அம்பிகையின் உண்ணாவிரதப் போராட்டம்; சாதித்தது என்ன? உண்மையில் வெற்றியீட்டியவர்கள் யார்? | தினகரன் வாரமஞ்சரி

அம்பிகையின் உண்ணாவிரதப் போராட்டம்; சாதித்தது என்ன? உண்மையில் வெற்றியீட்டியவர்கள் யார்?

இலங்கை தமிழர்களுக்கு ஐ.நா. தீர்வை தரும் என நம்புபவர்கள், தனிமனித போராட்டத்தினூடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற பிரசாரத்துடன் செய்யப்படும் குருட்டு அரசியல் போராட்டங்கள் தமிழர்களை தொடர்ந்தும் அரசியல் முட்டுச்சந்தில் அனாதைகளாக நிறுத்தி வருகின்றது.

முள்ளி வாய்க்காலில் புலிகள் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் மீதான அவலங்கள் அரங்கேறிய 2009 ஆண்டுக்கு முன்னராக 15 வருடங்களுக்கு முன்னரே புலம்பெயர் நாடுகளில் வலுவாக இருந்த விடுதலைப்புலிகளையும், புலம்பெயர் அமைப்புக்களையும் சிறுகச் சிறுக அழிப்பதற்கு உலக வல்லாதிக்க நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன.

புலிகளின் செயற்பாட்டாளர்கள், ஈழத்தமிழரின் செயற்பாட்டாளர்கள் புலம் பெயர் தேசங்களில் கைது செய்யப்பட்டு ஐரோப்பிய அமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தை மூலம் குறைந்த பட்ச தீர்வுக்கு புலிகள் சம்மதிக்க வேண்டும் அத்துடன் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் உலக நாடுகள் உறுதியாக இருந்தன.

உலக நாடுகளின் இந்த இராசதந்திரத்தை புலிகள் உணர்ந்துகொள்ளவில்லையா? அல்லது தெரிந்தும் பிடிவாதத்துடன் போரிட்டு மடிந்தார்களா? என்பதை வெளியுலகுக்கு சொல்ல இப்பொது யாரும் உயிருடன் இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுடன் புலம்பெயர் அமைப்புக்கள் பலவற்றின் முடிவுகளும் எழுதப்பட்டது.

புலிகள் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை ஈழத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றிக் கொண்டது. ஆனால் சுயநல அரசியல் காரணமாகவும் இலங்கை அரசாங்கத்துடன் பின்கதவால் தேன்நிலவு கொண்டாடிய விளைவும், தொடர்ச்சியாக மக்களை முட்டாளாக்க முடியாத கூட்டமைப்பால் அதை தக்கவைக்க முடியாமல் போய்விட்டது. இப்பொழுது பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அம்பிகை செல்வக்குமாரின் போராட்டத்திற்கு முண்டு கொடுத்து புலிகளின் அரசியல் வெற்றிடத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிரப்ப முயற்சி செய்கிறதா? என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது. புலிகளின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமானால் அவர்கள் புலிகளாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது. வேண்டுமானால் புலிகள் அமைப்பின் வீரமும், தியாகமும், பயங்கரமும், அழிவும் நிறைந்த கடந்தகால அழியாத வரலாறை எதிர்காலத்தில் பேசி அரசியல் செய்யலாம். அமெரிக்க கப்பல் தமிழ் மக்களை காப்பாற்ற வரும் எனத் தெரிவித்து முள்ளிவாய்க்கால் முட்டுச்சந்தில் மக்களையும், போராளிகளையும் கைவிட்டதையும் புலிகளின் அரசியல் என முலாம் பூசலாம்.

சமகாலத்தில் தமிழ் மக்களின் பூகோள அரசியல் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் காலத்திற்கு காலம் தமிழ் மக்களை காப்பாற்ற வல்லாதிக்க சக்திகளால் மீட்பர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அல்லது தமிழ் மக்கள் சார்பாக எழும் அரசியல் அழுத்தங்களை குறைப்பதற்காக புதிய கதாநாயகர்கள் அறிமுகஞ்செய்யப்படுகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை தோற்றுவித்த தருணத்தில் தமிழ் மக்களின் புதிய கதாநாயகனாக உருவாக்கப்பட்டவர்தான் சி.வி.விக்கினேஸ்வரன். இவர் தமிழ் மக்களுக்கு அறிமுகமில்லாதவர், தமிழ் மக்களின் வலி நிறைந்த உரிமைப் போராட்டங்களில் பங்கு கொள்ளாதவர், ஏன் போராட்டம் என்றால் என்ன என்றுகூட தெரியாதவர் மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர். இன்று இலங்கையின் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தாலும் பிற்போக்குத்தனம் மிக்க மிதவாத கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ஒரு நபராக செயற்படுபவர். தமிழ் மக்கள் இலங்கையின் மூத்தகுடிகள் என பேசி இனங்களுக்கிடையில் குழப்பங்களையும் அச்ச நிலைமையையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் வெற்று உசுப்பேத்தும் அரசியல் செய்யும் ஒருவர். இவ்வாறானவர்களே வல்லாதிக்க சக்திகளின் தெரிவாகவும் தமிழர்களின் கதாநாயகர்களுமாக அறிமகமாவர்கள் பின்னர் தமிழர்கள் இலகுவாக ஏமாற்றப்படுவார்;கள்.

ஐ.நா.வின் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தொடரில் உலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த வேண்டும் என இந்திய தமிழ் நாட்டில் குரல்கள் எழுந்த போதும், இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை நடைபயணம் என போராட்டங்கள் நடைபெற தொடங்கிய வேளையில் ஈழத்தமிழருக்கான புதிய போராட்ட நாயகியாக வல்லாதிக்க சக்கதிகளால் 2021 அறிமுகம் செய்யப்பட்டவர்தான் அம்பிகை செல்வக்குமார்.

இலங்கையை உலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்த வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையுடன் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை(27-.02.-2021) அன்று பிரத்தானியாவில் ஆரம்பித்து 16 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னர் ஐ.நா.தனது கோரிக்கைகளில் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறி தனது உண்ணாவிதத்தை நிறைவு செய்துள்ளர் அம்பிகை செல்வக்குமார்.

இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணையை ஏற்படுத்தலாம் என்ற நோக்கம் ஒரு பொதும் நிறைவேறப் போவதில்லை என்பதை ஐ.நாவினதும், சர்வதேச நாடுகளினதும் செயற்பாடுகள் எமக்கு உணர்த்துகின்றன. அத்துடன் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுகின்ற தனி நபர்கள் உள்நாட்டு அரசியல் அறிவோ அல்லது சர்வதேச அரசியல் நிலவரங்களோ புரியாத திறனற்ற நபர்களாக இருப்பதுடன் வெற்று உணர்ச்சி அரசியலே இவர்களை இயக்கிச் செல்கிறது.

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை செல்வக்குமார் என்பவர் யார்? இவருக்கும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதற்கு அப்பால் இவரின் போராட்டத்தால் யார்? யார்? இலாபம் அடைந்துள்ளனர்? அல்லது வெற்றியீட்டியுள்ளனர்? ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஈழத்தமிழர் மீதான பார்வை திசை திருப்பப்பட்டதா? ஏன்பதுதான் மிகப்பெரும் கேள்வியாக இருக்கின்றது.

அம்பிகை செல்வக்குமாரின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் 16 வது நாள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதாவது அம்பிகை செல்வக்குமாரின் கோரிக்கையில் ஒன்று ஐ.நா.வால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதனால் தமிழ் மக்கள் ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டிவிட்டார்கள் என்றும் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டம் மூலம் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது எனவும் தெரிவித்து போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

அம்பிகை செல்வக்குமாரினால் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கோரிக்கைகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டாலும் தனது போராட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்திருந்தார். அதில் ஐ.நா. மனிதஉரிமை சாசனத்திலே இருக்கின்ற விசாரணை பொறிமுறையை இலங்கை மீது கொண்டு வருவதற்கான சரத்து இப்போதுள்ள தீர்மானத்தில் 2021 உள்ளடக்கப்பட்டு விட்டதாகவும் அதனால் போராட்டத்தினை கைவிடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐ.நா.வின் விசாரணை பொறிமுறையினுள் உள்ளடக்கப்படுகின்ற ஒரு சரத்தில் சாட்சியங்களை, ஆதாரங்களை சேகரிப்பது என்ற சொல் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இந்த சொல்தான் தமிழ் மக்களின் விடுதலையின் பாதையை திறக்கப்போகின்றது. என ஒரு வியாக்கியானம் கொடுக்கபப்பட்டு, இப் போராட்டத்தின் மூலம் மாபெரும் வெற்றி ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பிகை அம்மணியின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

உண்மையிலேயே அம்பிகை செல்வக்குமாரின் போராட்டத்தின் காரணமாக தமிழ் மக்களின் அரசியலில் ஏற்படக்கூடிய அல்லது ஏற்பட்ட விளைவு என்ன? என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை என்பதும் அதனோடு ஏற்படுத்தப்பட்ட பொறிமுறையான சாட்சியங்கள், ஆதாரங்களை சேகரிப்பது என்ற தீர்மானமும் பிரித்தானிய தலைமையிலான உறுப்பு நாடுகளின் தலைமையில் 05-.03.-2021ஆம் திகதி தீர்மானமாக எடுக்கப்பட்டிருந்தது. அத்தீர்மானம் இறுதி செய்யப்பட்டு 08.03-.2021 அன்று தமிழ் தரப்புக்களின் கைகளுக்கு அதிகாரபூர்வமாக வந்து சேர்ந்து விட்டது.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டத்தின் காரணமாகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக காட்டுவதன் அரசியல் நோக்கம் என்ன? அல்லது அவரின் போராட்டம் தமிழ் மக்களுக்கு தந்துள்ள அரசியல் விளைவு என்ன? இப்பிரச்சினையை முன்று வகையாக பார்க்கலாம் ஒன்று இலங்கை தரப்பு, மற்றது இந்திய அரசு, மூன்றாவது இப்பிரச்சனையை கையாளுகின்ற ஐக்கிய நாடுகள் தரப்பு இந்த மூன்று தரப்பினருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் எவ்வாறான அரசியல் விளைவை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால், தெளிவான அரசியல் நோக்கற்ற போராட்டங்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் பயணிக்க முடியாதவகையில் அரசியல் முட்டுச்சந்தில் நிறுத்தியுள்ளன என்றே சொல்லத் தோன்றுகின்றது.

அரசியல் நோக்கமல்லாமல் சுயலாபங்களுக்காக வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டதன் காரணமாகவே எப்பொதோ ஐ.நா.மனித உரிமைகள் சபைக்கு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை காரணம் காட்டி போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமை சபையின் முழமையான கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் யாருக்கு அரசியல் சேவை செய்துள்ளது?

முதலாவது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் காரணமாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசனை நோக்கி தமிழ் நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் ஒரு கோரிக்கை வைக்கக் கூடிய சுழல் நிலவியது. காரணம் இந்தியாவில் இப்பொது தேர்தல் காலம், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழ் சார்ந்து, இனம் சார்ந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை அங்கு காணப்பட்டது. தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக போராட்டம் ஒன்றை செய்யக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்றும் அதற்கான சூழல் தமிழ் நாட்டில் முழுதாக இருந்த நிலையில் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டம் காரணமாக இந்திய மத்திய அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய அழுத்தம் திசை மாறி பிரித்தானிய அரசு அம்பிகை செல்வக்குமாரின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற குரலை தமிழ் நாட்டிலிருந்து எழுப்ப வைத்து விட்டது.

தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக பிரித்தானியா அரசாங்கத்திடம் அம்பிகை அம்மையாரின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமாறு குரல் எழுப்பினரே தவிர இந்திய அரசாங்கத்தை நோக்கி தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய அவர்களின் குரல் அம்பிகை அம்மாவின் குருட்டு அரசியல் காரணமாக தடுக்கப்பட்டது.

தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஈழத்தமிழருக்காக ஐ.நாவில் அழுத்தம் கொடுக்க வேண்டிய இந்திய அரசிற்கு தமிழ் நாட்டிலிருந்து வரக்கூடிய எழுச்சிக் குரல்களை மறுவளமாக திருப்பி இப்போராட்டத்தின் மூலம் இந்திய அரசு தன் மீதான அழுத்தத்தை குறைத்து கையாண்டுள்ளது.

இரண்டாவது ஐ.நா மனித உரிமை அமைப்பால் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் பொது 2021 இல் கொண்டுவரப்பட்ட தீர்மானம் காரம் குறைந்ததாக கீழ் நிலையில் இருக்கின்றது. ஐ.நாவின் அறிக்கைகளில் தமிழ் மக்கள் என்ற பதம் பாவிக்கப்படவில்லை அவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பை ஐ.நா. வழங்கியுள்ளது.

ஆகவே ஐ.நா தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்ற புரிதலை தமிழ் மக்கள் உணரத் தொடங்கிய வேளையில் இது எதிர்மாறாக அதாவது தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஐ.நா. செவிசாய்கின்றது என்ற மாயையை அம்பிகை அம்மணியின் போராட்டத்தை வைத்து உருவாக்கி, எம்மவர்களை வைத்தே எங்களை நம்பப் பண்ணியுள்ளனர். மற்றையது பிரித்தானியாவின் தலைமையின் கீழ் உள்ள உறுப்பு நாடுகளில் வசிக்கின்ற தமிழ் மக்கள் அந்த நாடுகளின் அரசியல் செயற்பாட்டில் அதிருப்தி கொள்ளாதிருக்க இப்போராட்டத்தின் மூலம் மாபெரும் வெற்றி தமிழருக்கு கிடைத்துள்ளதாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மேற்கு நாடுகளில் உருவாகக் கூடிய எதிர்ப்பு அரசியலை மிகவும் சாணக்கியமாக தமக்கு சார்பாக கையாண்டு எம்மவர்களை வைத்தே எமது கண்ணை குத்தியுள்ளனர்.

மூன்றாவது அம்பிகை அம்மணியின் போராட்டத்தினூடாக தமிழர்கள் மேற்குலகத்துடன் ஒன்று சேர்ந்து இலங்கைகயை தாக்க வருகின்றார்கள் என்ற மாயையை இலங்கை அரசு சிங்கள மக்களுக்கு சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பை இந்த முட்டுச்சந்து குருட்டு அரசியல் உருவாக்கியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு எதிரான ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இலங்கை தனக்கு சார்பாக மாற்றுவதற்கான அனைத்து நியாயங்களையும் இப்போராட்டம் அமைத்துக் கொடுத்துள்ளது.

தமிழர் தரப்பிலிருந்து இலங்கைக்கு வரக்கூடிய அழுத்தங்களை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் ஐ.நா.வில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பை அம்பிகை அம்மணியின் குருட்டுத்தனமான அரசியல் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அம்பிகை அம்மணியின் போராட்டத்தினால் இலங்கை அரசாங்கம் வெற்றியீட்டியுள்ளது, இந்திய அரசாங்கம் வெற்றியீட்டியுள்ளது, ஐ.நா. வெற்றியீட்டியிருக்கின்றது, பிரித்தானியா அரசின் கீழ் உள்ள உறுப்பு நாடுகள் வெற்றியீட்டியிருக்கின்றன, மனித உரிமைகள் சபை வெற்றியீட்டியிருக்கின்றது, இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட விசாரணை பொறிமுறை என்ற ஏமாற்று பொறிமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் செய்யும் அரசியல் சரியானது என இப்போராட்டத்தின் மூலம் நிருபித்துள்ளது.

அம்பிகை அம்மணியின் குருட்டு அரசியல் போராட்டத்தின் மூலம் தமிழர்கள் ஐ.நா.வின் அரசியல் முட்டுச்சந்தில் நிறுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களின் போராட்டத்தினூடாக இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா.தொடர்ச்சியாக கால அவகாசத்தை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எதிர்காலத்தில் இவ்வாறான தொடர்ச்சியான அனாதை போராட்டங்கள் உருவாகும். அதை மேற்கூறிய வல்லாதிக்க சக்திகள் தங்கள் அரசியல் தேவைகளுக்காகக் கையாளும், அம்பிகை அம்மணி போன்றவர்களை அடையாளம் கண்டு தமிழர்கள் இவ்வாறான தனிமனித போராட்டங்களை புறக்கணிப்பதுடன் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஐ.நா.நோக்கி ஒரு அரசியல் அழுத்தத்தை பிராந்திய அரசியல் ஊடாக செலுத்தாத வரையில் இவ்வாறான அழிவு அரசியல் தமிழருக்கு சாபக்கேடாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.

எம்.ஜி.ரெட்ன காந்தன்

Comments