பெருந்தோட்ட சேவையாளர்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட சேவையாளர்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்

பெருந்தோட்டங்களில் சேவையாற்றும் சேவையாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள். அவர்கள் தோட்டங்களில் தொழில் செய்து ஓய்வு பெற்றபின் தமக்கென சொந்தக்காணி இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். இது சம்பந்தமாக தொழில் அமைச்சர் சிறிபால டி சில்வாவுடன் பேச்சுவாாத்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்றும் சுமார் 3300 தோட்ட சேவையாளர்கள் காணியில்லாத நிலையில் இருக்கிறார்கள் என்றும் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார். "இவர்களுக்கு 100 ஹெக்டயர் காணியே தேவைப்படுகிறது. இதனை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் நூற்றாண்டு விழா கடந்த 6ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு ஜெஸ்மின் மண்டபத்தில் சங்கத்தலைவர் சத்துரசமரசிங்க தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட சங்கத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற தலைவர்கள் பொதுச்செயலாளர்கள் உபத்தலைவர்கள் மற்றும் இலங்கையிலுள்ள 12 கிளைக் காரியாலங்களிலுள்ள நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நாட்டின் கொவிட் தொற்றுநோய் காரணமாக சுகாதார நிலைமைகளுக்குகேற்ப மட்டுப்படுத்தப்பட்டவர்களே கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பத்திரன பேசுகையில், இத் தொழிற்சங்கம் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு முக்கிய பங்குவகிப்பதோடு இன மதங்களுக்கிடையில் ஒற்றுமையே ஏற்படுத்துவதையிட்டு பாராட்டுகிறேன். எல்லா இனத்தவர்களும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர். பெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு யோசனையை முன்வைத்து நடவடிக்கைகளை எடுத்தோம் என்றார். 1930 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் திகழ்ந்த நாடு நமது இலங்கை. 2020ம் ஆண்டில் தேயிலை உற்பத்தியில் இலங்கை 04 ஆவது இடத்திலுள்ளது. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தேயிலை உற்பத்தியை அதிகரித்துள்ளன. தேயிலை உற்பத்தியை பொறுத்தளவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

அடுத்து பேசிய தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உரையாற்றினார். இத் தொழிற்சங்கம் தேசிய பொருளாதாரத்தை சக்திமிக்கதாக்கும் தொழிற்சங்கமாகும். தேயிலை, இறப்பர், தென்னை போன்றபெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் பலவருடகாலமாக 1000 சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள். பலதடவை தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு இடையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை.

குதிரையை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு கொண்டுசெல்ல முடியும் அதற்கு நீரை ஊட்டமுடியாது. வேறுவழியில்லாமல் சம்பள நிர்ணய சபை மூலமாக 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டது. எனது ஆலோசனைப்படி கூட்டு ஒப்பந்தம்தான் சிறந்தது. இரண்டு சாராரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் எப்படியாவது இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். அரசு வாக்குறுதியளித்தபடி தோட்டத் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி வேலை செய்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது கடமையாகும் தோட்ட கம்பனிக்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் மூலம் அரசிற்கு எந்த இலாபமுமில்லை கம்பனிக்கே அதிக இலாபம். இன்று பெருந்தோட்டங்களில் 39000 ஹெக்டெயர் காணிகள் விவசாயம் செய்யாமல் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.

அப்படிப்பட்ட காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்டத்தின் அருகாமையிலுள்ளவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு மலசலகூட வசதி வீட்டு வசதிகள் குறைவு. பல வேலைத்திட்டங்களை செய்துவந்த போதிலும் இன்னும் பெருந்தோட்டப்பகுதிக்கு வேலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

பெருந்தோட்டங்களில் வேலைசெய்து ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தர்களுக்கு காணிப்பிரச்சினை சம்பந்தமாக நானும் அமைச்சா் ரமேஸ் பத்திரனவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். உங்கள் தொழிற்சங்கத்தை பாராட்டுகிறேன். சில தொழிற்சங்கங்கள் வருடக்கணக்கில் கூட்டம் வைப்பதில்லை. உத்தியோகஸ்தர்களை நியமிப்பதில்லை. உங்கள் சங்கத்தின் யாப்புக்கமைய இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

அடுத்து பேசிய இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் சத்துரசமரசிங்க தமதுரையில் 100 வருடங்கள் பெருந்தோட்டங்களை பாதுகாத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் சங்கத்தின் முதல் தலைவர் சொய்சா எனவும் குறிப்பிட்டார்.
 

Comments