நாம் கற்க வேண்டிய புதிய போர்முறை | தினகரன் வாரமஞ்சரி

நாம் கற்க வேண்டிய புதிய போர்முறை

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் மாத்திரம் ஐந்தாம், பத்தாம் மற்றும் 13ம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உவப்பான செய்தியாகவே இருக்கும். பாடசாலைக் கல்வி ஒரு வருட காலத்துக்கு முடங்கிப் போனது இதுவே இந்நாட்டில் முதல் தடவை. இந்த ஒரு வருட கால முடக்கம் ஏற்படுத்தியிருக்கும் பின்விளைவுகளை நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இடைவெளியை நிரப்பி நூல் பிடித்தாற்போல முன்னேறிச் சென்று விடுவார்கள் என்பதில் ஐயமில்லை என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் கற்றல் ஆர்வத்திலும் மனநிலையிலும் சோர்ந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் அடுத்த மூன்று மாத பாடசாலை தவணைக் காலப்பகுதியில் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஆசிரியர்களும் அதிபர்மாரும் புரிந்து கொண்டு அவர்களை வழமையான கல்வி கற்றல் பண்புகளுக்குள் நடத்திச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பாடசாலைகள் மட்டுமின்றி அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் படிப்படியாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அலுவலகங்களுக்கு செல்வோமானால் காலி ஆசனங்களையே காண முடிவதோடு இன்றைக்கும் கொழும்பு நகர் வெறிச்சோடியே காணப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இயல்புத் தன்மையைக் காண முடியவில்லை. நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை வெளிப்படுத்தும் சமிக்​ைஞகளை நாம் காண்கிறோம். மக்கள் பழையபடி கூடினால், வழமைபோல் செயற்பட்டால் தொற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் மேலோங்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் நாம் இன்றைய மந்த நிலையிலேயே தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியது அவசியம்.

இலங்கை கடந்த ஓராண்டு காலத்தில் கடுமையான பொருளாதார பாதிப்புகளை அடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான ஒரே வழி, நாட்டை சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து உள்நாட்டு பொருளாதார செயற்பாடுகளையும் உற்பத்தியையும் விரைவுபடுத்துவதாகும். இதை எப்படிச் செய்யலாம் என்றால், கொரோனாவுடன் வாழ்தல் என்பதன் பொருள் புரிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலமே சாதிக்க முடியும். தற்போது தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது. அடுத்த வருடமே முதல் தடுப்பூசி இலங்கைக்கு வரும் சாத்தியம் உண்டு என ஆருடம் கூறப்பட்டுவந்த நிலையில், தடுப்பூசி உலகில் பாவனைக்கு வந்த சில மாதங்களிலேயே இலங்கைக்கும் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன என்பது பெருமை கொள்ள வேண்டிய ஒன்று. இதற்காக நாம் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். தடுப்பூசி ஏற்றல் என்பது இவ்வருடம் முழுவதும் நடைபெற்றுவரும் அதே சமயம் தடுப்பூசி காரணமாக கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதாகக் கருதிவிடவும் முடியாது.

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் கொரோனா தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார் என்பது உண்மையானாலும் அவர் தொடர்ந்தும் மற்றொருவருக்கு தொற்றை ஏற்படுத்தும் காவியாகவே இருப்பார் என்பதை தடுப்பூசி ஏற்றிக் கொண்ட ஒவ்வொருவரும் மறந்துவிடக் கூடாது. எனவே, சுகாதாரத்துறையினர் தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தற்போது கடை பிடிக்கப்படும் சுகாதார வழி முறைகளை நாம் கைவிடலாகாது. முதல் அலை தணிந்து வந்தபோது மக்கள் படிப்படியாக தாம் அதுவரை கை கொண்டுவந்த சுகாதார வழிமுறைகளைக் கைவிட ஆரம்பித்ததையும் சுகாதாரத்துறை மற்றும் பொலிஸ்துறை சார்ந்தோர் இதை பொருட்படுத்தாது விட்டதையும் இதன் விளைவாக இரண்டாவது அலை பேரலையாகக் கிளம்பியதையும் நாம் மறப்பதற்கில்லை.

எனினும் நமது வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியாக வேண்டும். அவ்வைக் கிழவி ‘வரப்புயர’ என்றதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். வரப்பு உயர்ந்தால் விளைச்சல் பெருகும் அது நாட்டுக்கு செல்வத்தையும் மன்னனுக்கு புகழையும் தரும் என்பது அவர் சொல்ல வந்த விடயம். நாமும் அடிப்படையாகக் கைகொள்ள வேண்டிய வழிமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடிப்பதன் மூலம் நாட்டையும் நமது பொருளாதார நிலைமைகளையும் வழமைக்குக் கொண்டு வரமுடியும். மக்கள் மத்தியிலும் சோம்பேறித்தனமும், செயல்படுவதில் காணப்படும் தயக்கமும் துடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், கொரோனா தொற்றுக்கும் மரணங்களுக்கும் மத்தியிலும் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தியாவுடன் ஒப்பிடுவோமானாலும் அந்நாட்டு மக்களைவிட இலங்கையர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளக் கூடியவர்களே. இலங்கையின் பொதுக் கலாசாரம் அத்தகையதே.

எனவே, ஏப்ரல் நீண்ட விடுமுறையின் பின்னர் அனைத்து கல்வி, வர்த்தக நிறுவனங்களும் முழு அளவிலும், தனி மனித சுய கட்டுப்பாடுடனும் முழு வீச்சில் இயங்கத் தலைப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொண்டாக வேண்டும். இந் நாடு தொடர்ந்தும் மந்தகதியில் இயங்கிக் கொண்டிருக்க முடியாது. இந் நிலையானது ஒவ்வொரு இலங்கைக் குடிமகனையும், அவர் செல்வந்தரோ ஏழையோ, பாதிக்கவே செய்யும். இதற்காக நாம் அரசாங்கத்தைக் குறை கூறிக் கொண்டிருக்க முடியாது. அரசு குடிகளுக்கானதே தவிர நம்மில் இருந்து வேறுபட்டதல்ல. நமது பொருளாதார மீட்பு என்பது கடன்களில் தங்கியிருப்பதல்ல. உழைப்பிலேயே தங்கியிருக்கிறது. விமான நிலையில் திறக்கப்பட்டால் தொற்று அதிகமாகி விடும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

விமான நிலையம் என்பது ஒரு முக்கியமான பொருளாதார வாயில். கொரோனா அச்சத்தால் அதை மூடிவைத்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கை சுற்றுலாத்துறையுடனும் அதை நம்பிவாழும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்துடனும் நெருக்கமான தொடர்பு கொண்டது. விமான நிலையம், எனவே, திறக்கப்பட வேண்டும். அது ஏற்படுத்தக்கூடிய எதிர்மறைவிளைவுகளை நாம் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, விமான நிலைத்தை மூடி வைப்பதல்ல.

உலகம் எத்தனையோ பெரும் பிரச்சினைகளைத் தாண்டித்தான் வந்திருக்கிறது. எதிர்மறை விளைவுகளை பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிந்து கொள்வதே நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய புதிய பேர்முறையாகும்.

Comments