கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு-1

நம் நாட்டுப் பொருளாதாரத்திற்கு நூற்றாண்டுக்கு மேல் உதிரம் சிந்தி உழைத்த, உழைக்கும் பாட்டாளி வர்க்கத் தோட்டத் தொழிலாள மக்கள் தமிழரும் அல்லாமல், சிங்களவரும் அல்லாமல் ஒருவித விசித்திர சமூகமாகச் சடுதியாக மாறிக் கொண்டிருக்கும் அவலத்தை இன்று கசப்பு வில்லைகளாக விழுங்கப் போகிறீர்கள். 
இதுவரை காலமும் அபிமானிகள் பெரும்பாலனோருக்கு தோட்டத் தொழிலாளர் என்றால், மலையகமாகிய கண்ட, கம்பளை, நாவலப்பிட்டி – ஹட்டன்- ஹப்புத்தளை – நுவரெலியா, கந்தப்பளை, பதுளை, பண்டாரவளை என்றே நினைவு வரும், பார்வை போகும். 

தென்னிலங்கைப் பக்கம் கண்ணோட்டம் போகுமா? போகவே போகாது. நானே வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லப்போகிறேன். வாருங்கள், காலி மாநகர், தெரிந்த பெயர் தான்! 

பேருந்து நிலையம் போய் ‘எல்பிட்டிய’ என்று சீட்டு பெற்று சில நிமிட நேரத்தில் இறங்குங்கள் எல்பிட்டிய தோட்டம் அருகே  உங்களை வரவேற்க பிரதான பாதையில் நிற்கும் பெண் யார்? தமிழா? சிங்களமா? நெற்றிப் பொட்டைக் காணலியே...? மஞ்சள் பூச்சு இல்லியே! உடை கூட வித்தியாசமா இருக்கே...? 

ஆம்! பயங்கரமான தகவல் சொல்கிறேன். தென்னிலங்கை – மாத்தறை மாவட்டத்துத் தோட்ட தமிழ்ப் பெண்கள் வெளியில் வந்தால் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். தமிழும் பேச மாட்டார்கள்! அதாவது, தோட்டப்புறக் குருவிக் கூடுகளிலிருந்து வெளிப்பட்டு வீதிக்கு வந்ததும் ஆட்களே மாறிப் போவார்கள்! 

தென் மாகாணத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு சிறு தொகையே!  

இன்றையச் சூழ்நிலையில் தங்கள், கலாசாரம், கோட்பாடு, நடை, உடை, தாய்மொழி உரையாடல் அனைத்தும் மறந்தவர்களாக அல்லது மறைத்தவர்களாக அவர்கள் நடமாடுகிறார்கள். நாள் முழுவதும் தோட்டங்களில் உதிரம் சிந்தி உழைக்கிறார்கள். 
ஏறக்குறைய எல்லாமே பெரும்பான்மை இனத்துப் பழக்க வழக்கங்களை ஒட்டியதாகவே மாறி உள்ளன. தமிழ்ப் பெயர் மட்டும் ஓட்டிக் கொண்டுள்ளது. பிறப்புச் சாட்சிப்பத்திரத்திலும் தவறாமல் இடம்பெற்றுள்ளது. 

ஆனால், அவர்கள் சந்ததியினர் நிலை? முக்கியமாகக் கல்வி நிலை? 

காலி மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளும், மாத்தறை மாவட்டத்தில் ஆறு பாடசாலைகளும் உள்ளதாம்! தாய்மொழியில் படிக்க வரும் பிள்ளைகள் தொகையை விரல் விட்டு எண்ணி விடலாமாம். பல சிறுவர்கள் சிறு வேலைகளுக்கு ஓடுகிறார்களாம். 

பேசுவது தமிழ் சிங்களக் கலவனா? அல்லது சிங்களம் முக்காலும் தமிழ் காலுமா? 

பிரமிளா பிரதீபன் என்றோர் ஆசிரியமணி பதுளை மண். உடல் முழுக்க ஓடிக் கொண்டிருப்பது தமிழ் சிருஷ்டி இலக்கிய ஆளுமை. நல்ல படைப்பிலக்கியவாதி எனப்பெயர் பெற்றுவிட்ட அடக்கமான ஆரவாரமில்லாப் பெண். 

இவர், தமிழைப் புகட்ட காலி – எல்பிட்டியத் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியையாகத் ஆர்வத்துடன் வேள்வித்தீ மிதித்தவர்! ஒரு சில ஆண்டுகளில் நன்றாகவே புண்ணாகிப் போய், ‘தீக்காயங்களுடன் (அனுபவங்கள்) மீண்டவராக தற்சமயம் மகரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் ஒரு நல்ல பதவியில் உள்ளார். 

இவரது நாவல் ஒன்று ‘கட்டுப்பொல்’. அந்தப் படைப்பு கொடகே நிறுவன விருது பெற்றது. எல்பிட்டிய, செம்பனைத் தோட்டத் தமிழ மக்கள் அவலங்கள், ஆசாபாசங்கள், தாய்மொழியை விட்டு தாண்டி ஓடும் வேதனைக் காட்சிகள் அனைத்தையும் படம் பிடித்துக் காட்டுவது. 

அவர்கள் எவ்வாறு தமிழர்களாகவும் அல்லாமல், சிங்களவராகவும் அல்லாமல் ‘இரண்டும் கெட்டான்’ சமூகத்தினராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் துலாம்பரமாகத் தெரிய வைக்கிறது. 

இங்கே வெளியாகியிருக்கிற ஒரு படங்களில் தென்னிலங்கைத் தோட்ட தமிழ் அக்கா – தங்கச்சிகளின் மாறிப்போன உடைகளையும் உருவங்களையும் பார்க்கலாம். 

மேலும், இதே தென்னிலங்கை தெனியாயப் பிரதேசத்து ச. யேசுதாசன், கட்டுரையொன்றில் இவர்கள் அவலங்கள் பற்றி அலசியுள்ளவை மிகவும் கவலையைத் தருவதாக உள்ளன. 

தேயிலை தோட்டத் தொழிலாளர்களாகவும் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களாகவும் இருக்கும் இவர்கள்,  மத்திய மலையக பகுதியில் வாழ்கின்ற இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களுடன் நெருங்கிய தொடர்பு இல்லாத நிலையில் அரசியல் அநாதையாளாக இருக்கின்றனர். 

“தங்கள் வாழ்வில் அவலங்களையே அனுபவித்து வருகின்றனர். போக்குவரத்து ரீதியிலான பிரச்சினைகள் அதிகம். கல்வி அபிவிருத்தி, பொருளாதாரவிருத்தி என்பன மிக அத்தியாவசியத் தேவை. 

“தங்களது தனித்துவங்கள், சம்பிரதாயங்கள் மழுங்கிப் போய்க் கொண்டிருக்கும் நிலை, இவர்களுக்காக மலையக அரசியல்வாதிகள் சுயநல அரசியலைக் கைவிட்டு மக்களின் மேம்பாட்டுக்காகக் கூடுதலான பங்களிப்பைச் செய்யமுன்வர வேண்டும். 

“பெருந்தோட்ட மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள், மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். உள்ளூர் பொலிஸ் துறையின் அனுசரணை இதற்குப் பெறப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற அமைப்புகளும் வலுப்படுத்தப்பட வேண்டும். 

இந்தப் பேனா முனையைப் பொறுத்தளவில், கோடிப் பெறுமதியான கேள்வி, இங்கே பிரதான கண்டி, நுவரெலியா, பதுளை வாழ் மலையகத்தோர், தென்னிலங்கைப் பிரதேசத்தில் தங்கள் ‘உடன்பிறப்புகள்’ சிறுகச் சிறுக சமூகத்தைவிட்டு அகன்று போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதைத் தெரிந்தும் தெரியாமலேயே அரசியல் செய்து கொண்டிருப்பது ஏன்? ஏன்? 

பழைய பர்மாவில் (மியான்மர்) மொரிசியஸில், அந்தமானில் அடையாளமே தெரியாமல் ஆகிவிட்ட ‘பாவப்பட்டவர்’களைப் போல இவர்களும் ஆகட்டும் என்பது ‘மலையகத்தலைவர்கள்’ எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் உள்ளார்ந்த ஆசையா? 

அது மட்டுமல்லாது, ‘எழுத்துக் கொம்பர்களாக’ மாதா மாதம் கூட்டங்கள் போடும் ‘பேனா வாலாக்கள்’ பேப்பரிலும் பேச்சிலும் என்ன கிழித்தார்கள்? ஒரு பதுளை, பிரமிளா (பிரதீபன்) வைப் பின்பற்ற வெட்கமா? கூச்சமா? 

இனிப்பு

அப்பாடா! அமைதி! நிம்மதி! அனைத்துப் புகழும் அவன் ஒருவனுக்கே! (அல்ஹம்துலில்லாஹ்) அடங்கி, ஒடுங்கி, அமைதி உறக்கம் கொள்ள ஓர் அடக்கத்தலம், இந்த எண்சாண் உடலுக்குக் கிடைத்தே கிடைத்து விட்டது!  இன்றையப் பொழுதில்
‘வரலாற்றில் ஓர் ஏடாக’ எதிர்காலப் பதிவுகளில் இடம்பிடித்து விட்ட கிழக்கிலங்களை ஓட்டமாவடியும் அதைச் சுற்றியுள்ள பிரதேச ஊர்களும் எனக்கு இலக்கியத் துறை மூலமாக மட்டுமே தெரியும்.  

அப்பகுதி இலக்கியவாதிகளாக 15-0பேர் தேர்வர். இந்தப் பக்தி எழுத்துக்களை அச்சுக்கு அனுப்பும் அவசரத்தில் நினைவோட்டத்தில் நீச்சலடிப்போர்களாகக் காலஞ்சென்ற வை. அஹமத் ஆகிய எழுத்து வித்தகர் முதல், இப்போதைய ஜாம்பவான்கள் எஸ்.எல்.எம். ஹனிஃபா, ஏ.பீ.எம் இத்ரீஸ், அஷ்றஃப் ஷிஹாப்தீன், முஸ்டீன், அரஃபாத், சதகா எனச்சிலர் கண் சிமிட்டுகின்றனர். 

அவர்களது அந்தச் சிமிட்டல்களை ரசித்துக் கொண்டு கடந்த 05ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நல்ல நாளில் அங்கு நடந்தேறிய ஒன்பது ஜனாசாக்களின் நல்லடக்கம், நம் இலங்கை அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் “ஓட்டமாவடி” என்ற பெயரை பாடமாக்கிவிட்டது!  அலைகடலுக்குப்பாலும் ஒரே நாளில் புகழ் அடைந்து விட்டது இந்த இடமும் பெயரும்.  நானும், ஓட்டமாவடிப் பிரதேசம் காகிதநகர் கிராமம், சூடுபத்தின சேனை கரிசல் வெளி” எனப் பலதடவை சொல்லி மனப்பாடம் செய்தேன். 
என் வெளிநாட்டு அபிமானிகளுக்கும் விவரங்கள் சொல்லி களைப்படைந்தேன். 

புயல் அடித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில், அதை நிறுத்தி அமைதி, ஆனந்தம் பெறச் செய்தவர்கள் ஒரு சபையினர். அவர்கள் அப்பகுதிப் பிரதேச சபையினர்! ஜனாஸா நல்லடக்கக் காணி  

அவர்களே கடந்தாண்டு நவம்பர் அன்பளிப்பு! மாதத்திலேயே ஒரு முடிவெடுத்து அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டனர். ஆனால் எந்தெந்த சக்திகளாலோ தடைப்பட்டுப் போய், மாதங்கள் மூன்று கழிந்து நல்ல வெயில் தொடங்கி வெக்கை வீச ஆரம்பிக்கையில் அதை மீறி ஆனந்தப் பூங்காற்று! 

பாருங்கள், விசித்திரத்தை ஒரு மனித உயிரை அடக்கம் செய்துவிட்டு ‘அப்பாடா’ என்று ஆனந்தப்படச் செய்யும் சூழ்நிலையில் நம் வாழ்க்கை இன்று! 

ஜனாஸா நல்லடக்கத்திற்காக சென்றுவருடமே பத்து ஏக்கர் காணிகளை அன்பளிப்புச் செய்துவிட்டனர் அப்பிரதேசச் சபையினர். 

யார், யாரெல்லாம் அவர்கள்? அனைவரும் அறிந்தே ஆக வேண்டும். 

ஏ.எம்.நௌஃபர் – தவிசாளர் 
அஹமது லெவ்வை – பிரதித்தவிசாளர் 
எஸ்.எம். ஷிஹாப்தீன் – செயலாளர் 
மற்றும் 16 அங்கத்தவர்களான ஆகியோர். 

இச்சபையினரின் 10 ஏக்கர் காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாஸா நல்லடக்கம் ஏற்பாடுகளில் பிரிகெடியர் எஸ். பிரதீப்கமகே தலைமையிலான இராணுவ அதிகாரிகளும், மருத்துவர் தாரிக் மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட பொதுச் சுகாதாரப்பரிசோதர்கள், ஓட்டமாவடி ஜனாசா நலன்புரி அமைப்பு நிர்வாகிகள் கல்குடா, காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் தங்கள் முழுமையான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.  ஓட்டமாவடியையும் அதனைச் சுற்றிச் சூழவுள்ள பிரதேசங்களையும் இலங்கையர் காலப் போக்கில் மறந்தாலும் அலைகடலுக்கப்பால் உள்ள முஸ்லிம் சமூகம் ஒரு போதும் மறவாது. இது என் இனிப்பான கணிப்பு! 

Comments