32 தேசிய, கனிஷ்ட மெய்வல்லுநர்களுக்கு ரிட்ஸ்பரி நிறுவனம் அனுசரணை | தினகரன் வாரமஞ்சரி

32 தேசிய, கனிஷ்ட மெய்வல்லுநர்களுக்கு ரிட்ஸ்பரி நிறுவனம் அனுசரணை

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா உட்பட இன்னும் பல சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கின்ற வீர, வீராங்கனைகளின் திறமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 'ரிட்ஸ்பரியின் தேசத்துக்கு ஒரு வெற்றிவீரர்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 32 மெய்வல்லுநர்களுக்கு அனுசரணை வழங்கப்பட்டது.

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக இலங்கையின் மெய்வல்லுநர் விளையாட்டு உள்ளிட்ட ஸ்கொஷ், நீச்சல், றக்பி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களுக்கும் தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வருகின்றது ரிட்ஸ்பரி.

இந்நிலையிலேயே, இலங்கைக்கு பதக்கங்களை வென்றுகொடுக்கக்கூடியவர்கள் என தேசிய மெய்வல்லுநர் தெரிவுக்குழுவினால் இனங்காணப்பட்டுள்ள 2019 முதல் தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 18 வீர, வீராங்கனைகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபா வீதம் 3 இலட்சம் ரூபா அனுசரணையை ரிட்ஸ்பரி நிறுவனம் வழங்கவுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 18 வீரர்களினதும் பயிற்சியாளர்களாக கடமையாற்றி வருகின்ற 10 பேருக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை மெய்வல்லுநர் பயிற்றுநர்கள் சங்கத்தின் முன்மொழிவுக்கு அமைய எதிர்கால நட்சத்திரங்களாக விளங்குகின்ற 14 பாடசாலை வீர, வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கி வருகின்ற 60 ஆயிரம் ரூபா அனுசரணைத் தொகையை இந்த வருடம் முதல் 32 வீரர்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிட்ஸ்பரியின் தேசத்துக்கு ஒரு வெற்றிவீரர் திட்டத்தின் கீழ் நன்மை பெறவுள்ள வீரர்களுக்கு அனுசரணை வழங்கும் வைபவத்தில் பேசிய சிபிஎல் புட்ஸ் இன்டர்நெஷனல் லிமிட்டெட்டின் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) நிலுபுல் டி சில்வா, 'நாட்டில் முதல்தர சொக்கலெட் என்ற வகையில் இலங்கையின் முதல்தர மெய்வல்லுநர்களுக்கு நாங்கள் அனுசரணை வழங்குகின்றோம்.

பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க கனவை கைவிட நேரிடுகின்றது. வீரர்கள் எவ்வித தடைகளையும் எதிர்கொள்ளாமல் ஒலிம்பிக் பதக்க கனவை நனவாக்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்' என தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த வைபவத்தில் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ரஸித் விக்ரமசிங்ஹ, பிரதான நிறைவேற்று அதிகாரி சமித பெரேரா, இலங்கை மெய்வல்லுநர் சங்க தெரிவுக் குழு தலைவர் விமலசேன பெரேரா, அதன் உறுப்பினர்களான இனேகா குரே, மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் ப்ரேமா பின்னவல மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் உபாலி அமரதுங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா நிதி உதவி பெறும் வீரர்கள்:

சுமேத ரணசிங்க, வினோஜ் சஞ்சய டி சில்வா, அருண தர்ஷன, ஹிமாஷ ஏஷான், அமில ஜயசிறி, குப்புன் குஷான்த, ரொஷான் தம்மிக்க, செனிரு அமரசிங்க, நிமாலி லியனஆராச்சி, ஷெலிண்டா ஜென்சென், நடீஷா ராமநாயக்க, இனேக்கா குறே, டில்ஷா குமாரசிங்க, அமாஷா டி சில்வா, லக்ஷிகா சுகந்தி, நிலானி ரட்நாயக்க, இந்துனில் ஹேரத், சுரேஷான் தனஞ்சய, விதூஷா லக்ஷானி

மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா நிதி உதவி பெறும் வீரர்கள்:

காவிந்தி சஞ்சனா, அமேஷா ஹெட்டிஆராச்சி, இஷார பல்லேகம, நவிஷ்க சந்தேஷ், ரஷ்மி காவிந்தியா, சதீப்பா ஹெண்டர்சன், காவிந்தி தத்சரணி, ஷானிக்கா லக்ஷானி, ஜனிந்து லக்விஜய, டபிள்யூ. கே. பியசிறி, ஹர்ஷா கருணாரட்ன, சதினி காவீஷா, டிலான் போகொட.

பீ.எப் மொஹமட்

Comments