அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் இரத்தம் உறைதலுக்கும் தொடர்புள்ளதா? | தினகரன் வாரமஞ்சரி

அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் இரத்தம் உறைதலுக்கும் தொடர்புள்ளதா?

இன்றைய நவீன உலகில் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நான்கைந்து தடுப்பு மருந்துகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றில் பைசர்-பயோ என் டெக், அஸட்ராசெனகா, மொடர்னா, ஸ்புட்னிக் - வி, சினோபாம் என்பன முன்னணியில் திகழ்ந்து கொண்டிருக்கும் தடுப்பு மருந்துகளாகும். இவற்றில் ஏதாவதொன்றை அவசர தேவையின் நிமித்தம் தத்தம் பிரஜைகளுக்கு வழங்கவென ஒவ்வொரு நாடும் அங்கீகாரம் அளித்திருக்கின்றது. அதற்கேற்ப குறிக்கப்பட்ட கால இடை வெளியில் இரண்டு சொட்டுக்கள் வீதம் ஊசி மூலம் முன்னுரிமை அடிப்படையில் இத்தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இத்தொற்றின் இச்சவாலை கட்டுப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பு மருந்துகளில் ஒன்றான பைசர்-பயோ என் டெக் தடுப்பு மருந்தைப் பிரித்தானியா 2020 டிசம்பர் 8 ஆம் திகதி முதல் தம் மக்களுக்கு வழங்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளும் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.

அந்த வகையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனகா ( AstraZeneca) நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தும் உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன. அந்தடிப்படையில் தென்னாசியப் பிராந்தியத்திலுள்ள இந்திய நாட்டின் சீரம் நிறுவனத்தில் கொவிசீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற இத்தடுப்பு மருந்து, இந்தியா உட்பட இப்பிராந்தியத்திலுள்ள பல நாடுகளிலும் மக்களுக்கு வழங்கப்படவும் செய்கின்றது. அவற்றில் இலங்கையும் அடங்கும். இலங்கையானது இத்தடுப்பு மருந்துக்கே முதலில் அனுமதி வழங்கியது.

இதற்கேற்ப, இலங்கையானது, 2021 ஜனவரி 29 முதல் தம் மக்களுக்கு இத்தடுப்பு மருந்தை வழங்க ஆரம்பித்தது. அன்று தொடக்கம் மார்ச் 17 ஆம் திகதி வரையும் 08 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நாட்டில் இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதோடு தொடர்ந்தும் வழங்கப்பட்டும் வருகின்றன.

என்றாலும் இந்த அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இத்தடுப்பு மருந்தைப் பெற்றிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நரம்பில் இரத்தம் உறைதல் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். அத்தோடு இத்தடுப்பு மருந்தை ஐரோப்பிய கண்ட நாடுகளில் பெற்றுக்கொண்ட வேறு சில நாடுகளைச் சேர்ந்த சிலரும் இரத்தம் உறைதலால் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட அச்ச நிலையைத் தொடர்ந்து நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட 14 நாடுகள் இந்த அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.

இவ்வாறான நிலையில் இத்தடுப்பு மருந்து தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளதும் மக்கள் மத்தியிலும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஸ்ட்ரா செனகா நிறுவனம், இரத்தம் உறைதல் பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய கண்ட நாடுகளில் மாத்திரம் 17 மில்லியன் மக்களுக்கு இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் நாம் மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றோம். இத்தடுப்பு மருந்து பெற்றவர்களில் 15 பேர் இரத்தம் உறைதல் பாதிப்புக்கும் 22 பேர் நுரையீரல் தொடர்பான உபாதைகளுக்கும் உள்ளாகினர். இது நாம் எதிர்பார்த்ததை விடவும் குறைவான எண்ணிக்கைப் பக்க விளைவுப் பாதிப்புக்களே' என்றும் அந்நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

ஆனால் இந்த அஸ்ட்ரா செனா தடுப்பூசியைப் பிரித்தானியா, அவுஸ்திரேலியா உட்பட 65 நாடுகள் தம் பிரஜைகளுக்கு வழங்கி வருகின்றன. அவற்றில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இத்தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் நாடுகளும் அடங்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இத்தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் நாடுகளில் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டதற்கான பதிவுகள் இற்றைவரையும் இல்லை.

இவ்வாறான சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம், 'கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கு வழங்கப் பொருத்தமான தடுப்பு மருந்து என்று அஸ்ட்ரா செனகா' வைக் குறிப்பிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், இத்தடுப்பு மருந்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

என்றாலும் இந்த அஸ்டரா செனகா தடுப்பு மருந்தின் இந்திய உற்பத்தி இலங்கையில் பயன்படுத்தப்பட்டாலும் இத்தடுப்பு மருந்து தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள அச்சம் இங்கும் பிரதிபலப்பதை அவதானிக்க முடிகின்றது.

அதனால் தான் ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் கொவிட் 19 கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷிணி பெர்னாண்டோ புள்ளே, 'தற்போது இந்நாட்டில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தடுப்பு மருந்தினால் சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது போன்ற பாதிப்புக்கள் இற்றை வரையும் இங்கு பதிவாகவில்லை. அதனால் நாம் இத்தடுப்பு மருந்தைத் தொடர்ந்தும் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.

இதேவேளை அரசாங்கம், 'நாட்டுக்கு மக்களுக்கு இத்தடுப்பு மருந்து தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்கப்படும்' என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.

இவ்வாறான பின்புலத்தில் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான இந்த அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் இந்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவும் தவறவில்லை.

கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான இத்தடுப்பூசி மூலம் கொவிட் 19 வைரஸ் உடலினுள் உட்செலுத்தப்படுவதில்லை. மாறாக இவ்வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அதனை எளிதில் அடையாளங்கண்டறிந்து அழிக்கும் நோயெதிர்ப்புக் கட்டமைப்பின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையே இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கென இவ்வைரஸை கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழியாக இவ்வைரஸின் மேற்பரப்பிலுள்ள அதற்கே உரித்தான புரதத்தின் பகுதி (spike protein) பயன்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில் இத்தடுப்பூசியில் ChAdOx1 எனப்படும் வைரஸ் மூலக்கூறு உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மனிதனில் எவ்வித நோய்த் தன்மையையும் ஏற்படுத்தக்கூடியதல்ல. இதில் அடங்கியுள்ள மரபணுவின் குறித்த பகுதி மூலம் வழங்கப்படும் சமிக்ஞைக்கு அமைய இவ்வைரஸை அடையாளம் காணக்கூடிய குறித்த புரதத்தின் ஒரு பகுதி உடலினுள் உருவாகிறது. அத்தோடு அதேநேரத்தில் மனிதனின் நோயெதிர்ப்புக் கட்டமைப்பு இந்த ஸ்பைக் புரதக் (spike protein) கூறுகளை அடையாளம் காணவும் அவற்றை அழிக்கவும் தொடங்குகிறது. இப்புரதக் கூறுகளின் இத்தடுப்பு நடவடிக்கையானது, ஸ்பைக் புரதத்திற்கு எதிராக மனிதனின் நோயெதிர்ப்புக் கட்டமைப்பினால் புதிதாக உருவாக்கப்பட்ட விசேட பிறபொருளெதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

இச்செயற்பாடு முறையாக இடம்பெற 02, -03 வாரங்களாவது செல்லும். அதனால் இத்தடுப்பூசியினை இரண்டாவது தடவையாகவும் பெற்றுக்கொண்ட பின்னர், இச்செயன்முறை மீளவும் செயல்படுத்தப்பட்டு உடலில் அதிகளவில் பிறபொருளெதிரிகள் உருவாக்கப்படும். இது கொரோனா வைரஸிற்கு எதிராக உடலில் ஆயுதக் களஞ்சியத்தை அமைப்பது போன்ற ஒரு செயற்பாடாகும். அதாவது நோயெதிர்ப்புக் கட்டமைப்புக்கும் வைரசிற்கு சமமான பிறபொருள் ஒன்றிற்கும் இடையிலான ஒரு சிறிய போரின் வடிவத்தை ஒத்த செயற்பாடே இங்கு இடம்பெறுகிறது.

இதன் விளைவாகவே தடுப்பூசி பெற்ற பின்னர் காய்ச்சல், உடல் வலி, தடுப்பூசி வழங்கிய இடத்தில் வலி போன்றவாறான சிறிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றது. ஏனெனில் உடலினுள் செலுத்தப்படும் எந்தவொன்றையும் நோயெதிப்பு கட்டமைப்பு முதலில் எதிரியாகவே நோக்கும். அதன் வெளிப்பாடாகவே இப்பக்கவிளைவுகள் வெளிப்படுகின்றன. அவ்வளவு தான். அதன் பின்னரான சொற்ப நேர காலத்திற்குள் அது சீராகிவிடும். சிறு குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் இவ்வாறான செயற்பாடு இடம்பெறுவதன் விளைவாகவே அவர்களுக்கும் சில சிறிய பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இத்தடுப்பூசியை வளர்ந்தவர்களுக்கு வழங்கும் போது இடம்பெறும் செயற்பாடே குழந்தைகளின் உடலிலும் இடம்பெறுகின்றது. அதனால் உடலில் பிறபொருளெதிரியை உருவாக்கும் இச்செயல்முறையை ஒரு பிழையான தவறான நடவடிக்கையாகக் கருதலாகாது.

கொவிட் 19 தொற்றுக் கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி பெற்றுக் கொண்டவரின் உடலுக்குள் எதிர்காலத்தில் இவ்வைரஸ் செல்லுமாயின், அதற்கு எதிரான பிறபொருளெதிரி உடலில் காணப்படுவதனால், இப்பிறபொருளெதிரிகளினால் இவ்வைரசின் வெளிப் புறமாகக் காணப்படும் ஸ்பைக் புரதத்தை மிக விரைவாக இனங்கண்டு முழு வைரஸையும் விரைவாகவும் இலகுவாகவும் அழித்துவிடும்.

இவ்வாறு தெளிவுபடுத்தி இருக்கின்றது இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம்.

அதேநேரம் இந்த அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்து, இரத்தம் உறைதல் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது தான் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

ஆகவே கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து தொடர்பில் மருத்துவ நிபுணர்களின் அபிப்பிராயங்கள் ஆலோசனைகளுக்கு ஏற்ப செயற்படுவதே பொருத்தமானதாகும். ஏனெனில் உலகிற்கே பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்த இப்போதைக்கு உள்ள சிறந்த வழி அதற்கெதிரான தடுப்பு மருந்துப் பயன்பாடேயாகும்.

மர்லின் மரிக்கார்

Comments