நீரும் நாமும் | தினகரன் வாரமஞ்சரி

நீரும் நாமும்

நீங்கள் கடற்கரையோரத்தில் குடியிருந்தால், தண்ணீருக்கு என்றாவது தட்டுப்பாடு வரும் என்று உங்களால் சிந்திக்க முடியுமா?

கடலில் அல்லது சமுத்திரத்தில் சங்கமித்திருக்கும் எல்லாமே தண்ணீர்தான். கடலில் இருப்பது உவர் நீர். அதனை நாங்கள் குடிக்க முடியாது. உவர் நீர், எமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவில் 97 வீதம் இதனுடன் 2 வீத நீர் ஆர்ட்டிக் துருவப் பிரதேசத்தில் உறைந்து போய் இருக்கின்றது. மீதமுள்ள ஒரு வீத தண்ணீர் மாத்திரமே மனிதனின் தேவைக்கு எஞ்சியிருக்கின்றது.

எஞ்சியிருக்கும் இந்த நீர் முற்றாக அசுத்தமடைந்து, அருந்துவதற்கு பாதுகாப்பற்றதாக மாறினால் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் விலங்குகளும் நோய்வாய்ப்படவோ அல்லது இறக்கவோ நேரிடலாம்.

இப் பூமியில் கோடிக்கணக்கான மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தபோது நான் வெறுமனே ஒரு மனிதன்தானே என்று சிலர் சிந்திப்பதுண்டு. எனது நடவடிக்கைகள் இதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்றும் அவர்கள் நினைப்பார்கள். நான் மட்டும் சுற்றாடலுக்குத் தீங்கிழைக்காமல் இருந்தால் சுற்றாடலைப் பாதுகாக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பலாம்.

நாம் நமது உற்ற தோழனான தண்ணீருக்கு இரு வழிகளில் தீங்கிழைக்கின்றோம். ஒன்று நீரை அசுத்தப்படுத்தல். மற்றையது வீண் விரயம் செய்தல். நாம் கடற்கரைகளிலும் கடலுக்குள்ளும் ஏனைய நீர் நிலைகளிலும் கழிவுகளை வீசுகின்றோம். நீர் நிலைகளில் கலக்கக்கூடியதாக கிருமிநாசினிகளையும் இன்னபிற இரசாயனங்களையும் பயன்படுத்துகின்றோம்.

எண்ணெய், மின்கலம் போன்ற இலத்திரனியல் கழிவுகளையும் சவர்க்காரம் சலவை போன்றவற்றையும் நீர் நிலைகளில் ஒதுக்குகிறோம்.

நாங்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுப் பொருட்கள் வடிகான்களில், நீரோடையில், ஆற்றில், வாவியில், ஏரியில் சேர்ந்து கடலில், சமுத்திரத்தில் சங்கமமாகி விடுகின்றது. அது கடலில் வாழும் உயிரினங்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. நீங்கள் தெருவில் வீசிய கழிவுப் பொருளை, இரசாயனத்தை உண்ணும் மீன்கள் இறுதியில் உங்கள் சாப்பாட்டு மேசைக்கே வந்து உங்களுக்கே நஞ்சூட்டலாம். மனிதர்கள் தண்ணீருக்குச் செய்யும் விரோதச் செயல்களுக்கு தீர்வுகாண்பதே இன்று நாம் எதிர்நோக்கும் பெருஞ் சவாலாகும்.

ஏ.எச். அப்துல் அலீம்,
அலிகார் தேசிய கல்லூரி,
ஏறாவூர்.

Comments