ஆயிரம் ரூபா சம்பள உயர்வு: நீதிமன்றத்தில் எமக்கு எதிராகவும் தீர்ப்பு வரலாம்! | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு: நீதிமன்றத்தில் எமக்கு எதிராகவும் தீர்ப்பு வரலாம்!

முன்னாள் நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சரும் முன்னாள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் தலைவருமான வடிவேல் புத்திரசிகாமணியுடன் ஓர் நேர்காணல்.

கே: கடைசியாக நீங்கள் எமக்கு அளித்திருந்த செல்வியில் சம்பள நிர்ணய சபையின் முடிவு. தமக்கு சாதகமாக இல்லாவிட்டால் கம்பனி தரப்பு நீதிமன்றம் செல்லும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது நடந்து விட்டது. இவ்வழக்கு இழுபட்டுச் செல்லுமா? தீர்ப்பு எவ்வாறு அமைய வாய்ப்புள்ளது? தொழிலாளர் தரப்புக்கு பாதகமாக அமைந்தால் அடுத்ததாக என்ன?  

சம்பள நிர்ணய சபையில் கம்பனிகளுக்கு சார்பான தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் அதற்கு எதிராக கம்பனிகள் நீதிமன்றம் செல்வார்கள் என நான் ஏற்கனவே கூறியிருந்தேன். ஏனெனில் நான் கடந்த 1992 ஆம் ஆண்டிற்கு முன் சம்பள நிர்ணய சபை உறுப்பினராக செயற்பட்டதோடு கூட்டு ஒப்பந்தத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அதன் செயல்பாடுகளில் பங்கு பற்றியவன். தொழிலாளர்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை நன்கு அறிந்தவன். தேவையான தொழிற்சட்டங்களையும் நன்கு அறிந்தவன். எனவே சம்பள நிர்ணய சபை முடிவுகளை எதிர்த்து வழக்காட முடியும் என்பதை உங்கள் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தேன்.  

மேலும் அரசாங்க வர்த்தமானி என்பது ஒரு சட்டப் புத்தகமல்ல, அரசாங்க தீர்மானங்களை அறிவிக்கும் ஓர் அறிவித்தல் ஊடகமே. வர்த்தமானி அறிவித்தலுக்கு குறிப்பிட்ட காலத்தில் எவரும் எதிர்ப்பு கூறாவிட்டால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டதாக கருதலாம். அப்போது அதை அரசாங்கம் நடைமுறைப்படுத்தலாம்.

ஆனால் கம்பனிகள் மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியிருப்பதால் எமக்கு எதிராக தீர்ப்பு வரவும் வாய்ப்புள்ளது. அவர்கள் கூறுகின்ற (COP) உற்பத்தி செலவில் சம்பளம் 65 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் தேயிலை விலையில் (NSA) சராசரி விற்பனை விலை குறைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கான ஆதரங்களையும் சமர்பித்துள்ளனர்.  

அதேவேளை நாம், மக்களுடைய கஷ்டங்களையும் பொருட்களின் விலை ஏற்றத்தையும் வாழ்க்கைச் செலவையும் அடிப்படையாக கொண்டே சம்பள உயர்வு கோருகின்றோம். தோட்டக் கம்பனிகள் கூறுகின்ற விடயங்களுக்கு எதிராக பேசுவதற்கான தகவல்களை திரட்டி எவரும் பேசுவதில்லை. மாறாக இதை ஒரு அரசியல் பிரச்சினையாக நாம் முன்னெடுப்பதால் அது எந்தளவிற்கு நீதிமன்றத்திற்கு ஏற்புடையதாக இருக்கும் என்று தெரியவில்லை. எவற்றை வைத்து தீர்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து எமக்கு எவையெல்லாம் சாதகமற்றவை என்பதை உணர்ந்து எமது சட்டத்தரணிகள் வாதாட வேண்டும். 

கே: அரசாங்கம் சட்டம் இயற்றி ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்கச் செய்தால் தனியார் தொழில் துறை முதலீட்டாளர்களுக்கு அது தவறான சமிக்ஞையாக அமைந்துவிடக் கூடுமல்லவா?  

அரசாங்கம் சட்டம் இயற்றி ஆயிரம் ரூபா வழங்க வேண்டுமென்றால் இப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு செல்லும் முன்னரே அரசாங்கம் சட்டம் இயற்றியிருக்க வேண்டும். சட்டம் இயற்று முன் நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டால் இப்பிரச்சினை மேலும் சிக்கல்களை உருவாக்கும். அதேநேரம் தனியார்துறையினர் அல்லது முதலீட்டாளர்களுக்கு இது ஓர் தவறான சமிக்ஞையை கொடுக்கவும் முடியும். அது எதிர்காலத்திற்கு நல்லதல்ல இதனால் தான் ஆரம்ப காலத்திலிருந்து கூட்டு ஒப்பந்தத்தை ஆதரித்து வந்திருக்கிறேன்.  

கே: சம்பள சபை என்றால் சம்பள சபை, கூட்டு ஒப்பந்தம் என்றால் கூட்டு ஒப்பந்தம் என்ற நிலைப்பாட்டில் கம்பனிகள் உள்ளன. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரியாகி விடுமா?  

தோட்ட முதலாளிகள் எம்மைப்போலவே அவர்களுடைய இலாப நட்டத்தை கருத்தில் கொண்டே செயல்படுவார்கள். அவ்வகையில் அவர்கள் தற்பொழுது சம்பள நிர்ணய சபை ஏற்றுக் கொண்டு கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இதை செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.  

கே: தேயிலைத் தோட்ட ஆரம்ப காலத்தில் இருந்து சில நடைமுறைகள், சலுகைகள், வசதிகள் என்பன தொடர்ச்சியாக தோட்டங்களில் எழுதப்படாத சட்டங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. தொழிற்சங்கங்களுக்கு சந்தா பிடிப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் உள்ளது. இவற்றை இல்லாமல்  செய்துவிட்டு ஆயிரம் ரூபாய் மட்டும்தான் என்று கம்பனிகளால் முடிவெடுத்துவிட முடியுமா?  

நிச்சயமாக முடியாது. ஏனெனில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த எந்த உரிமைகளையும் யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. ஆனால் இவ்வாறு அனுபவித்த பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதை நிறுத்துகின்ற பொழுது எந்த தொழிற்சங்கமும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவ்வாறு நாம் இழந்த சலுகைகள் பல உண்டு. அவற்றை என்னால் விபரிக்க முடியும். ஆனால் இன்றைய தொழிற்சங்கவாதிகளுக்கு தெரியாது. சுக்குத் தண்ணி வழங்குவதிலிருந்து லயன் வாசலை கூட்டும் வரையும் அத்துடன் இன்னும் பல எத்தனையோ சலுகைகள் இருந்தன. சந்தா பிடிப்பது சம்பந்தமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் (CEEF) கடந்த 1960 ஆம் ஆண்டின் இறுதியில் 7 அம்சம், 11 அம்ச ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அந்த ஒப்பபந்தத்தின்படியே சந்தா அறவிடப்பட்டு வருகிறது. இப்போதுள்ள இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அன்று இல்லை. அன்றைய தோட்டக் கம்னிகளும் இல்லை. ஆனால் அரசாங்க தோட்டங்களை சுவீகரித்த பின்னரும் அன்றைய சலுகைகள் பல தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. இதை இன்றைய இலங்கை முதலாளிமார் சம்மேளனம் ( EFC) தடைசெய்ய முடியாது.  

கே: கம்பனி தரப்பு கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து சட்டப்படி விலகினாலோ அல்லது தொழிலாளர் தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலோ மறுபடியும் மற்றொரு கூட்டு ஒப்பந்தத்துக்கு செல்ல முடியும் தானே?  

நிச்சயமாக முடியும். மீண்டும் இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவிற்கு வரலாம். இருதரப்பினரும் முடிவுக்கு வந்தாலும் இறுதியில் அரசாங்கம் அதை வர்த்தமானியில் வெளியிட்டே நடைமுறைக்கு கொண்டு வரமுடியும். அப்பொழுது எதிர்ப்பில்லாத முத்தரப்பு ஒப்பந்தமாகும். இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
  
கே: ஆயிரம் ரூபா விவகாரம் தவறாகக் கையாளப்பட்டு விட்டதா? தொழிற்சங்க அனுபவமற்றவர்கள் சங்கங்களில் இருப்பதாலும், தொழிலாளர் உரிமைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டதாலும் விவகாரம் குழம்பிப்போய் விட்டதாகக் கருதுகிறீர்களா?  

ஆயிரம் ரூபா சம்பளம் என்ற யோசனை எவ்வாறு வந்ததென்று பார்ப்போம். அப்பொழுது இ.தொ.கா நிதிச் செயலாளராகவும் பிரதியமைச்சராகவும் விளங்கிய முத்து சிவலிங்கம் ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது அப்பொழுது 300 ரூபாவாக இருந்த சம்பளம் போதாது என்றும் ஆயிரம் ரூபா கொடுத்தாலும் போதாதென்றும் குறிப்பிட்டார். ஊடகங்கள் அந்த விடயத்தை பெரிதுப்படுத்தி அதை ஒரு அரசியல் பிரச்சினையாக மாற்றின. இன்றும் கூட வாழ்க்கைச் செலவிற்கு ஆயிரம் ரூபா போதாதுதான். எனவே இந்த விடயத்தை நாம் சரியான முறையில் கையாளவில்லை. என்பதே எனது கருத்தாகும். கம்பனிகளோடு மீண்டும் பேசி தொழிலாளர்களுடைய வருமானத்தை அதிகரிக்கக்கூடிய வேறு விடயங்களையும் கவனிக்க வேண்டும்.

கே: சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப்பற்றி அனுபவமிக்க தொழிற்சங்க அரசியல்வாதியாகிய நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?  

சம்பள நிர்ணய சபையில் இரண்டு விடயங்களுக்கான தீர்மானங்களை எடுத்திருக்க முடியும். ஆனால் அனுபவமில்லாத காரணத்தால் தொழிற்சங்கவாதிகள் அவ்விடயத்தில் கோட்டை விட்டனர். அந்த இரண்டு விடயங்களில் ஒன்று ஆகக்குறைந்த சம்பளம் அல்லது அடிப்படை சம்பளம். இரண்டாவது வாக்கை செலவு புள்ளிக்கேற்ப கொடுப்பனவு (COLA). இதைதான் கடந்த 1992 ஆம் ஆண்டு நான் செய்தேன். அன்று தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை செலவு புள்ளி 4 ஆக இருந்ததை 6 ஆக உயர்த்துவதற்கு செயல்பட்டேன். அதை நடைமுறைப்படுத்துவதற்கு அன்றைய அரசாங்க பிரதிநிதிகள் சம்பள நிர்ணய சபையில் எமக்கு ஆதரவு தந்ததோடு முதலாளிமார் பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அன்றைய சம்பள நிர்ணய சபை உறுப்பினர்களாக இருந்த மறைந்த தலைவர்களான ஏ. அஸீஸ், எஸ். நடேசன், வீ. எஸ். ராஜா, எம். சுப்பையா உட்பட பலரும் என்னை பாராட்டினார்கள். அதன் பின்னர் அதை பிரபல தொழிற்சங்கவாதியாக இருந்த அமைச்சர் (FREEZE) உறைநிலையில் அதை வைத்துவிட்டார். அது ஒரு பெரிய கதை. இல்லாவிட்டால் எங்களுக்கு எப்போதோ ஆயிரம் ரூபா கிடைத்திருக்கும்!

நேர்கண்டவர்:
நூரளை சுப்பிரமணியம்

Comments