அந்தி வானம் அழுத மழை | தினகரன் வாரமஞ்சரி

அந்தி வானம் அழுத மழை

இற்றுப் போக முடியாமல்
இறுகிக் கிடந்த மனப் புத்தகத்தின்
சில பக்கங்களுடன் அவள் கிணற்றடியில்
பக்கம் பக்கமாகப் புரட்டி
உரத்த குரலில் வாசிக்கின்றாள்
தனக்கு மட்டும் கேட்கும் வண்ணம்
பக்கம் பக்கமாக முகங்காட்டும்
கைப் பக்குவத்தில் தேய்ந்து கொண்டிருக்கும்
பாத்திரங்களோ கரையமுடியாமல்
கண்ணீர் விட்டபடி
முற்றிய கத்தரிக்காயாக
திருமணச் சந்தையில்
விலையானவள்
இன்னும் சுண்டப்படுகின்றாள்
புகுந்த வீட்டுச் சந்தடியில்
அவள் வாசிப்பின் வேகம் அதிகரிக்க
விரைந்து சிந்திய கண்ணீர்பூக்கள்
மின்னும் பாத்திரங்களை
மேலும் மெருகூட்டுகின்றன
மின்னலோ ஒரு கேவலுடன்
எழுகிறாள்
அந்திவானம் அழுத மழைத்துளி
அவள் தேகத்தை தட்டிக் கொடுக்கிறது
ஆமாம் இன்று மகளிர் தினம்
வாழ்த்துக் கூற வானின்றிறங்கும்
மழைத்துளிகள்
அன்றைய அவளின் மேடைப் பேச்சுக்கு
நினைவாஞ்சலி செய்கின்றன
வாழ்க மகளிர்!!!
வையத்துள் வாழ்வாங்கு வாழ!

இராணி பௌசியா,
கல்லளை

Comments