்பட பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்க இடி விழுந்தது இடி!  நாடகம் ஒலிபரப்பாகவில்லை! இல்லை!! இல்லை!  

அதற்கு மாற்று நிகழ்ச்சியாக, கிட்டத்தட்ட நினைவேந்தல் போல் ஒருவரைப் பற்றியது ஒலிபரப்பானது. அதைப் “பாரம்பரியம்” என்று அறிவிப்புச் செய்தார்கள்.   யாருக்கு என்றால் கலைஞர் காஸிமின் காலத்திலேயே அவருக்கும் என் போன்றோருக்கும் உற்ற நண்பனாகத் திகழ்ந்து வானொலி, மேடை நாடகத்துறையில் எழுத்தாளராக ஜொலித்து பற்பல ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டவன் அழைப்பை ஏற்றுச் சென்று விட்ட “ஒரு மனிதரின்” வானொலிப் பாரம்பரியம் பேசப்பட்டது. அரைமணி நேரம்!   இது எப்படி இருக்கு?   முன்னுரிமை யாருக்கு அளிப்பது?  

இன்றோ நாளையோ என இறைவன் அழைப்புக்குக் காத்திருக்கும் ஒருவருக்கா? அல்லது எப்போதோ மரணித்தவரின் பாரம்பரியம் பேசுவதற்காக?  

அதுவும் அன்றைய 16, செவ்வாய், அவரது நினைவு தினமும் அன்று.  நம் தமிழ்ப் பேசும் சமூகம் இரண்டும் யாரையும் வாழும்பொழுதே வாழ்த்து மகிழ மனம் ஒய்பாதது என்பது நூற்றுக்கு மேலேயே சரியானது.  

இனிப்பு

புதுச்சேரி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாண்டிச் சேரி என்று முன்னொரு காலத்தில் அழைத்தார்கள். “MADRAS TO PONDICHERRY’ என்றும் ஒரு தமிழ்ப்படம் வந்தது.  

‘சென்னை’ என்று யாருக்கும் தெரிந்த ஊரிலிருந்து சில மணித்துளிகள் இந்நகரம்.  

ஆங்கிலேயர் இலங்கையையும் சென்னையையும் ஆண்ட போது இந்தப் பாண்டிச்சேரியாகிய புதுச்சேரி பிரெஞ்சு அரசு கைவசம்               இருந்தது. அதை அவர்கள் தங்களது பிரெஞ்சுக் காலனி’ என்றே அழைத்தார்கள். நல்ல போக்குவரத்துப் பாதைகள் நவீன அமைப்பு!  

ஆனால் தமிழக அரசு கைவைக்க முடியாது. அது தனி! ஆட்சியும் அப்படி!  தமிழ் இலக்கிய மகா சூராதி சூரர் ஒருவருக்கும் புகலிடம் (தஞ்சம்) கொடுத்த இடம்! நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் ‘முண்டாசுக் கவிஞன்’ பாரதியார்.  

ஆங்கில ஏகாதிபத்திய அடாவடிகளுக்கு அகப்படாமல் இங்கே சில காலம் வாழ்ந்தார். ‘பாரதி தாசன்’ சுப்புரத்தினம் புதுச்சேரியே! இன்னும் நெருங்கி நாம் கள ஆய்வு செய்தால், பற்பல ஆண்டுகள் “இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம்” மூலம் இலங்கைக்கும் ஒரு பாலம் அமைத்த பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், அவர்தம் அருந்துணைவியார் இங்கே “காரைக்கால்” என்ற அதி நவீனத் துறைமுகப்பட்டினத்திலேயே  

மேலும், முஸ்லிம் சமூகமும் கிழக்கிலங்கை போல் பிட்டும் தேங்காய்ப் பூவுமாக ஹிந்து, கிறிஸ்துவப் பெருமக்களும் ஒன்றித்து!  

இத்தனையும் ஏன் விவரிக்கிறேன் என்றால், “முகம்மது கௌஸ்” என்கிற பாண்டிச்சேரி (புதுச்சேரி) மனிதர் ஒருவர், முருகன் கோயில் ஒன்று கட்டிக் கொடுத்திருக்கிறார்! என்ன திடுக்? ஏன் திகைப்பு! இன்றையத் தமிழ்நாடு, இன்றைய இலங்கைக்கு இப்போதையக் கால ஓட்டத்திற்கு இதெல்லாம் தேவை!  

இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் யூதர்களின் கைகோர்த்து, பள்ளிவாயிலும் வரவேற்று இருக்கை கொடுத்த இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) வழியில் இந்த முகம்மது கௌஸ்!  

புதுச் சேரி தொடருந்து (ரயில்) நிலையம் விட்டு வெளியில் வருகிறவர்கள் ஸ்ரீ கெளசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில் தரிசிப்பார்கள். வள்ளி தெய்வானை, கௌசிக பாலசுப்பிரமண்யர் ஆகியோர் வருகிற எம்மதத்தின்ரையும் வரவேற்பர்.   கோயில் கட்டும் பணிகளை 1970லில் தொடங்கி – 1977லில் முடித்தார் கௌஸ். அப்பொழுது கும்பாபிஷேகம் நடந்த சமயம்,  கோயிலை நிர்மாணித்தவரின் பெயருடன் இணைத்து ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணய சுவாமி எனப் பெயர் சூட்டினார்கள்.  

2002ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாகக் கும்பாபிஷேகம் நடந்தது. அப்பொழுதும் முகம்மது கௌஸை யாரும் மறக்கவில்லை. தூரத் தள்ளவில்லை!  மூன்றாம் முறையாக 2018 ஜூன் மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்த சமயம் கௌஸ் பெயர் மீண்டும் வழங்கியது.  

இனத் துவேசங்களை இல்லாமலாக்கும் ஒரு முயற்சிதான்! முகம்மது கௌஸ் செய்திருப்பது! இதற்கு “மார்க்க சாயங்களை, மதப்பூச்சுகளை” பூசி யாரும் முகம் சுளித்துக் கொள்ளக் கூடாது.   இது இன்றைய காலத்தின் கட்டாயம்!  
நல்லிணக்கம் எங்கும் எதிலும் தேவை!  

ஓர் அடிக்குறிப்பு:  

கேரளக் கரையோரம் மலையாளப் பிரதேசத்தில் ‘மலப்புறம்’ பகுதியில் இது போன்ற பல நிகழ்வுகள்! அறபுநாடுகளில் வாழ்கின்ற அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் கோயில் புனருத்தாரணம் செய்து கொடுக்க,   இந்துக்கள் பதிலுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி இங்கே அப்படியொரு காலம் ஏற்படுமா? 

Comments